டுமீல்….

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

நெப்போலியன்


ஒரு
வெள்ளைநிறத் துப்பாக்கி
உன்னிடமும் உண்டு
யாரையும் குறிபார்க்கிறாய்
சுட்டு வீழ்த்துவதற்காய்.

உன்
இலக்கு வட்டத்திலிருந்து
தப்பித்துவிடும் பலபேர்
நீ வைத்திருப்பது
துப்பாக்கியே அல்ல
என பரிகசிக்கிறார்கள்
தூரத்திலிருந்தபடியே.

குறிவைத்து…
குறிவைத்து…
விசையை
அழுத்தத் திராணியற்று
சோர்ந்துபோய் வெறுப்பாய்
துப்பாக்கி பிரித்து ரவைகளை
உன் தோட்டத்துப்
புறாக்களுக்கு
தீனியாய் தூவுகின்றாய்
யார் கொத்துவது
முதலில் என சண்டையிட்டு
மணிக்கழுத்தில்
குருதி வழிய
இறக்கின்றன சில புறாக்கள்
இரத்தம் தோய்ந்த ரவைகளை
உண்ண மனமின்றி
விலகிப் பறக்கின்றன மீதமுள்ளவை.

இப்பொழுது,
‘ஒரு
வெள்ளைநிறத் துப்பாக்கி
என்னிடமும் உண்டு
நாளை வா
கற்றுத் தருகிறேன்
அதனைச்
சிவப்புநிறத் துப்பாக்கியாய்
மாற்றுவது எப்படியென்று…. ‘
என
நான்
சொல்லிக் கொண்டிருக்கும்போதே
மடையனே
என்ன காரியம் செய்கின்றாய்
நீ
என்னை நோக்கிக்
குறிவைத்து அழுத்தும்
உன்
துப்பாக்கியுள்
இன்னமும் மீதமுள்ளன
சில ரவைகள்…

—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்