ம.மதிவண்ணனின் கவிதைகள்

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

லதா ராமகிருஷ்ணன்


—-

‘அலட்டிக் கொள்வதில்லை அவள்

இளக்காரமும் அலட்சியமும் தொனிக்க

கடந்து போவாள்

காகிதத்தில் பொதிந்து வைத்து

காலத்தில் மிதந்து வருமிவையெல்லாம்

ஒரு மிருகப் புணர்ச்சியின் வக்கிரத்துளி படர

கிழிந்து கிடக்கும் யோனிமயிர் துடைக்கவும்

பிரயோஜனப் படாது என்பதால். ‘

_கவிஞர் ம.மதிவண்ணனின் முதல் தொகுப்பான ‘நெரிந்து ‘ என்ற கவிதை நூலில் இடம் பெறுகிறது மேற்காணும் கவிதை. ‘கிழிந்து கிடக்கும் யோனிமயிர் ‘ என்ற வரியை மட்டும் எடுத்துக் காட்டி இந்தக் கவிதையை ‘ஆபாசக் கவிதை ‘ என்று பகுப்பவர் இருக்கக் கூடும். அவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறது ம,மதிவண்ணனின் மற்றொரு கவிதை:

– ‘எவருமறியா உன் ஜட்டிக் கிழிசலைப் போல்

நீ மட்டுமே அறிந்தவை

உன் மனசின் கசடுகள்.

சொல்லத் துணிவுண்டா உனக்கு ?

உன் அந்தரங்கங்களில்

நீ ஒளித்து வைத்திருக்கும் எல்லாமும்

வேப்பமரத்தடி மணலில்

சூரியனுக்குத் தெரியாமல்

நீ புதைத்து வைத்த

முதலாய் விழுந்த சிங்கப் பல்லைப் போல்

ஒரு பாவமுமறியாதவையே என ‘

-அந்தரங்கங்களில் ஒளித்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் அம்பலமேற்ற முடியுமா, ஏற்றத் தான் வேண்டுமா, அது முறையா, என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படலாம். கவிஞனுக்கு சிலவற்றை சொல்லியே தீர வேண்டும் என்று உக்கிரமாய் தோன்றுகிறது. எழுதி விடுகிறான். இந்த உக்கிரத்தை கவிஞர் ம.மதிவண்ணனின் கவிதைகளில் உணர முடிகிறது. அருந்ததியர் குலத்தில் பிறந்தவர். ஒரு விழிப்புணர்வு கூடிய ‘தலித் ‘ கவிஞராக ‘நெரிந்து ‘, ‘நமக்கிடையிலான தொலைவு ‘ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். ‘யோனி ‘, முலை ‘ என்று வந்தாலே ‘வக்கிர மனதுக்காரர்களாய் சக கவிஞர்களைப் பழிப்பவர்கள் மதிவண்ணன் கவிதைகளில் இடம் பெறும் ‘பீ ‘, குண்டி ‘, கக்கூஸ் ‘, முதலிய வார்த்தைகளைப் பற்றி என்ன சொல்வார்களோ… மதிவண்ணன் கவிதைகளில் பாலியல்சார் பிரயோகங்கள் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை , வர்க்கபேத அரசியலை சாடவே பயன்படுத்தப்படுகின்றனவே அல்லாமல் பாலியல் சார் சுதந்திரத்தையோ, கலவியின்பத்தையோ எடுத்துரைக்க இடம்பெறுவதில்லை என்பதால் ஒழுக்கவியலாளர்கள் இவர் கவிதைகளை எதிர்க்காமலிருக்கக் கூடும். அழகியலளவில் மதிவண்ணன் கவிதைகள் எதிர்க்கப்படவும் கூடும். எல்லாவற்றுக்கும் மதிவண்ணன் கவிதைகளிலேயே பதில் இருக்கிறது.

– ‘எதிர்ப்படும் போதெல்லாம்

என் மேல் காறி உமிழ்வதை

ஒரு பிறவிக் கடமையைப் போலவே

செய்து வருகிறாய்

தாமதமாகவே உறைத்தது

உன் வெள்ளுடுப்பை வெட்டி அதிகாரத்தை

இன்ன பிறவற்றை

நிச்சயிக்கவென்றே

எச்சில் நீர் உனக்கு

ஊறும் ரகசியம்.

இப்போதெல்லாம்

உன் வாயிலடைக்க

கைகளில் கொண்டு திரிகிறேன்

தூமைத் துணிகளையும்

தூமையில் தோய்ந்த

இக்கவிதைகளையும்.

_ ஆக, தூமையில் தோய்ந்த கவிதைகளை, அல்லது, சொற்பிரயோகங்களை

கவிஞர் பிரக்ஞாபூர்வமாகவே உபயோகிக்கிறார். அதற்கு அவசியம் என்ன ?

‘சுற்றிச் சூழ எங்கும்

நிச்சயமின்மையின் கொடி

படர்ந்து நெருக்குவதாகி விட்டது

எனது வெளி.

கை கால்களின் அசைவைக் கூட

அனுமதிக்காத இறுக்கம் இது.

வாளோடும் வார்த்தைகளோடும்

நீ வருவது

அடுத்த நிமிடமாய் கூட இருக்கலாம்.

பத்திரமாய் ஒளித்து வைக்கிறேன்

என் உயிரை

பதட்டத்தில் துடிக்கும்

இதயத்தின் தாளத்திலான

இந்தப் பாடல்களில். ‘

_ ‘வெட்டியெடுத்துச் செல்லத் தோதாய் முடி கொண்ட தலைகளின் கீதம் ‘ என்ற தலைப்பில் ‘நமக்கிடையில் ஆன தொலைவு ‘ தொகுப்பில் மதிவண்ணன் எழுதியுள்ள இக்கவிதையில் பேசப்படும் உயிரின் பதட்டமே அத்தகைய வார்த்தைகளை தெரிவு செய்து கொள்கிறது.

வார்த்தைகளால் ஆனது கவிதை. ஆகச் சிறந்த வார்த்தைகள் ஆகச் சிறந்த வரிசைக்கிரமத்தில் ‘ என்பார்கள். அப்படி, ஆகச் சிறந்த வார்த்தைகளாய், தான் சொல்ல விரும்பும் சேதியை , அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்வை, அதற்குரிய அழுத்தத்துடன் சொல்வதற்கென தேர்ந்தெடுத்துக் கொள்வது கவிஞனுடைய இயல்பு. ‘அரைத்த மாவையே அரைக்கும் விதமாக, பழகிய, பரவலாக அமுலிலுள்ள நடையிலேயே கவிதை படைக்கப் பிடிக்காமல் ‘பரிசோதனை ‘ முயற்சியாய் எழுதிப் பார்க்க விரும்புவதும் கவிஞனிடத்தில் அமைந்திருக்கும் இயல்பான ஆர்வம். இதையெல்லாம் பார்க்க மறுப்பவர்களாய் ‘அதிர்ச்சி மதிப்பீட்டிற்காய் ‘ இத்தகைய வார்தைகளை உபயோகிக்கிறார்கள் ‘என்று குற்றம் சாட்டுபவர்களை என்ன சொல்ல ? எந்த ஆதாரத்தைக் கொண்டு இத்தகைய குற்றச்சாட்டை வைக்க இயலும் ? அதிர்ச்சி தரும் வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் வாசகர்களின் கவனத்தைப் பெற விரும்புவர்களால் தொடர்ந்து அதே பாணியில் எழுதி வர இயலாது. சில விஷயங்களை அதிக வீச்சோடு கூற சில வகையாக எழுதிப் பார்க்கிறார்கள். தங்களுக்கான மொழிநடையை அடையும் போக்கிலும் சிலர் வார்த்தைகளைப் புதுவகையாகப் பிரயோகித்துப் பார்க்கலாம்.மேலும், பாலியல்சார் சொல்லாடல்களால் மட்டும் தான் இத்தகைய ‘கவனங்கோரல்கள் ‘ நடந்தேற வேண்டுமா என்ன ? மிகையுணர்ச்சிச் சொல்லாடல்களாலும் கூட, அதீத மொழிப் ப்ரக்ஞையோடு சொற்களைத் திருகிப் பிரயோகிப்பதிலும் கூட மேற்படி ‘கவனங்கோரும் ‘ முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்பதே உண்மை.

– ‘மூச்சிரைத்து நுரை தள்ள

வெகுதூரம் வந்து விட்டேன் உன்னைத் தொடர்ந்து.

இன்னுமெவ்வளவு துரம் போக்கு காட்டி

இழுத்துப் போக உத்தேசித்திருக்கிறாய் ?

அண்டி தெறிக்க குலைக்குமிவை

மேலே விழுந்து குதறும் நிமிடமும்

தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.

வலுவும் வழியும் இல்லாவிட்டாலும்

திரும்பலைக் குறித்து யோசித்தாயிற்று பலமுறை.

கண்ணீரிலும் குரோதத்திலும் செய்தது

கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறது வீடு

என் விரைகளை நசுக்க. ‘

_ ‘நெரிந்து தொகுப்பில் இடம் பெற்றுள்ளது மேலேயுள்ள கவிதை. ‘ ‘என் விரைகளை நசுக்கி ‘ என்பதற்கு பதிலாய் வேறுவிதமாய் எழுதியிருக்கலாம் கவிஞன் என்று சொல்லக் கூடியவர்களிடம் கவிஞன் என்ன விதமாய் எதிர்வினையாற்ற முடியும் ? ‘இந்த வரியை அவர் தைரியமாய் தன்னுடைய பிள்ளைகளிடம் காண்பித்து வாசிக்கச் சொல்ல முடியுமா ‘ என்று கேட்பது எத்தனை சிறுபிள்ளைத்தனமானதுஸசமூகக் கட்டுமானங்களால், சமூகத்தில் தான் ஏற்றாக வேண்டியிருக்கும் பாத்திரங்களாலும், பாவனைகளாலும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் கவிமனம் ஒரு ‘வலி நிவாரணமாய் ‘ , நிர்வாணியாய் எழுதும் வரிகளை, அவனை மூச்சுத் திணறச் செய்துக் கொண்டிருக்கும் அதே சமூகக் கட்டுமான அளவுகோல்களைக் கொண்டு எடையிடுவது எத்தனை அவலமானது… அதுவும், அறங்காவலர்களாய் இத்தகைய அளவுகோல்களைக் கொண்டு ஒருவர் கவிஞனை அளக்கப் புகும் போது அத்தகைய ஒழுக்கவியலாளர்களின், அவர்களைச் சார்ந்தவர்களின் சமூகரீதியிலான அடையாளங்களையும், அவை சார் அரசியலையும் விமரிசிப்பதும், கேள்விக்குட்படுத்துவதும் அவசியமாகிறது. இதையே மதிவண்ணனின் பின்வரும் கவிதை குற்ப்பாலுணர்த்துகிறது;

‘பட்டனாயிருந்தாலும்

பொண்ணு தர வேணுமானால்

செருப்பு கட்டித் தர வேணுமென

கேட்ட வாலன் பகடையின்

புதல்வர்களிடமிருந்து

‘பாட்டா ‘, ‘நைக் ‘ குழுமங்கள்

மாட்டுத் தோலை அபகரித்துப் போன அன்று

செருப்புத் தைக்கும் எங்கள் ஊசிகளில்

ஒன்று

பழஞ்செருப்பு தைத்தாற்றிக் கொண்டது.

ஒன்று

நீங்கள் பேளும் கக்கூசில் தவறி விழுந்தது

ஒன்று

இக்கவிதையைக் கட்டத் துவங்கியது.

_சில கவிதைகளில் ‘வெறுப்பு ‘ தூக்கலாக இடம்பெற்றிருக்கிறது. உதாரணமாக, ‘எனக்கும் தமிழ் தான் மூச்சு/பிறர் மேல் அதை விடாதிருக்க/சாத்தியமில்லை எனக்கு ‘, என்று ஆரம்பிக்கும் ‘த்தமிழும், மூச்சும் ‘ என்ற கவிதை கவிஞர் ஞானக்கூத்தனின் ‘எனக்கும் தமிழ் தான் மூச்சு/ஆனால்/பிறர் மேல் அதை விட மாட்டேன் ‘ என்ற கவிதைக்கான எதிர்வினையாற்றலாக மதிவண்ணனின் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஞனக்கூத்தனின் கவிதையே ஒரு எதிர்வினையாற்றல் என்பதையும் நினைவுகூர வேண்டியது அவசியம். பெரிய அளவில் எந்தவிதமான அங்கீகாரமும் கிடைத்து விடாமல், எனில் இத்தனை வருடங்களாக தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கி வரும் ஞானக்கூத்தனின் , ‘சூத்திரர் தெருக்களென்று சொல்லுவார்/ஏற்றார்போல்/மாட்டுதோல் உலரும்/ஆடு/கோழிகள் வாழும்/ ‘ ‘ என்று ஆரம்பித்து , ‘தனிப்பட வர மாட்டாமல்/கடவுளின் துணையில் / அங்கே/ வருகிறான் பார்ப்பான் / சாமி/வலம் வர வேதம்பாடி ‘ என முடியும் ‘அந்தத் தெரு ‘ முதலான பல கவிதைகள் ஒற்றைப் புரிதலைத் தாண்டியவை என்பதையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.

‘சாதிமான்கள் சதித்துக் கொன்ற

பகடைவீரனுக்கே

அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமாம்

‘திண்ணிய ‘த்தில் மட்டுமல்ல

தினந்தோறும் தின்று கொண்டிருக்கிறது

‘பீ ‘ ‘யை என் சனம்

தெரிந்து பாதி தெரியாமல் பாதி ‘

_போன்ற பல கவிதைகள் ‘ நெரிந்து ‘, ‘நமக்கிடையிலான தொலைவு ‘ ஆகிய இரண்டு தொகுப்புகளிலும் இிடம் பெற்றிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட சாதியினராய் சமூகத்தில் அல்லல்படும் மக்களுக்காய் மனம் வெம்பியும், கொதித்தும் பேசுகின்றன. வார்த்தைகளை ‘உரிமைப் போராட்ட ஆயுதங்களாய் ‘ கவிஞர் மதிவண்ணன் பயன்படுத்தியிருப்பதை இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளிலும் காணக் கிடைக்கிறது. அரசியல் கட்டுரைகளடங்கிய ஒரு நூலும் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘வார்த்தைகளுக்குள் கொடுக்குகளை ஒளித்து வைக்கும் வித்தையை படிப்பித்த என் குடியின் முதல் சுயமரியாதைக்காரன் ஈ.வே.ரா ‘வுக்கு என்று தன் இரண்டாவது கவிதைத் தொகுப்பை ‘பெரியாருக்கு ‘ சமர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர்.

_ ‘எப்படி ஒன்றாய்/வளர்க்கப் போகிறோம்/இந்த முற்றத்தில்/ சோறு போடும் பன்றிகளையும்/ நீ கொண்டு வரும்/முல்லைச் செடியையும் ‘

என்று கேள்வியாய் விரியும் சிறு கவிதை தொடங்கி கவிஞர் மதிவண்ணனின் கவிதைகள் ‘மனித நாகரீகத்தை நோக்கி வீசப்படும் கேள்விகள்.மனசாட்சியுடைய மனிதர்களெல்லோரையும் பெரிதும் அலைக்கழிக்கும் வீச்சும், காத்திரமும் கொண்டவை.

‘நமக்கிடையிலான தொலைவு ‘ ;- நூல் வெளியீடு-கருப்புப் பிரதிகள்

மின்னஞ்சல் ; karuppu2004@rediffmail.com

—-

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்