காங்கீரிட் காடுகளில்…

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

புதியமாதவி


( மும்பை. )

ஒரு நதியின் மரணத்தில்
எங்கள் விதியின் ஒப்பாரி.
கடற்கரை நிரப்பிய
கான்கீரிட் காடுகளில்
நாற்றமெடுக்கிறது
எங்கள் நகரத்தின் சுவாசம்.
வெட்டி எறியப்பட்ட
வேர்களின் சாபத்தில்
உடைப்பட்டுக்கிடக்கிறது
தேர்க்கோலத்திற்கு காத்திருந்த
தும்பிக்கையின் கரங்கள்.

பதினைந்தாயிரம் கால்நடைகள்
மிதந்து செல்லும்
பலநூறுச் சாக்கடைகள்
காக்கைகள் கூட
அச்சப்படுகிறது
எங்கள் காற்றை சுவாசிக்க.
கணிணி யுகத்தில்
காலம்கணித்து
அமெரிக்காவை வெல்லும்
அக்கினிக் கனவுகளில்
வெந்து போகிறது
எங்கள் வெப்ப பெருமூச்சு.
இப்போதெல்லாம்
பிரசவ அறையின்
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
முகம்தேடி அழுகிறது
எங்கள் புதியவார்ப்புகள்.

ஈரத்தில் கிழிந்து கிடக்கிறது
எங்கள் வாரிசுகளின்
பள்ளிக்கூடக் கனவுகள்
இதை எல்லாம் காரணமாக்கி
நாற்காலிச் சண்டைக்கு
ஆயுத்தமாகிறது
எங்கள் அரசியல் களம்.
இன்னும்
எங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறது
எங்கள் துப்பரவுத் தொழிலாளிகளின்
தோள்கள்.
கழிவுகள் அகற்றும்
அந்தக் கரங்களின் ஈரத்தில்
எழுதப்பட்டிருக்கிறது
இந்த மண்ணின் எதிர்காலம்.
இருந்தாலும்
எழுத மறுக்கிறது
இதை மட்டும் எங்கள் எழுதுகோல்.
—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை