டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

அரியநாச்சி


இந்த உலகம் எதையோ நோக்கி கண்மூடி அலைந்துகொண்டிருக்கிறது. எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் இருப்பதைக் குலைத்துவிடும் செயல்களில் கூட இறங்கி எல்லா மனங்களையும் நாசப்படுத்துகிறது. ஆராய்ச்சி எனும் பெயரில் வந்த அனைத்து நல்ல விசயங்களுக்கும் ஈடாக தீயவையும் வந்துவந்து மோதி எல்லோரையும் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது.

இப்படியாகப்பட்ட ஈவிரக்கமற்ற ஆராய்ச்சியாளர்கள் கூட ஒருவகையில் தீவிரவாதிகள் தான்.

இந்தவகையில் பொருளாதாரத்தை நோக்கிய பாய்ச்சல் காரணமாக இருந்துவந்த போர்க்காரணங்கள்; மற்றவரை முந்துதற்காகத் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் உள்ளுணர்வுகள்; எல்லாம் இப்போது மதத்தை எடுத்துப்போர்த்திக் கொண்டதோ என்றொரு பயம் தொக்கிக்கொண்டு பயமுறுத்துகிறது.

இப்படியாக செயல்பட ஏதாவது ஒன்று மனிதர்களுக்குத் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது, சமூகத்தில் சஞ்சலத்தையும் சலசலப்பை உண்டுபண்ண. டான் பிரவுன் இதற்குட்டப்பட்டவர்தானோ என்ற ஒரு யோசனையை “த டாவன்சி கோட்” புத்தகத்தின் வாயிலாகக் கொடுத்திருப்பதாக உணர்கிறேன்.

….

ஆண் பெண் சரிசமத்தைப் பேசுவதுதான் உண்மையான கிருத்துவமதம். அப்படியாக இருந்த அந்த மதமானது கிருத்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரைச் சுமந்தவர்கள் அனைவரும் தம் சுயநலத்திற்காக சுமந்தாக இப்போதுவரையிலுமுள்ள நிறைய பேரைச் சாடுகிறார், டான் பிரவுன்.

ஆனால் அறிஞர்கள் லியோ நார்டோ டாவின்சி, ஐன்ஸ்டான், ஆலிசு இந்த ஒன்டர்லேண்டு எழுதியவர் என்று மிகப்பெரிய அறிஞர்களையெல்லாம் இந்த ஆண்பெண் “பிளேட் அண்டு சாலிசு வடிவதத்துவத்திற்கு” ஆதரவு தெரிவித்தவர்களாக அந்த ரகசியத்தைக் கட்டிக்காப்பாற்றியவர்களாக வெளிப்படுத்துகிறார். அவர்கள் இந்த விசயத்தை “ஏசு நாதருக்குத் திருமணமாகி குழந்தை குட்டிகள் உண்டு. அவருடைய சந்ததியினர் இன்னமும் இருக்கிறார்கள்,….” என்பதான விசயங்களை ரகசியங்களாக்கி அவர்களை நோக்கிய ஒரு படபடப்பூட்டும் காட்சியமைப்போடு அவர்களைத் தேடுவதாக நாவல் பக்கங்கள் நீடித்துக்கொண்டே போகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு சுவாரசியமான குறியீடுகளை தகர்ப்பதும், அவற்றைக் கடந்து அடுத்த ரகசியத்தை உடைப்பதுமாக நீளும் இந்த நாவல் இறுதியாக சிதம்பரம் ரகசியமாகிறது. வள்ளலாரின் கண்ணாடியாகிறது.

கிருட்டிணன், புத்தர், நிர்வாணம், லிங்க தத்துவம், சரவணபவ நட்சத்திரம்…. என வந்துவந்து போகும் இந்த தெற்காசிய மதங்களின் குறியீடுகள்….

இவற்றைக் கொண்டு மொத்த டாவின்சிக் கோடையும் ஒரு கழுகுப்பார்வைப் பார்த்தால் கிருத்துவத்தை என்னவாகவோ கொண்டுசெல்ல முயற்சிப்பதுபோல் உள்ளது.

டான் பிரவுண் சொன்னது உண்மையாகுமானால் அவற்றை இப்போது உள்ள வாட்டிகன் என்ன பார்வையில் பார்க்கிறது ?

உலகிலுள்ள அனைத்து கிருத்துவ ஆலயங்களில் தொழும் பக்தர்கள் என்ன சொல்கிறார்கள் ?

எல்லாம் அமைதியாக இருப்பதை உணர்கிறேன். அப்படியானால் சரிதான் என்று ஒத்துக்கொள்வதாக அர்த்தமா ?

டான் பிரவுன் தன் மதத்தை மறுஆக்கம் செய்கிறாரா ? ஆராய்ச்சி என்ற பெயரால். புனைவின் உதவியோடு…. ?

இப்போதெல்லாம் மனிதன் மதத்தினைவிட்டு வெகுதூரத்தில் சென்றுவிட்டான் என்று நினைத்துக் கொண்டுவிட்டார். தம் மதத்தினை விட்டு ஒவ்வொருவரும் வெளியேறிக்கொண்டே இருப்பதாக உணர்கிறார். இப்படியாக 448ம் பக்கத்தில்

‘Aringarosa leaned across the table, sharpening his tone to a point, ‘do you really wonder why catholics are leaving the Church ? Look around you, cardinal. People have lost respect. The rigors of faith are gone. The doctrine has become buffet line. Abtinence, confession, communion, baptism, mass – take your pick – choose whatever combination pleases you and ignore the rest. what kind of sipritual guidance is the Church offering ? ‘

‘Third century laws, ‘ the second cardinal said, ‘cannot be applied to the modern followers of Christ. The rules are not workable in todays society. ‘

கர்த்தினாலும் இப்படிப்பேசுவது, அரிங்கோசா என்னும் பாதிரியாருக்கு மேலே குறிப்பிட்டுள்ளதை முன் வைக்க என்ன காரணம் இருந்தாலும் கிருத்துவ மதத்தின் மீதான ஆர்வம் கிருத்துவர்களுக்கே குறைந்துவருவதைக் காட்டுவதாக இருக்கிறதாக குறிப்பிடுகிறார்..

இந்த வருத்தம் தான் டான் பிரவுனை கிருத்துவமதத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது.. அதனால் தான் இந்த ஆண் பெண் சமவிகிதத்தை வெளிப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கவேண்டும். ஆராய்ச்சிக்காக அவருக்குக் கிடைத்த அனைத்துத் தரவுகளும் ஆச்சர்யமானவையல்ல. எதிலிருந்து எதைநோக்கியும் நாம் நம் கருத்தை முடிச்சுப்போட்டுக் கட்டிக்கொண்டே போகலாம். இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. இந்த துப்பறியும் நாவலில் ஏசுநாதரின் மனைவியை அடையாளம் காட்டும் அளவிற்கு.

சரித்திரத்தை மாற்றிப் பார்க்கும் ஆவல் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஏனெனில் சரித்திரம் வெற்றிகொண்டவனின் பதிவுகளே அன்றி வேறொன்றுமில்லை. அல்லது இப்படிச் சொல்லலாம்….,

இப்போது இருப்பவன் தனக்குத் தெரிந்ததை பதிவுசெய்து வைத்திருந்து தன் சந்ததியினருக்கு வலுக்கட்டாயமாக படிக்கக்கொடுப்பது… அறிவை வளர்க்கிறோம் ஆன்மாவை வளர்க்கிறோம் என்று….

இன்னொரு செளகரியமும் சரித்திரத்தில் உண்டு அதை மாற்றிக்கொண்டே இருக்கலாம் தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப. ஏனெனில் ஒவ்வொருவரும் தம் இருப்பு, சரித்திரத்தில் இருக்கவேண்டும் என்ற ஆவலோடு பேனாவும் பேப்பரோடும் அலைகிறார்கள். குந்துமிடத்தில் ஒரு சிலை, நிற்கும் இடத்தில் ஒரு கழிப்பறை என்று தன் பெயரையும் உருவத்தையும் மக்கள் சதா உச்சரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்ற ஒரு வெறித்தனமான போதையினால்.

இந்த சரித்திரப்பதிவில் இடம்பெறுவதற்கு தன் எல்லா முயற்சிகளையும் செலுத்த ஒருவன் தயாராகிவிடுகிறான். அதுவும் இந்த யுகத்தில், தான் நினைப்பது உடனுக்குடன் எல்லோர் காதுகளுக்கும் உடனே போய்ச் சேர்ந்துவிடுவதாலும்….

நான் கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் படித்தவன். எங்கள் பள்ளி பல ஆண்டுகளாக புதுவையில் பிரசித்திப்பெற்றப் பள்ளி. பள்ளி வளாகத்திற்குள்ளாகவே ஒரு சர்ச் உண்டு. அங்கே தினமும் எங்களது தலைமையாசியரின்(அவர் ஒரு பாதிரியார்) கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு நாங்கள் போவோம். அன்பானவர். ஆசையாக பேசக்கூடியவர். அவரது கருணை உள்ளத்தையும் உள்ளே சுருவத்தில் உடல் முழுவதும் ரணத்தோடும் ரத்தவெள்ளத்தில் குற்றுயிரும் குலையிருமாக, பார்ப்போர் இருதயத்தில் இரக்கமனப்பான்மையை விதைக்கும் ஏசுநாதரின் பனிபடர்ந்த பார்வையும், எங்களுக்கு மிகவும் வசீகரமானவை.

அன்பின் பொருளை அறிய நேர்ந்த கணங்கள் அங்கே பல.

ஆனால் இந்த டாவின்சி கோட் சட்டென எல்லாவற்றையும் எடுத்து உடைப்பதுபோல் இருக்கிறது. டான்பிரவுன் சரியென்றால் உலகம் இதுவரையிலும் முட்டாளாக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இதுவரையிலான அனைத்துப்போர்களும் மதமாற்றங்களும், தொழுகைகளும் கிண்டலுக்காளாகிறது. இந்த கீழ்வரும் வரிகளைப் படித்துப்பார்த்தால்….

‘Sophie didn ‘t understand all of what was said, but it sounded like the French government, under pressure from priests, has agreed to ban an American movie called ‘the last temptation of Christ ‘, which was about jesus having sex with a lady called Mary Magdalene. Her grandfather ‘s article said the Church was arrogant and wrong to ban it. ‘

இவ்வளவு சுதந்திரமும் இவ்வளவு எதிர்ப்பின்மையும் இருக்குமானால் நான் இப்படி சொல்லலாம் போலிருக்கிறகே.

டான் பிரவுன் நம்ம ஊர் சிவன் கோவிலுக்கு வந்து போயிருக்கிறார் என்று ?

இதுவும் கர்பனைதான் தான். ஒருவேளை நிஜமாகவும் இருந்திருக்கலாம்.

ஆண் பெண் தத்துவத்தை முன் நிறுத்தும்போது..

ஒருநிமிடம் சற்றே நாம் நமது சரித்திரத்தை புரட்டிப் பார்ப்போமானால் …. வேண்டாம் வேண்டாம் டான் பிரவுண் வழிப்படி ஆராய்ச்சிப் பார்வையில் பார்ப்போமானால் உலகம் நாகரீகத்தைக் கற்றது நமது லெமூரிய (மியு) கண்டப் பிரநிதிகளால்தான் என்று தோன்றும்…

உலக நாகரீகங்கள் அனைத்தையும் இந்தப்பார்வையில் பார்க்க நாமும் துணிந்துவிட்டால்…. ?! ?!

—-

ariyanachi67@yahoo.com

Series Navigation