ஞானத்தங்கமே

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

கவிஞர் புகாரி


இறுதியாய்ப்
பிச்சை கேட்ட பாத்திரத்திலும்
புளிச்சென்று எச்சில்

மிச்ச மீதி நம்பிக்கையும்
மரணப்பசிப் பெருங்குடலில்
இறுதி ஊர்வலம்

ஆயிரங்காலப்பயிர்
செழித்துக்கிடந்த
உள் முற்றத்திலிருந்து
ஓடிவந்த நாக்கு நாய்
துரத்திக் கடிக்க

இரத்தக் கசிவுகளோடு
தனிமை மண்டிக்கிடக்கும்
புதரில் விழுந்து
புதிராகிப் போனது இதயம்

உச்சி முதல் உள்ளங்கால் வரை
புதுத்தோல் போர்த்திக்கொண்டு
தனக்குள் செத்து பின்
தானே உயிர்த்து
மீண்டும்
மனிதர்களைக் காணும் பீதி
உயிரை மிதித்தாலும்
இம்முறை
அர்த்தம் புரிந்த
முதல் அழுகையோடுதான்
வெளிக்காற்றுக்குள்
வீசியெறியப்பட்டது
இதயம் தன் துடிப்புகளோடு

நிரந்தரம் அற்றதென்றாலும்
வயிறும் மனமும்
வீதிகளில் நிறைகிறது
இப்போது

நிச்சயமாகிப்போன
பிச்சையுமில்லாப் பிழைப்பில்
நிரந்தரமாகிப்போன நிரந்தரமற்ற
அன்னதானங்கள் என்ன
குறைந்தா போயிற்று

சொந்தக் கதவானாலும்
பத்துகோடிப் பூட்டுகள்
இரக்கமற்று
இறுக்கமாகத் தொங்கினால்
மனம்மாறி ஓர் நாள்
திறந்து வரக்கூட
இந்த ஜென்மம் போதுமா?

காத்திருக்காக்
கட்டற்ற உணர்வுகளுக்குள்
கைதாகிக் கிடக்கும் வாழ்க்கை
என்றும் விடுதலையாகப் போவதில்லை
என்பதே படைப்பிலக்கணம்
என்பதனாலேயே…

மறுக்கும் இடத்தில்
மன்றாடுவதல்ல வாழ்க்கை
கொடுக்கும் இடத்தில்
கொண்டாடுவதுதான்

*
buhari@gmail.com

Series Navigation

கவிஞர் புகாரி

கவிஞர் புகாரி