ஜெயலட்சுமிகள் பற்றிய சிந்தனைகள்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

சி.மதிவாணன்


ஒரு நாள் நள்ளிரவு என் செல்லிடப்பேசி அலறியது. செய்துகொண்டிருந்த வேலை கெட்டுப்போன எரிச்சலோடு எடுத்துப் பேசினால், அது மேரி. நமது பத்திரிகைகளின் பாஷையில் சொல்வதென்றால் விபச்சாரம் செய்யும் அழகி. தொலைபேசியில் மேரி அழுதாள். திருவரம்பூர் பக்கத்தில் உள்ள ஒரு காட்டில் வைத்து ஒரு போலீஸ்காரன் படுத்துவிட்டு, பணத்தையும் பிடுங்கிக்கொண்டு அடித்துப்போட்டுவிட்டுப் போய்விட்டானாம். திண்டுக்கல்லில் இருந்த எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆறுதல் சொன்னேன். வேறு என்னதான் செய்ய முடியும் ? திருச்சியில் உள்ள ஒரு நண்பரின் முகவரியைக் கொடுத்தேன். என்னைப் போலவே அவரும் ஒரு பைத்தியக்காரர். உதவுவார் என்று சொன்னேன். அப்புறம் அந்த நண்பரைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னேன். ஆனால், அந்தப் பெண் அப்புறம் என்னையோ அவரையோ தொடர்புகொள்ளவில்லை. என்ன ஆயிற்று ? மேரி செத்துப்போனாளா ? எனது அந்த நண்பர் சொன்னார், ‘ஆதரவற்ற அந்தப் பெண்கள் யாரிடமாவது தனது துன்பங்களைஷ சொல்லிப் புலம்புவார்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றும் ஆகியிருக்காது ‘.

இதுநாள் வரை மேரி என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. திருச்சி செல்லும்போதெல்லாம் பஸ் ஸ்டாண்ட் கூட்டத்தில் மேரியைத் தேடி பார்த்திருக்கிறேன். கிடைக்கவில்லை.

மேரி திருநெல்வேலியைச் சேர்ந்தவள். கணவன் வீட்டார் திருட்டுப்பட்டம் கட்டி, மகளிர் காவல்நிலைய புண்ணியத்தில் சிறை சென்று, திரும்பியபோது நடுத்தெருவில் நின்று, சிறையில் சந்தித்த பாலியல் தொழிலாளிகளால் ஆதரிக்கப்பட்டு விளைவாக இந்தத் தொழிலுக்கு வந்தவள். விராலிமலையில் ஒரு வீட்டில் அவளை என் தோழி உஷாவோடு சந்தித்தேன். பாலியல் தொழிலாளிகளைஸ் பற்றிய ஒரு ஆய்வுக்காக அங்கே சென்றிருந்தோம். எப்படியாவது தன்னை மீட்டெடுக்கும்படி அவள் அழுதது இன்னும் நினைவிருக்கிறது. அவளுக்காக என் தங்கை பாக்கியம் எடுத்த முயற்சிகளை அவளால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. முதலை வாயில் இறங்கிய கதைதான் பாலியல் தொழிலாளிகளின் கதை. மேரியைப் பற்றி, சரியாகச் சொல்லப்போனால், மேரிகளைஸ் பற்றி பலருக்கும் தெரியாது.

ஆனால், ஜெயலட்சுமிகளைஸ் பற்றி தெரிகிறது. ஷெரினாக்களைஸ் பற்றித் தெரிகிறது. நாயாகப் பிறந்தாலும் பணக்கார வீட்டு நாயாக பிறக்க வேண்டும் என்பார்கள். ஜெயலட்சுமி, ஷெரினா போன்றவர்கள் பணக்காரர்களுடன், அரசியல் அதிகார மையங்களுடன் சம்பந்தப்பட்டதால் பிரபலமாகிப் போனார்கள். மற்றபடிக்கு மேரிக்களுக்கும், ஜெயலட்சுமிகளுக்கும் எனக்கொன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

ஜெயலட்சுமி விவகாரத்தில் பத்திரிகைகள் பங்கு வழக்கம்போல அதிமோசம். அந்தப் பெண்மணியின் படங்கள் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் வந்துவிட்டன. ஜெயாவின் நீலப்படம் என்பது வரை கூட வார்த்தைகளில் ‘விபச்சாரம் ‘ (இந்த இடத்தில் விபச்சாரம் என்பதே சரி. பாலியல் தொழில் என்ற ‘கெளரவமான ‘ வார்த்தையை இங்கே பயன்படுத்தவது பாவம்!) செய்துவிட்டார்கள். இந்த விபச்சாரத் தொழிலதிபர்கள்தான் நமது ஜனநாயத்தின் தூண்களின் ஒன்றான பத்திரிகை உலகம் என்பது நமது ஜனநாயத்தின் உண்மைத் தன்மைக்கான சான்றாதாரம்.

ஜெயலட்சுமி கணவனைப் பிரிந்த ஒரு பெண். ஏன் பிரிந்தார் என்பது அவருடைய சொந்த விஷயம். சேர்வதற்கு உரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் பிரிவதற்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பிரிந்த பின்னர் அவரின் வாழ்க்கை திசைமாறிவிட்டது. வாழ்க்கைக்கு அவர் தேர்ந்தெடுத்த பாதை பெண்கள் வாழ்வதற்கு மீதம் வைக்கப்பட்டுள்ள ஒரே பாதை. ‘தன் உடலால் ‘ வாழ்வது என்ற பாதையை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளார். இறந்துபோக அச்சமாயிருக்கிறது என்பதால் வாழ நேர்ந்த வலியை ஜெயலட்சுமி அனுபவித்திருப்பார். ஜெயலட்சுமியை வெறும் உடலாய் பார்க்கும் வெறிபிடித்த நாய்களுக்கு அவரின் வலி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேரிக்கு என்ன நிகழ்ந்ததோ அதேதான் ஜெயலட்சுமிக்கும் நிகழ்ந்துள்ளது. யார் மீதும் யாருக்கும் அக்கறையில்லை என்ற இன்றைய சமூக நியதி ஏற்படுத்திய பாதை அது. பெண் என்பது உடல்தான் என்ற சமூகக் கண்ணோட்டத்தின் விளைவு அது. அதிகாரம், பணம், வாழும் வழி எல்லாம் ஆண்களின், அதிலும் பண பலம்-அதிகார பலம் உள்ள ஆண்களின் கைகளில் என்ற சமூக யதார்த்தத்தின் பலியாடு ஜெயலட்சுமி. ஜெயலட்சுமி நமது சமூகத்தைப் பீடித்துள்ள நோயின் வெளிப்பாடு. ஆனால், நோய் பரப்பும் கிருமிகள் ஜெயலட்சுமியையே நோயாகப் படம் காட்டப்பார்க்கிறார்கள்.

காவல்துறை என்றால் அது கயவாலித்துறை என்பதை நாம் எல்ோலரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். உப்பு உவர்ப்பாய் இருக்கும் என்பது போன்ற ஒரு யதார்த்தம் அது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஐந்து லட்சம் ரூபாயை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கடன் தருகிறார், எல்எம்எல்லில் முதலீடு செய்கிறார் என்றால், அந்தப் பணம் எப்படி கிடைத்தது என்று நாம் கேட்பதில்லை. அது எங்கிருந்து வந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். அது ஒரு குற்றம் இல்லை என்று சமூகம் கருதும் அளவுக்கு தப்பான வழிகளில் பணம் சம்பாதிப்பது போலீசின் நியதி என்றாகிவிட்டது.

இந்தக் காவல்துறையின் செயல்பாடு அமைப்பாக்கப்பட்ட ஒரு குற்றவாளிக் கும்பலின் செயல்பாடு. திருவரம்பூரில் இருந்து அழுத மேரிக்கு நிகழ்ந்தது அன்றாடம் நிகழ்கிறது. காவல்துறை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண்களை மேய்ந்து வருவது அன்றாட நிகழ்வு. ஜெயலட்சுமி விவகாரம் அதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. மேய்பவர்களையே மேய்ப்பது என்று ஜெயலட்சுமி முடிவெடுத்திருந்திருக்கிறார் என்று வாதம் செய்தாலும் கூட குற்றவாளிகள் சட்டத்தின் காவலர்கள்தான். பெண்கள் போகப்பொருள் என்பது சமூகத்தின், காவல்துறையின் இரத்தத்தில் பதிந்துள்ள செய்தி. அதிகாரம் காவல்துறைக்கு வாய்ப்பை வழங்குகிறது.

ஜெயலட்சுமி விவகாரத்தில் புலன் விசாரணை செய்வது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிபரிபாலனம் செய்யும் உன்னதப் பணியை விட்டுவிட்டு, புலன் விசாரணையை கோர்ட் நடத்த முடியாது. புலன் விசாரணை செய்ய வேண்டிய காவல்துறைதான் இந்த விஷயத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர். எனில். யார் விசாரணை செய்வது ?

சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றொரு குரல் எழுகிறது. அவர்கள் மட்டும் தேவதூதர்களா என்ன ? நமது ஜனநாயக அமைப்பில் அதிகாரம் படைத்த, கண்காணிக்கும் அமைப்புகள் ஒவ்வொன்றும் அதிகாரத்தில் உள்ள அயோக்கியர்களின் கைப்பாவைகள் என்பதனை நாம் அறிவோம்.

ஜெயலட்சுமி விவகாரத்தில் மந்திரிகளின் பிஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று பத்திரிகைகள் எழுதின. கிசுகிசு பாணியில் மந்திரிகளின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. இந்த நிலைமையில் வழக்கமான அதிகாரக் கட்டமைப்பில் ஜெயலட்சுமி விவகாரத்தைப் பற்றி புலன் விசாரணை செய்வதோ அல்லது நீதிவிசாரணை செய்வதோ குற்றவாளிகள் தப்பிப்பதற்கான கதவுகளைஜ் திறந்துவிடவே செய்யும். ஏனென்றால், குறைவான குற்றம் செய்தவர்கள் வட்டச் செயலாள˜கள் என்றால், அதிகக் குற்றம் செய்தவன் மந்திரி என்பதும், அதற்கு மேலே குற்றம் செய்பவர் அவர்களுக்குத் தலைவர் என்பதும்தான் நாம் இன்று காணும் யதார்த்தம்.

குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது துறை நடவடிக்கை என்ற மாய்மாலத்தை நாம் ஏற்க முடியாது. ஆறு மாதங்கள் கடந்த பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் சொல்லப்படாத ‘சபாசு ‘ பாராட்டுதலோடு டிஎஸ்பி ஆகிவிடுவார்.

எனவே, ஜெயலட்சுமி விவகாரத்தை விசேஷமான முறையில் அணுகவேண்டும். இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக விசேஷ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அதில் ஆளுகின்ற, ஆண்ட கட்சிகளின் பெண்கள் அமைப்புகளைஜ் தவிர இதர பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜூரிகளாக உட்கார வேண்டும். விசாரணை முழுவதுமே, ஜெயலட்சுமி (கோருவாரென்றால், அவரின்) சாட்சியம் தவிர மற்ற அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும். ஜெயலட்சுமி தொடர்பான அனைத்து வழக்குகளையுமே இந்த கோர்ட் விசாரிக்க வேண்டும்.

காவல்துறை என்ற கடிநாயுக்குக் கடிவாளம் போட்டே ஆகவேண்டும். மற்ற விஷயங்களில் எப்படியானாலும், பெண்கள் விவகாரத்தில் இது மிக அவசர அவசியம். மாநில பெண்கள் ஆணையம் என்ற வாயில்லா ஜீவனை கலைத்துவிட்டு, பெண்கள் இயக்கப் பிரதிநிதிகளைஸ்ரீ கொண்ட சட்ட அதிகாரம் உள்ள பெண்கள் ஆணையம் அமைக்கப்பட வேண்டும். உள்ளூர் காவல் நிலையம் துவங்கி, காவல்துறையின் உயர்மட்ட அதிகாரி முதல் இதன் கண்காணிப்புக்கு ஆளாக வேண்டும். காவல்துறை அமைச்சர் அல்லது முதலமைச்சர் இந்த ஆணையத்திற்குப் பதில் சொல்ல வேண்டியது சட்ட பூர்வ கட்டாயம் ஆக்கப்பட வேண்டும்.

இந்த இரண்டு அம்சங்களின் மீது தமிழகத்தின் பெண்கள் அமைப்புகள் சமூகத்தைத் திரட்ட வேண்டிய அவசியத்தை ஜெயலட்சுமி விவகாரம் வெளிப்படுத்தியுள்ளது.

பெண்கள் மீதான வன்முறையை தனிப்பட்டதொரு சீண்டல், வன்புணர்ச்சி, கூட்டமாக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவது என்று மட்டும் புரிந்துகொள்வது பாமரத்தனமானது. ஏனென்றால் நமது சமூக வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பெண் மீது வன்முறை பாவிக்கப்படுகிறது. அதிகார மையங்களின் அது சாதாரணமான நிகழ்வாகிவிடுகிறது.

அதிகார மையங்கள் மீதான மக்களின் பிடியை இறுக்கவேண்டும். அதற்குத் தேவை வலுவான இடதுசாரி இயக்கங்கள். ஜெயலட்சுமி விவகாரத்தில் இடதுசாரி பெண்கள் இயக்கங்கள் நிறைய செய்ய வேண்டும்.

-சி.மதிவாணன்.

mathivanan_c@yahoo.com

Series Navigation