ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

அறிவன்


இன்றைய உலகில் ஜப்பான்,ஒரு தேசமாக,பல ஆச்சர்யங்களை உலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் நாடு.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவினால் அணுகுண்டு வீசி சிதைக்கப்பட்ட பின்னும் ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்கும் நாடு.

எந்த ஒரு உற்பத்திப் பொருளுக்கும் Made in Japan என்ற ஒரு சிறிய பதிப்பால் அதற்கு,தனியொரு மதிப்பைப் பெற்றுத்தரும் நாடு.

மிகச் சிறிய குட்டி நாடாக இருப்பினும் பொருளாதார அளவில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கும் நாடு.

சிங்கப்பூர் ஒரு தேசமாகக் கட்டமைக்கப் பட்டபோது, சிங்கப்பூரின் சிற்பி,லீ-சீனியர் அவர்கள்,உற்பத்தி,தொழிற்சாலைகள் தொடர்பாகச் சென்று ஆலோசனை பெற்ற ஒரே நாடு ஜப்பான்.

இரு நாடுகளுக்குமான தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்குமான பல அமர்வுகள் மற்றும் இணைந்த செயல்பாடுகளுக்குப் பின்னும் லீ அவர்கள் திருப்தியுறாமல் காரணம் வினவியபோது ,ஜப்பானியர்கள் தவிர மற்ற நாட்டவர்கள் 100 சதம் ஜப்பானியர்களின் தொழில் மற்றும் உற்பத்தி சார்ந்த மனத்தேர்ச்சி பெறுவது எளிதான ஒன்றல்ல எனக் கூறியதாகவும்,அது உண்மையே என்றும் தனது புத்தகத்தில் பதிவு செய்கிறார் லீ.

கவனியுங்கள்,திறன் தேர்ச்சி அல்ல,மனத்தேர்ச்சி !

இதெல்லாம் எப்படி சாத்தியம் ?
மந்திரம் போல் ஓரிரவில் நடக்கவில்லை என்பது மட்டும் நிஜம்.

ஜப்பானியர்கள் இயலபாகவே எந்த செயல் செய்யவும் முழுமையான ஒரு செயல்முறை வைத்திருப்பார்கள்;தங்கள் செய்யும் எந்த செயலும் தீர்க்கமானதாக இருக்க வேண்டும் என்றும் மிகவும் முயற்சி எடுப்பார்கள்.

அதிலும் 1945 ல் அமெரிக்காவின் அனுகுண்டு தாக்குதலுக்குப் பின் ஜப்பான் மீண்டெழிந்த போது ஜப்பானியர்கள்,தங்கள் முன்னேற வேண்டுமெனில் உலக நாடுகள் எதற்கும்,எதையும் மீறிய ஒரு செயல் நேர்த்தி தங்கள் செயல்களில்,தயாரிப்பு முறைகளில்,தயாரிக்கும் பொருட்களில் இருக்க வேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே மேற்கொண்டார்கள்.

இந்த காலகட்டத்தில்,அதாவது 1950 களில், ஜப்பானின் புகழ் பெற்ற டொயோட்டா நிறுவனம் உருவாக்கிய செயல்முறைதான் 5 எஸ் எனப்படும் பணிச் செயல்பாடுகள் கோட்பாடு.

அதாவது

செய்ரி-Seiri
செய்டன்- Seiton
செய்சோ-Seiso
செய்கெட்சு-Seiketsu
சிட்சுகெ-Shitsuke

வட இந்தியாவில் கிடைக்கும் இனிப்புகளின் பெயர்களைப் போல இருப்பினும் இவற்றில் விதயம் இருக்கிறது.பார்ப்போம்…..

இந்த வார்த்தைகளின் முதல் ஐந்து எழுத்துக்களை எடுத்துக் கொண்டு இந்த முறைக்கு சுருக்கமாக 5 எஸ் எனப் பெயரிடப் பட்டிருக்கிறது.

இனி தனித்தனியாக இவை என்ன,எதைப்பற்றி சொல்கின்றன எனப் பார்ப்போம்.

நம்மில் பலருக்கும் சிறுவயதிலும்,கல்லூரிக்காலத்திலும்,நாம் வெளியே கிளம்பும் போது,அறிவிக்கப்படாத காரியதரிசியாக அம்மாவோ.அப்பாவோ செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.அம்மா,என் ஆபீஸ் ஃபைல் எங்கே,அப்பா கார் சாவி எங்கே,என அலம்பல் விட்டு,அவர்கள், ‘இவன் வெளியே கிளம்புறானா,நான் கிளம்புறேனான்னு தெரியல,எடுத்த பொருளை எடுத்த இடத்துல வச்சான்னா,இந்த கிளம்புற அவசரப்பாடு தேவையில்லைன்னு சொன்னா கேட்டாதானே’ என அலுத்துக் கொள்ள வைப்போம்.

எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைப்பது-அதுதான் விதயம்,இதைத்தான் எப்படி சிறப்பாக செய்வது என சொல்லித் தருகிறது செய்ரியும்,செய்டனும்.

அதாவது Sorting & Setting in Order.

நம்முடைய அறை மேசையை சிறிது பார்ப்போம்.

கணினி இருக்க வேண்டும்,படிக்கும் புத்தகங்களை வைத்துக் கொள்ள வேண்டும்,இடையில் பாடல்களும் கேட்டுக்கொண்டே வேலை செய்ய வேண்டும் என்பதற்காக வாங்கிய குட்டி MP3 ப்ளேயர்,ப்ளாக் எழுத வேண்டும் என பலவும் நினைத்து,இவை அனைத்துக்கும் வசதியாக இருக்க வேண்டும் வைக்க வேண்டும் என வாங்கிய மேசை.

இப்போது எப்படி இருக்கிறது?

ஒரு பக்கம் மடிக்கணினி விரித்தபடி இருக்கிறது,பக்கத்தில் பாதி படித்து விட்டு,படித்த பக்கத்தோடு விரித்து கவிழ்த்து வைத்திருக்கும் நாலைந்து புத்தகங்கள்,அதனருகில் நேற்று வாங்கி வந்த ரெடிமேட் சட்டை-பேக்குடன்,மூன்று நாட்களுக்கு முன் குடித்து விட்டு வைத்த காபி கப்,காலிலிருந்து கழட்டிய சுருண்ட நிலையில் உள்ள ஒற்றை சாக்ஸ் ஒன்று,
அடுப்புக்கு பயன்படுத்தும் காஸ் லைட்டர்,டிவி ரிமோட்,இந்த களேபரங்களுக்கடியில் ஒளிந்து கொண்டிருக்கும் காரின் சாவி எல்லாம்,எல்லாமே மேசையின் மேல் !!!!

விளைவு,தேவைப்பட்ட பொருள் தேவைப்பட்ட நேரத்தில் கைக்கு கிடைப்பது இல்லை.இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

எந்த பொருள்கள்,எந்த இடத்தில் தேவை என முதலில் தீர்மானிக்க வேண்டும்,இது செய்ரி-அதாவது Sorting.

காட்டாக….

கழுவாத காபி கப்,
சுருட்டிய சாக்ஸ்,
புதிய சட்டை,
காஸ் லைட்டர்,
கார் சாவி,
டிவி ரிமோட்

இவை எல்லாம் மேசைக்குத் தேவை இல்லாத பொருட்கள்.என்ன செய்ய வேண்டும்?ஒழுங்குபடுத்த வேண்டும்,அதாவது செய்டன்.

இந்த செய்ரி-Sorting,முடிந்ததும் செய்டன்-அதாவது Set in Order- அவை,அவை இருக்க வேண்டிய இடத்துக்கு அந்தந்த பொருட்களைக் கடத்துவது.

இவை முடிந்த பின் வருவது செய்சோ,அதாவது Shining .அந்தந்த இடத்துக்குப் பொருட்களைக் கடத்திய பின் அவற்றை சுத்தமாக துடைத்து அழுக்கில்லாமல் ஒழுங்காக அடுக்கி வைப்பது.

இந்த அடுக்கிவைப்பதில்,சாவிக்குத் தேவையான தொங்க விடும் ஆணி மற்றும் ரிமோட்டுக்குத் தேவையான சிறு பெட்டி முதலியவற்றையும் தயார் செய்வதும் அவற்றை அனைவரும் எளிதாகப் பார்த்து எடுக்கும் வண்ணம் ஒரு இடத்தில் வைப்பதும் செய்கெட்சுவில் அடங்கும்,அதாவது Standardisation.

இந்த பொருள் இந்த இடத்தில்தான் இருக்கும்,அதை எடுத்தால் அங்குதான் வைக்க வேண்டும் என்ற மதிப்பீடு செய்து அதை உறுதியாகப் பின் பற்றுதல்,அதை எல்லோரும் எளிதாகப் பின்பற்றும் படி எளிதான கையேடுகள்,சுவரொட்டிகள் இவற்றைப் பயன்படுத்தி முறைப்படுத்துவது-இது Standardisation.

எல்லாம் சரி,இவை எல்லாம் எத்தனை நாளுக்கு?

திரும்பவும் 10 நாட்களுக்குள் நாம் மேலே பார்த்த நிலைக்கு மேசையை மாற்றும் திறமைசாலிகளாவே நம்மில் பெரும்பாலோர் இருப்போம்;இவ்வாறில்லாமல் ஒரு ஒழுங்கில் நிலைக்க வேண்டுமெனில் கைக்கொள்ள வேண்டிய சிட்சுகெ,அதாவது Sustaining.

சிட்சுகெயில் மேற்சொன்ன இந்த முறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு,அவை மேன்மேலும் அவை கூர்மைப்படுத்தப்படுத்தல் ஒரு தொடர் விளைவாக-Continouous Process –ஆக கைக்கொள்வதும் கூட சிட்சுகெயில் ஒரு பகுதிதான்.

மேற்சொன்ன மேசைப் பொருட்கள் சீரமைப்பை அப்படியே தொழிற்சாலைக்கும் தயாரிப்புக் கூடத்திற்கும் விரித்ததுதான் டொயோட்டா செய்தது.

இந்த முறைகளினால் ஏற்பட்ட முன்னேற்ற மாறுதல்கள் அளித்த பளிச் மாறுதல்கள் மற்றும் தயாரிப்பு மேன்மை,அவற்றினால் அடைந்த திறன் தேர்ச்சி,அனைத்தினுக்கும் மேலான,முக்கியமான,இந்த ‘ அனைத்திலும் மேலான‘ அதி தேர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் மனத் தேர்ச்சி-

நாளாவட்டத்தில் டொயோட்டா மட்டுமின்றி ஜப்பானிய நிறுவனங்கள் பலவும் இந்த 5 எஸ் கோட்பாடுகளைக் கைக்கொள்ளத் தொடங்கி,தமது உற்பத்தி முறைகளில் தனித்த நேர்த்தியையும் தேர்ச்சியையும் கொண்டு வந்தன.

ஜப்பானியர்கள் மற்றவர்கள் எட்ட முடியா இடத்தை,இன்றைய உலகில் எட்டிய முயற்சியின் கதை இதுதான் !!!!!!!


அறிவன்,

சிங்கப்பூர்.

தொடர்பு: en.madal@yahoo.com

வலைப்பூ : www.sangappalagai.blogspot.com

Series Navigation

அறிவன்

அறிவன்