சொலவடையின் பொருளாழம்

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

இராம.கி.


அன்றொருகால் யப்பானில் ஆவிநிறை நீரூற்றில்
நின்றிருத்தல் நல்லதென நீளுரைத்தார்; – சென்றிருந்தேன்;
ஊர் அரிமா ஆன்சென்; அதில் ஊர்க்குளியற் சத்திரத்தில்
நேரியதைச் சொல்லுகிறேன் நின்று.

ஊரோ புதிதெனக்கு; உள்ளரங்கில் நீரூற்று;
வாரோர் பலரும் பணங்கட்டிச் – சாரையெனச்
செல்லுவதைப் பார்த்ததனால் சென்றே குளிப்பமென
மெல்லவே உட்புகுந்தேன் மேல்.

ஊர்க்குளியற் தொட்டி; ஒருபக்கம் ஆண்மக்கள்;
நேர்தடுப்புக் கப்பாலே நேரிழையர்; – சேர்குளிமுன்
மெய்கழுவ நீர்த்தாரை; மேவி அதன்கீழே
பையவே குத்திட்டேன் பார்த்து.

குத்திட்ட என்னரையில் கோவணமாய் ஒருடுப்பு;
அத்தரையில் ஆங்கமர்ந்த யப்பானன்; – வித்தகன்போல்
‘நாங்களெலாம் பைத்தியமோ ? நன்னகையோ ? நீரூற்றுள்
ஆங்கெல்லாம் பாரெ ‘னச்சொன் னான்

பக்கென் றுணர்வோடு பைந்தமிழின் சொலவடைக்குச்
சிக்கென்ற உள்ளருத்தம் சேர்ந்துணர்ந்தேன்; – நக்கலிலை;
அம்மணாண்டிக் கூட்டம்! அதில்கோட்டி கோவணன்தான்!
சும்மாவா சொல்லிவைத்தார், சூழ்ந்து ?

சொலவடையின் ஆழமோ சூடாகத் தைக்கக்
களைந்தேன் அரையுடுப்புக் கட்டை; – தொலைவதுபோல்
என்னளவில் நாணம் எழுந்தோடிப் போயிற்று;
அன்னார் நகையுற்றார் ஆங்கு.

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

author

இராம.கி.

இராம.கி.

Similar Posts