சென்னை வானவில் விழா 2010

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

ஸ்ரீதர் சதாசிவன்


shri.jersey@gmail.com

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? – அய்யனின் இந்த வார்த்தைகளை மையக்கருத்தாக கொண்டு சென்னையில் ஜூன் மாதம் முழுவதும் வானவில் விழா கொண்டாடப்பட்டது. பல குழுமங்களும், உள்ளூர் கூட்டமைப்புக்களும் ‘சென்னை வானவில் கூட்டணி’ என்ற பெயரில் ஒன்றாக இணைந்து, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களுக்கான கலை விழா, கவியரங்கம், கலந்துரையாடல், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் பெற்றோர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, ஓவியப் போட்டி, பொன்மொழி மற்றும் கோஷப் போட்டி, அழகு போட்டி போன்ற பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தின. இதற்கெல்லாம் முத்தாயிர்ப்பு வைத்தாற்போல் அமைந்தது, சென்னை நகரத்தின் வரலாற்றில் இரண்டாவது முறையாக மெரீனா கடற்கரையில் ஜூன் 27 ஆம் தேதி அரங்கேறிய சென்னை வானவில் பேரணி! கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்குகொண்டார்கள்.

நம்மில் பலருக்கு இப்படி ஒரு விழா நடைபெற்றது என்பது கூட தெரியாது. தமிழ் ஊடகங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இவர்களை பற்றிய செய்திகளை முற்றிலுமாக புறக்கணிப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். யார் இவர்கள்? இது என்ன விழா? பரிச்சையமான சொற்களில் குறிப்பிட வேண்டுமென்றால் ஓரினசேர்க்கையாளர்கள் மற்றும் அரவாணிகள். ஆனால் இந்த இரண்டு சொற்களுமே இந்த சமூகத்தினரனால் தரக்குறைவான சொற்களாக கருதப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் கூட்டாக விவரிக்கும் தொடர் – மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள். இவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.
முதல் வகை – மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்கள் அதாவது ஆண் – பெண் என்று பொதுவாக காணப்படும் ஈர்ப்பு இல்லாமல் இருப்பவர்கள். ஆண்களை விரும்பும் ஆண்கள் (Gays / இதற்கான தமிழ் சொல் “நம்பி”), பெண்களை விரும்பும் பெண்கள் (Lesbians / இதற்கான தமிழ் சொல் “நங்கை” ), இருபாலரையும் விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் (Bisexuals / இதற்கான தமிழ் சொல் “ஈரர்” ) , இவர்கள் அனைவரும் இதில் அடக்கம். ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தை வெறும் உடல் சமந்தப்பட்ட உறவை மட்டும் குறிப்பதால், இதில் இவர்களுக்கு ஒப்புதல் இல்லை. எல்லா உறவுகளையும் போல அன்பு, பாசம், காதல், ஈர்ப்பு, பகிர்ந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல் என்று எல்லா உணர்வுகளின் கலவை இவர்களுது உறவுகளும்.அதனால் தான் தன்பாலீர்ப்பு (Homosexuality) அல்லது ஒருபாலீர்ப்பு என்ற வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்துகிறார்கள். இருபாலர் மீதும் ஏற்படும் ஈர்ப்பை இருபாலீர்ப்பு (Bisexuality) என்றும், பொதுவாக காணப்படும் ஆண்-பெண் என்ற பாலீர்ப்பை எதிர்பாலீர்ப்பு (Heterosexuality) என்றும் அழைக்கப்படுகிறது .

இரண்டாவது வகை – மாறுபட்ட பால் அடையாளம் கொண்டவர்கள் – பிறப்பால் ஒரு பாலும் மனத்தால் இன்னொரு பாலாகவும் அடையாளம் காண்பவர்கள். அதாவது பெண் அடையாளம் ஏற்கும் ஆண்கள் (Male to Female Transgender, திருநங்கைகள்) மற்றும் ஆண் அடையாளம் ஏற்கும் பெண்கள் (Female to Male Transgender, திருநம்பிங்கள்). அரவாணிகள், அலிகள் போன்ற சொற்கள் மிகவும் தரக்குறைவான, கீழ்த்தரமான வார்த்தைகள். இப்படிப்பட்டவர்களை கூட்டாக திருநர்கள் (Transgender) என்று அழைப்பர்.

இந்த பாலியல் சிறுபான்மையினர், சமூகத்தில் தங்களை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வரவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையை போற்றவும் சென்னையில் இரண்டாவது முறையாக வானவில் விழாவை கொண்டாடினர்.

இதை பற்றி சென்னையை சேர்ந்த சக்தி சென்டரின் இயக்குனரும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் உரிமைகளுக்காக போராடுபவருமான அநிருத்தன் வாசுதேவனிடம் கேட்ட பொழுது, “அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” என்ற வள்ளுவரின் வாக்கியத்தை நாங்கள் இந்த விழாவில் நினைவுகூர்கிறோம். ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய காதல், அன்பு மற்றும் அடையாளங்கள். இவைகள் சமூகத்தால், இயற்கைக்குப் புறம்பானவை என்றும் வெளிநாட்டு இறக்குமதிகள் என்றும் தூற்றப்படுகின்றன. ஆனால் இவை எங்களுக்கு இயற்கையானவை. நம்முடைய பண்பாட்டிலும் தொன்றுதொட்டு இருந்து வருபவை. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால் எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி “ என்கிறார்.
கடந்த ஆண்டு வரை இந்தியாவில் இவர்களுக்கு அடிப்படை மனிதஉரிமைகள் கூட மறுக்கப்பட்டுதான் வந்தன. ஐ.பி.சி 377 சட்ட பிரிவின் படி ஒருபாலீர்ப்பாளராய் இருப்பது சட்டப்படி குற்றமாக இருந்தது . தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் இதை எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் ஜூலை 2, 2009 அன்று “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற தீர்ப்பை வழங்கி பாலியல் சிறுபான்மையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ” மனித உரிமை பேணும் இந்தத் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் முழுவதுமாக நிலைநிறுத்த வேண்டும்” என்கிறார், சென்னை வானவில் கூட்டணியின் அங்கத்தினரும், ஹெச். ஐ. வீ / எய்ட்ஸ் துறையில் பணிபுரியும் சாத்தி நிறுவனத்தின் இயக்குனருமான டாக்டர். எல்.ராமகிருஷ்ணன்.

சட்ட மாற்றம் உடனடியாக சமூக மாற்றத்தை கொண்டுவருவதில்லை. இந்தியாவில் பாலின சிறுபான்மையினர் மீது காட்டப்படும் வெறுப்பு – ஜாதி, மதம், மொழி, மாநிலம், படிப்பறிவு, பணவசதி என்று எல்லா வித்தியாசங்களையும் கடந்து பரவி இருக்கிறது. சமீபத்தில் அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தில் நடந்த பேராசிரியர் சிராசின் தற்கொலை இதற்க்கு ஒரு எடுத்துகாட்டு. சில விஷமிகள், அவரது இல்லத்திற்குள் கட்டாயமாக நுழைந்து பேராசிரியரும், அவரது நண்பரும் அன்னியோனியமாக இருப்பதை அனுமதியின்றி படம்பிடித்தனர். பல்கலைகழக உயரதிகார குழு, இதை காரணம் காட்டி சிராசை பணிநீக்கம் செய்தது. மனமுடைந்த சிராஸ் முதலில் துவண்டாலும், நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றார். நீதிமன்றம் சிராசின் பணிநீக்கத்திற்கு இடைகால தடை வழங்க, சிராசும், இந்தியா முழுவதும் உள்ள மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களும், மனிதஉரிமை போராளிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த அந்த இரவே, பேராசிரியர் சிராஸ் மர்மமான முறையில் அவரது இல்லத்தில் இறந்துகிடந்தார். தற்கொலை என்ற வாதத்தை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சென்னை வானவில் விழாவில் சிராசிற்கு நினைவஞ்சலி செலுத்தும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள், ” கல்வி நிறுவனங்களும், கார்பரேட் நிறுவனங்களும், காவல் துறையினரும், , மத அமைப்புகளும், பொதுமக்களும் எங்கள் மீது தொடுக்கும் வன்முறை, ஒதுக்குதல் ஆகியவற்றிற்கு உடனடித் தீர்வு வேண்டும் ” என்று கேட்கிறார்கள்.

இவர்களின் குடும்பங்களும் நண்பர்களும் கூட இவர்களை ஆதரிப்பதில்லை. மனநல ஆலோசகர் மாக்டலின் ஜெயரத்தினம் இது பற்றி பேசும் பொழுது, ” இவர்கள் தங்களது இந்த வித்தியாசத்தை விரும்பி தேர்ந்தெடுப்பது கிடையாது. இயற்கையாக இவர்கள் உள்ளிருந்து தோன்றும் உணர்வு இது. பெற்றோர்கள் இதை புரிந்து கொண்டு, தங்கள் குழந்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்” என்கிறார். இவரது நிறுவனமான சென்டர் பார் கௌன்சிலிங், சென்னை வானவில் விழாவின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பெற்றோர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்திருந்தது. இதில் பங்குகொள்வதற்காக பலமணி நேரம் பயணித்து சென்னை வந்தார்கள் ஒரு தம்பதியினர். இவர்களது மகள் ஒரு நங்கை (Lesbian). நிகழ்ச்சியில் மற்ற பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களை சந்தித்தது இவர்களுக்கு தங்கள் மகளை புரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது.

தங்கள் குழந்தை மாறுபட்ட பாலீர்ப்பு அல்லது பால் அடையாளம் கொண்டது என்ற உண்மையை ஏற்றுக்கொள்வது பெற்றோர்களுக்கு எளிதான காரியமே இல்லை. இது போன்ற தருணங்களில் பெற்றோர்களுக்கு உதவ, அவர்களுக்கு தேவையான தகவல்களை தர, ORINAM.NET இணையதளம் “நம் குழந்தைகள்” என்ற உதவி கையேட்டை சென்னை வானவில் விழாவின் ஒரு நிகழ்ச்சியான “நிறங்கள்” நிகழ்த்து கலை விழாவில் வெளியிட்டது. நிறங்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழ் திரைப்பட நடிகை ரோகினி இந்த புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தது திருநங்கைகளின் கலை குழுவான “விடுதலை கலை குழு” வின் நடனம். இந்த குழுவின் நிறுவனரும், திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடுபவருமான திருநங்கை கல்கி சுப்ரமணியம் 2011 இல் நடக்கவிருக்கும் மக்கள் கணக்கெடுப்பில் திருநர்களையும் சேர்க்கவேண்டும் என்று வலியுறத்தி வருகிறார். ” 2011 ஆம் ஆண்டு தேசிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மக்கள் கணக்கெடுப்பில் திருநங்கைகளும், திருநம்பிகளும் கணக்கிட படவேண்டும். மேலும் அவர்கள் தேர்வு செய்யும் பால்/ பாலின பிரிவினையைத் பயன்படுத்த அனுமதி வேண்டும். இப்பொழுதுள்ள “ஆண்/ பெண்” என்ற குறுகிய வரையறைக்குள் திருநர்களை திணிக்க கூடாது” என்று கல்கி குரல் எழுப்பிகிறார்.

மாதம் முழுவதும் நடந்த சென்னை வானவில் விழாவின் இறுதி கட்டமாக, ஜூன் 27, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை மெரீனா கடற்கரையில் வானவில் பேரணி நடைபெற்றது. வானவில் கொடிகளை ஏந்திக்கொண்டும், கோஷங்களை எழுப்பிக்கொண்டும் உற்சாகத்துடன் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் , அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றாக இந்த விழாவில் இணைந்தனர். கடற்கரை வண்ணமயாமாக விழா கோலம் பூண்டது.

இயற்கையின் அமைப்பில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. நமக்கு புரியவில்லை என்பதாலோ, பெரும்பான்மையுடன் ஒத்துப்போகாமல் மாறுபட்டு காணப்படுவதாலோ ஒரு விஷயம் தப்பாக ஆகிவிட முடியாது. பாலின சிறுபான்மையினர் தங்களுக்கென்று சிறப்பான உரிமைகளை கேட்கவில்லை, எல்லோரையும் போல வாழ, சம உரிமைகளை கேட்கிறார்கள். வாழு, வாழ விடு என்று எல்லோரையும் மதிக்கும் ஒரு நாடாக நம் நாடு விளங்கினால் தான், வேற்றுமையில் ஒற்றுமை என்பது உண்மையாக நமக்கு பொருந்தும் . பன்மையை போற்றுவோம்.

புகைப்படங்கள் : விஜய் வெங்கடேஷ், அநிருத்தன் வாசுதேவன், ஓரினம்.நெட்

References :
Orinam.net : http://chennaipride.orinam.net
NDTV Hindu : http://www.youtube.com/watch?v=t_F06dx9Uag

Series Navigation