சூரியனைத் தேடும் இலைகள்

This entry is part [part not set] of 17 in the series 20010219_Issue

மனுபாரதி


வெளிக்காற்றில் சிறிது நேரம் நிற்கவேண்டும் எனத் தோன்றியது பகவதிக்கு. அந்த மாடியறையின் ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். மேலே அம்மாவாசை ஆகாயம். கருப்பு வானில் சிறை பிடிக்கப்பட்டிருந்த நட்சத்திரப் பூச்சிகள் திமிறிக்கொண்டிருந்தன. கீழே அந்தக் கட்டடத்திலிருந்து பத்தடி தள்ளி, ‘கோங்கா ‘ (கங்கை) நதியின் ஒரு படித்துறை. அருகே மங்கலாக எரிந்து கொண்டிருந்த ஒரு மின்சார விளக்கொளியில் கோங்கா நீர் மஞ்சளாய்த் தெரிந்தது. அந்தப் படித்துறையில் மோதும் நீரலைகளில் பலவிதமான அசுத்தப் பொருட்கள் மிதந்து கொண்டிருந்தன. சாம்பல் நிற நீரில் எண்ணெய்ப் படலத் துளிகள் மினுக்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாக மாமரங்கள் சிறிதும் அசையாது இலைகிளைகளைத் தொங்கப்போட்டு நின்று கொண்டிருந்தன.

குறட்டைச் சத்தம் வர, அறைக்குள்ளிருந்த கட்டிலை ஒரு கணம் உற்று நோக்கினாள். பெயரோ, முகமோ தெரியாத அந்த இருவரும் தூங்க ஆரம்பித்திருந்தனர். தங்கள் தேவைகள் தீரும்வரைதான் அவள் வேண்டும். அதற்குப் பின் அவள் தீண்டத்தகாதவள். தரையில்தான் படுக்கை. கட்டிலில் அல்ல. இடமிருந்தும் காலை அகட்டி அவர்கள் அக்கட்டிலை ஆக்கிரமித்திருந்தனர்.

இப்படிக் கடித்துத் துப்பப்பட்ட சக்கையாக இருப்பது பகவதிக்குப் புதிதல்ல. எத்தனை இரவுகள், எத்தனை மனிதர்கள்! அவள் உடம்பு இதற்கெல்லாம் மரத்துப் போயிருந்தது.

தன் கலைந்த உடைகளை சரி செய்துகொள்ளக்கூட அவளுக்குத் தோன்றவில்லை. புழுக்கமும், இறுக்கமும் போகட்டும் என்று சில கணங்கள் ஜன்னலருகில் நின்றாள். அந்தப் பின்னிரவில், நடப்பது என்ன மாதம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். அகண்டு விரிந்து கொண்டே போகும் வெற்று தரிசு நிலமாக வாழ்க்கை இருக்கையில் மாதத்திற்கோ வாரத்திற்கோ ஒரு அடையாளம் ஏற்படுத்திக் கொள்ள ஒரு அவசியமும் இல்லாது போயிற்று அவளுக்கு. அதனால் சட்டென்று ஞாபகம் வர மறுத்தது. என்றோ சமீபத்தில் துர்கா கோவிலில் பெரும் கொண்டாட்டம் நடந்தது நினைவில் மங்கலாக படிந்திருந்தது. ‘அது நடந்து இருபத்தியைந்து முப்பது நாட்கள் இருக்குமா ? அப்படியானால் இது கார்த்திக் மாதம் ‘, என்று ஒருவாறு அனுமானித்தாள். ‘இந்த மாதத்தில் வழக்கமாக அடிக்கும் குளிர்காற்று அடிக்கவில்லையே. ஏன் இப்படிப் புழுங்குகிறது ? ஒரு மரமாவது அசையாதா ? ‘ என்று ஏங்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு இடுப்பும், தொடைகளும் ஏகமாய் வலித்தன. அடுத்தமுறை சுமீத் கோஷிடம் இது போன்று இருவருடன் அனுப்புவதை உறுதியாக மறுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். ஒருவருக்கு மேல் சமாளிக்க உடம்பில் இனித் தெம்பில்லை. நேற்று இதைச் சொல்லி, தகராறு செய்யப் போனபோது, சுமீத், ‘மீன் ஜோலும், சோறும் இரண்டு வேளையும் சாப்பிட மட்டும் தெரியுதுல்ல ? காசில்லாட்டா தட்டுல மீன் எப்படி வந்து விழும் ? ஒருத்தருக்கு இரண்டு ‘பாபு ‘க்கள சந்தோஷப்படுத்தினாத்தான் இன்னிக்கு விக்கற விலையில் சோறு திங்க முடியும். இல்லாட்டி எப்படி சாப்பிடுவே கேக்கிறேன் ? ‘ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் வங்காள கெட்ட வார்த்தைகள் அனைத்தும் பிரயோகித்தான். தெறித்து வந்து விழுந்த வார்த்தைகளின் உக்கிரம் தாங்கமுடியவில்லை. இவர்களுடன் இந்த விடுதிக்குப் புறப்பட்டு வந்துவிட்டாள். வந்துவிட்டாளே தவிர வர வர இதையும் இப்பொழுதெல்லாம் தாங்க முடியவில்லை.

பெரிய தீதியிடமாவது சிறிது கருணையை எதிர்பார்க்கலாம். அவர்கள் பிள்ளை, இந்த சுமீத் கோஷிடம்…. ம்ஹும். ஒன்றும் எதிர்பார்க்க முடியாது. எந்த அலைக்கும் கரையாத பாறையவன். அவன் மேல் அடித்த போராட்ட அலைகள் துளிகளாய்ச் சிதறுண்டு தோல்வியில் தான் கரைந்திருக்கின்றன.

‘எத்தனை தோல்வியில் முடியும் போராட்டங்கள்! ‘ – அவள் எண்ணத்தில் ஒரு விரக்தி முளைத்தது.

மிகச்சிறிய வயதில் ஒரு கவள உணவிற்கும், ஒதுங்க ஒரு கூரைக்கும் அவளும் அவளன்னையும் வறுமையுடன் நடத்திய போராட்டம்; வறுமையைச் சாக்கிட்டு தப்பான உரசல்களும், தவறான பார்வைகளும், தன் அன்னையையும், இளமை பூத்தபொழுது தன்னையும் வந்து தாக்கியபொழுது மானம் காக்க நடத்திய போராட்டங்கள்; ஒரு புயல் வெள்ளத்தில், வீட்டையும், ஒரே சொந்தமான அன்னையையும் பறிகொடுத்த நாளில் பூதாகாரமாக வளர்ந்து நின்ற எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி, துக்கம், பயம் – இவற்றுடனான போராட்டங்கள். எல்லாமே தோற்ற போராட்டங்கள்.

‘புது சரக்கு பாபு! யாரும் தொடாத பொண்ணு! ‘ என்று முதன் முதலாய் விலை பேசப்பட்டபொழுது, மூர்க்கத்தனமான காமவெறியால் பாழாக்கப்பட்டபொழுது, போதைவெறியர்களின் கைகளில் அகப்பட்டபொழுது, எத்தனையோ ஆண்களின் மோகத்தால், இச்சையால், வக்கிரத்தால் தாக்கப்பட்டபொழுது, வியர்வை நெடியும், அனல் மூச்சும், உக்கிரமான தீண்டலும் தான் இனி வாழ் நாள் முழுதும் என்று நேர்ந்தபொழுது – என தோல்வியைச் சந்தித்த பொழுதுகள்தான் மிக அதிகம். பலாத்காரம் ஒரு புறமும், பசி மறுபுறமும் பயமுறுத்திய பொழுதுகள் அவை.

மரத்துப்போன உடம்பு. விரக்தியில் மனசு. அவளுக்குத் தன் இருப்பின், வாழ்க்கையின் அர்த்தம் புரியவில்லை. அந்தக் கணத்தில் அவற்றிற்கு அர்த்தமேயில்லையோ என்று நினைத்தாள். அழுக்காய், படித்துறையில் மோதிக்கொண்டிருக்கும் கோங்கா நீரலைகளைப்போல், அழுக்கை மட்டுமே சுமந்து இப்படி அலைபாய்ந்துகொண்டேயிருக்கப் போகிறேனோ என்று பட்டது அவளுக்கு. சட்டென்று ஒரு சூன்யம் சூழ்ந்த தனிமையை உணர்ந்தாள். உலகமும், அதன் உயிர்களும், அண்டமும் அவளிடமிருந்து அந்நியப்பட்டு நின்று கொண்டிருக்கிறது. நிர்கதியாய்… நிராதரவாய்… நடுக்கடலில் எதுவுமேயற்ற ஒரு வெற்று மணல் மேடாய்த் தான் இருப்பதாக ஒரு பிரமை அவளுக்குள்.

சிறு வயதில் அவளன்னை அவளை தன்மேல் கிடத்திக்கொண்டு, தலையை மெல்ல வருடியபடி படுத்துக்கொண்ட இரவுகள் அவள் ஞாபகத்திற்கு வந்தன. அந்தக் கணங்களில் அவளன்னையின் உடம்பு ஒருவித இளஞ்சூட்டை அவளுக்குக் கொடுத்திருக்கிறது. அந்த ஸ்பரிசத்திலும், அவளது இதமான வருடலிலும் பாஷையில் வெளிப்படுத்த முடியாத ஒரு பாசப்பிணைப்பு சுகந்தமாக அவளை சூழ்ந்திருக்கிறது. அந்தச் சூழலில் ஒரு பரிபூரண பாதுகாப்பை அவளும் சரி, அவளன்னையும் சரி, பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அவளன்னையும் நிர்கதியாய் விடப்பட்டவள்தான். பகவதியை அணைத்தபடி படுத்திருக்கும் இந்த நெகிழ்ச்சியான தருணங்களின் முடிவில் எப்பொழுதும் அவள் கண்களில் நீர்க்கோடுகள் பிறந்திருக்கும். ‘நீ இல்லாத என் வாழ்க்கையை கற்பனை கூட பண்ணி பாக்கமுடியலை மோளே! ‘ என்று பகவதியை இறுக்கியணைத்துக் கொள்வாள். பகவதியும் பதிலுக்குத் தன் அன்னையை இறுக்கிக்கொள்வாள்.

இந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள், பகவதிக்குத் தன் தனிமையை மேலும் அதிகரிப்பதாய்ப் பட்டது. தன் வாழ்க்கை வியர்வையிலும், விந்துவிலும், உமிழ் நீரிலும் கரைந்து இப்படியே காணாமல் போகப்போகிறதோ என்ற பயம் அவளுக்குத் தோன்றியது.

அடுத்துத் தோற்கப்போகும் போராட்டம் இனி தனிமையுடனானதா ?

இதற்கு முன்பே சில முறை பின்னிரவில் இதுபோன்ற தனிமையை உணர்ந்திருக்கிறாள். ஆனால் அவ்வுணர்வு கண நேரத்திற்குள் வந்த சுவடு தெரியாமல் மின்னலாய் மறைந்திருக்கிறது. அவளது அயர்ச்சியும், களைப்பும் இதற்கு இடம் கொடுக்காமல் அவளை ஆட்கொண்டுவிடும். ஆனால் இன்று…

அவளின் வறண்ட வாழ்வைத் துளிர்க்கச் செய்யும் மேகத்திற்கான தேடலை இன்றைய நீடித்தத் தனிமையுணர்வு கிளப்பிவிட்டது.

நான் தேடும் பொருள் என்ன ? ஒரு வாழ்க்கைத் துணையா ? என்னைப் போன்ற வேசித்தொழில் புரியும் பெண்ணிற்கு அது சாத்தியமா ? தேவை தீர்ந்தவுடனேயே ஒதுக்கி வைக்கப்படும் என்னை ஏற்றுக்கொண்டு காலமெல்லாம் வாழ ஒருவனுக்கு எண்ணம் வருமா ? அப்படியே ஒருவன் வந்தாலும் ‘எத்தனை பேருடன் படுத்துக்கொண்டவள் இவள்! ‘ என்று தோன்றாமல் போகுமா ? முள்மேலல்லவா எப்பொழுதும் படுத்திருப்பதாய்த் தோன்றும் ? அப்படி வருபவனுக்கு தாம்பத்திய சுகம் கொடுக்க என் உடம்பிலும் மனதிலும் தெம்பிருக்கிறதா ?

அப்படி இப்படிப் பணம் சேர்த்து என்னை மீட்டுக்கொள்ளவே எத்தனையோ பாடுபடுகிறேன். இந்த நிலையில் என் மேலுள்ள விலையைக் கொடுத்து, என்னை, ஒரு வேசியை, திருமணம் செய்துகொள்ளும் தியாகி எங்கே இருக்கிறான் ? அப்படி என்னை மீட்டு வாழ்வளிக்க என்னிடம்தான் என்ன இருக்கிறது ?

அவள் சோர்ந்து போனாள். இந்த எதிர்பார்ப்பு வீண் என்று உடனேயே புரிந்தது. அனால் அவளுக்கு அஜய் திடாரென்று ஞாபகத்திற்கு வந்தான்.

இல்லை, இல்லை. அஜய் வாழவேண்டிய பையன். அவனுக்கு வாழ்க்கையில் நிறைய சந்தோஷங்கள் பாக்கியிருக்கின்றன. நான் அவை எதையும் கெடுக்கக்கூடாது.

உடனடித் தெளிவில் அந்த எண்ணம் சிலந்தி வலையிழையாய் சட்டென்று அறுந்து மறைந்துவிட்டது.

அப்படியானால் என் தேடலின் முடிவுதான் என்ன ?

ஒரு… ஒரு குழந்தையா ? அவள் மனம் பிரகாசமாகியது. அவள் தன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்.

திசை புரியாமல் அலைந்து திரிந்தவளுக்கு திடாரென்று ஒரு வழிகாட்டிப் பலகை கண்ணில் பட்டது.

என் வயிற்றலேயே கருக்கொண்டு, என் உடலுக்குள் வளர்ந்து, என்னைப் பிளந்து வெளிவரும் ஒரு சிசுதான் என் தேடலின் முடிவா ?

இந்தக் கேள்வி பிறந்ததும் அவளுக்குத் தன் அன்னையைப்போல், தன் குழந்தையையும் தன்மேல் சாத்திக்கொண்டு, தலை வருடிக்கொடுக்கவேண்டும்; கண்கள் சொக்கி அது உறங்குவதை ரசிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைகள் பிறந்தன.

அவள் மெளஷுமியை நினைத்துக்கொண்டாள். அவள் தான் சமீப காலங்களில் ஒரு குழந்தை வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தாள்.

என்னொத்த பெண்கள் வாழ் நாளில் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர குறிக்கோளே இல்லாதது போல் ஏங்கியதை ஏளனம் செய்த எனக்கா இப்படித் தோன்றுகிறது ?

வருடா வருடம் தன்னைப் போன்ற வேசிகள் கொண்டாடும் கார்திக் பூஜா பற்றி அவளுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது.

சீ! அந்தப் பெண்களையும் மெளஷுமியையும் பரிகசித்த எனக்கா இப்படி ஓர் ஆசை ?

வெளியில் அசையாது நின்றிருந்த மரங்கள் திடாரென்று கிளைகளை இப்படியும் அப்படியும் அதிவேகமாய் அசைத்தன. குளிர்ந்த காற்று வந்து அவளுடம்பை அறைந்து உறைய வைத்தது. கூடவே, வேசிக்குப் பிறந்த குழந்தைக்கு இந்தச் சமூகத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் வந்து தாக்கியது.

அவள் தன் உடைகளை சரிசெய்துகொண்டு புடவைத் தலைப்பால் இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

நல்ல தாய்க்குப் பிறந்தவனையே ‘வேசியின் மகன் ‘ என ஏசும் சமூகம், வேசிக்குப் பிறந்தவனை என்ன பாடு படுத்தும் ? வேண்டாம். எனக்கு ஒரு குழந்தையும் பிறக்க வேண்டாம். என் போராட்டங்கள் என்னுடனேயே மடியட்டும். ஒரு சிசுவைப் பிறப்பித்து என் நரகத்தை அதன் தலையில் வேறு ஏற்ற வேண்டுமா ? வேண்டவே வேண்டாம்.

மெளஷுமியிடம் இதுபற்றி பேசலாம் என்று தற்போதைக்கு மறக்க யத்தனித்தாள். ஆனால் சட்டென்று மறைந்துவிடும் எண்ணமா இது ? சுண்டிவிட்ட வீணை நரம்பாய் அதன் அதிர்வுகள் அடங்க வெகு நேரமாகியது.

மனதை திசை திருப்பும் நோக்கத்துடன் விடுதியைவிட்டுக் கிளம்ப முடிவு செய்தாள். கீழிறங்கி வந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த டாக்ஸி டிரைவரை எழுப்பினாள்.

மேலே வானத்தில் சிறிது சிறிதாக பரவ ஆரம்பித்திருந்த வெளுப்பில் நட்சத்திரங்கள் கரைய ஆரம்பித்திருந்தன.

* * * * * *

காளி காட்டிலிருந்து (KaLi Ghat) எண்ணூறு மீட்டர் தொலைவிலிருந்தன அந்த ஓட்டுவீடுகள். இரவுகளில் விழித்து, பகற்பொழுதுகளில் உறங்கும் வீடுகள்.

அங்கே ஒற்றை மாமரம் ஒன்று நின்றுகொண்டிருக்க, அதன் நிழலிலிருந்த அந்த ஓட்டு வீட்டினுள் பகவதி தூங்கிக்

கொண்டிருந்தாள்.

வெளியில் என்றுமில்லா நிகழ்வாய் இன்று காற்று சிறிது பலமாக அடிக்க ஆரம்பித்திருந்தது. தெருவில் தூரத்தில் மெளஷுமி நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் நடையில் ஒரு வேகம் தெரிந்தது. பகவதியின் வீட்டை அடைந்து கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தாள்.

பகவதி தூங்கிகொண்டிருப்பதைப் பார்த்ததும் சிறிது நிதானித்தாள். கிட்டேயமர்ந்து அவளை உற்றுப் பார்த்தாள். வாடியபொழுதும் நிறமிழக்காத மஞ்சள் சாமந்தியாய் அவளிடம் ஒரு களை இருப்பதாக மெளஷுமிக்குப் பட்டது.

மெளஷுமி, பகவதியைவிட இந்தத் தொழிலுக்கு இரண்டு வருடம் மூத்தவள். பகவதியின் தொடக்க நாட்களில் அவளுக்கு ஆறுதலாய் இருந்தவள். பகவதியின் உணர்வுகளை, சோகங்களை, அவளுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பகிர்ந்துகொண்டவள். தாய்மொழியான மலையாளம் மட்டுமே தெரிந்து வைத்திருந்தவளுக்கு வங்காளம் கற்றுக்கொடுத்தவள். இந்தத் தொழிலில் தன் பட்டறிவை பகவதிக்கு ஏற்றியவள்.

பதிலுக்கு பகவதியும் மெளஷுமியின் துக்கங்களுக்குக் காது கொடுத்தவள். அவளது உள்ளக் குமுறல்களுக்கு வடிகாலாய் இருந்தவள்.

இருவருமே யாருக்காக வாழ்கிறோம் என்ற கேள்விக்கு, பரஸ்பரம் அக்கறை செலுத்துவதில் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டிருக்கிறவர்கள்.

பகவதி தூங்க, தான் பக்கத்திலிருந்து பார்க்கும்போது தன்னுள் ஒரு பாசம் சுரப்பதை அவள் அனுபவித்து ரசித்தாள். ஏதோ ஒரு பிணைப்பை அது பலப்படுத்துவதாகத் தெரிந்தது அவளுக்கு.

வெளியில் அடித்துக்கொண்டிருந்த பலமான காற்றால் பழுத்த மாவிலைகளை மரம் உதிர்க்க, அவை ஒரு விசையுடன் ஜன்னலின் உள்ளே வந்து விழுந்தன. பகவதியின் முகத்தில் ஒன்று பட்டுத் தெறிக்க, அவளுக்குச் சட்டென்று விழிப்பு வந்தது.

எதிரே மெளஷுமி தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள்.

‘என்ன, என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாய் ? எப்பொழுது வந்தாய் நீ ? ‘

‘நீ தூங்கும்போது ஒரு நிர்மலமான செளந்தர்யம் வெளிப்படுகிறது போக்பதி. (பகவதி!). உனக்கு மட்டுமே சொந்தமான… ‘

‘உன் கண்ணில் தான் அதெல்லாம் தெரியும். என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு கிழிந்து நைந்த துணி. அடித்துத் துவைத்துத் தூக்கியெறியப்பட்டவளாய்த்தான் உணர்கிறேன் எப்பொழுதும். ‘

‘நன்றாகப் பேசுகிறாய் நைந்த துணியே! ‘ – சிரித்தாள் அவள்.

‘சரி என்ன விஷயம் ? எப்போது வந்தாய் நீ ? ‘

‘சற்று முன்புதான். சந்தோஷமான ஒரு விஷயம் சொல்லத்தான்.. ‘

‘என்ன, என்ன ? ‘

‘நாளை மறுநாள் என்னவென்று ஞாபகம் இருக்கிறதா ? ‘

‘என்னது ? ‘

‘இப்பொழுது நடப்பது என்ன மாதம் என்றாவது தெரியுமா ? ‘

வெளியே காற்று இன்னும் பலத்து சில இலைகளை உதிர்த்தது.

சிறிது யோசித்தவள், ‘கார்திக் ‘ என்றாள்.

ஆங்.. சொன்னாயே. இந்த மாதம் முடியப்போகிறதல்லவா ? ‘

‘ஆமாம். அட.. கார்திக் பூஜா. ‘

‘அதேதான். அது சம்பந்தமாகத்தான்.. ‘

‘நீ தான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று துடிப்பவளாயிற்றே. இதை இந்த வருடம் நீ ஏற்று நடத்தப் போகிறாயா ? ‘

‘அதுவல்ல நான் சொல்ல வந்தது. நேற்று பிக்ரம் வந்திருந்தான். ‘ என்று சொல்லி தரையை நோக்கினாள். வெட்கம் மிளிர்ந்தது அந்தச் செய்கையில். பகவதி கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தாள்.

‘துறைமுகத்தில் வேலை பார்க்கும் ஆளாயிற்றே. கப்பலேறிப்போய் பர்மாவில் மூன்று மாத வாசமாம். அதனால் தான் இத்தனை நாள் வரவில்லையாம். ‘

அவள் கால் கட்டைவிரல் ஏதோ கோலம் போட்டது.

‘அப்படியானால்.. ‘ அவள் முகத்தைக் கைகளால் நிமிர்த்திக் கேட்டாள் பகவதி.

‘ஆமாம். என் குழந்தைக்குத் தந்தையாக ஒப்புக்கொண்டுவிட்டான். நாளை மறுநாள் கார்த்ிக் பூஜாவிற்கு வருவதாக வாக்களித்திருக்கிறான். ‘ இதைச் சொல்கையில் அவள் முகமே பூரித்துப் போனது.

‘நிஜமாகவே சந்தோஷமான விஷயம் தான். உன் நெடுநாள் ஆசை.. ‘

‘பாதி நிறைவேறப்போகிறது. இவன் ஒத்துக்கொண்டுவிட்டான். கார்திக் பகவான் கருணை செய்ய வேண்டுமே. ‘ – சிறிது கவலை தொனித்தது அவள் குரலில்.

‘எல்லாம் செய்வார். நீ என்ன, என்னைப் போல கார்த்திக் பூஜாவை நிராகரித்தவளா ? ‘ – நம்பிக்கை ஊட்டப் பார்த்தாள்.

ஆனால் மறுகணமே பகவதிக்குத் தன் நேற்றைய குழப்பங்கள் நினைவுக்கு வந்தன. அவள் முகத்தில் ஒரு கவலை ரேகை படர்ந்தது. வேறுபுறம் திரும்பிக்கொண்டாள். ஜன்னலில் காற்றில் ஆடும் மாமரத்தைப் பார்க்கலானாள்.

இந்த மாற்றத்தை கவனித்த மெளஷுமி, அவள் முகத்தைத் திருப்பி கண்களால் என்ன என்றாள்.

‘குழந்தை விஷயமாக நானே உன்னிடம் பேசவேண்டுமென்றிருந்தேன். ‘

‘என்ன சொல். உன் முகத்தில் ஒரு குழப்பம் தெரிகிறது. ‘

‘நேற்றிரவு அகால நேரத்தில் இனம்புரியாத ஒரு தனிமையுணர்வு வந்தென்னைத் தாக்கியது. இந்த அண்டமே என்னிலிருந்து வேறுபட்டு என்னைத் தனியாக விட்டது போல்… என்னால் தாங்க முடியவில்லை. ‘- இதைச் சொல்லும்போது அந்தத் தனிமை மற்றொரு முறை தலைதூக்குவதை அவள் முகத்தின் உணர்வுக் கொந்தளிப்பு பிரதிபலித்தது.

‘அப்படியென்றால் கல்யாண ஆசை வந்துவிட்டதா என் போக்பதிக்கு ? ‘ – அவள் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி மனதை லேசாக்கப் பார்த்தாள்.

‘கல்யாணமா ? நமக்கா ? ‘ – ஒரு விரக்திப் புன்னகை அவள் இதழ்களில் கோடிட்டது.

‘எவன் வரப்போகிறான் மெளஷுமி ? வேசியைக் கட்டிக்கொள்ள யாருக்காவது பிடிக்குமா ? தைரியம் வருமா ? அப்படியே வந்தாலும் அந்தத் தாம்பத்யம் எப்படி இருக்கும் சொல் ? உறுத்திக்கொண்டேயிருக்காதா காலமெல்லாம் ? ‘

‘அப்படி ஒரேயடியாக நம்பிக்கை இழக்க முடியாது. உன்னாள் அஜய் பற்றி என்ன நினைக்கிறாய் ? ‘

அஜய்… அவன் பெயரை எடுத்தாலே அவளுக்கு அசை போடக்கூடிய ஞாபகங்கள். கானல் நீர்க்கூட்டங்களுக்கு மத்தியில் மிக அரிதாக சுரக்கும் ஒரு குளிர்ந்த நிஜ சுனை நீர் அவன்.

இரண்டு வருடங்களுக்கு முன், ஓர் இரவுப் பொழுதில்தான் முதல்முறையாக அவனைச் சந்தித்தாள். முதலில் அவன் இவளை பார்த்தபொழுது இவள் கண்களை சந்திக்கவே கூசினான். அவனது தலை குனிந்தபடியே இருந்தது. இவள் வெட்கமோ என்று எண்ணியிருந்தாள். அறைக்குள் வரும் வரை மெளனம். கட்டிலின் ஓரத்தில் அவள் மேல் படாமல் அமர்ந்தான். குனிந்த தலை நிமிரவேயில்லை. இவள் உடைகளைத் தளர்த்திக்கொள்ள ஆரம்பித்தபொழுது, நிமர்ந்தவன் கண்களில் கண்ணீர். அவள் மடியில் தலைபுதைத்துக் கதறிக் கதறி அழுதான். தன் காதல் தோல்வியால் ஏற்பட்ட தாளாத் துயரத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தான். அவளால் முடிந்த ஆறுதலைச் சொன்னாள். முதன் முதலாக அவளாலும் ஒருவனின் கண்ணீரைத் துடைக்கமுடியும் என்று புரியவைத்தது அவன்தான்.

அவள் மனத்தைப் புறக்கணித்து, உடம்பை மட்டுமே அனுபவித்தக் கூட்டத்தில், இவன் அவள் உடம்பைத் தொடாமல் மனம் விட்டுப் பேசினான். அவளிடம் பேசிக்கொண்டிருப்பதற்காகவே சுமீத்திடம் காசு கொடுத்துவிட்டு வர ஆரம்பித்தான். ஆனால் மிக மிக அரிதாகத்தான் அவனைப் பார்க்க முடியும். திடாரென்று வருவான். பல நாள் தகவல் இருக்காது. நான்கு மாதங்களுக்கு முன்பு வந்திருந்த பொழுதுதான், அவளின் வற்புறுத்தலின் பேரில் அவளைத் தொட்டான். ஒரு பூவைத் தொடுவதைப் போல..

அவன் ஞாபகங்களில் ஒரு நிமிடம் எங்கோ தொலை தூரத்திற்குப் போய்விட்டாள். மீண்டு வரும்பொழுது பெருமூச்செறிந்தாள்.

‘இல்லை மெளஷுமி. அவன் நல்லவன். வாழவேண்டியவன். அவனுக்கு வேறு நல்ல பெண் கிடைப்பாள். அவன் வாழ்க்கையைப் பாழாக்க எனக்கு உரிமையில்லை. ‘

‘கேட்டுப்பாரேன் நீ! ‘

‘அவன் கொடுத்துள்ள சினேகிதி ஸ்தானமே பெரியது. அவனது மனபாரங்கள் சுமக்கும் சுமைதாங்கியாய் இருக்கும் சுகத்தையோ இந்த உறவையோ இழக்க விரும்பவில்லை நான். அப்படிப்பட்ட ஒரு துணை வாய்த்தால்… என் தனிமையை விரட்டலாம் என்று நீ சொல்வது புரிகிறது. ஆனால் அதுவல்ல என் தேடலின் முடிவு. ‘

‘அப்படியானால்… என் ஊகம் சரியென்றால்… என்னால் நம்பமுடியவில்லை. ‘

‘ஆமாம் மெளஷுமி. உன்னைப் போல்… ‘

‘நீயா இதைச் சொல்வது ? என் காதுகளை நம்பமுடியவில்லை. கார்திக் தாகுர் பூஜை கொண்டாட்டத்தையும், குழந்தை ஆசைக்காக நாங்கள் அடிக்கும் கூத்தையெல்லாம் பரிகசித்தவள் நீ. நீயா ? ‘ – மெளஷுமி கண்களில் ஒரு மகிழ்ச்சி அலையடித்தது.

பகவதி கட்டிலில் கிடந்த மஞ்சளாய்ப் பழுத்த மாவிலை ஒன்றைக் கையில் எடுத்துப்பார்க்கலானாள்.

‘எனக்குத் தெரியும். நாம் எல்லாருமே தனிமை விரும்பிகள் அல்லர். மேலோட்டமாக விரும்பினாலும், ஒரு காலகட்டத்தில் தனிமையின் வீர்யத்தை உணர்ந்து தாங்க இயலாது துடிப்பவர்கள். மேலும் பெண்களாய் இருக்கும் பட்சத்தில் நம் வயிற்றில் வளர்ந்திருக்கும் அந்தக் கூடுதல் பையில் எத்தனை நாள் காற்றை அடைத்து வைத்திருப்போம் ? நம் உதிரத்தில் ஓருயிர் பிறக்காதா என்று ஏங்காமலிருப்போமா ? ‘

‘அதெல்லாம் சரிதான் மெளஷுமி. ஆனால் நமக்குக் குழந்தை சரி வருமா ? இந்தப் பழுத்த மாவிலை போல் சமூகக் காற்றால் உதாசீனப்படுத்தப்பட்டு உதிரப்போகும் நமக்கு ஒரு பிள்ளை அவசியமா ? வேசியின் பிள்ளை வாழ்வதற்கு என்ன பாடுபடும் ? ‘

‘நன்றாக யோசிக்கிறாய் நீ, எப்பொழுதும் போல. வேசிக்குப் பிள்ளை பிறக்கக்கூடாதா ? நம் போன்ற ஒவ்வொருவரும் இந்த எண்ணங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்ல மிகப் பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது. பதில் சொன்னால்தான் இவை அடங்கி நம் ஆசை துளிர்க்க வழி கிடைக்கிறது. என்னைக் கேட்டாயென்றால் நம் கஷ்டங்களுக்குக் காரணமே இந்தச் சமூகம் தான். அது என்ன சொல்லும் என்பதற்கெல்லாம் நாம் கவலைப்படலாமா ? ‘

‘வேசி பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு என்ன சொல்லுமோ என்ற கவலை எனக்கில்லை. என் கவலையெல்லாம் பிறக்கப்போகும் அந்தச் சிசுவின் வாழ்வைப் பற்றித்தான். அதற்கு கெளரவமான ஒரு வேலை கிடைக்குமா ? இல்லை புறக்கணித்து அவனையும் ஒரு சுமீத் கோஷாக மாற்றி விபச்சார விடுதிகளை மேய்க்கவிடுமா இந்தச் சமூகம் ? அப்படியானால் என்ன செய்வாய் ? ‘

‘நடத்தட்டுமே அதில் என்ன தவறு ? பெரிய தீதி அடிக்கடி சொல்லுவாளே, ‘எல்லாருக்கும் வாழ உரிமையிருக்கிறது. ஏதாவது ஒரு வழியும் இருக்கிறது. அதைத் தேடும் முயற்சிதான் ஒருவரை வாழவைக்கிறது. ‘ என்று, அதை நம்புகிறவள் நான். ‘

அப்பொழுது இன்னும் வேகமாக வெளியில் காற்றடித்தது. அந்த மாமரம் கிளை விரித்தாடியது.

‘இந்த மாமரத்தைப் பார்த்தாயா ? அதில்தான் எத்தனை இலைகள்! ஒன்றாவது சூரியனைப் பார்க்காத கோணத்தில் முளைத்துப் பார்த்திருக்கிறாயா ? அப்படி இருந்தால் அதில் பச்சை பிடிக்குமா ? அதனால் மரத்திற்குத்தான் என்ன பயன் ? புது இலைகள் துளிர்ப்பதை கவனித்திருக்கிறாயா ? பழைய இலைக்கடியில் முளைப்பதில்லை. நிழலில் முளைப்பதில்லை. புத்தம் புது கோணத்தில்தான் முளைக்கும். இடமில்லாவிட்டால் மரமே ஒரு புது கிளையை உருவாக்கும். கவனித்திருக்கிறாயா ? அப்படித்தான் இந்தச் சமூகத்தில் அவனுக்கும் ஓர் இடமிருக்கும். அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை அவனுக்குச் சொல்லித் தருவதில்தானே நம் தனிமையை நாம் விரட்டுகிறோம். அது முடியாமல் போய் அப்படியே இந்தச் சமூகம் அவனை உதாசீனப்படுத்தினால்… இந்தத் தொழிலில் ஈடுபடுவதிலும் தவறில்லை. ‘

‘வேசியாய் இருப்பதில், வேசித்தொழிலை நடத்துவதில் இழிவே இல்லையென்கிறாயா ? ‘

‘இல்லை என்றுதான் சொல்வேன். இன்று நேற்று அல்ல, காலம் காலமாக, உலகத்தின் எந்தக் கோடியிலும், வேசிகள் சமூகத்திற்குத் தேவைப்பட்டிருக்கிறது. ராஜாக்களுக்கும், பிரபுக்களுக்கும் அந்நாளில் தேவைப்பட்ட பரஸ்திரீ சுகத்திற்கும், இந்த நாளில் மனைவியை இழந்தவன், மனைவியுடன் மட்டும் நின்றுவிடாதவன், கல்யாணமாகாதவன், பணம் படைத்தவன், இளம் பருவத்திலேயே அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள் என்று அனைவருக்கும் நாம் தேவைப்படுகிறோம். நாம் இல்லாவிட்டாலும், சமூகம் நம் போன்ற வேசிகளை உருவாக்கிவிடும். இவர்களது வெறிக்கும், வக்கிரங்களுக்கும் நம் போன்ற பெண்கள் கட்டாயமாக பலியிடப்படுவார்கள். அப்படி பலியிடப்பட்டவர்கள் தானே நாமெல்லாம். சமூகத்திற்கு வேசிகள் தேவையென்றால், அதற்காக நாம் பலவந்தப் -படுத்தப்பட்டோம் என்றால், இந்தத் தொழிலில் வாழ்க்கையை ஓட்டுவது இழிவாகத் தெரியவில்லை எனக்கு. என்பிள்ளைக்கும் இது புரியும். புரியவைக்க வேண்டியது என் கடமை. ‘

‘உன் தெளிவு எனக்கில்லை மெளஷுமி. எனக்கென்னவோ துளிரிலேயே என் பிள்ளை கருகி வெம்பிவிடுவானோ என்று பயமாகயிருக்கிறது. ‘

‘அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. நம்பு என்னை. நமக்கு நடந்த கொடுமைகளுக்கு என்றோ நாம் கோங்கா நதியில் விழுந்திருக்கலாமே.. எந்த நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் ? ‘

பகவதி யோசனையில் ஆழ்ந்தாள்.

சிறிது பொறுத்துச் சொன்னாள் மெளஷுமி, ‘கார்திக் பூஜா வரும்பொழுது உனக்குக் குழந்தை ஆசை வந்திருக்கிறது, கார்திக் பகவானுடைய அருள்தான். ‘

‘கார்திக் பூஜாவென்றதும் சும்மா இல்லையே. நம் ஆட்களுக்கு விருந்து வைக்க வேண்டாமா ? மது பானம் வாங்க வேண்டாமா ? பந்தல், ஒளிவிளக்கு, மேடை, ஷெனாய்காரன், டோலக்காரன் என எல்லாவற்றிற்கும் ஆயிரமாயிரமாய்ப் பணம் வேண்டுமே. நாளை அதிகாலை உன் வீட்டு வாசலில் கார்திக் பகவான் சிலையை வைத்துவிட்டார்கள் என்றால்.. அத்தனை பணத்திற்கு எங்கு போவாய் ? ‘

‘அது அடுத்த கவலை. குழந்தை பெற்றுக்கொள்வது தவறில்லை என்று ஒப்புக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது. சந்தோஷம். ஆமாம். நான் தான் நடத்தவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்களென்றால் செலவாகத்தான் செய்யும். கடன் வாங்கவேண்டியதுதான். உன்னைப்போல் இரண்டு பேருடன் படுக்க வேண்டியதுதான். கடனை அடைக்கமுடியாவிட்டால், என் கிராமத்திற்குச் சென்று இன்னும் இரண்டு பெண்களைக் கூட்டி வந்து இதில் ஈடுபடுத்துவேன். ஒரு குழந்தைக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயார். ‘

‘அது… ‘

‘எதுவும் பாவமில்லை போக்பதி! நம் வாழ்க்கை முறையே இப்படித்தான் என்றாகிவிட்ட பின்… இதெல்லாம் பாவமில்லை என்னைப் பொறுத்தவரை. ‘

பகவதி யோசிக்க ஆரம்பித்தாள்.

* * * * *

அடுத்த நாள் காலை தூங்கி விழித்தபொழுது, பகவதி தன் வீட்டு வாசலிலிருந்த கார்திக் பகவான் சிலையைப் பார்த்து சிறிது ஆச்சர்யமடைந்தாள். ஒரு நிமிடம் அவளுக்குத் தன் சிறு வயதில், தன் அன்னை வேலை செய்த வீட்டில், தீபங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டாடிய கார்த்திகை ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவின் உடல் மேலிருந்தெழும் இளஞ்சூட்டை நினைத்துக்கொண்டாள். அதே சமயத்தில் இந்தக் கார்திக் பூஜாவிற்கு ஆகும் செலவுகளை எண்ணிப் பார்த்தாள். மிகவும் குழப்பமாக இருந்தது.

நெடுநேரத்திற்குப் பிறகு, அந்தச் சிலையை எடுத்து மார்புடன் அணைத்துக்கொண்டாள். ஒரு குழந்தையைப் போல…

* * * * *

அடுத்த நாள் மாலை, அந்த ஓட்டு வீடுகள் விழாக்கோலம் பூண்டுகொண்டன. சிறு சிறு மின்விளக்குகள் அணைந்து அணைந்து மினுக்கின. சிறிதே உயர்த்தப்பட்ட அந்த மேடையில் மெல்லிதாக ஷெனாய் இசை எழுந்து அந்தச் சூழலில் சிறு ஓடையாய் வழிந்துகொண்டிருந்தது. டோலக் சத்தம் ஒரு பக்கம் அதிர, சுமீத் கோஷ் பல பெண்களுடன் ஆடிக்கொண்டிருந்தான். பெரிய தீதியும் தன் பெரிய உடம்பை அசைத்தாடினாள். மெளஷுமியும், பகவதியும் கூட தன்னை மறந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். மயில்கழுத்துப் பச்சைப்பாவாடையில் பதிக்கப்பட்டிருந்த கண்ணாடித் துண்டுகளில் விளக்கொளி பட்டு வெளிச்சப் பொட்டுக்களாய் பிரிதிபலித்தது. செயற்கை நகைகள் மினுக்கின. கொலுசுகள், வளையல்களின் சத்தம் தாளத்துடன் ஒன்றியிருந்தது.

பகவதிக்கு இன்று அஜய் வருவான் என்று திடாரென்று தோன்றியது.

* * * * *

Series Navigation

மனுபாரதி

மனுபாரதி