சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

This entry is part [part not set] of 28 in the series 20070315_Issue

புதுவை ஞானம்


.
‘ அந்த அழகிய மரம்’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்ய உட்கார்ந்து பல்வேறு சொந்த சோகங்களால் தொய்வு ஏற்பட்ட ஒரு இடைவெளியில், வெறுமனே திண்ணைப் பள்ளியில் மட்டும் பயின்ற போதிலும் மாபெரும் தமிழ்த் தொண்டாற்றிய பண்டிதமணியாரின் நினைவு கொப்பளித்து வந்தது.

16.10.1881 அன்று மகிபாலன்பட்டி திரு. முத்துக் கருப்ப செட்டியார், திருமதி சிவப்பி ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் தனது மூன்றாம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பீடிக்கப் பட்டார். அந்த பாதிப்பினால் வெளியூர் சென்று படிக்க முடியாத நிலையிலும் கூட தமது மன உறுதியால் தாமே படித்து முன்னேறினார்.

அந்தக் காலத்தில் செட்டிநாட்டில் முறையாகத் தமிழ்க்கல்வி பயிலுவதற்கான பள்ளிக் கூடங்கள் இல்லை. செட்டியார்களுக்கு அவ்வாறு கல்வி கற்க வேண்டுமென்ற ஆர்வமும் இல்லை.கீழ்வாய் இலக்கத்துக்கு மேல் படிக்கச் சொன்னால்

‘ பிள்ளையும் படிக்க வேண்டாம் பிரம்படி படவும் வேண்டாம்,
சள்ளையாம் சுவடி தூக்கிச் சங்கடப் படவும் வேண்டாம்’ .

என்று கூறும் நிலையில் அன்றைய நகரத்தார் இருந்தனர். தமிழ்க் கல்வி பயின்றவன் வாணிகத்துக்கும் உலகியலுக்கும் பயன்பட மாட்டான் கோவிலூர் மடத்துக்கு ஓடிவிடுவான் எனவும் அஞ்சினர். (கோவிலூர் மடம் : கொவிலூர் என்பது காரைக்குடியை அடுத்த ஒரு சிற்றூர்.அங்கு ஒரு மடம் இருக்கிறது. செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த துறவிகளே இதில் மடாதிபதியாக இருக்க வேண்டும் என்பது மரபு. ஆண்டவர் முத்து ராமலிங்கர், ஞான தேசிகர், துறவு சாமிகள், சிதம்பர ஐய்யா , பொன்னம்பல சாமிகள் போன்ற தமிழறிஞர்கள் அம்மடத்தில் இருந்தனர்.)

அக்காலத்து நகரத்தார்களுக்கு திருமகள் மேலிருந்த பற்று கலைமகள் பால் இருந்ததில்லை.தங்கள் குழந்தைகளை ஐந்தாம் ஆண்டிலேயே பள்ளிக்கு அனுப்பும் மரபு இல்லை. பண்டித மணி அவர்கள் நோயுற்ரு இருந்தமையால் ஏழு வயது வரை பள்ளிக்குச் சென்றதாகத் தெரியவில்லை. அதன் பின்னர் பெற்றோர்கள் அவரைத் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாதக் கட்டணம் ஒரு பணம் அதாவது இரண்டு அணா / 13 புதுக்காசுகள்.

செட்டிநாட்டுத் திண்ணைப் பள்ளியில் படிப்பு என்பது அரிச்சுவடி எண்சுவடி தான். ஏனைய படிப்பு வட்டித்தொழிலுக்குத் தேவைப்படவில்லை. பொருளீட்டி வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் ,ஏனைய படிப்புக்குச் செலவிடும் காலம் வீணாவதாகக் கருதினர். ஏழு மாத காலம் அங்கே கல்வி பயின்றதைப் பற்றி பண்டிதமணி கூறியதாவது :

“ யான் ஆறேழ் ஆண்டு அகவை உடையவனாக இருக்கும் பொழுதுதான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றேன். அப்பள்ளியிலே பாடமாக உள்ள ஆத்திச்சூடி,உலகநீதி முதலிய சிறு நூல்களை யான் பயில நேர்ந்தபோது அச் சிறு சிறு வாக்குகளின் அழகு என் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது. ‘ ஆ.! இவை எத்தனை அழகாகவுக் இனிமையாகவும் அமைக்கப்பட்டுள்ளன !’ என்று அடிக்கடி வியப்படைவேன். அவற்றில் ஏதோவொரு தெய்வத்தன்மை அமைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றிற்று. மேலும் அவற்றின் பொருள்களும் எனக்குத் தெளிவாகவே புலப்பட்டன. அவற்றை ஒரு சில தினங்களிலேயே கற்று மனப்பாடம் செய்து கொண்டேன். அதன் பின்னர் இவ்வினத்துப் பொருள்கள் இன்னும் இவ்வுலகில் உள்ளன என்பதும் அறிந்தேன். அவற்றைப் பெற்றுப் பயிலுதல் எத்துணை இன்பமாக இருக்கும் என்று எண்ணினேன். அக்காலத்தில் நூல்கள் கிடைப்பதே அருமை. திருத்தொண்டர் புராணம்,கம்பராமாயணம்,சிற்சில பிள்ளத்தமிழ் இவைகளே அவ்விளம்பருவத்தே என் கைக்குக் கிடைத்தன. அவற்றை ஆர்வத்தோடே ஓதினேன்.அப்பெரு நூல்களும் தஞ்செய்யுட்பொருளை இளைஞனாகிய எனக்கு உலோவாது அளித்தன. திருத்தொண்டர் புராணம், கம்பராமாயணம் போன்ற நூல்களின் உயரிய செய்யுட்களும் ஆசிரியரின் உதவியின்றியே யான் பயின்ற பொழுதும் பழம் பாடம் போன்று எனக்கு விளக்கமாகப் பொருள் புலப்பட்டது.”

இப்படியாக திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்துப் பல்கலைக்கழகப் பேராசிரியரான திரு.பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் ஆற்றிய தமிழ்ப் பணிகள் சொல்லி முடியாது.அவற்றில் சிலவற்றை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவது ஒரு முன்னோடி மனிதன் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதை உங்களுக்குப் புரிய வைக்கும்.

இவர் தமிழ் அறிஞராக திகழ்ந்தது மட்டுமின்றி வடமொழி அறிஞராகவும் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கிறார் என்பது வியப்பாக இருக்கிறது. இவர் தமிழாக்கம் செய்த வடமொழி நூல்களின் பட்டியலைப் பாருங்கள் !

கௌடில்யரின் அர்த்த சாஸ்ஸ்திரம் (பொருணூல்)
மிருச்சகடிகம் (மண்ணியல் சிறுதேர்)
ஒளனசம் (சுக்கிர நீதி)
சுலோசனா
உதயண சரிதம்
மாலதீ மாதவம்
பிருதா பரித்ரீயம்

தமிழில் சொந்தமாக எழுதியவை :

உரைநடைக்கோவை – சமயக்கட்டுரைகள்
உரைநடைக்கோவை – இலக்கியக் கட்டுரைகள்
கதிர்மணி விளக்கம் – திருவாசக உரை
திருச்சதகம்
நீத்தல் விண்ணப்பம்

பொறுப்பேற்றுப் பதிப்பித்தவை :

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிசைப் பாடல் வரிசை
மகாவித்வான் வயிர நகரம் அ ராமனாதஞ்செட்டியார் தொகுத்த
நாட்டுக்கோடை நகரத்தார் வரலாறு.

இப்படியான அறிவு சார்ந்த தனிப்பட்ட முயற்சிகள் அன்றி, மக்களுடன் கூட்டாக இணைந்து மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை என்ற இலக்கிய அமைப்பையும் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தினார். “ ஒழுக்கம் கல்வி முதலிய பல விஷயங்கள் குறித்து உபந்நியாசங்கள் புரிவித்தலும், தக்க பண்டிதர் ஒருவரைச் சபையில் உபாத்தியாயராக நியமனஞ்செய்து அங்கு சேரும் சிறுவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்தலும், சபையில் வந்து படிப்பார் பலருக்கும் உபயோகமாகும்படி தமிழ் ஸம்க்ருத மொழிகளிலுள்ள எல்லாப் புத்தகங்களையும் தொகுத்து வைத்தலும்,கல்வி ஒழுக்கம் முதலிய துண்டுப்பத்திரங்கள் அச்சிட்டு எல்லாருக்கும் இனாமாகக் கொடுத்தலும்,லெளகீக இலக்கண இலக்கிய சாஸ்திர சம்பந்தமான பத்திரிக்கைகளைத் தருவித்தலும் பிறவுமாம்” என்பதாக அவ்வமைப்பின் நோக்கங்களை வரையறுத்து செயல்பட்டார்.

திங்கள் தோறும் சொற்பொழிவுகளும் ஆண்டுதோறும் விழாக்களும் நடைபெற்றன. திரு. பழனியப்ப செட்டியார் என்ற புரவலர் இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன் ரூபாய் ஐம்பதாயிரம் அளவுக்குப் பொருள் திரட்டி உதவினார். தான் நோயுற்றுக் கவலைக்கிடமான நிலையில் இருந்த போதிலும் ‘ சன்மார்க்க சபையைத் தொடர்ந்து நடத்தி வருக’ என தனது இளவல் திரு.அண்ணாமலைச் செட்டியாருக்கு அறிவுறுத்தினார். சபை ‘பண்டிதமணி சபை’ ஆயிற்று. பண்டித மணியின் தமிழ் முழக்கம் நாடெங்கும் கேட்கத் தொடங்கி விட்டது.மணிச்சேவல் கூவி விட்டது. கல்விச்சாலை ஒன்றையும் ‘கணேசர் செந்தமிழ்க் கல்லூரி’ எனத்தொடங்கி வறண்ட மாவட்டத்தில் தமிழ்த் தண்ணீர் பாய்ச்சினார்.

தருமபுரம்,திருவையாறு,கரந்தை,மயிலம்,திருப்பணந்தாள்,அண்ணாமலை நகர்,பேரூர் – கோவை முதலிய இடங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்தும் கல்லூரிகள் இருந்தன.திருச்சி,மதுரை,இராமநாதபுரம்,திருனெல்வேலி,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தமிழ் வித்வான் வகுப்பு நடத்துவதற்கென ஏற்பட்ட முதல் கல்லூரி இதுவேயாகும்.

சன்மார்க்க சபையின் வரலாற்றில் முக்கியமான கட்டம் 24.4.1932 இல் அதன் அறுபத்து மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது ஆகும். தமிழகமெங்கும் தனது புகழை நிலை நாட்டிய பண்டித மணி தமிழ் வளர்ச்சி கருதி சில உறுதியான கருத்துக்களை தெரிவிக்கத் துணிந்தார். அவை தீர்மானங்களாக அந்த ஆண்டு விழாவில் நிறைவேற்றப் பட்டன. பண்டிதமணியின் கருத்து வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடியாக விளங்கும் அவற்றை இங்கே தருகிறோம்.

“தமிழ் நாட்டரசராக விளங்கும் புதுக்கோட்டை அரசரைத் தமது ஆட்சியில் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு தனித் தமிழ்க் கல்லூரி ஏற்படுத்தி நடத்துமாறு சபையோர் வேண்டிக் கொள்கின்றனர்.

சென்னை ராசதானிக்கல்லூரி,கும்பகோணம் அரசினர் கல்லூரி இரண்டிலும் பி.ஏ.வகுப்பில் ஐந்தாம் பகுதியில் (Group) தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்கத் தகுந்த வசதிகளை ஏற்படுத்தும்படி அரசாங்கத்தாரைச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.

ராமேஸ்வரம் தேவஸ்தானத்தார் நடத்தி வரும் கல்லூரியில் தனித்தமிழ் வகுப்பும் ஏற்படுத்தும்படிச் சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.

சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ் மொழி பயில்பவருக்கு பி.ஏ.ஆனர்ஸ் பட்டம் வழங்க வெகுவிரைவில் ஏற்பாடு செய்யும்படி மேற்படி கழகத்தாரையும், அதற்குத் தகுந்த வகுப்புக்களை அரசாங்கக் கல்லுரிகளில் ஏற்படுத்த அரசாங்கத்தையும் இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார்களை,அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் வடமொழிச் சிரோமணி வகுப்புகளுக்கு ஒப்பத் தமிழிலும் இலக்கணம் இலக்கியம் சித்தாந்தம் வேதாந்தம் மருத்துவம் சோதிடம் முதலிய பிரிவுகளை ஏர்படுத்தி நடத்தும்படி இச்சபையார் வேண்டிக்கொள்கின்றனர்.

* சென்னை ,அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரை நடுத்தரக் கல்வியில் (Secondary Education) ஆங்கிலம் தவிர்த்த ஏனைய பாடங்களைத் தாய்மொழியிலேயே கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்கும்படி இச்சபையார் வேண்டிக் கொள்கின்றனர்.

பள்ளியின் இறுதித் தேர்வுக்கு ( S.S.L.C. Examination ) தமிழ் கட்டாயப் பாடமாக இல்லாமலிருந்தால் மாணவர்களில் சிலர் முதற்றரத்திலேயே ( First Form ) தமிழை விடுத்து பிற மொழிகளைப் படிப்பதால் அவர்களது தமிழறிவு குறைந்து வருவது வருந்தத்தக்கதாய் இருக்கிறது என்பதையும், முன்போல் தமிழில் ஒரு பகுதியையாவது கட்டாய பாடமாக ஏற்படுத்த வேண்டுமென்பதையும் இச்சபை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் மொழியை வளர்ப்பதற்கு முயன்று வரும் சங்கங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்கும்படியும் ஆண்டு தோறும் ஒவ்வொரு ஊரில் தமிழ் மகாநாடு கூடி சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களை அனுப்பி தமிழ் வளர்ச்சிக்குறிய பல முடிவுகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகளில் முயலும்படியும் இச்சபையார் கேட்டுக் கொள்கின்றனர்.”

இந்த மூதறிஞர் விஜய ஆண்டு ஐப்பசித் திங்கள் எட்டாம் நாள் ( 24.10.1953 ) அன்று இறைவனின் திருவடி சேர்ந்தார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கிய தமிழ் வழிக் கல்வி இயக்கம் சுத்ந்திர இந்தியா பொன் விழாக் கொண்டாடி முடிந்த பின்னரும் தனது இலக்கை எட்டப் போராடித்தான் தீர வேண்டும் என்ற நிலையை எண்ணுகையில் : “என்று தணியும் இந்த அடிமையின் மோகம் ?” என வெட்கித் தலை குனியத்தான் வேண்டியிருக்கிறது.

எனினும் ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து அடிமைப் படுத்து முன் இந்தியக் கல்வி செழுமையாய்த்தான் இருந்திருக்கும் என்பதற்கு பண்டிதமணி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்பதனை அவரது மொழி பெயர்ப்புகளைப் படித்தவர்கள் நன்கு அறிவார்கள்.

புதுவை ஞானம்.
j.p.pandit@gmail.com
gnanatharu.blogspot.com

Series Navigation