சில குறிப்புகள்

0 minutes, 9 seconds Read
This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

சூரியா


வாசக சுவாரஸியங்களை கெளரவப்படுத்தும் முகமாக சில பொதுக் குறிப்புகள். அல்லது எதிர்வினைகள்.

அனுராதா ரமணனின் ஆராய்ச்சிகள்

பா ராகவன் எனக்கு பிடித்தமான எழுத்தாளார்தான். முக்கியமாக போரடிக்க மாட்டார். சுஜாதாவின் நேரடிப்பாதிப்புடன் எழுதிக் கொண்டிருந்தார். இப்போது சொந்தநடை ஒன்று உருவாகி வந்துள்ளது. அவருக்கு இலக்கியபீட விருது கிடைத்தமை பாராட்டுக்கு உரியது. பாராட்டு மற்றும் பரிசளிப்புக் கூட்டத்தில் நடந்த ஒரு விஷயத்தை அவர் தமிழோவியம் இணைய இதழில் எழுதியிருப்பதைப்பற்றி எனக்கு சில எண்ணங்கள் தோன்றின.

http://www.tamiloviam.com/writerpara/page.asp ?ID=128&fldrID=1

அக்கூட்டத்தில் அனுராதா ரமணன் தமிழ்நாவல்கள் பற்றி பேசியதை வெளியிட்டிருக்கிறார் பா. ராகவன். அனுராதாவுக்கு எழுதி அச்சில் வந்தவையெல்லாம் இலக்கியம் என்ற பரந்தமனம் இருக்கிறது. ஆகவே ஆர்னிகா நாசர், பா ராகவன் எல்லாரையும் ஒரே வரிசையில் வைத்து எட்டுதலைமுறையாக வகைப்படுத்தி ஏறத்தாழ எண்பது பேரின் பெயர்களைப் பட்டியல்போட்டு ஒரு ‘ஆய்வுக்கட்டுரை ‘யை வாசித்திருக்கிறார். அது ராகவனைப் படுத்துகிறது.அவர் புலம்பி கண்டித்து தள்ளியிருக்கிறார்.

ராகவனின் உணர்வுகள் சரி என்றுதான் நானும் நினைக்கிறேன். ‘ஒற்றையானை ‘ போன்ற முதல்தரச் சிறுகதையை எழுதிய அவரை ஆர்னிகா நாசர் வரிசையில் வைத்தால் கடுப்பேறுவது நியாயமே. வரிசை அறியாது பரிசில் கொடுப்பதைத்தான் மிகப்பெரிய அவமானமாக பழங்காலம் முதலே எழுத்தாளார்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியத்தில் ரசனை என்று ஒன்று உருவாவதே மானசீகமாக ஒரு தர வரிசை உருவாகும்போதுதான். எழுத்தாளர்களின் வரிசை. அப்புறம் அந்த எழுத்தாளர்களின் கதைகளுக்குள் ஒரு வரிசை. ரசனை வளர்ச்சி என்பது அந்த வரிசைகளில் அர்த்தபூர்வமாக ஏற்படக்கூடிய மாற்றம். இப்படித்தான் எல்லாருக்கும் இருக்குமென்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில்திண்ணை இதழிலே சிலர் எல்லாமே இலக்கியம்தான் எல்லாருமே சமம்தான் என்று சமத்துவக் கொடியை பறக்கவிட்டபோது ஆச்சரியமாக இருந்தது. ஊடுபுகுந்து பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் உண்மையிலேயே ஒருவர் ஆர்னிகா நாசர் , பா ராகவன், ஜெயமோகன் எல்லாருமே சரிசமம் என்று எண்ணினால் , அவரால் வேறுபாட்டை உணரவே முடியாவிட்டால் அவரிடம் பேசி என்ன பயன் என்று விட்டுவிட்டேன். அப்படியும் மனிதர்கள் இருக்கலாமே. மேலும் இணையதளங்களின் வாசகர்களின் ருசிகளே வேறு என்கிறார்கள்

இப்போது பா ராகவனுக்கு ஓரிருவர் ஆதரித்து கடிதம் எழுதியிருப்பதும் எவருமே ‘எல்லாமே இலக்கியம்தான் ‘ என்றும் ‘இலக்கியத்தை யார் தீர்மானிப்பது ? ‘ என்றும் ‘இதெல்லாம் குழுவாதம் ‘ என்றும் பா ராகவன் ‘ காழ்ப்பைக் கக்குகிறார் ‘ என்றும் எழுதாததும் ஆச்சரியமாக இருந்தது. அதாவது ஒப்பீடு ஆர்னிகா நாசரிடம் என்றால்தான் பிரச்சினை. இதே பா ராகவன் அவரை நான் ஜெயமோகனிடமோ எம் யுவனிடமோ ஒப்பிட்டு எழுதியிருந்தால் ஒருவேளை ‘ஒப்பிட்டு பார்ப்பது இலக்கிய நோக்கு அல்ல . அது குழுவாதம். காழ்ப்பு. குறுகிய நோக்கு ‘ என்று சொல்லியிருப்பாரோ ?

எப்படியோ தொடர்கதைவேறு நாவல் வேறு, வாரைதழ் எழுத்துவேறு இலக்கியம் வேறு இலக்கியத்தில் தராதரம் என ஒன்று உண்டு என்று இன்னொருவரும் சொல்வது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. நான் என்னமோ இனிமேல் இணையத்தில் எல்லாருமே இலக்கியவாதிகள்தான் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

சு கி ஜெயகரனின் ஆதங்கம்

புதிய உயிர்மை இதழில் [மே மாதம்] நில ஆய்வாளார் சு கி ஜெயகரன் இணையதள விவாதங்களைப் பற்றி எழுதுகிறார். அவற்றில் உள்ள கட்டுப்பாடற்ற தன்மை , எழுதுபவர் கருத்துக்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளாத தன்மை எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சொல்லும் இவ்வரி எனக்கு முக்கியமாக பட்டது. ‘ தொழில்நுட்பக் கல்வி பெற்ற சிலர் சில இணையதளங்களைப் பார்த்துவிட்டு எல்லாமே தெரியும் என்ற பாவனையில் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்வதும் அத்துறைகளில் நீண்டநாள் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர்களை மட்டம்தட்ட முயல்வதும் இணைய விவாதங்களின் முக்கியமான பலவீனங்கள் ‘ இதே கருத்தை திண்ணையில் எம் வேதசகாயகுமார் பலமுறை சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு தளத்தில் , அது இலக்கியமோ கலையோ , அதில் ஆழ்ந்து செயல்படுபவர்களுக்கு தங்கள் அறிதல் என்று சொல்வதற்கு பல இருக்கும். அதை பிறரும் கவனிப்பார்கள். அவரது செயல்தளமே அதற்கு அடிப்படை. ஆகவேதான் ஒருமுறை எஸ்ரா பவுன்ட் சொன்னார், ஒரு நல்ல படைப்பாவது எழுதாதவரின் இலக்கியக் கருத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று . அது பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு துறையில் நீண்டநாள் ஈடுபாடு உழைப்பு சாதனை என்பவை மிக முக்கியமானவை என்றும் இலக்கியம் கலை போன்ற சப்ஜெக்டாவான தளங்களில் இம்மாதிரி அடித்தளம் இல்லாதவர்கள் எதையாவது அங்கே இங்கே படித்துவிட்டு எதைவேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கலாம் என்றும் பொதுவாகக் காணலாம். கூடவே ஒரு உள்ளீட்டற்ற சவடாலும் சேர்ந்துகொண்டால் கேட்கவே வேண்டாம். இணையதளங்களை இப்போது அதிகமும் கணிப்பொறியாளர்கள் ,மற்றும் தொழில்நுட்பக் காரர்கள் தான் பாவிக்கிறார்கள். அவர்களே சகலதுறை அறிஞர்களாக சவடால் அடிக்கிறார்கள். இலக்கியம் வரலாறு முதலிய துறைகளின் உண்மையான பங்களிப்பாளார்கள் நிறைய வர ஆரம்பிக்கும்போது நிலைமை மாறலாம்.

விக்கியும் விஸ்கியும்

தீராநதி இதழிலே விக்ரமாதித்யனின் பேட்டி. வழக்கம்போல விக்கி தனையும் தன் கவிதையையும் தூக்கி , தன் பலவீனங்களையும் சிக்கல்களையும் பலங்களாக நியாயப்படுத்தி, தண்ணிவாங்கித்தரும் அன்பர்களையெல்லாம் பெருங்கவிஞர்களாகத் தூக்கி சிலம்பமாடியிருக்கிறார். பட்டியலில் இடம்பெறும் லட்சுமி மணிவண்ணன், என் டி ராஜ்குமார், பாலைநிலவன் எல்லாம் என்னதான் அப்படி எழுதினார்கள் என்பதை தேடிப்பார்த்தும் தட்டுப்படவில்லை. ஆனால் அண்ணாச்சி சுதாரித்துக் கொண்டிருக்கிறார். முன்னமே தமிழிலே பெண்கவிஞர்கள் ஏதும் எழுதவில்லை என்று சொன்னார். மாலதி மைத்ரி பிலுபிலுவென்று பிடித்து கண்ட இடங்களிலெல்லாம் வைது தள்ளியதில் அடங்கி தமிழில் மாலதி மைத்ரி தவிர மற்ற பெண்கவிஞர்கள் ஏதும் எழுதவில்லை என்கிறார். சல்மா கவிதை மனுஷ்யபுத்திரன் கவிதையின் டூப்ளிகேட் என்று சொல்கிறார் அண்ணாச்சி . வாஸ்தவம். இரண்டும் ஒன்றுதான். பிரேம் கவிதையின் டூப்ளிகேட் தானே மாலதி மைத்ரி கவிதை ? அதே ‘சமைக்கப்பட்ட ‘ படிமம். பிணங்கள். குழந்தைகள். கப்பல். அதை சொல்லமாட்டார் .ஆடுற மாட்டை ஆடிக்கறக்க தெரிஞ்ச அம்மணி.

பாய்ச்சல்கள்

எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவலை படித்து முடித்தேன். ஆழமற்ற அகலாமான நாவல். ஒரு திருடன் வாழ்வின் நிறைய சம்பவங்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். திருட்டை தொழிலாகக் கொண்டஒரு சமூகத்தின் வாழ்க்கையை தகவல் சர்ந்து முழுசாகச் சொல்லியிருந்தால் முக்கியமான ஒரு மதிப்பு இதுக்கு இருந்திருக்கும். அப்படி சொல்லவில்லை. அந்த நிலச்சூழல் , சாதிப்பின்னணி, சமூக உறவுகளின் சிக்கல், சரித்திரசூழல் எதுவுமே இந்நாவலில் இல்லை. வெம்பாலை என்ற ஊரே ஏதோ அந்தரத்திலே நிப்பாட்டப்பட்டிருக்கிறது. இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் நாவல் அவனது வாழ்க்கையின் ஆழங்களுக்குள் மனசுக்குள் சென்றிருக்கவேண்டும். வெம்பாலை ஒரு உருவகமாக மாக்கெண்டா போல விஷ்ணுபுரம் போல இருக்கவேணும். அதுவும் இல்லை. சம்பவங்கள் எல்லாமே நுட்பமான ஆழங்களை காட்டவேணும் அதுவும் இல்லை. சும்மா நிறைய சம்பவங்கள். எதிலும் கவித்துவமும் இல்லை அனுபவ உக்கிரமும் இல்லை. படித்தபடியே போகலாம் அவ்வளவுதான். வெம்பாலை என்ற பேரையும் பல சொற்றொடர்களையும் ஆயிரக்கணக்கான முறை திருப்பிச் சொல்கிறார் ராமகிருஷ்ணன். ஆழம் என்று அவர் நம்பும் இடங்களில் அலங்காரமான சொற்றொடர்கள் சிலவற்றை சொல்கிறார்.

இந்தநூலை சுந்தர ராமசாமி இமையத்தின் கோவேறுகழுதைகள் , யூமா வாசுகியின் ரத்த உறவு ஆகிய நூல்களின் வரிசையில் வைக்கிறார். [ காலச்சுவடு இதழ் கட்டுரை ] ஒருவகையில் அது சரிதான். ஆனால் வரிசையை துல்லியமாக சொல்லவேணும் . ரத்த உறவு, கோவேறு கழுதைகள் ஆகியவற்றுக்குப் பிறகு சோ தருமனின் தூர்வை அதற்குபிறகுதான் இந்தநாவல். அதுகூட இதன் விரிந்த தளம் காரணமாகத்தான்.

—-

suurayaa@rediffmail.com

(சில நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

author

சூரியா

சூரியா

Similar Posts