சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)

This entry is part [part not set] of 32 in the series 20051216_Issue

சின்னக்கருப்பன்


தமிழ்முரசு பத்திரிக்கையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளை வலைபோட்டு அமுக்கி உருட்டுக்கட்டையால் அடித்துக்கொல்லும் காட்சி ஒளிப்படமாக பிரசுரம் செய்திருந்தார்கள்.

இது மிகவும் மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. பிரசுரம் செய்ததை அல்ல, அவ்வாறு உருட்டுக்கட்டையால் அடித்துக்கொல்வதை.

அந்த பன்றிகளை வண்டியில் ஏற்றி ஏதேனும் பன்றிகளை வளர்ப்பவர்களிடம் கொடுக்கலாம். புறநகர் பகுதிகளிலோ அல்லது கிராமங்களிலோ நிறைய பன்றித் தொழுவங்கள் இருக்கின்றன அங்கு விடலாம். பன்றிகளை அவ்வாறு உருட்டுக்கட்டையால் அடித்துக்கொல்ல வேண்டுமா என்ன ?

நெருக்கடிகள் வரும்போது மனத்து ஈரம் போய்விடுகிறது. தற்போதைய நெருக்கடிகளைத் தாண்டி நம்மை மனிதர்களாக வைத்திருக்க வேண்டிய விழுமியங்களை பல் வேறு காரணங்களுக்காக நம்மை நாமே திருப்தி செய்துகொண்டு காற்றில் பறக்க விட்டுக்கொண்டிருக்கிறோமோ என்னவோ ?

இரக்க மனம் படைத்தவர்கள் இந்த பன்றிகளை காப்பாற்றினால் நல்லது. அரசாங்கத்தில் இருப்பவர்கள் இந்த கொடூரத்தை தவிர்க்க வேண்டும் என்று இறைஞ்சுகிறேன்.

கருக்கலைப்பு மருந்து

E-PILL (ec2, norlevo) என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் கர்ப்பத்தடை மாத்திரை தேவையில்லாத கர்ப்பங்களை கலைக்க விற்கப்படுகிறது. உறவு கொண்டு ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரையை சாப்பிட்டால் அந்த கரு உருவாகாது என்று சொல்லப்படுகிறது. இந்த மாத்திரை எல்லா மருந்துக்கடைகளிலும் மருத்துவர் ஆலோசனையின்றி வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விலைதான் சற்று அதிகமோ என்று யோசிக்க வைக்கிறது. இரண்டு மாத்திரைகளின் விலை சுமார் 25 ரூபாய்கள். இது மிகவும் தேவைப்படும் கிராமப்புற மற்றும் ஏழைகளுக்கு இது சற்றே விலை அதிகம் என்றுதான் தோன்றுகிறது. பிரைமரி ஹெல்த் செண்டர்களில் இலவசமாக கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அவ்வாறு கிடைக்கும், கிடைக்காவிடில் பக்கத்தில் இருக்கும் விடலை விகடன், நக்கீரன் போன்ற பத்திரிக்கை நிருபர்களிடம் புகார் செய்யவும் என்றும் விளம்பரப்படுத்தலாம்.

நான் தனிப்பட்ட முறையில் குடும்பக்கட்டுப்பாட்டை ஆதரிக்காதவன். ஜெயகாந்தன் ஆதரவாளன். இருப்பினும் மக்களுக்கு தங்களுக்கு ஏற்ற முடிவை தாங்களே எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தில் தலையிடாதவன். ஒரு சாரார் அதை விரும்பும்போது அந்த வசதி அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். (இது மிகவும் விரிவான ஒரு கட்டுரைக்கான விஷயம். )

***

இந்தியப் பெருங்கடல் சுனாமி ஆராய்ச்சி நிலையத்தின் முடிவுகளை உடனுக்குடன் அருகாமை நாடுகளுக்கு அறிவிக்கப்போவதில்லை என்று இந்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இது சரியல்ல. இந்திய பெருங்கடலில் பூகம்ப அதிர்வுகளையும் ( கூடவே அணுகுண்டு வெடிப்பு அதிர்வுகளையும்) இந்த ஆராய்ச்சி நிலையம் அறியுமென்பதால், அதனை உடனுக்குடன் அருகாமை நாடுகளுடன் பகிர்வது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தாம். நம்பும்படியாக இல்லை. இந்தியாவிலோ அருகாமையிலோ அணுகுண்டு வெடிக்கப்பட்டால் உலகெங்கும் அதிர்வு அலைகள் தெரியும். அன்றைக்கு மறைப்பதால் எந்த விதமான பயனும் இல்லை.

சுனாமியின் தகவல்கள் சரியான தகவல்களாக இல்லாவிடினும் அந்த தகவல்கள் அருகாமை நாடுகள் அனைத்துக்கும் தெரியப்படுத்த வேண்டிய மனிதர்களான அனைவருக்கும் கடமை.

இந்திய அரசாங்கம் தன் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்

http://www.scidev.net/news/index.cfm ?fuseaction=readnews&itemid=2533&language=1

***

எங்களது வாடிக்கையாளர் ஒல்லியானவர். அவரை நாங்கள் தின் கிளையண்ட் (thin client) என்று நகைச்சுவையாக குறிப்பிடுவோம். இதில் ஏதோ politically incorrect சமாச்சாரம் இருக்கிறது. என்ன செய்வது ? எல்லா நகைச்சுவைகளுமே ஓரளவு politically incorrectகள்தான் என்று தோன்றுகிறது.

**

அமைச்சர் அன்புமணி மீது சுனாமி பணம் சம்பந்தமாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 20ஆம் தேதி ரிப்போர்ட்டரில் அந்த குற்றச்சாட்டு வெளிவந்து பிறகு ரிப்போர்ட்டர் இதழுக்கு எதிராக பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

http://kumudam.com/reporter/201005/pg1.php

என்ன ஆயிற்று அந்த குற்றச்சாட்டு ? ஊடகங்கள் வழக்கம்போல அடுத்த சூடான செய்தி கிடைத்ததும் இதனை மறந்து விட்டு போய்விட்டனவா, அல்லது அவ்வாறு போக வைப்பதற்காக சூடான செய்திகள் உருவாக்கப்பட்டனவா ?

**

karuppanchinna@yahoo.com

Series Navigation