சிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மனிதர்களுக்கும் மற்ற உயர் விலங்குகளுக்குமான மன வேறுபாடு மிகப் பிரம்மாண்டமானதாக தென்பட்டாலும் அது அளவின் வேறுபாடேயன்றி, தரத்தின் வேறுபாடல்ல.

-சார்ல்ஸ் டார்வின்

டார்வின் விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடுகள் குறித்து கொண்டிருந்த கருத்தானது தவறானதென்றே மேற்கத்திய அறிவியல் உலகால் கருதப்பட்டது. உதாரணமாக 1949 இல் அமெரிக்க லெஸ்லி வொயிட் மானுட நடத்தையின் தனிஇயல்பாக குறியீட்டுத்தன்மை கொண்ட நடத்தையினை குறிப்பிட்டார். புகழ் பெற்ற தத்துவ அறிஞரான ஜான் லாக்கேயின் ‘விலங்குகள் மனஉருவகத்திற்கான ஆற்றலுடைவையல்ல ‘ எனும் பிரசிக்தி பெற்ற வாக்கியமே மேற்கத்திய அறிவியல் உலகின் மனித=விலங்கின மன வேறுபாட்டு பார்வையினை குறித்த பொது கண்ணோட்டமாக இருந்து வந்துள்ளது. 1950களில் உருவான உயிரியலாளர்கள் விலங்குகளுக்கு தனிமனம் அல்லது தனிஆளுமை ஆகியவை குறித்து பேசுவதை அறிவியல் தன்மையற்றதோர் உணர்ச்சி பூர்வ உளறல் என்கிற அளவிலேயே கருதி வந்தனர்.1960 களில் கோம்பே ஆற்றோர வனத்தின் சிம்பன்ஸிகளை ஆராயும் ஆர்வத்தில் ஆப்ரிக்கா வந்த இளம் பிரிட்டிஷ் பெண்மணியான ஜேன் குடால் எவ்வித உயிரியல் துறையையும் பயிலாதவர் என்பதால் இந்த ‘அறிவியல் உண்மையை ‘ அறியவில்லை. இந்த ‘அறியாமை ‘யின் விளைவாக அவரது சிம்பன்ஸிகளின் அன்றாட பழக்க வழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய பதிவு, பல சிம்பன்ஸிகளுக்கு எண்களுக்கு பதிலாக பெயர்களை கொண்டிருந்தது. மேலும் தனிப்பட்ட சிம்பன்ஸிகளின் ஆளுமையையும் வெளிப்படுத்தும் விதமாக அவ்வாய்வு அமைந்திருந்தது. குடாலின் முதல் ஆராய்வின் விளைவுகள் பிரசுரிக்கப்படுமுன் ஒவ்வொரு ‘அவனும் ‘, ‘அவளும் ‘ , ஆசிரியர்களால் ‘அது ‘வாக மாற்றப்பட்டது. தன் முதல் ஆய்வு வெளியீடென்பதால் குடால் எதுவும் மறுக்கமுடியவில்லை என்ற போதிலும் அந்த ஆய்வு வெளியான பின் சிம்பன்ஸிகள் வெறும் மனமற்ற விலங்குகள் என்பதிலிருந்து தனித்தன்மை கொண்ட உயிரினங்கள் எனும் பார்வைக்கு அறிவியல் அங்கீகாரம் சிறிதளவேனும் கிடைத்தது.

குடால் இயற்கை சூழலில் செய்த களஆய்வு பதிவுகளுக்கு அப்பால் சுவாரசியமான சில ஆய்வக ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. சிம்பன்ஸிகளின் அறிவாற்றல் மிக்க நடத்தைகள் அவற்றிற்கு காலம் பற்றி திட்டமிடும் தன்மை கூட இருப்பதனை வெளிப்படுத்தியுள்ள போதிலும், இந்நடத்தைகள் குறித்த பதிவுகள் செவிவழி கதைத்தன்மை கொண்டவை. எனவே இதனை உறுதி செய்ய மனித அறிவின் தனிப்பெரும் குணாதிசயமாக கருதப்படும் மொழி மூலம் தொடர்பு கொள்ள சிம்பன்ஸிகளுக்கு கற்றுக் கொடுக்க ஆய்வகத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை தோல்வியடைந்தன உதாரணமாக 1951 இல் ஹாயஸ்கள் விக்கி எனும் சிம்பன்ஸியை பேச வைக்க எடுத்த முயற்சிகள் மூலம் ஆறு வருடங்களில் விக்கியால் நான்கு ஒலி சமிக்ஞைகளையே எழுப்பமுடிந்தது. இத்தோல்வி சிம்பன்ஸியின் ஒலியுறுப்பின் அமைப்பியற்கை சார்ந்ததென்ற கருத்தின் அடிப்படையில் நெவாடா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பியார்ட்டிஸ் கார்ட்னரும் ராபர்ட் கார்ட்னரும் 1969ெஇல் புதுவிதமாக இப்பரிசோதனைகளை மேற்கொண்டனர். தற்போது மிகவும் பிரசிக்தி பெற்றுவிட்ட வாஷோ எனும் பெண் சிம்பன்ஸிக்கு அவர்கள் அமெரிக்க சைகை மொழியினை பயிற்றுவித்தனர். செவிப்புலன் ஊனமுற்றோரின் தகவல் பரிமாற்றத்திற்கான இச்சைகை மொழி ஒரு செவிப்புலன் ஊனமுற்ற மானுடக்குழந்தைக்கு எவ்வாறு அக்குழந்தையின் பெற்றோரால் கற்றுக் கொடுக்கப்படுமோ அவ்வாறே வாஷோவிற்கு கார்டனர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டது. பரிசோதனையின் 22 ஆவது மாதத்தில் வாஷோ 34 சைகைகளை பயன்படுத்த கற்றுவிட்டாள். இவ்வாய்வில் அவளது மனித ஆய்வாளர்கள் தங்களிடையேயான தகவல் பரிமாற்றங்களையும் சைகைமொழி மூலமே நடத்தினர். அவர்களது ஒலிஎழுப்பல் எதுவுமே சிம்பன்ஸி ஒலித்திறனுக்கு அப்பாலில்லாததாகவே இருந்தது. இவ்வாய்வின் விளைவு வியக்கத்தக்கதாக இருந்தது. கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை யார் என கேட்டவுடன் வாஷோ ‘நான், வாஷோ ‘ என சைகை மொழியில் அளித்த பதில் அறிவியல் மற்றும் தத்துவ வரலாற்றில் ‘நான் சிந்திக்கிறேன் எனவே இருக்கிறேன் ‘ எனும் வாசகத்திற்கு எவ்விதத்திலும் குறையாத மதிப்புடையது. ஜேன் குடால் வாஷோவை நேரில் பார்க்கவில்லை எனிலும் அவளது ஒளிப்பதிவு நாடாக்களை கண்ட போது அவள் செய்த ஒரு தவற்றின் இயற்கையை சுட்டிக்காட்டுகிறார், ‘ஒரு மூட்டையிலிருந்து எடுக்கப்பட்ட பல பொருட்களை அடையாளம் கண்டு தெரிவிக்கும் பரிசோதனையில் வாஷோ பல பொருட்களை சரியாக அடையாளம் கண்டாள். பின்னர் ஒரு தவறு செய்தாள். ஒரு ‘பிரஷ் ‘ காட்டப்பட்ட போது அதனை ‘சீப்பு ‘ என சைகை மூலம் தெரிவித்தாள். ‘ குடாலை பொறுத்தவரை ‘பேசப் பயிலும் சிறு குழந்தை செருப்புக்கும் ஷூவுக்கும் வித்தியாசம் தெரியாது குழப்புவது போன்றதொரு இத்தவறு ‘ சிம்பன்ஸியின் மொழி அறிதல் மனித மொழி அறிதலினை ஒத்திருப்பதற்கான வலுவான நிரூபணம். கார்ல்சாகன் வாஷோ பல சமயங்களில் ஆக்கபூர்வ கற்பனையுடன் வாஷோ உருவாக்கிய வார்த்தைகளில் சில, மானுடத்திற்கு மிகப் பொதுவான இலக்கண முறைகளோடு அமைந்ததை சுட்டிக்காட்டுகிறார்(உ.ம் வாத்து : ‘நீர்பறவை ‘, நீர்முலாம் பழம் : ‘குடிக்கும் பழம் ‘, ஆரஞ்சு பழம் : ‘ஆரஞ்சு நிற ஆப்பிள் ‘) வாஷோவின் வளர்ப்பு அன்னை ஆய்வுச்சாலையை விட்டு சென்ற போது வாஷோ அவள் சென்ற திசையை வெறித்தபடி கூறினாள், ‘அழுகிறேன் நான் அழுகிறேன் ‘.

அவ்ராம் நோம் சாம்ஸ்கி இந்நூற்றாண்டில் மொழியியலின் மிக முக்கிய அறிஞர். இந்த ஆய்வு முடிவுகளை மிகக்கடுமையாக விமர்சிக்கிறார். அமைப்பு மற்றும் இலக்கண ரீதியில் அமைக்கப்பட்டு பயிற்சி மற்றும் அனுபவம் மூலம் கடத்தப்படும் பழக்கவழக்கமாக மொழி உருவாகிறது எனும் 1950களின் பிரதான மொழியியல் கோட்பாடான அமைப்பியல் விளக்கத்திலிருந்து வெகுவாக மாறுபட்டார் சாம்ஸ்கி. மானுடம் தனக்கே உரிய ெ தனக்கு மட்டுமே உரிய ஒரு மிகத்தனியான மூளை அமைப்பின் மூலம் மொழியை உருவாக்கும் தன்மை கொண்டதாக அவர் கருதினார். இவ்வுள்ளார்ந்த தன்மையே பெரியவர்கள் பேசுவதை கேட்கும் குழந்தைகளால் தன்னியல்பாகவே உணரப்பட்டு அவ்வார்த்தைகள் மூலம் தான் கேட்டிராத பல வாக்கியங்களை உருவாக்கி பேசும் தன்மையை கொடுக்கிறது என்கிறார் சாம்ஸ்கி. இன்று இக்கோட்பாடு உண்மையாக அறியப்பட்டுள்ளது. இம்மொழியின் உதயம் குறித்த அடுத்த கட்ட கேள்வியில் சாம்ஸ்கி டார்வினிய இயற்கை தேர்வின் பங்கினை சாம்ஸ்கி மறுப்பது இன்றும் பல உயிரியலாளர்களுக்கு ஒரு புதிர். உதாரணமாக தனது 1986 உரைகளில் சாம்ஸ்கி மொழி மனித இனத்தால் பகிரப்படும் உயிரியல் அமைப்பாக கூறும் அதே நேரத்தில் அதன் உதயம் குறித்து பரிணாம அறிவியல் (அதாவது, அதன் முதன்மையான இயங்கு முறையாக இன்று அறியப்படும் இயற்கை தேர்வு) ஏதும் கூறுவதற்கில்லை என்கிறார். இப்பார்வையை முழுமையாக மறுதலிக்கும் டார்வீனிய உயிரியலாளர் ஜான் மய்னார்ட் ஸ்மித் மொழியின் உயிரியல் அடிப்படைத்தன்மையின் தர்க்கரீதியான மறுகட்டமே மொழி உதயத்தின் பரிணாம பாதையை தேடுவதாகத்தானிருக்க முடியுமென்பதனை சுட்டிக்காட்டுகிறார். ‘மற்ற பெரும்குரங்கின மொழிகளுக்கும் மானுட மொழிக்குமான இடையிலான விடுபட்ட கண்ணிகளை ஊகித்தறிவது முடியாத காரியமல்ல. ‘ ஆனால் மொழியின் வெளிப்பாட்டின் எக்கூறையும் பெரும் குரங்கினங்களில் வெகுமையாக மறுக்கிறார் சாம்ஸ்கி. ‘மனிதர்கள் 30 அடி வரை வானில் எவ்வ முடியும். இதனை பறத்தல் எனக் கூற முடியுமா ? இந்த மனித ‘பறத்தல் ‘ கூட பறவைகளின் பறத்தலுக்கான உறுப்புகளின் பரிணாம இணை உறுப்புகளிலிருந்து உருவாகிறது. ஆனால் சிம்பன்ஸிகளின் ‘மொழி ‘ இத்தகைய இணை உறுப்புகளிலிருந்து கூட பெறப்படுவதில்லை. ‘ மானுடத்திலோ ‘மொழி ‘க்கான மிகத்தனியான நரம்பியல் கட்டமைப்பு உள்ளது என்பது சாம்ஸ்கியின் நிலைபாடு. காலம்சென்ற கவுல்ட்டும் மொழி உருவாக்கத்தில் டார்வினீய இயற்கை தேர்வின் பங்கினை சந்தேகிக்கிறார். மனித உயிரினத்துக்கே உரிய நரம்பு மண்டல கட்டமைப்பு மொழியின் முக்கிய அடித்தளமெனும் சாம்ஸ்கிய வாதம் இன்று ஸ்மித்ஸோனிய ஆராய்ச்சி மைய மூளை மற்றும் நரம்பியல் ஆராய்ச்சியாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மானுட மொழியில் இருப்பிடமாக அறியப்படும் வெர்னிகே மொழி பகுதியின் இடது பக்க மேலோங்குதன்மையே சிம்பன்ஸி சைகை மொழி தகவல் பரிமாற்றத்தின் போதும் செயல்படுகிறது. டாக்டர் பாட்ரிக் கானான் இதன் தன்மை தகவலின் தோற்றத்தை குறித்து கவலைப்படாது தகவல் பரிமாற்றத்தையே கவனிக்கும் தன்மை வாய்ந்தது என கூறுகின்றார்.

சாம்ஸ்கி கூறுகிறார், ‘ சிம்பன்ஸிகளுக்கு மொழித்திறன் உநூடன்பது ஒரு தீவில் வசிக்கும் பறக்க இயலும் பறவைகள் பறக்கவேயில்லை எனும் வாதத்தை போன்றது. சிம்பன்ஸிகளுக்கு மொழியின் திறன் உநூடன்றால் அவை இப்போது உரையாடும் திறன் பெற்றிருக்க வேண்டும். ‘ சிம்பன்ஸிகள் தன் இயற்கை உறைவிடங்களில் மிகச் செழுமையான சைகை மொழிகளுடன் இயங்குவது கள ஆராய்ச்சிகள் பலவற்றில் பதிவு செய்யப்பட்டதோர் உண்மையுமாகும். வட்டாரத் தனித்த்னமை கொண்டசைகை ‘மொழி ‘கள் பல ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பளிப்பவை. ஒருங்கிணைந்து நடக்கும் ஆண் சிம்பன்ஸிகளின் முடிகளின் டி.என்.ஏ ஆராயப்பட்ட போது சிம்பன்ஸிகளின் ஒருங்கிணைவு நட்பு அடிப்படையில் உறவு அடிப்படையில் அல்ல என்பது தெரிய வந்தது. உறவினை மீறிய நட்பின் பிணைப்பு ஒரு ‘மனித ‘ சமூக நிகழ்வாகவே கருதப்பட்டு வந்தது. பலவிதங்களில் சமூக சூழல் சார்ந்த நடத்தைகளை சிம்பன்ஸிகளில் காண முடிகிறது. இவை மனித சமுதாயத்தில் மொழியின் துணையோடு உருவாகும் பண்பாட்டு நடத்தைகளுக்கு இணையான நடத்தைகள். சாம்ஸ்கிய மொழியிலாளர்களோ இக்கண்டுபிடிப்புகளை மிகவும் கஷ்டத்துடன் எதிர்நோக்குகின்றனர்.தத்துவ பேராசிரியரான டாக்டர் ஸ்டூவர்ட் சங்கர் (குரங்குகளின் நடத்தையியலாய்வாளரான எமிலி சூ சாவேஜ் ரூம்பாஹ் உடன் இணைந்து ‘பேரினக் குரங்குகளின் மொழியும் மானுட மனமும் ‘ (Ape Language and Human Mind) எனும் நூலை எழுதியவர்) மொழியியலாளர்களின் போக்கு குறித்து கூறுகிறார், ‘மொழியியலாளர்கள் தாங்கள் மொழியின் இயற்கை குறித்த இலக்கினை சிம்பன்ஸிகள் துரத்த துரத்த மாற்றுகின்றனர். ‘

மேற்கின் அறிவுலக பாரம்பரியம் அதன் தொடக்க காலத்திலிருந்தே மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் ஒரு அதல பாதாள பிளவு இருப்பதாக வலியுறுத்தி வந்துள்ளது. கிரேக்க சிந்தனையில் படைப்பின் அதி உன்னதம் கிரேக்க ஆண்மகன். டெஸ்கார்ட்டேயைப் பொறுத்தவரை மொழியும் மன உருவகத் திறனும் மனிதருக்கே உரியன.சாம்ஸ்கி மொழி மனித இனத்தால் பகிரப்படும் உயிரியல் அமைப்பெனும் உண்மையை அறிந்த போது அதன் டார்வீனிய வேர்களை மறுப்பதும் இக்காரணத்தினாலேயே. மொழியியல் அதன் டெஸ்கார்ட்டே சட்டகத்தை விட்டு இன்னமும் வெளிவரவில்லை.(சாம்ஸ்கியின் புகழ் பெற்ற நூலின் பெயர் ‘கார்ட்டாசிய மொழியியல் ‘ (1966)) இதன் விளைவு இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மொழியியல் மேதையான சாம்ஸ்கி கூட நிறுவப்பட்ட அறிவியல் உண்மையான டார்வீனிய இயற்கைத் தேர்வினை, ‘ இந்நிகழ்வுகளுக்கு இயற்கையான காரணங்கள் இருக்க முடியும் எனும் நம்பிக்கையே அன்றி வேறில்லை ‘ என கூறுமளவுக்கு போய்விட்டது. இதன் தொடர்ச்சியாகவே சிம்பன்ஸிகளின் மொழிப்பயன்பாட்டினை மொழியியலாளர்கள் ‘போலி அறிவியல் ‘ எனக் கூறுமளவுக்கு எதிர்க்கின்றனர். சாம்ஸ்கிய மொழியியலாளர்களின் இந்நிலைபாடு குறித்து உளவியலாளரான ஆன் துரெியானும் மற்றும் அவர் கணவரும் வானவியலாளருமான (காலம் சென்ற) கார்ல் சாகனும், ‘இம்மொழியிலாளர்கள் சிம்பன்ஸிகளால் பேச முடியாதென்று முன் முடிவெடுத்து அம்முடிவின் அடிப்படையில் ஆய்வு முடிவின் உண்மைகளை மறுதலிக்கின்றனர். ‘ என்கின்றனர்.

மூலக்கூறு உயிரியல் ஆய்வுகள் இன்று மானுடர்களின் உயிரியல் குடும்பவின பகுப்பாக சில பத்தாண்டுகளுக்கு முன் விளங்கிய ஹோமினிடே குடும்ப பகுப்பினை மற்ற பெருங்குரங்கினங்களான சிம்பன்ஸி, ஒராங்கட்டான், கொரில்லாக்களுடன் நாம் இன்று பகிர்கிறோம். நமது D.N.A மூலக்கூற்றின் நியூக்ளியோடைட் வரிசையமைப்புக்களை 96.4 சதவிகிதம் பகிர்கிறோம். நம் மொழியின் மரபணு சார்ந்த தன்மையும் நமக்கு இப்போது வெளித்தெரிய தொடங்கியுள்ளது. உதாரணமாக கனாடிய மொழியிலாளர் மிர்னா கோபிக் ஒரு குறிப்பிட்ட மரபணுவின் பிறழ்ச்சி இலக்கண திறனை பாதிப்பதை பதிவு செய்துள்ளார். நாம் நம் மரபணு கட்டமைப்பினை 98 சதவிகிதத்திற்கும் சற்று மேலாக சிம்பன்ஸிகளுடன் பகிர்கிறோம். சிம்பன்ஸிகளில் இருந்து வேறுபட்டதாக நாம் அறியும் நம் எந்த இயல்பும் அடிப்படையில் சிம்பன்ஸியின் இணைபரிணாம உறுப்பிற்கு இணையாக ஒரு பொது மூதாதையிடமிருந்து பெறப்பட்டதுதான் என வலியுறுத்துகிறார் ரோஜர் பவுட்ஸ், ‘ அறுபது இலட்சம் வருடங்களுக்கு முன் ஒரு பொது மூதாதையிடமிருந்து கிளை பிரிந்த சிம்பன்ஸியும் மனித இனமும் தத்தம் சூழல் தகவமைப்புத் தேவைக்கேற்ப தம் தகவல் தொடர்பு முறைத் திறன்களை கூர்மைப்படுத்திக் கொண்டதன் விளைவே நமக்கும் சிம்பன்ஸிக்கும் இடையேயான தொடர்பு முறைகளில் வேறுபாடுகள். எனினும் இவை இரண்டும் ஒரு பொது மூதாதை அறிதல் முறையின் மேல் எழுந்தவைதான். ‘

சாம்ஸ்கி போன்ற மொழியியலாளர்கள் மொழியினை அதன் இயங்கும் தளத்திலிருந்து பிரித்தெடுத்து வெறும் தர்க்கத்தன்மையுடன் ஆராய்ந்து அதன் இலக்கண அமைப்புகளை அதன் ஒற்றுமையை காண்கின்றனர்.மாறாக அதன் இயங்கு தளத்தில் பல விதங்களில் நம் மொழியின் வெளிப்பாடு சிம்பன்ஸிகளின் ‘உரையாடலை ‘ ஒத்துள்ளது. முக்கியமாக நம் நேருக்கு நேரான உரையாடல்களில் ஒலியற்ற சைகைகள் 75% இடம் பெறுகின்றன. இவற்றின் உணர்வுணர்த்தும் தன்மை உரையாடல்களில் முக்கியமானவை.ரோஜர் பவுட்ஸ் வலியுறுத்துகிறார், ‘சிம்பன்ஸிகளின் முக பாவனைகள், கை அசைவுகள் மற்றும் உடல் உணர்த்தும் மொழி இவை அனைத்துமே மானுட உரையாடல்களில் ஒலியற்ற பாகத்தின் பங்கினை ஒத்திருக்கின்றன. ‘

1977 இல் சாகன் பின்வருமாறு கூறினார், ‘மனித சைகை மொழி கற்றுக் கொடுக்கப்பட்ட வாஷோ தன் குழந்தைகளுக்கு இம்மொழியினை சொல்லிக்கொடுக்கிறளா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. என் ஊகம் சரியானதென்றால் சைகை மொழிகளினை அறிந்த ஒரு சிம்பன்ஸி குழு விரைவில் தலைமுறைகளுக்கு அத்திறனைக்கடத்திச் செல்லும். ‘ அக்டோபர் 1970 இல் ரோஜர் பவுட்ஸ் வாஷோவை ஒக்லஹாமா பல்கலைக்கழகத்தின் பிரைமேட் மையத்திற்கு கொண்டு வந்தார். ஜனவரி 1979 இல் வாஷோ ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். பிறப்பிலேயே நோய் வாய்பட்டிருந்த இச் சிம்பன்ஸி குழந்தை நான்கு மாதங்களில் இறந்துவிட்டது. இதற்கு 15 தினங்களுக்கு பின் லுலெிஸ் எனும் பத்துமாத சிம்பன்ஸி ஆண்குழந்தைக்கு வாஷோ வளர்ப்புத் தாயாக்கப்பட்டாள். 24 மணிநேரத்தில் லுலெிஸ் வாஷோ தம் தாய்ெகுழந்தை உறவினை உருவாக்கி விட்டனர். மனித பணியாளர்கள் தாயுடன் மட்டுமே சைகை மொழியில் உரையாட அடுத்த கட்ட ஆய்வு தொடங்கியது. லுலெிஸின் வளர்ப்புத் தாயைத் தவிர கார்ட்னரின் ஆய்வகத்திலிருந்து கொணரப்பட்ட (சைகை மொழியறிந்த) ஏழு வயது மோஜோவும் லுலெிஸிடம் பழகியது. மானுடப் பணியாளர்கள் லுலெிஸிடம் சைகை மொழியில் பேசாதிருந்தாலும் மற்ற சிம்பன்ஸிகளுக்கு அத்தடை ஏதுமில்லை. தவறுதலாக மானுடப் பணியாளர்கள் லுலெிஸிடம் சைகை மொழியில் ஏதாவது பேசியிருந்தாலும் அதுவும் பதிவு செய்யப்பட்டன. ஐந்து வருட ஆய்வில் தவறுதலாக மானுடப் பணியாளர்கள் லுலெிஸிடம் சைகை மொழியில் பேசிய பதிவுகள் 40. இந்த ஆய்வின் பதிவுகளும் முடிவுகளும் வியப்பளிக்கின்றன. லுலெிஸ் தன் முதல் சைகை மொழி வார்த்தையை தன் வளர்ப்புத்தாயிடமிருந்து அவளைச் சந்தித்த எட்டாவது நாளில் கற்றான். தனது இரண்டறை வயதில் லுலெிஸ் 17 சைகைகளை தன் ஹாயிடமிருந்து கற்றிருந்தான்.(ஆய்வின் முடிவில்) தனது எழுபத்தி மூன்றாம் மாதத்தில் லுலெிஸ் 51 சைகை வார்த்தைகளை தன் வளர்ப்புத்தாயிடமிருந்து கற்றிருந்தான். மேலும் வாஷோ இச்சைகை மொழியினை கற்றுக் கொடுத்தவிதமும் பதிவு செய்யப்பட்டது. அது அவள் தன் மனித வளர்ப்பு பெற்றோரிடமிருந்து மொழி கற்ற விதத்தையும், காது ஊனமுடைய பெற்றோர் தம் குழந்தைகளுக்கு சைகை மொழிகளை கற்றுக்கொடுக்கும் தன்மையையும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. சாகனின் ஊகம் சரியானதாகவேயாயிற்று.

சாம்ஸ்கிய சித்தாந்த முன்யூக அடிப்படையில் குழந்தைகளில் மொழி உருவாக்கம் குறித்து ஆராய்ந்த உளவியலாளர் பட்ரீஷியா கிரீன்பீல்ட் சாம்ஸ்கியின் கார்ட்டாசிய மொழியியல் சட்டகங்களுக்குள் அடங்காத நிகழ்வுகளை உள்ளடக்கியதாக குழந்தைகளில் மொழி உருவாக்கத்தை உணர்கிறார். வார்த்தைகளை வார்த்தைகளுடன் கோர்க்கும் இலக்கண இயந்திர வளர்ச்சியையல்ல குழந்தைகளின் மொழி வளர்ச்சி காட்டுகிறது. வார்த்தைகள், பொருட்கள், வார்த்தையற்ற சைகைகள் ஆகியவற்றின் உயிரோட்ட இசைவுதான் பின்னாளில் மலரும் முழுமையான மொழியின் அடித்தளம். குழந்தைகளின் மொழிவளர்ச்சியில் சிம்பன்ஸி மொழியின் தொடர்ச்சியினை தெளிவாகவே காணலாம் என்கிறார் பட்ரீஷியா.

பரிணாமத்தின் இயற்கை தேர்வு செயல்பாட்டை தனித்தனியாக கண்டறிந்த டார்வின் மனிதவெிலங்கின மன வேறுபாடுகள் தரம் சார்ந்தவையன்று மாறாக அளவின் வேறுபாடேயென்பதை எவ்வித தத்துவார்த்த அடிப்படையிலும் பெறவில்லை.மாறாக தம் நீண்ட கால இயற்கை குறித்த பதிவுகளின் அடிப்படையிலேயே இக்கருத்தை உருவாக்கினார். மாறாக ‘விலங்குகள் மனஉருவகத்திற்கான ஆற்றலுடைவையல்ல ‘ எனும் கருத்தோ டெஸ்கார்ட்டிசிய தத்துவ அழுத்ததிலிருந்து தோன்றியது. கால வெளியில் கிறிஸ்தவத்தில் (கடவுளின் கைப்பாவையாகவேனும்) தான் பெற்ற மையத்தன்மையை டார்வினாலும், கலிலியோவாலும் இழந்த மேற்கத்திய மானுடம், மீண்டும் அதனை (வரலாற்று விசைகளின் கைப்பாவையாகவேனும்) பெற முயல்வதை ஏங்கல்ஸிலும் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்குமான வேறுபாடுகளை தரம் சார்ந்தவையாக முன்னிறுத்தி, இன்றைக்கு நோம் சாம்ஸ்கியிலும் காணலாம். 1960கள் வரை இன்று வரையிலான அறிவியல் களப்பணி பதிவுகளும் சில சிறப்பான ஆய்வுகளும் மனிதமெற்ற விலங்கின மன வேறுபாடுகளின் இயற்கையை டார்வினே சரியாக கணித்திருக்க கூடும் எனும் முடிவுக்கு வழி வகுக்கின்றன.

பயன்படுத்தப்பட்டவை மற்றும் மேலும் அறிய:

பொதுவான நூல்கள், பத்திரிகை செய்திகள் மற்றும் (பொதுவான) இணைய தள பக்கங்கள்:

1. ஜேன் வான் லாவிக் குடால், ‘In the shadow of man ‘,1974

2. கார்ல் சாகன், ‘The Dragons of Eden ‘, 1977

3. ஆன் துரெியான் & கார்ல் சாகன் ‘Shadows of Forgotten ancestors ‘,1993

4. டேனியல் டெனெட், ‘Darwin ‘s dangerous idea ‘,1995

5. ஜான் மய்னார்ட் ஸ்மித் , ‘Genes, Memes, & Minds ‘, The New York review of books, நவம்பர் 30, 1995

6. நோம் சாம்ஸ்கி, ‘Language & Evolution ‘(ஆசிரியருக்கான கடிதம்), The New York review of books, பிப்ரவரி 1, 1996

7.ஜேன் குடால், Learning from the Chimpanzees: A Message Humans Can Understand, Science magazine online by The American Association for the Advancement of Science18 டிசம்பர் 1998 இணைய முகவரி: http://www.sciencemag.org/cgi/content/full/282/5397/2184

8. ரோஜர் பவுட்ஸ், Next of kin, 1999 (இந்நூல் பக்கங்கள் கிடைக்கும் இணைய முகவரி: http://www.animalnews.com/fouts/)

9.மெரிடித் ஸ்மால், ‘Aping culture ‘, Discovery , மே 2000

ஆய்வுதாள்கள் மற்றும் ஆய்வு குறித்த இணைய தள பக்கங்கள்:

1. ரோஜர் பவுட்ஸ் & மேரி லீ ஜெஸ்வால்ட், ‘Armchair Delusions Vs. Empirical Realities: A Neurological Model for the Continuity of Ape and Human Languaging ‘,Chimpanzee & Human Communication Institute, Central WashingtonUniversity,இணைய முகவரி http://www.uchicago.edu/aff/mwcெamacad/biocomplexity/conference_papers/Fouts&Jensvold.pdf

2. ரோஜர் பவுட்ஸ் & டெபோரா பவுட்ஸ், Loulis in Conversation with the CrossெFostered Chimpanzees , இணைய முகவரி http://friendsofwashoe.org/textsite/louinconvert.htm

3.பேட்ரிக் கானான், ‘Asymmetry of Chimpanzee Planum Temporale: Humanlike Pattern of Wernicke ‘s Brain Language Area Homolog ‘,Science 1998 ஜனவரி 9

Series Navigation