சிபிச்செல்வனின் ஐந்து கவிதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

சிபிச்செல்வன்


1. இசைவெளியில் கரைந்த இரயில்

எனது காதுகளில்
இசைவிழ
இருப்புப்பாதையில் நடக்கிறேன்
அந்திமாலை மேகங்கள் பறக்கின்றன
மெளனத்தில் பனிசூழ் மலைகள்
பாடல் மறந்த பறவைகள் தொலைவில்
காணுமிடமெல்லாம் கேட்கு மிசை
பெரும் கூவலுடன் வருகிறது இரயில்
தண்டவாளத்தில் மேலெழும்பி
நெளிந்து நடனமாடி
மறைகிறது
கடந்து போன ரயில்
கரைகிறது
இசைவெளியில்

2. மண்டையுள் நுழைகிறது

புதர்ச்செடியில் படர்ந்த கொடிநுனி
காற்றில் கொழுகொம்பு தேடி
யசைகிறது

தலை யுயர்த்திக் காற்றின் வெளியில்
பின்னி முறுக்கி யாடுகின்றன

பிரிந்து
வெளியில் கிளையைக்
கொத்துகிறது

புதரருகில் போகப்
பச்சைப் பாம்பு கொத்தி
மண்டை யுள் நுழைகிறது

3. ஒரு குயிலும் கூவ வரவில்லை

தோட்டத்து மரத்திலிருந்து
எனதறைக்குப் பறந்து வருகிறது
குயில் குஞ்சு

குழந்தைச் சிறகு தொட்டு
உற்சாகக் கூச்சலிட
அலகு திறந்து கொத்துகிறது

எனது மனைவி சொல்கிறாள்
காக்கைக் குஞ்சு

குரல் குழப்புகிறது

அதன் அழைப்பில்
காக்கைகள் கூட்டம்
பெருங் கூச்சலிட
விடுதலை யதற்கு

ஒரு குயிலும் கூவ வரவில்லை

4. தனிமை

வானமெங்கும்
ஒரே
ஒரு கிளி
பறக்கிறது

5. தொலைபேசி மொழி

பறவையின் மொழியில்
அதனுடன் பாடுகிறேன்
பாறையின் பாஷையில் உரையாடுகிறேன்
ஒரு மரத்துடன்
ஒரு செடியுடன்
அவ்வவற்றின் மொழியில் பேசுகிறேன்

நதியின் சலசப்புடன்
காற்றின் அசைவுகளுடன்
ஊமைகளின் சமிக்ஞைகளில்
உடலசைவு மொழிகளுடன்
எனதுணர்வுகள்

மிருகங்களின் உறுமல்களுடன்
நெடுநாள் அறிமுகமிருக்கிறது

தொலைபேசி மணியின்
கிணுகிணுப்போசை யடங்குவதற்குள்
எனது மொழியைத் தயாரித்து
முன்னும் பின்னும் கோர்த்து
வண்ணங்களைப் பூசுகிறேன்

அச்சாக்கம் : paavannan@hotmail.com

Series Navigation

தமிழில்: சிபிச்செல்வன்

தமிழில்: சிபிச்செல்வன்