சின்னப் பயல்கள்

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

இராம.கி.


காவலன் அறிந்தே காவுறக் கொடுக்கல்
கதைகளில் கேட்டுத் தெரிந்ததுண்டு – உம்
கண்களின் முன்னே விரிந்ததுண்டோ ?
தாவலும் தவ்வி மீள்வது மாக
தாக்கித் தடுக்கிய பேரழிவு – மிகத்
தள்ளி ஒடுக்கிய சீரழிவு
போவதும் வருவதும் புரையொடு புழுங்கி
பொல்லா மயக்கில் ஆர்ந்த படி – நாப்
புகலா தயக்கிற் சேர்ந்த படி
நாவலந் தீவின் நானிலம் எங்கும்
நடைபெறும் வழக்கு இதுவேதான் – தினம்
நலிவுறு பழக்கும் இதுவேதான்

ஆங்கிலம் கலந்த நடைமொழி தன்னை
ஆயிர மாயிரர் பயிற்றுகிறார் – அதை
அழகெனச் சொல்லி உயற்றுகிறார்
மூங்கையர் கேளாச் செவிகளின் முன்னே
மொழிவது போலக் குளறுகிறார் – நீர்
முன்வரும் வாழ்வென உளறுகிறார்
யாங்கணும் வணிகம் ஏலம் என்றபின்
எதையும் விற்றிட உளமுண்டேல் – இதில்
ஞாயம் பற்றிய நலமுண்டோ
தாங்களும் கெட்டுத் தலைமுறை கெடுத்து
தம்மொழிக் கலப்படம் செய்கின்றார் – இதில்
தம்பட்டம் அடித்துக் கொள்ளுகின்றார்

தன்னை ஒறுத்துத் தமிழையும் ஒதுக்கித்
தமிங்கிலன் ஆகி நிற்கின்றார் – இவர்
தன்னையே விலைக்கு விற்கின்றார்
கன்னல் மறுத்து கைநீர் தேடிக்
கடைவழிப் பட்டு அழிகின்றார் – பட்ட
கடனையே முதலெனப் பிழிகின்றார்
பின்னைப் புலத்தில் பெற்றவர் இருப்பை
பேணா தொலைத்து ஒழிகின்றார் – அதில்
பிழைத்த கணக்கில் புழைகின்றார்
என்ன உரைத்தும் இவர்சொற் கேளார்
என்ற நிலையிலும் முயலுகிறோம் – இவர்
ஏற்றம் கொள்ள வியலுகிறோம்

முன்னம் இதுபோல் வடமொழி சேர்த்து
முழங்கிய மொழிகள் அறியாரோ ? -நிலம்
மூங்கிய கதைகள் தெரியாரோ ?
பின்னை ஆளுமை பெற்றது யார்க்கு ?
பிழைப்பிற் காகத் தொலைப்பாரோ ? – பிறர்
பேச்சிற் காகக் குலைப்பாரோ ?
சொன்ன சொற்களின் பொருளறியாமல்
சொத்தைக் குவியல் கூட்டுவரோ ? – வெறும்
சுற்றக் கதைகள் மூட்டுவரோ ?
சின்னப் பயல்கள் என்ற நினைந்ததால்
சினங் கொள்ளாது உரைக்கின்றோம் – துரைத்
தனங் கொள்ளாது பரைக்கின்றோம்

Series Navigation