காவிரீ!

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

‘ஜடாயு ‘


காகம் முனிவரின் கமண்டலம் கவிழ்க்க
காட்டாற்று வெள்ளமாய் வந்தவள் நீ எனக்
கதையுண்டு.

காங்கிரஸ் அரசுகள் பல கவிழ்ந்தும்
கழக அரசுகள் பல கழிந்தும்
கழனிகளில் தமிழ் உழவர் முகங்கள்
கவலையில் கவிந்தும்
ஆணையத்தின் அறைகூவல்கள்
அரசுகளின் வன்செவியில் விழுந்தும்
நீதி மன்றங்கள் எம்
நிலை கண்டு நெகிழ்ந்தும்
காலத்தில் சரியளவு
கனமழை பொழிந்தும்
ஒவ்வோர் ஆண்டும்
கர்நாடகம் தாண்டி நீ
கால் பாவ முடியவில்லை!

அலைகடல் நாயகனைத் தேடி
ஆசையுடன் பாய்ந்து வரும் உன்னை
அணை போட்டுத் தடுக்கின்றார்
அருகிருக்கும் மாநிலத்தார்.
அரசியல் குறுக்கீடோ ?
அளவுக்கு அதிகமாய்ப் பயிர் செய்ய
ஆசையோ ?
ஆற்றின் மேல் எமக்குத் தான்
அதிகாரம் எனும் நினைப்போ ?
அண்டை வீட்டாருடன் சண்டையிட
ஆவலோ ?
புரியவில்லை.

பொங்கிப் பெருகிப் புரண்டோடும் பேராற்றை
சொங்கிச் சிறு மனங்கள்
சிறைப்படுத்துவதோ ?
‘ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் ‘ என
ஊர்க்குளத்துத் தண்ணீரை
உலகம் முழுமைக்கும் சொந்தமாக்கிய
வள்ளுவன் வாய்மொழி
வையகம் மறப்பதோ ?

நீருக்குப் போரிடும் சாக்கில்
நெடுங்கால பந்தத்தை
நெருப்பிட்டுக் கொளுத்துவதோ ?
நாடுகள் பல கூடி
நைல் நதி நீரை
நயமாய்ப் பங்கிடும்
நன்னடத்தை கண்டும்
நம் நடத்தை மாறாதிருப்பதோ ?

கன்னடரே, தமிழரே!
கண்மூடித்தனம் ஒழிப்போம்.
அமைதியாய்ச் சிந்தித்து
அறிவார்ந்த முடிவெடுப்போம்.
‘இருதரப்பும் வெற்றி! ‘ என்று
இறுமாப்புடன் உரைப்போம்.
நெல்மணியும் கரும்பும் நிறையும்
காவிரியின் கரைகளில்
நல்லுறவும் நட்பும்
செழித்தோங்கி வளரச் செய்வோம்.

***

jataayu@hotmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு