சின்னச்சாமியைத் தேடி

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பாண்டிச்சேரியிலிருந்து வந்த அந்தப் பேருந்து என்னோடு வேறு சிலரையும் அந்த நிறுத்தத்தில் உதறி விட்டுச் சென்றபோது அங்கே நல்ல வெய்யில். முன்பு அங்கிருந்த நாவல் மரங்களும் ஆலமரங்களும் கொள்ளை போயிருந்தன. கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பெரிது படுத்துகிறேன் என்று சொல்லி அவற்றை அகற்றி இருக்க வேண்டும். அவற்றின் தழும்புகள் கூட இல்லை. அனற்காற்றில் வழிந்த வியர்வை முகத்தில் உப்பு வாடையைத் தர அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.

முப்பது வருடங்கள் பிரான்சில் வாழ்க்கையை ஓட்டிய பிறகு திடாரென்று இன்றைக்கு இங்கே. ஏன் ? எதற்காக ? என்ற கேள்வியில் நூல் சிக்கலாக நுழைந்து எழுந்திருக்க இயலாமல்; என் குடும்பத்தாரை ஆச்சரியப் படுத்திவிட்டு இன்றைக்கு இங்கே.

அசுர வேகத்தில் எல்லாமே நடந்தேறின. டிராவல் ஏஜன்சியில் சொல்லி, சென்னைக்கு அடுத்த விமானம் என்றைக்கு என்று கேட்டு டிக்கட் எடுத்து, பிரான்க்பர்ட் வந்து அங்கிருந்து சென்னைக்குப் பயணித்து, அன்றைய இரவே புதுவைக்குத் திரும்பி, பயண வலிகளில் இருந்து மீளாமல் இதோ இன்றைக்கு இங்கே.

அப்போதெல்லாம் தென்னாற்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுக்கா, கழுப்பெரும்பாக்கம் அஞ்சல் என முகவரி எழுதப்பட, தபால்காரரால் ஒருவாரம் கழித்துச் சாவகாசமாக அடையாளம் காட்டப்படுகின்ற ஊர்.

தென்னாற்காடு மாவட்டத்துக்கே உரிய அனைத்து லட்சணங்களும் கொண்ட கிராமம். வெற்றிலை போட்டு பழகிய காவியேறிய பற்களைப் போன்ற பூமி. முடிச்சு முடிச்சாகப் பனந்தோப்புகள். மழைக் காலங்களில் வயிறு முட்ட நீரை வாங்கிப், பிறகு பேதி கண்டவன் போல இரண்டொரு மாதங்களில் எல்லாவற்றையும் இழந்து, வயிறு ஒட்டிச் சவலைப் பிள்ளையாய் நிற்கின்ற ஏரி. அவற்றில் மெள்ள மெள்ள ஆக்ரமித்துக் கொண்டிருந்த கருவேல மரங்கள் என வறட்சியை அப்போதே சிவப்புக் கம்பளம் கொண்டு வரவேற்றுக் கொண்டிருந்த ஊர்.

இரண்டு பெரிய வீதிகள் பிறகு அவற்றில் தொற்றிக் கொண்டு இரண்டு சிறிய வீதிகள் என்று மொத்தம் நான்கே வீதிகள். ஆனாலும் மற்றக் கிராமங்களிலிருந்து வித்தியாசப்பட்டு நேர்க்கோட்டில் அமைந்திருந்த வீதிகள். இருபுறமும் சரியான இடைவெளியில் அடர்த்தியாகப் பூவரசு மரங்கள். மேல வீதியின் இறுதியில் குஞ்சம் போன்று பிள்ளையார் கோவில். தொடர்ந்து கிழக்கே போனால் பொம்மைக் குதிரையின் மேல் ஆரோகணித்து வேட்டைக்குத் தயார் நிலையில் பாவாடைராயன் என்றும் இளமையுடனிருப்பார். அதையொட்டி அங்காளம்மன் கோயில். வடக்கே காலாறப் புதைமணலில் கொஞ்ச தூரம் நடந்தால் சிறியதாக மாரியம்மன் கோயிலும் குளமும். பொதுவாக கிராமத்தவர்க்கு குடி நீரை வழங்கும் குளம். கோடையில் ஆடு மாடுகளும் குளத்துநீரைப் பங்கு போட மனிதர்களோடு சேர்ந்து கொள்ளும்.

எனது வீடு அப்போது மேலத் தெருவிலிருந்தது. கீழத்தெருவில்தான் அவனிருந்தான். அவன் என்றால்: என் பால்ய நண்பன் சின்னச்சாமி. பொத்தானற்ற கால் சராயை ஒரு முடிச்சுப் போட்டு இடுப்பில் நிறுத்தி, எச்சரிக்கையாக அதன் மேல் கறுப்பு அரைஞாண் கயிற்றை இருத்திக் கொண்டு அனேக விஷயங்களில் என்னைப் பிரம்மிக்க வைத்திருக்கிறான்.

கபிலை இறைப்பது, மடைகட்டுவது, கலப்பையை லாவகமாகப் பிடித்து முதல் சால் ஓட்டுவது, பரிசலில் சிக்கியிருக்கும் கெளுத்தி மீனை கையிலே முள்ளை வாங்கி கொள்ளாமல் வெளியே எடுப்பது என எல்லாவற்றிலும் ஒரு பெரிய மனுஷத்தனம் இருக்கும். எனது வற்புறுத்தலுக்காக அவற்றையெல்லாம் ஒருவித அச்சத்தோடு எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். அந்த வித்தைகளுக்கு அவ்வப்போது அம்மா கொடுக்கும் சீடை, முறுக்குகள் காணிக்கையாக்கப் படுவதுண்டு.

பள்ளிநாட்கள் தவிர மற்ற நாட்களிலெல்லாம் சேர்ந்தே இருப்போம். அவன் அதிகமாக எங்கள் வீட்டிற்கு வந்ததாக ஞாபகம் இல்லை. நான்தான் அவனைத் தேடிச் சென்றிருக்கிறேன்.

‘காலங்காத்தால கிளம்பிட்டியா ‘ ? என அம்மா கூச்சலிடுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவன் வீட்டிற்குச் சென்று ஒருவித உரிமையோடு அவன் தோளிற் கைபோட்டு வெளியே கிளம்பி, தென்னை மரங்களின் கீழே கிடக்கும் குறும்பிகளைப் பொறுக்கி எடுத்து தேய்த்து, ஈர்க்குச்சி செருகி பம்பரம் விட்டு, நல்ல கூழாங்கற்களாக பொறுக்கிக் குண்டு விளையாடிவிட்டு, குளத்திற்குச் சென்று உச்சி வரை ஆட்டம் போட்டுவிட்டு சிவப்பேறிய கண்களும் ஒழுகும் மூக்குமாக வீட்டிற்கு வந்தால் அம்மா வாய் நிறைய வசவுகளுடன் காத்திருப்பார்.

அதற்குப் பிறகு சில நாட்களுக்குச் சின்னச்சாமி வீட்டுப் பக்கம் நான் தலைவைக்க முடியாது. ஆனால் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அதற்குப் பிறகு மறுபடியும் எங்கள் ஆட்டம் தொடரும்.

இந்தச் சந்தோஷத்தைக் குலைப்பது போன்று அது நடந்தது. திடாரென்று ஒரு நாள் சின்னச் சாமியின் சித்தப்பா ஆறுமுகம் ஊர்ச்சந்தியில் கொடியேற்றினார். நானும் சின்னச் சாமியும் ஒன்றாக நின்று வேடிக்கைப் பார்த்தோம். எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டேவந்த அவனது சித்தப்பா என்னைத் தவிர்த்துவிட்டு அவனுக்கு மட்டும் கொடுத்தார்.அவன் என்னிடம் கொடுக்க, அவனது சித்தப்பா அவனது முதுகில் ஒன்றுவைத்து தற தற வென்று இழுத்துப் போனார். அங்கிருந்த கூட்டம் முழுதும் ஒருவித வன்மத்தோடு என்னை பார்த்தது. சின்னச் சாமியின் சித்தப்பா மீது எனக்குக் கோபம் வந்தது. நான் வீட்டிற்கு வந்து விட்டேன். அதற்கு மறு நாள் கீழத்தெரு இளைஞர்கள் சிலர் எங்கள் வீட்டின் எதிரே நின்று பீடி குடித்துக் கொண்டிருந்தார்கள். இதற்குமுன் இப்படி எவரும் செய்ததாக நினைவில்லை.

மறுநாள் காலை அம்மா தடுத்தும் கேளாமல் சின்னச்சாமி வீட்டிற்குக் கிளம்பிவிட்டேன். அவன் என்னை பார்த்தவுடன் ஒளிந்து கொண்டான். சிறிது நேர்த்தில் அவனது சித்தப்பா ஆறுமுகம் அங்கு வந்தார். என்னை பார்த்ததும் மனுஷன் மூர்க்கத்தின் உச்சிக்கே சென்றார்.

‘டேய்! .. உனக்கு இங்க என்ன வேலை ? ‘ என்று சத்தம் போட சின்னச்சாமிக்கும் கேட்டிருக்க வேண்டும். அதுதான் அவனை நான் கடைசியாகப் பார்த்தது.

அடுத்த சில நாட்களில் கிராமத்தில் எங்கள் குடும்பம் அன்னியப்படுத்தப்பட்டது. கோவில், குளம் எங்கே கண்டாலும் மேலத் தெருவிலிருந்த எங்களது ஐந்தாறு குடும்பங்களை மற்றவர்களுக்கு, குறிப்பாக கீழத் தெருவினருக்குப் பிடிக்காமல் போய்விட்டது.

அம்மாதான் ஒரு நாள் சொன்னாள்.

‘நம்ம எல்லோரும் எதிரியா நினைக்கிறாங்க! ‘

‘ஏன் ? ‘

‘சொன்னா ஒனக்குப் புரியாது ‘.

‘………….. ‘

‘நாம வேற ஜாதி ‘

‘வேற ஜாதின்னா ? ‘

‘உனக்கு அதெல்லாம் வேண்டாம். நாம இந்த ஊரைவிட்டே போகப் போறம் ‘

அன்று இரவெல்லாம் அம்மா அழுதாள். அப்பா இடிந்து போய் உட்கார்ந்திருந்தார். இரவு வெகு நேரம் கழித்து வந்த சேதராப்பட்டுக் கவுண்டரிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு மறுநாட் காலை புதுவை வந்துவிட்டோம்.

அதற்குப் பிறகு எல்லாமே வேக வேகமாக நடந்தேறியது. பள்ளி, கல்லூரி எனப் படிப்பைத் தொடர்ந்து பிரான்சில் குடியேறி ஐரோப்பியத்தில் கரைந்து, இன்றைக்கு உடல் தளர்ந்து, முடி நரைத்து வந்திருக்கும் என்னை இந்த மண்ணிற்கு அடையாளம் தெரியுமா ? சின்னச் சாமியும் என்னைப் போலவே முடி நரைத்து, முகம் கோடிட்டுத் தடுமாறுவானோ ?

எனது ஊரின் வழியாகத் திண்டிவனம் செல்லும் பேருந்து என் நினைவை கலைத்து வந்து நின்றது. மற்றவர்களோடு கலந்து என்னையும் திணித்துக் கொண்டு ஒரு வழியாகப் புறப்பட, இதர பயணிகளிடமிருந்து நான் வித்தியாசப்பட்டிருக்க வேண்டும். பயணிகளில் பெரும்பாலோர் என்னையே பார்த்தார்கள். வழியெங்கும் புழுதியில் நனைத்துவிட்டு, எனது கிராமம் வந்தபோது நான் மட்டும் இறங்கினேன்.

கிராமத்திற்குச் செல்லப் புதிதாகப் பாதை அமைக்கப் பட்டிருந்தது அதைத் தவிர்த்துவிட்டுப் பழையத் தடமாக இருந்த ஏரிக்கரையின் பனைமரங்களுக்கிடையில் புகுந்து நடக்க ஆரம்பித்தேன். நிறையக் கருவேலமரங்களும் முருக்க மரங்களும் வழியெங்கும் ஆக்ரமித்திருந்தன. நவம்பர் மாதம் என்பதால் நிறைமாத கர்ப்பினியாக ஏரி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தது.

நிறைய ஏக்கங்கள். நிறையக் கனவுகள். சின்னச்சாமியை ஆச்சரியப் படுத்துவதற்கு அனேக விஷயங்கள் கைவசம். அவன் தரப்பிலும் நான் கேட்டு வியக்க அநேக விஷயங்கள் இருக்கலாம். இன்னும் சிறிது நேரம் நடந்தால் ஊர் வந்து விடும் என்பதன் அறிகுறியாகக் கிழக்கு வெளி மதகு தெரிந்தது.

சில்லென்று வீசிய வாடைக்காற்றை இதமாக வாங்கி கொண்டு இறுதியாக கிராமத்தில் நுழைந்த போது, அந்தத் தேனீர்க்கடை தென்பட்டது. கிராமங்களின் தகவல் மையம்.

‘தம்பீ ‘! .. அழைத்தேன்.

வெகு நேரம் கடந்து, பனை ஓலை வேயப்பட்ட தட்டியை ஒதுக்கிக் கொண்டு என்னிலும் வயது கூடியவர் வெளிப்பட்டார்.

‘யாரு ?.. வெளியூரா ? ‘

வலது கையைத் தூக்கி உள்ளங்கையைத் தன் கண்களில் குடையாக நிறுத்தி பார்வையைத் தாழ்த்தி என்னைப் பார்த்தார்.

‘அடட.. வாங்க வாங்க நம்ம முனிசீப்பு பிள்ளை இல்ல ? என்னைத் தெரியுதுங்களா ? நான்தான் போலீஸ் அண்ணாமலை. ‘

என் அடையாளத்தை இன்னும் இந்த கிராமம் இழந்துவிடவில்லை என்பது குறித்து எனக்குச் சந்தோஷம்.

‘வாங்க!.. உள்ள வாங்க..! என்ன அப்படியே திகைச்சுப் போயிட்டிங்க. ?

உள்ளே சென்று அவர் காட்டிய மரப் பெஞ்சில் அமர்ந்தேன்.

‘ஊரெல்லாம் எப்படி இருக்குது ? பழைய ஜனங்கள் இருக்காங்களா ? ‘

‘ஊருக்கு என்ன ? ஏதோ நீங்க புண்ணியம் பண்ணவங்கப் புறப்பட்டு போயிட்டாங்க. நாங்கதான் வருஷம் தவறாம வெட்டு குத்துன்னு இருக்கோம். ‘

‘என்ன பிரச்சினை ? சின்னச்சாமி எப்படி இருக்கான் ? ‘ ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.

‘உங்கக் கூட்டாளியைத் தேடறீங்களா ? அங்கோ கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கிறாரே அவரை அடையாளம் தெரியுதா ? ‘

அப்போதுதான் கவனித்தேன் அங்கே மூன்றாவதாக ஒருவர் – கறுத்து, முகத்தை மறைத்துக் கோரைப்புற்களாய் முளைத்திருந்த தாடியுடன், பழுப்பேறிய வேட்டியை, சுருங்கிய வயிற்றின் மேல் முடிச்சாகப் போட்டு, அது போன்ற இன்னொரு வேட்டியால்( ?) உடம்பை மூட முயன்று முடியாமற் போக, கால்களையும் கைகளையும் குவித்துக் கொண்டு படுத்திருந்தார்.

‘சின்னச்சாமி எழுந்திரு..! யார் வந்திருப்பது பாரு ‘

‘என்னது சின்னச்சாமியா ? ‘

கட்டிலை நெருங்கினேன்.

‘யாரு ? ‘ – சின்னச்சாமி.

‘சின்னச் சாமி என்னைத் தெரியுதா ? நான்தான் முனுசீப்போட பிள்ளை சண்முகம் வந்திருக்கேன் ‘.

‘அப்படியா ? பாத்து கன காலம் ஆவுது. பார்வை வேற முன்ன மாதரி இல்லை. நீங்க சைகோன்ல இருப்பதாச் சொன்னாங்க. எத்தனை பசங்க ? எல்லோரும் செளவுக்கியமா ? ஏதோ ஊர மறக்காம வந்தீங்களே அந்த மட்டும் சந்தோஷம். ‘

தொடர்ந்து பேசிக்கொண்டுபோன சின்னச்சாமியை இடைமறித்தேன்.

‘நான் நல்லாதான் இருக்கேன். நீ ஏன் இப்படி ? பிள்ளைங்க இருக்காங்களா ? ‘

‘இருக்காங்க. ஒருத்தனுக்கு நாலு பேரா. எல்லாம் பொழைப்புத் தேடிப் பட்டணம் போயிட்டாங்க. ‘

‘எல்லோருமேவா ? ‘

‘இதென்ன கேள்வி ? நீங்க போகலியா ? யாரோ என்னமோ பிரச்சினை பண்ணான்னு உங்க ஜாதிகாரங்க எல்லோரும் ஊரைவிட்டே போனீங்க. அதுக்கப்புறம் எங்க ஜாதிக்கும் எண்ணிக்கையில் கூடின இன்னொரு ஜாதிக்கும் பிரச்சினை.. ஏதோ முடிஞ்சவனெல்லாம் போயிட்டோம். முடியாதவங்க இருக்கோம். ‘

‘நீ போகலியா ? பிள்ளைகள் எல்லாம் பட்டணத்துல இருக்காங்கன்னு சொல்ற! ‘

‘போயிட்டாப் பிரச்சினை முடிஞ்சிடுமா ? அப்போதைய பிரச்சினையிலே உங்கப்பாரு போயிட்டாரு. உங்க ஜாதிக்காரங்க எல்லோரும் போயிட்டாங்க. பிரச்சினை முடிஞ்சிடுச்சா ? தேர் இழுக்கறது, குளத்துத் தண்ணிய எடுக்கறதுன்னு ஏதாவது ஒரு ரூபத்துல பிரச்சினை வரத்தான் செய்யுது. இரண்டு ஜாதிக்காரங்க அடிச்சுகிறது தொடர்ந்து நடந்துக்கிட்டுத்தான் வருது. இன்னைக்கு நாங்க போயிட்டா இன்னொரு இரண்டு ஜாதிக்காரன் அடிச்சுக்கப் போறான். நான்தான் பிள்ளைங்க இருக்காங்கன்னு போயிடறன். அண்ணாமலைக்கு யார் இருக்காங்க ? எல்லோரும் போய்க் கொண்டே இருந்தால் இந்த மண்ணுக்கு யாராவது வேண்டாமா ? ‘

‘சரி, இப்படியே இந்த ஊரிலிருந்து கொண்டு இந்த ரணகளத்தைப் பார்க்கணுமா ? ‘

‘இல்லை!.. நடக்காது. இனி இப்படி நடக்காது. ‘

‘எப்படி இவ்வளவு உறுதியாச் சொல்ற ? ‘

‘இதோ வெளியில பார்க்கிறியே இந்தக் கொடிகள் எல்லாம் இறக்கப் படணும். ஊருல கொடிகள் எதுவும் இல்லாம இருந்த போது சாதிகளும்

தலைகாட்டாமல்தான் இருந்தன. ‘

‘முடியுமா ? ‘

‘முடியும். ‘ நம்பிக்கையோடு சொன்னான்.

***

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா