சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

கே.பாலமுருகன், மலேசியா


என் பெயர் ஹான் ஆனால் நான் தீவிரவாதியல்ல


சமீபத்தில் வெளியாகும் பல நல்ல சினிமாக்களில் கையாளும் முக்கியமான உத்தி, படத்தின் முழு நீளக் கதையையும் ஒரே கதைச் சொல்லியின் குரலில் ஒலிக்கவிடுவதுதான். இத்தகைய கதைச் சொல்லல் பார்வையாளனுடன் சினிமாவை அல்லது கதையை நெருக்கமாக்க இயலும் என்கிற புரிதலை நோக்கியே மீண்டும் மீண்டும் புதிய பாணியில் இம்முறையானது படங்களில் பாவிக்கப்படுகிறது.

என் பெயர் ஹான் என்கிற இந்தித் திரைப்படமும் ஹான் என்கிற கதைப்பாத்திரத்தின் குரலில் நீண்ட ஆழ்மன வெளிப்படுகளாகக் கதை முழுக்க நம்மை இழுத்துக் கொண்டு நகர்கிறது. தனது மனைவியான மந்திராவிற்காக(கஜோல்) அவன் எழுதும் குறிப்புகளைத்தான் ஒலியாக மாற்றி திரையின் பின்னனியில் இணைக்கிறார்கள். ஹான் என்ற கதைப்பாத்திரம் இந்தப் படத்தில் அதிபுத்திசாலியாகவும் அதே சமயம் சமூகத்தை எதிர்க்கொள்வதில் தன்னம்பிக்கையற்றவனாகவும் படைக்கப்பட்டிருப்பது ஆழ்மனம் மற்றும் உடலியக்க முரணை ஆராயும் ஓர் உளவியல் பாதிப்பை மையமாகக் கொண்டிருப்பதாகப் புரிந்துகொள்ளப்படலாம். (இதைப் புரிந்துகொள்ள Asperger syndrome என்கிற மனச்சிதைவைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்)

எதையும் நுட்பமாகவும் அசாதரண வேகத்துடனும் கற்றுக் கொண்டு வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்கவனாக வளரும் ஹான் சக மனிதர்களை எதிர்க்கொள்வதில் தனக்குள் அடர்ந்திருக்கும் வலிமையற்ற வெளிப்பாடுகளை தனது தடுமாற்றமான உடலசைவின் மூலம் காட்டுகிறான். யாருடைய கண்களையும் பார்த்து உரையாடும் தைரியம் அவனுக்கிருப்பதில்லை. எதையோ தேடுவது போன்ற பாவனையில் தரையையும் மேலேயும் வலது இடப்புறங்களை கவனித்தப்படியும் தலையை ஆங்காங்கே அசைத்துக் கொண்டும் எதிரில் அவனுடன் உரையாடிக் கொண்டிருப்பவர்களின் கூர்மையான கவனத்திலிருந்து தப்பிக்க முயல்வதிலேயே தீவிரமாக இருப்பான். இதைத்தான் Nonverbal communication எனச்சொல்லப்படும் சொற்களைத் தவிர்த்து கண் பாவனையில், உடல் மொழியில், முகப்பாவனையில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவலைப் பெறுவதில் ஏற்படும் அகச்சிக்கல் ஆகும். சமூகத் தொடர்பு அல்லது சமூக மனிதர்களுடன் பழகுவதில் பேசுவதில் ஹானுக்கு இருக்கும் பலவீனம் Nonverbal communication சமயத்தில் மேலும் உக்கிரமாக வளர வாய்ப்பிருக்கிறது. அவனுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும் முகப்பாவனையையோ அல்லது குரல் தொனியையோ அவன் தனக்கு எதிரிலிருப்பவர்களிடமிருந்து அடையாளங்காண நேர்ந்தால், உடனடியாக அவனது உடல் அசைவினூடாக அவனது மனச்சிதைவு வெளிப்படும்.

தன் மீது குவியும் பிறரின் கவனத்தை உதற முயலும் ஹானின் செயல் எதிரிலிருப்பவர்களின் இருப்பை எதிர்க்கொள்ள இயலாமையைக் குறிக்கிறது. இருந்தும் அவன் எதிர்லிருப்பவர்களைப் பற்றிய கவனத்தை முழுவதுமாகக் கரைத்துவிட்டப் பிறகு அவர்களின் இருப்பு பற்றி அக்கறையின்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பான். அவனுக்கு வார்த்தைகளைச் சொற்களை அவனிடமிருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற தேவை இருப்பதால் அதை வெளிப்படுத்துவதில் சிக்கலும் இருப்பதைத்தான் படத்தில் ஹானின் பிரச்சனையாகக் காட்டியிருக்கிறார்கள்.

இத்தகைய பிரச்சனை அவனுக்கு இயல்பிலேயே இருக்கக்கூடியதாகவும் இருக்கலாம் அல்லது சிறுவயதில் பயங்கரமாக அவன் மீது செலுத்தப்பட்ட புறக்கணிப்பின் ஆழமான பாதிப்பாகவும் இருக்கக்கூடும். இது படத்தின் மையக்கதையின் நான் இணையும்போது மிகத் தெளிவாகத் தெரிந்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. கோக்னத்திவ் வளர்ச்சி படிநிலைகளை முன்வைத்து இப்பிரச்சனையயை அணுக நேர்ந்தால், ஹான் திடமான தன்னம்பிக்கையுடன் இந்தச் சமூக மனிதர்களை அவனுக்குச் சார்பான நிலையில் எதிர்க்கொள்ளத் துவங்கினால் அவனது மனவளர்ச்சி, பிறருடன் தொடர்புக் கொள்ளும் ஆற்றல், தனது தேவையைக் கருத்துகளை எவ்விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெளிப்படுத்துவது என மேலும் அவனது அகம் விரிவடையக்கூடும்.

இப்படத்தில் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு தனிமையடையும் ஹான் san fransisco-விற்கு வந்து தனது தம்பியின் குடும்பத்துடன் வாழத் துவங்குகிறான். சமூகத்துடன் அதிகமாகத் தொடர்புக் கொள்ளும் முக அழகு திரவியங்களை விற்பனை செய்யும் நடைவியாபாரியாக இருக்க வேண்டிய சூழலில், புது இடம் புது மனிதர்களின் நெரிசலில் இந்தியாவில் ஒரு கிராமத்தில் மனச்சிதைவுடன் வளர்ந்த ஹான் எப்படிச் சமாளித்து அவனைச் சீர்த்திருத்துகிறான் என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்த இடத்தில்தான் ஹான் திருமணமாகி கணவனை இழந்து தனது பையனுடன் வாழும் இந்து பெண்ணான மந்திராவைச் (கஜோலைச்) சந்தித்து அவளுடன் காதல் வயப்படுகிறான். அங்கிருந்து அவனது கோக்னத்திவ் வளர்ச்சி படிநிலைகள் சீராகத் துவங்குகிறது. சமூகத் தொடர்பில் அவனுக்கு மாற்றம் ஏற்படுகிறது. ஆரோக்கியமான மனிதர்கள் ஆரோக்கியமான பகிர்வுகள், நம்பிக்கையளிக்கக்கூடிய உறவுகள் என அவனது உலகம் சீராகுகிறது. மந்திராவையே திருமணம் செய்து கொண்டு அவளது ஒரே மகனான அவனுக்கும் ஒரு நல்ல தந்தையாக நண்பனாக ஹான் மாறுகிறான்.

இதற்கிடையில் 9 செப்டம்பர் 2001-இல் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் அல் கய்டா எனப்படும் கும்பலின் விமானத் தாக்குதலால் வாஷிங்கடனில் உலக வாணிப இரட்டை மாடி தகர்க்கப்படுகிறது. இந்தப் பயங்கரவாத சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்கா தனது இராணுவப்படையின் மூலம் ஈராக்கில் முழுக்க உற்பத்தி செய்த வனுமுறையையும் மனித உரிமை அத்துமீறலின் கொடுமையையும் உலகம் அறியும். ஆனால் அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்காவில் நல்ல சமூகத் தொடர்புடனும் பொருளாதார இருப்புடனும் வாழ்ந்து கொண்டிருந்த இஸ்லாமியர்கள் எத்தகைய அடையாள சிக்கலைச் சந்தித்தார்கள் என்பதை விசாரனை செய்யும் விதமாக படத்தின் அடுத்தக்கட்டம் நகர்த்தப்படுகிறது. இரட்டை மாடி தகர்ப்பில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உறவுகளின் இழப்புகளும் அமெரிக்கக் குடிமக்களுக்கிடையே இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. இஸ்லாமியன் என்பவன் தீவிரவாதியாக மட்டுமே இருக்கக்கூடியவன் என்கிற அடையாளம் அமெரிக்கத் தெருவில் வாழும் சாதாரண இஸ்லாமிய வியாபாரியின் மீதும் சுமத்தப்படுகிறது.

அமெரிக்க சமூகத்தில் இஸ்லாமியர்களின் இருப்பு குறித்து ஏற்பட்ட திடீர் மாற்றம், இளையவர் முதல் குழந்தைகள்வரை ஒரு வன்முறை உணர்வாக மாறியிருப்பதால் மந்திராவின் மகன் திடலில் ஏற்படும் மூத்த மாணவர்களினுடனான சச்சரவில் ஒரு தீவிரவாத இஸ்லாமியனின் மகனாக அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறான். தன் மகனுக்கு நீ (ஹான்) தந்தையாக இருப்பதால் அப்பாவியான எனது மகனும் ஒரு தீவிரவாதியாகப் பாவிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுருக்கிறான், ஓர் இஸ்லாமியனைத் திருமணம் செய்தது எனது குற்றம் எனப் பிதற்றும் மந்திரா. “நீ இங்கிருந்து போய் விடு, உன் இஸ்லாமிய முகமும் உன் பெயரும் என் மகனின் பரிதாபத்திற்குரிய மரணத்தை ஞாபகப்படுத்துகிறது” என்று கதறும் மந்திராவை எதிர்கொள்வதில் மீண்டும் அவனுக்கிருக்கும் மனச்சிதைவு உருவாகி தடையை ஏற்படுத்துகிறது. “மீண்டும் எப்பொழுது வரவேண்டும்” என்று கேட்டு அப்பாவியாக நிற்கும் ஹானைப் பார்த்து, “உன் பெயர் ஹான் ஆனால் நீ தீவிரவாதியல்ல என்பதை உலகிற்கு உணர்த்து! அமெரிக்க அதிபரைச் சந்தித்து இதைச் சொல்லிவிட்டு திரும்பவும் வா!” என்று கட்டைளையிடுகிறாள் மந்திரா. தனது நேசத்திற்குரிய மந்திராவின் கட்டளையைச் சுமந்துகொண்டு சமூகத்திற்கு நேர்மையாக இருக்க நினைக்கும் மனம் கொண்ட ஓர் இஸ்லாமியனாக அமெரிக்கப் பிரதமரைச் சந்திக்க தனது பயணத்தைத் தொடங்குகிறான் ஹான்.

அவனது பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் அன்பிற்குரியவர்களாகச் சித்திரிக்கப்படுகிறாள். குறிப்பாக ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த மாமா ஜென்னியுடன் அவனுக்கு ஏற்படும் உறவு மிகவும் அழகானவை. தேவாலயத்தில் மரணித்தவர்கள் குறித்து அவர்களின் உறவினர்கள் பேசப்படும் அவையில் ஓர் இஸ்லாமியனான ஹான் தனது இந்து மகனின் மரணத்தைப் பற்றி பேசி அழுவது இனங்களுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு மனவெளியை அடையும் அற்புதமான கட்டம். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் விலிமினியா எனப்படும் மாமா ஜென்னி இருக்கும் அந்த இடத்தில் ஏற்படும் புயல் மழைக்காற்றில் பாதிக்கப்படும் அவர்களுக்கு உதவுவதற்காக ஹான் அங்கேயே மீண்டும் சென்றுவிடுகிறான். கருப்பின மக்களுக்காக ஓர் இஸ்லாமியன் தனது உயிரின் மீதான அத்துனைப் பாதுகாப்புகளையும் தூக்கியெறிந்துவிட்டு உழைக்கிறான். ஊடகங்களின் மூலமும் தொலைக்காட்சியின் மூலமும் ஹான் பற்றிய தகவல் உலகம் முழுக்க பரவுகிறது. இஸ்லாமியர்களின் மீதிருந்த அடையாளச் சிக்கல் மெல்ல விலகுவதாக பிம்பம் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. (இது ஒரு வெகுஜன சினிமாவிற்கான உத்தியாக இருந்தாலும் ஆனால் ஷங்கர் தனது படத்தில் கையாளும் போலியான ஊடக பிரமாண்டமெல்லாம் இதில் பார்க்க இயலாது)

படத்தின் இறுதி காட்சியில் தனது மனித நேய உணர்வால் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஹான் புதியதாகப் பதவியேற்கும் ஒபாமா அவர்களைச் சந்தித்து (குறிப்பாக சந்திக்க அனுமதிக்கப்படுகிறான்) தனது நேர்மையான இஸ்லாமிய உணர்வை வெளிப்படுத்துவதோடு படம் நிறைவடைகிறது. மதம் வன்முறையையோ அல்லது பிறர் மீது வெறுப்பையோ உற்பத்திக்கும் கருவி கிடையாது, மதம் என்பது அன்பின் வழிப்பாடாக எல்லோருக்கும் சொல்லப்படுகிறது. 9 செப்டம்பர் நிகழ்விற்குப் பிறகு உலக இஸ்லாமியர்கள் மீது மதம் என்கிற அடையாளத்தின் மூலம் நிறுவப்பட்ட தீவிரவாதம் என்ற மதிபீட்டைத் தூக்கி வீசும் அன்பின் கைகளாக மதம் காட்டப்படுவதற்காக ஓர் இஸ்லாமியன் மேற்கொள்ளும் மிகப்பெரிய பயணமாகக் காட்டப்பட்டாலும் அதன் பின்னனியில் வெறும் காதலும் அன்பும் மட்டுமே நிரம்பியிருக்கிறது.

கோடாக் நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் வெளியீட்ட காலண்டரில் உலக புகைப்பட அல்லது ஒளிப்பதிவாளர்களின் சிறந்த புகைப்படங்கள் மொத்தம் 12 இணைக்கப்பட்டிருந்தன. அதில் ரவி.கே.சந்திரன் அவர்களின் ஒரு இந்தி திரைப்படத்தின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்ததைப் பார்க்க நேர்ந்த அக்கணத்தில்ருந்தே அவரின் திரைப்படங்களின் மூலம் அவரது கேமராவின் உழைப்பைத் தனியாகக் கவனித்து வருகிறேன். அதில் திரைப்படம் என்கிற வடிவத்தை மீறிய ஒரு கலை தரிசனம் நிச்சயம் கிடைக்கும். இந்தத் திரைப்படத்திலும் ரவி மிகவும் அற்புதமாக உழைத்திருக்கிறார். ஹான் தனது மனச்சிதைவை எதிர்க்கொள்ளும் மிக முக்கியமான காட்சிகளில் அவரின் முகத்தை அண்மையில் தரிசிக்கும் காமிரா அவரின் உணர்வுகளின் வலிமையின்மையை தனித்தனி துண்டுகளாக உடைத்துப் பதிவு செய்திருக்கிறது. இது அவருக்கு இருக்கக்கூடிய மனநோயின் உக்கிரத்தைக் காட்டுவதற்காகப் படத்தின் மையத்தை அடைய ரவி.கே.சந்திரனின் காமிரா தனது கலை வெளிப்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. இசையும் பின்னனி இசையும் படத்தின் கூடுதல் பலமாகும்.

இத்தகைய வலுவான அரசியல் பின்புலங்களை ஒரு பிரச்சனையாகக் கையாண்ட வரலாற்றின் ஒரு பகுதியை மீண்டும் உரையாடியிருக்கும் கரன் ஜோஹார் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிக்கலாம். பயங்கரவாதம் மதத்தால் உருவாகக்கூடியது அல்ல என்பதை மறுக்கும் விதமாக படத்தில் காட்டப்படும் ஒரு முக்கியமான காட்சி உண்டு. வாஷிங்ண்டனில் உலக வாணிப இரட்டை மாடி தகர்ந்ததில் மரணித்தவர்களின் நினைவாஞ்சலி ஒரு திறந்தவெளியில் நிகழ்ந்துகொண்டிருக்க, எவ்விதக் குற்ற உணர்ச்சியும் அற்ற நிலையில் குல்லா அணிந்துகொண்டு இஸ்லாமியன் என்கிற மத அடையாளத்துடன் உள்ளே நுழையும் ஹான் இறந்தவர்களுக்காகக் கடவுளை நோக்கி தொழுகிறான். அந்தத் தொழுகை ஒலியைக் கேட்கும் அங்குள்ளவர்கள் அவனை ஒரு குற்றவாளியாகவும் அறுவறுக்கத்தக்கவனாகவும் பார்க்கிறார்கள். படம் கொண்டிருக்கும் தீவிரத்தையும் இஸ்லாமியம் என்பது தீவிரவாதம் கிடையாது என்பதை மறுக்கும் எதிர்வினையையும் உணர்ந்துகொள்ள இந்த ஒரு காட்சியே போதுமானது. இன்றைய உலகியல் மதிப்பீடுகளில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் கொண்ட சமூகமாகத்தான் இஸ்லாமியர்கள் பார்க்கப்படுகிறார்கள், அவர்களும் மனிதர்களே அவர்களுக்குள்ளும் அன்பும் அரவணைப்பும் இருப்பதை உங்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் இப்படம் பணியாற்றியிருக்கிறது.

“அவர்கள் என்னத் துன்புறுத்துவதற்குக் காரணம் நான் அல்-கய்டா பற்றி ஒன்றுமே சொல்லாதுதான். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது மந்திரா. ஆரம்பத்திலேயே அல்-கய்டா பற்றி நான் படித்திருக்க வேண்டும். .” அமெரிக்க அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக இயங்காமல் மதத்திற்கு எதிராக மனிதர்களை வதைத்ததுதான் உண்மை என்பதை வலுவாக உணர்த்தும் சிறையில் ஹான் கதைப்பாத்திரம் அடையும் சித்திரவதை காட்சிகளில் ஷாருக்கான் ஆழமாக மனதில் பதிகிறார். முதிர்ச்சியான ஒரு நடிகனுக்கு இனி நடிப்பைப் பற்றி என்ன சொல்லித்தர முடியும். முடிந்த அளவிற்கு தயவு செய்து அவரை உங்களின் நாட்டிற்கு அழைத்து
“டத்தோ” போன்ற பட்டங்களெல்லாம் கொடுத்து அந்தக் கலைஞனை அசிங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா
bala_barathi@hotmail.com
http://bala-balamurugan.blogspot.com/

Series Navigation