சிந்தாமணி கொட்லகெரெயின் கன்னடக் கவிதைகள்

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

தமிழில் பாவண்ணன்(பதிவுகள் கவிதைகள் அரங்கில் வாசிக்கப்பட்டவை)

1. என் வலையில்

முதலில் என் வலையில்
சின்ன மீன்கள் அகப்பட்டன
அவற்றைத் தொடர்ந்து வந்தன
பெரிய பெரிய மீன்கள்

நான் அசையாமல் உட்கார்ந்திருந்தேன்

ஒரு தோணியும் என் வலைக்குள் வந்து சேர்ந்தது

தோணிக்குள் மக்கள் கூட்டம்
அவர்களின் வாகனங்கள்

பார்த்துக் கொண்டிருக்கும்போதே
அவர்கள் தோணியை நிறுத்தினார்கள்
துடுப்பை அழுத்தி

அப்புறம் என் வலைக்குள்
பெரும் புயலின் அரங்கேற்றம்

ஆனந்தத்தோடும் பரவசத்தோடும்
நான் என் வலையைப் பிடித்தே இருந்தேன்

சில கணங்களுக்குள்
ஆறு முழுக்க என் வலைக்குள் வந்துவிட்டது

மெல்ல முழு ஆற்றையும்
என் தோளில் சுமந்தபடி
குன்றின் உச்சியில் இருக்கும் என் வீட்டை நோக்கி
கரையிலிருந்து நடக்கத் தொடங்கினேன்

***********

2. அந்தப் பறவை

பனி படர்ந்த பாதையில்
நீங்கள் தன்னந் தனியே நடமாடும்போது
எச்சரிக்கையாக இருங்கள்

அந்தப் பறவை சட்டென்று இறங்கி
உங்கள் கண்களை
சின்னப் பழங்களைப் போலக் கொத்தித் தின்றுவிடும்

அதை உங்களால் பார்க்கமுடியாது
டொக் டொக் என்று
கொத்தும் பழங்களைப்போலக் கொத்தித் தின்றுவிடும்

மக்களின் கண்களைத் தின்று
அது தன் குரலை இனிமையாக வைத்திருக்கிறது.

பாட்டின் வடிவில்
அது கேள்விகளை முன் வைக்கும்
சொர்க்கத்திற்கு இங்கே இருந்து எத்தனை மைல் ?
தேவதைகளின் உடைகள் எந்த நிறம் ?
அனைத்திலும் பெரியது எது ?
சொர்க்கம் இங்கேயே இருக்கிறது
தேவதைகளின் உடைகள் வெண்ணிறம்
சத்தியமே அனைத்திலும் பெரியது

வரிசைப்படி பதில்களைச் சொன்னால்
தானாகவே திறக்கும் உங்கள் கண்கள்

நினைவிருக்கட்டும்

***********

3. தம்பிக்கு

என் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தாய் நீ தம்பி
முதல் வீட்டில்
இருட்டு நிரம்பிய இறவாணத்தில் பேயைத் தேடினோம்

மதனகேரியில் பவ்யா நாடக அரங்கில்
யட்ச கானம்
வீட்டு முற்றத்தில் மறுபடியும் ஆடினோம்
ஏதேதோ பேசினோம்
அம்மாவிடம் அகப்படாமல்
வெகு தொலைவு ஓடினோம்

நாள் கிழமை மணியையெல்லாம்
ஒரு கணம் மறந்து கிடந்தோம்
பதினைந்து நிமிடம் முன்னாலேயே
பள்ளிக்கூட மணியை அடித்தோம்
கடைசியாகத்தானே
நாம் நடந்தோம் வீட்டுக்கு ?

அடுத்த முறை சந்தித்துக் கொண்ட போது
தாடியும் மீசையும் இருவருக்கும் முளைத்திருந்தன

பல மைல்களுக்கப்பால் நீ அங்கே
நான் இங்கே
நாம் இருவரும் கூடிக் கழித்த
நாட்கள் எங்கே ?

என் முதுகோடு ஒட்டிக் கொண்டிருந்தாய் நீ தம்பி
முதல் வீட்டில்
இருட்டு நிரம்பிய இறவாணத்தில் பேயைத் தேடினோம்

**************

4. ராமாயணம்

இலங்கைக்கு வர இருக்கிறான் ராமன்
தாயே
அச்சம் கொள்ள வேண்டாம்

அப்படியென்றால் சொல் தோழி
என் ராமன் அங்கே நலமா ?

வானரர்கள் கட்டியிருக்கிறார்கள் பாலம்
இங்கே, ராட்சசர்கள் கண்கள் சிவப்பேறிவிட்டன

ஒவ்வொரு அடிக்கும் ஒற்றம் கூட்டம்
சேகரித்த செய்தியைச் சொல்ல வருகிறார்கள்

அப்படியென்றால் சொல் தோழி
என் ராமன் அங்கே நலமா ?

இதோ, நடக்க இருக்கிறது போர்
சீதாராமனுக்கே வெற்றி நிச்சயம்

அயோத்தி அரசபாரம்
ராமனுக்கே
இனி, அதிக நேரமில்லை

அப்படியென்றால் சொல் தோழி
அப்போதாவது நலமாயிருப்பேனா நான் ?

என்னால் சொல்ல இயலாது சீதை
தாயே
என்னால் சொல்ல இயலாது.

***********

5. புலிக்கு ஒரு பெயர்.

தட்டில் இறைச்சி வைக்கிற
சிறுவனைத் தடுத்தது ஒரு நாள்
சர்க்கஸ் புலி

சிறுவனே
உன் முதலாளியிடம் சொல்
எனக்கு ஒரு பெயர் வேண்டும்

சின்னதோ பெரியதோ
கேட்டதும் நினைவுக்கு வர வேண்டும்
புலியின் ரெளத்திரத் தாண்டவம்
அதன் உறுமல்கள்
அதன் சிவப்பு மீசைகள்
பசி மின்னும் வெறி
கண்ணெதிரில் வரவேண்டும்

அப்படிப்பட்ட பெயரை வை
அல்லது
என்னை விடுதலை செய்துவிடு

இவ்வளவும் சொன்ன புலி
இன்று வரைக்கும் கூட
கூண்டுக்குள்ளே
குறுக்கும் நெடுக்கும் அலைகிறது

யார் வந்தாலும் சரி
அழகான
மிருதுவான
பெயர்களை வைத்தால்
காட்டு முயல்களின் காதைக் கடிப்பது போல்
அந்தப் பெயர்களைக் கடித்துத் தின்றுவிடுவேன்
என்ற அது ஆர்ப்பரித்தது

அதனிடம் புதுப்புது பெயர்களை
முன்வைத்து முன்வைத்து சலித்துவிட்டது
அதை இப்பொது வெளியே விட்டால்
நம் சொற்களையும் மொழியையும்
மொழியின் அகராதியையும்
ஒரே மூச்சில் தின்றுவிடக் கூடும்

அதற்காக
கூண்டுக்கு மேலே ஒரு கூண்டு
பாதுகாப்பான பூட்டால் பூட்டி
சர்க்கஸ் குழு மொத்தம்
தள்ளி நின்று பார்க்கிறது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்