சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

பாவண்ணன்ஒரு மொழியின் இலக்கிய வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு கடுமையான உழைப்பும் சார்பற்ற மனநிலையும் தேவைப்படுகின்றன. உழைப்பின் அளவில் குறை நேரும்போது போதுமான ஆதாரங்களுடன் ஒன்றை முன்வைக்கமுடியாத தடுமாற்றம் நேரும். சார்பற்றுப் பார்க்க முடியாதபோது, சொந்த விருப்புவெறுப்புகளின் அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடநேர்ந்துவிடும். தமிழ் இலக்கிய வரலாற்றைத் தொகுப்பை உருவாக்கியவர்கள் நடுநிலையில் நின்று தகவல்களைப் பதிவுசெய்யவில்லை என்னும் மனக்குமுறலை அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு நூலில் முன்வைக்கிறார் முனைவர் சு.வேங்கடராமன். இலக்கிய வரலாறு எழுதிய பலரும் சைவச்சார்பாளர்களாக இருந்ததால் அதற்கு மாற்றுப் பார்வையைக் கொண்ட இலக்கியங்களைப்பற்றிய பதிவுகளை எழுதாமலேயே தவிர்த்துவிட்டனர் என்று குறைபட்டுக்கொள்கிறார். அதற்கு அவர் முன்வைக்கும் சான்றுகளின் பட்டியல் மிகநீண்டது. குறிப்பாக, ஆசார்ய இருதயம், ஸ்ரீவசனபூஷணம், கோயில் ஒழுகு பாகவதம் போன்ற வைணவநூல்களையும் அத்வைத வேதாந்த இலக்கியங்களான பட்டனாரின் பகவத் கீதை, தத்துவராயரின் நூல்கள், தாண்டவராயரின் கைவல்ய நவநீதம் போன்ற நூல்களையும் சமண நூல்களான தீபங்குடி பத்து, மேரு மந்திர புராணம் போன்ற நூல்களையும் முன்வைக்கிறார் சு.வே. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தை மட்டும் குறிப்பிடுபவர்கள் அதற்கும் நானூறு ஆண்டுகளுக்கும் முன்னால் வந்த வேப்பத்தூரார் எனப்படும் பெரும்பற்றப் புலியூர் நம்பி பாடிய திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத்தைப்பற்றி மௌனம் காத்துவிட்டனர் என்றும் கவமணி தேசிய விநாயகம் பிள்ளையின் “ஆசிய ஜோதி”யைப்பற்றி பதிவு செய்தவர்கள் அது வெளிவருவதற்கு முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பே அ.மாதவையா எழுதிய “ஆசிய சோதி” நூலைப்பற்றி எக்குறிப்பையும் தரவில்லை என்றும் ஆதங்கத்தை முன்வைக்கிறார். இப்படி இக்கட்டுரைநூல் முழுதும் சு.வே.யின் மனஆதங்கம் நிறைந்துள்ளது.

முறையாக பதிவு செய்யப்படாத அல்லது விரிவான அளவில் முக்கியத்துவமளித்து முன்வைக்கப்படாத பழைய படைப்புகளில் பிரதானமான எட்டு நூல்களைப்பற்றி எட்டுக் கட்டுரைகளை இத்தொகுதியில் எழுதியிருக்கிறார் சு.வே. ஒவ்வொரு கட்டுரையும் இரண்டு பகுதியாக பிரிந்துள்ளது. முதல் பகுதி, படைப்புகளையும் படைப்புகளுக்குப் பின்னால் உள்ள வரலாற்றுத் தகவல்களையும் இணைத்து படைப்புகளின் முக்கியத்துவத்தை வாசகர்கள் உணரும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதி, சமூகஅளவிலும் இலக்கிய அளவிலும் முக்கியத்துவம் இருந்தும்கூட, இவை இலக்கிய வரலாற்றாசிரியர்களாலும் சமூக வரலாற்றாசிரியர்களாலும் ஏன் போதிய அழுத்தத்துடன் முன்வைக்கப்படவில்லை என்னும் கேள்வியை எழுப்புகிறது.

பாய்ச்சலூர்ப் பதிகம் என்னும் 11 பாடல்களைக் கொண்ட ஒரு சின்ன நூலைப்பற்றிய கட்டுரை இப்புத்தகத்தின் முக்கியமான பகுதியாகும். உத்தரநல்லூர்நங்கை என்னும் பெண்கவிஞரால் 15ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது இப்பதிகம். இப்பதிகத்தின் பாடல்கள் பாய்ச்சலூர் கிராமத்தில் உள்ள உயர்சாதிக் காரர்களின் சாதிமேலாதிக்கத்தை எதிர்த்துக் குரல்கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

ஊருடன் பார்ப்பார் கூடி
உயர்ந்ததோர் சாலை கட்டி
நீரிலே மூழ்கி வந்து
நெருப்பினில் நெய்யைத் தூவி
கார்வயல் தவளைபோல
கலங்கிய உங்கள் வேதம்
பாரைவிட்டு அகன்றதேனோ?
பாய்ச்சலூர் கிராமத்தாரே

பதில்சொல்ல வற்புறுத்தவில்லை இக்குரல் என்பது கவனிக்கத்தக்க அம்சம். எந்தவிதமான நெருக்கடிக்கும்கூட மற்றவர்களை ஆளாக்கவில்லை. மாறாக, கூர்மையான குரலில் அந்தக் கேள்வியை முன்வைத்துவிட்டு, அதற்குரிய விடையை தனக்குத்தானே யோசிக்கும்படி தூண்டுகிறது. வேதங்களைப்பற்றியும் அதற்கு இணையான மேலான விஷயங்களைப்பற்றியும் யோசிக்கிறவர்கள் இந்தக் கேள்வியையொட்டியும் சிறிதுநேரம் செலவிட்டு யோசித்து விடைகாணவேண்டும் என்கிற விழைவை முன்வைக்கிறது. சாரத்தைத் துறந்து சடங்குகளில் ஆழ்ந்துபோனதன் விளைவை அப்போதாவது பாய்ச்சலூர்க்காரர்கள் உய்த்துணர்வார்கள் என்ற எண்ணம் நங்கைக்கு இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இக்கட்டுரையில் நான்கு பாடல்களை சு.வே. பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு நன்முத்து.

சந்தனம் அகிலும் வேம்பும்
தனித்தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால்
அதன் மணம் வேறதாமோ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால்
தீமணம் வேறதாமோ?
பந்தமும் தீயும் வேறோ
பாய்ச்சலூர் கிராமத்தாரே

என்பது நங்கையின் இன்னொரு பாடல். வாழ்வின் எதார்த்தத்திலிருந்தே எடுக்கப்பட்ட எடுத்துக்காட்டை முன்வைத்து நெஞ்சில் தைக்குமாறு கேட்ட கேள்வி பல நூற்றாண்டுகள் கடந்த நிலையிலும் விடைகாணாத ஒன்றாகவே உள்ளது. ஆண்டாளின் பாடலையும் காரைக்கால் அம்மையாரின் பாடலையும் பாடிப்பழகுகிறவர்கள் நங்கையின் பாடலை ஏன் ஒதுக்கினார்கள் என்பது புதிரான கேள்வி.

கபிலர் அகவல், சித்தர் பாடல்கள் போன்றவையும் சாதிவேறுபாடு பார்க்கும் மேற்சாதி ஆதிக்க மனநிலைக்கு எதிராக எழுந்த குரல்களே. இவ்வரிசையிலிருந்து பாய்ச்சலு\ர் பதிகம் இரண்டு விதங்களில் வேறுபடுகிறது. ஒருபக்கம், எளிய பேச்சுமொழிக்கு நெருக்கமான கவிச்சொற்களைக் கொண்டு சாதிப் பெருமையின் பொருளின்மையை உணர்த்துகிறது. இரண்டாவதாக, இக்குரலுக்கு உரியவர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். சாதி முறையை எதிர்த்து கடுமையான பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய தமிழ்ச்சூழலில் இந்தப் பாடல்களை தீவிரமான அளவில் பயன்படுத்தியிருக்கமுடியும். ஒவ்வொருவருடைய மனத்திலும் பாடமாகப் பதிந்திருக்கவேண்டிய பாடல்களே இவை. அத்தகுதி இப்பாடல்களுக்கு உண்டு. ஆனால் இவை குறைந்தபட்சநிலையில்கூட இவை பொருட்படுத்தப்படவில்லை என்பது துயரமளிக்கிறது.

செங்கோட்டை ஆவுடைஅக்காள் பாடல்களைப்பற்றிய குறிப்புகள் நூலின் மற்றொரு முக்கியமான பகுதி. செங்கோட்டையில் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவுடை அக்கா. குழந்தைத் திருமணம், பூப்படைவதற்கு முன்னரே கணவனின் மரணம், பூப்படைந்தபிறகு கட்டாயமாகத் திணிக்கப்பட்ட விதவைக்கோலம் என எல்லாவித சிரமங்களுக்கும் ஆளானவள் அக்கா. தன் நிலையை எண்ணி வருந்தியவளுக்கு திருவிசைநல்லு\ர் வெங்கடேச ஸ்ரீதர ஐயர் என்ற அத்வைத ஞானி ஆறுதல் கூறி உபதேசம் செய்தருளினார். ஆவுடை அக்காளும் மிகவிரைவில் நிர்விகல்ப சமாதி கிட்டும் சுவானுபூதிநிலை கைவரப் பெற்றார். மிகவும் குறைந்த அளவில் கல்வியறிவு உள்ளவர்களுக்கும் சென்று சேருமாறு பேச்சுத்தமிழில் தம் ஞானத்தையும் அனுபவங்களையும் இசைப்பாடல்களாகப் பாடி அருளியிருக்கிறார். ஆடிமாதம் அமாவாசை அன்று குற்றாலமலையின் மேலேறி தியானம் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

அக்காவின் பாடல்வரிகள் பல சமயங்களில் சாட்டையைப்போல சொடுக்குகின்றன. பல சமயங்களில் முரசமாக அதிர்கிறது. பல சமயங்களில் நீரோடையைப்போல ஒரே சீராகப் பாய்ந்து பரவுகிறது. “தான் பிறர் என்ற தாழ்ச்சி உயர்ச்சியும் போச்சே, ஆண்என்றும் பெண்ணென்றும் அலைந்து திரிந்ததும் போச்சே” என்றும் “கோத்திரங்கள் கப்பித குணங்கள் குடியும் போச்சே, குணாதீதமான பரபிரும்மம் நானென்பதாச்சே” என்றும் “குறத்தி தொட்ட தீட்டுடனே குளித்துவிட்டால் போமோ குடிகொண்ட உன்தீட்டு கூடுவிட்டுப்போமோ?” என்றும் ‘தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல்முழுகி ஆசாரமாச்சுதென்று ஐந்தாம்நாள் முழுகி அகத்திலுள்ள பொருள்தொடுவாய் அகத்தீட்டு போச்சோ” என்றும் பல இடங்களில் சு.வே எடுத்துக்காட்டியிருக்கும் வரிகளில் தென்படும் மனஎழுச்சி ஆர்வமூட்டும் அம்சமாக உள்ளது. அக்காவின் பாடல்களின் உள்ளடக்க அம்சம் பலவித பரிமாணங்களைக் கொண்டதாக உள்ளது. சிவன், திருமால் இரண்டும் ஒன்று என்கிற பார்வைவழியாக பரப்பிரும்மமும் உயிரும் ஒன்று என்கிற பார்வையையும் சாதிவேறுபாடற்ற அனைவரும் ஒன்றே என்னும் பார்வையையும் வந்தடைகிறார் அக்கா. எல்லாவற்றுக்கும் மேலாக அக்காவின் பாடல்களில் பெண்ணை அடக்கி, அடிமைப்படுத்த அவள் தீட்டு உடையவள் என்று ஆண்கள் உருவாக்கிய ஆதிக்க மரபை எதிர்த்துக் குரலெழுப்புவதையும் காணமுடிகிறது.
அக்காவைப்பற்றிய கட்டுரையில் இடம்பெறும் முக்கியமான இன்னொரு குறிப்பு பாரதியாரைப்பற்றியது. அக்காவின் வேதாந்தப் பாடல்களின் செல்வாக்கு பாரதியாரிடம் கணிசமான அளவில் காணப்படுகின்றன என்றும் அக்காவைப்பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும் பாரதியார் அவரைப்பற்றி ஒரு குறிப்பைக்கூட எழுதவில்லை என்றும் சொல்கிறார் சு.வே.

தொகுப்பின் மற்றொரு கட்டுரை பட்டனாரின் பகவத்கீதையைப்பற்றியது. இது சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் நேரிடையாக மொழிபெயர்க்கப்பட்டது. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேமநகர் ஆயனார் பட்டனார் என்ற புலவர் ஆசிரிய விருத்தப்பா வடிவில் இந்த மொழிபெயர்ப்பை உருவாக்கியிருக்கிறார். 545 பாடல்களைக் கொண்ட இந்தத் தொகுதி பரமார்த்த தரிசனம் என்ற தலைப்பில் முதலில் வெளிவந்துள்ளது. பட்டனாரின் பாடல்வரிகளை பல இடங்களில் மேற்கோள்களாகக் காட்டி, அவற்றில் இயைந்துள்ள தேவார வரிகளையும் சங்கரர் கருத்துகளையும் இணைத்துக்காட்டி முன்னகரும் கட்டுரை பட்டனாரின் பாடல் தொகுதியைத் தேடியெடுத்துப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பட்டனாரின் பார்வையை வரையறுத்துக் காட்டுவதற்காக, கட்டுரையின் தொடக்கத்தில் தமிழ் அத்வைதமரபைப்பற்றியும் அக்கோட்பாடு இந்தியச் சிந்தனைமரபில் வைதிய சமயத்துவ மரபில் பெரிதும் பேசப்பட்ட விதங்களைப்பற்றி சுருக்கமான அறிமுகத்தையும் கொடுக்கிறார் சு.வே.

பட்டனாரின் பகவத்கீதையைத் தொடர்ந்து 14 ஆம் நூற்றாண்டில் வாதிகேசரி அழகிய மணவாளச் சீயர் வைணவபரமாக, இராமானுஜரின் வசிஷ்டாத்வைதக் கோட்பாட்டு விளக்கமாக வெண்பாவடிவில் 18 அத்தியாயத்தில் 723 பாடல்கள் பாடினார். துறவியாக வாழ்ந்த இவர் திருவரங்கத்தில் வைணவ உரைப்பெருவேந்தரான பெரியவாச்சான் பிள்ளையின் மாணவராக இருந்தார். முதலில் அவர் சமைஉல்காரராக இருந்து தம் 39வது வயதில் அவரிடம் எழுத்துப்பயிற்சிமுதல் தொடங்கி, தமிழ், சமஸ்கிருதம் என இரண்fடையும் கற்றுத்தேர்ந்fது, பாடல்கள் இயற்றும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொண்டார். திருவாய்மொழிக்கு இவர் எழுதிய பன்னீராயிரப்படி என்னும் உரையையும் எழுதியிருக்கிறார். இந்த உரைக்குக் கிடைத்த பேரும் புகழும் இவருடைய கீதை நூலுக்குக் கிடைக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. பிற வைணவ ஆசிரியர்களும் சீயருக்குப் பின்வந்த உரையாசிரியர்களும் பன்னீராயிரத்தைப்பற்றி மட்டுமே குறிப்பு எழுதியுள்ளார்களே தவிர, இந்த கீதை வெண்பாவைப்பற்றி எவ்விதமான குறிப்பையும் வழங்கவில்லை. இதிலிருந்து ஒரேஒரு வரியைக்கூட மேற்கோளாக எடுத்துக் காட்டவில்லை. சு.வே.யின் இக்குறிப்பு நம் மனத்தை மறைந்திருந்து இயக்கும் சார்புநிலைகளின் தீவிரத்தை அறிந்துகொள்ள துணைசெய்கிறது.

பதினைந்தாவது நூற்றாண்டில் இயற்றப்பட்ட தத்துவராயரின் பாடுதுறை பற்றிய கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 138 தலைப்புகளில் 1140 பாடல்கள் கொண்டுள்ளது பாடுதுறை. இப்பாடல்களில் தமிழ்ப் பக்தியிலக்கிய வகைகளில் பாடப்பட்டுள்ளன. முன்செய்த தவத்திலே முயன்ற அப்பெருமையில் பின்சாதி கழிந்தேமென்று உந்தீபற பிரமமே யானோம் என்று உந்தீபற என்ற பாடல் வரிகள் முக்கியமானவை. சாதி வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்று என உணர்வதே அத்வைதம் என்று பொருள்படும் விதத்தில் அத்வைதத்துக்கு ஒரு புதிய பொருளை வழங்குகிறார். பக்தி இலக்கிய காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் மக்களின் வாய்மொழி இலக்கியவகைகளின் வடிவங்ளைப் பயன்படுத்தி சமயக்கருத்துகளைப் பாடியதுபோல தத்துவராயரும் தம் நூலில் முயற்சிசெய்திருக்கிறார்.

“சாதிஒழிந்ததென்று ஊதேடா காளம் சங்கை தளர்ந்ததென்று ஊதேடா காளம் சோதி சுகமேயென்று ஊதேடா காளம்” என்றும் “சாதி குலப் பேதமற சங்கையறத் தௌiந்து சத்தான உபதேசம் தந்தாய் ஆர் பறையா நீதியினால் உணர்வேயாய் நித்த சுத்தமாகிய நின்மலனாம் அப்பனென்று அறியாயோ பறைச்சி” என்ற பாடலைப் படித்ததுமே “பறையனும் பறைச்சியும்” என்னும் பெயரிலமைந்த பகுதியைத் தேடியெடுத்து பார்க்கும் ஆர்வத்தைக் கொடுக்கின்றன.

“பார்ப்பானும் பறைச்சியும்” என்றொரு பிரபந்தம் பாடுதுறையில் உள்ளதாகக் குறிப்பெழுதுகிறார் சு.வே. தள்ளிப்போ, தூரப்போ, ஒதுங்கிப்போ என்று தன்னைப் பார்த்துச் சொல்லக்கூடிய பார்ப்பனன் ஒருவனைப் பார்த்து பறைக்குலப் பெண்ணொருத்தி முன்வைக்கிற கேள்விகள் இப்பகுதியில் உள்ளன. “இறைச்சி எலும்பு தோலன்றி எனக்கும் உனக்கும் வேறுண்டோ பாறச்சி போவென் னான்டாய் பார்ப்பான் பண்டே நீ பேய்கொண்டாயதே” என உரையாடல்வடிவில் அமைந்த வரிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைப்பதை உணரமுடிகிறது.
தொகுப்பை வாசித்து முடித்ததும் ஒருவித வருத்தமும் சோர்வும் மனத்தில் கவிவதைத் தவிர்க்கமுடியவில்லை. வருத்தத்துக்கும் சோர்வுக்கும் காரணம் மானுட மனத்தில் மறைந்தியங்கும் சார்புநிலைப் பார்வை. இவை இரண்டுவிதமான இழப்புகளை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஏதோ பாடல்களை இயற்றியவர்கள் என்கிற மேலோட்டமான குறிப்புகளைமட்டுமே கொடுத்ததன்வழியாக அவர்களுடைய பாடல்கள்மீது விழவேண்டிய பேதுமான கவனம் விழாமல் போய்விட்டது. இரண்டாவதாக, நல்ல ஆயுதங்களாகப் பயன்படுத்தத்தக்க பாடல்கள் எங்கோ மூலையில் வீசியெறியப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட இதே விதமான கருத்துகளை முன்வைக்கக்கூடிய அக்கமகாதேவிக்கு கன்னட இலக்கிய உலகில் இருக்கிற பேரையும் பெருமையையும் நியாயமாக நம் தமிழ்ச்சமூகம் இப்பெண்களுக்கும் வழங்கியிருக்கவேண்டும். நம் சார்புநிலையே அதைத் தடுத்துவிட்டது.

( அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு. முனைவர். சு.வேங்கடராமன். கட்டுரைத்தொகுதி. மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலித் தெரு, மதுரை-1. விலை.ரூ 55)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்