சராசரிகள் , சமைந்தவன் , சிக்கி முக்கிக் கல்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

தாஜ்


சராசரிகள்
———–
ரொம்ப நாளைக்கு முன்னமே
கடவுள் எங்களுக்கு
கனத்த தொகுப்பில்
தகவல் செய்திருந்தார்
என் மொழியில்
ஷேம நல விசாரிப்பில்லை.
அச்சமூட்டி எச்சரிக்கைகள்
பக்கம் பக்கமாய்
துணுக்குற்ற
எங்களில் பலரும் அதை
பாதுகாப்பாய்
உயர ஸ்தலத்தில்
வைத்து
விட்டோம்

சமைந்தவன்
————
கோரைப் பற்களிடையே
இறந்த காலத்தின் மொழியில்
அவன் பேசுகிறபோது
எதிர் நிற்பவர்மீது
உமிழ்நீர் தெறிக்கும்
வாடையோ வீச்சம் தரும்

நேற்றை
நாளைக்குள் நுழைக்க
வாழ்வின் விஸ்தீரணத்தை
கர்ணக் கட்டுக்குள்
திணிப்பான்
மனிதர்களுக்கெல்லாம்
வர்ணம் பூசி
நிற நிறமாய் காண்பான்
இசை நயம் தவிர்த்து
ராக ஆலாபனையும் விடுத்து
பல்லவி மட்டுமே பாடுவான்
பாவம் அவன்
சக மனிதன் என்ற
என் ஸ்நேகிதன்

சிக்கி முக்கிக் கல்
——————–
நம் மூதாதையர்கள்
சிக்கி முக்கிக் கல்லை
கண்டு கொண்டபோது
தெறித்த கனலைப்
பற்ற வைத்து
தொடங்கினர்
பயன்படுத்த

இருட்டிலிருந்து
தங்கள் முகங்களை
ஒருவருக்கொருவர்
தலைப்பட்டனர்
அறிந்துணர
சிறைப்படுத்தியிருந்த
காடுகளைக் கொளுத்தி
விஷமிகளையும் விரட்டினர்
இரத்தத்தை உறிஞ்சிய
அட்டைகளையும்கூட
பொசுக்கி அகற்றியே
பாதை பார்த்து
அடியெடுத்து
பொந்துகளை விட்டும்
சமதளத்திற்கு வந்தனர்
காலங்களில் தீயின்
பாதுகாப்பு
வளையத்திற்குள்
செரிக்க உண்ணவும்
உரக்க உறங்கவும்
நிம்மதி கொண்டனர்

கற்கால மனிதர்களின்
நசிவையும் சிதைவையும்
ஆய்வு செய்யும்
தோழர் வீட்டில்
சிக்கி முக்கிக் கல்லொன்று
பார்க்கக் கிடைத்தது
அடர்ந்த வெண்தாடியோடு
முதியவர் ஒருவரின்
கனல் முழங்கும்
சித்திரக் காலடியில்
நமது நாகரீகம்
நெருப்பில் தொடங்கியது
என்ற குறிப்புடன்

***

அச்சிலிருக்கும் ‘அபாயம் ‘ தொகுப்பிலிருந்து..

tajwhite@rediffmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்