சத்தியின் கவிக்கட்டு 3

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

சத்தி சக்திதாசன்


புதுமையான வரவேற்பு

இது என்னடா ஒரு புதுமையான வரவேற்பு !

வானத்தைக் கிழித்துக் கொண்டு
சூரியன் எழுவதும்
மேகத்தை எரித்துக்கொண்டே
கதிர்களை எறிவதும்
புத்தாண்டுக்கொரு
புது வரவேற்போ ?

மனங்களில் இருளும்
மடிகளில் கனமும்
மனிதர்க்கு அழகாமோ ?

நடந்து கொண்டே நான் விடுத்த கேள்விகளுக்கு
நயமான பதில் கிடைக்குமா இந்த
நற்தமிழர் புத்தாண்டில் ?

முகவரிகள் இழந்து கொண்டும்
முகத்தையே மூடிக்கொள்ளும்
முடிவற்ற தெளிவற்ற தீர்க்கங்கள்

வண்டி நிறைய அரிசி மூட்டைகளை
வைக்க இடமன்றி
வாசலிலே நிறுத்தியுள்ள
வளம் பெற்ற கனவான்கள்

அதே தெருவின் மறுமுனையில்
பசிக்களைப்பில் தவித்திருக்கும்
உயிர்க் களைப்பைப் போக்குவதற்கு
சிசு வாயில் சொட்டுச் சொட்டாய்
சாக்கடை தண்ணீரை சொட்டும் தாயின்
கண்ணீரில் கூட உப்பில்லா நிலமையன்றோ !

புத்தாண்டே வருக வருகவே ! இது புதுமையான வரவேற்பே !

வறுமை நிலையகற்ற நாம்
தெரிவு செய்யும் தலைவர்களின் பெயரை
நிர்ணயிப்பது பச்சை நோட்டின்
அளவுகளே !

பயங்கர ஆயுதங்களைக் களைகின்றோமென
பசப்பிக் கொண்டே
பலமான ஆயுதங்களின் துணை கொண்டு
பலமக்கள் உயிர் குடிக்கும்
ஜனநாயகப் போர்கள்

புத்தண்டே உனது வரவு நல்வரவாகட்டும்.

நாகரீக மக்கள் நிறைந்த உலகில்
நாகரீகத்திற்கென புது
நாகரீக வரைவிலக்கணங்கள் சரித்திரத்தில்
நாகரீகத்தின் பெயரால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன

எழுவதை கொஞ்சம் நிறுத்திவிட்டு
வானத்தை அண்ணாந்து பார்க்கின்றேன்

விலகவில்லையே கருமேகங்கள் ! தெளியவில்லையே கலங்கிய குட்டைகள் !

புத்தாண்டே இது ஒரு நல்ல வரவேற்புத்தான் !

இன்று எம் மக்களிடம் நீ ஒரே ஒரு
நிபந்தனை போட்டு விடு
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின்
முன் தோன்றிய இனம் நீங்களென்றால்
இன்றிலிருந்து மனித
மனத்திற்கு முதலிடம் கொடுங்கள் இல்லையேல்
அடுத்த புத்தாண்டு உங்கள் முன்
பொய்த்துப் போய்விடும் என்றே !

0000

நிஜமில்லாத இன்று

நிஜமில்லாத இன்றைத் தேடும் நிழலில்லா உருவங்கள்
நிச்சயமற்ற உலகத்தில் நீர் ஏன் நிம்மதியைத் தொலத்தீர்

வகையற்ற வழிமுறைகள் பொய்த்துப்போன வாதங்கள் உம்
வாழ்க்கைமுறைகளை தத்தளிக்க வைக்குமொரு நிலையன்றோ

திசையற்ற பறவைகள் போல் போகும் வழி மறந்து மாக்கள்
தீர்க்கதரிசனமற்றதொரு பிரயாணம் புவியில் நன்றாமோ ?

பசையற்ற கோந்துபோல் ஏனிங்கு நிஜமற்றுப்போய் யாபேரும்
பந்தங்கள் கழன்றதொரு சொந்தங்களில் சிக்குண்டோம் ?

வரவற்ற செலவுகள் எமைச் சுற்றி வலைபோல் பின்னியிங்கு
விடையற்ற கேள்விகள் போல் குழப்பதில் குழுமிவிட்டோம்.

தெளிவற்ற ஞானங்களால் உறைபோட்ட மனங்களிங்கு
தொலைத்து விட்டனவே நிஜத்தை மாயையில்

வேற்றுமையற்ற சமுதாயத்தில் இனியேனும் துணிவாக
வேண்டுவோம் நிஜமான நாளைகளை.

—-
sathnel.sakthithasan@bt.com

Series Navigation