சட்ட பூர்வமான வரதட்சணை! வரதட்சணைத் தொகைப் பதிவு! முதலிரவு முன் ஒப்பந்தம்! பெண்வீட்டார் மனமுவந்து ஒப்புக் கொள்ளும் இவற்றை முதலில்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

சி. ஜெயபாரதன், கனடா.


அநாகரீக வரதட்சணை ஏற்பாடை வரவேற்று, அதை அரசியல் சட்டம் மூலம் நிலைநாட்ட ஊக்குவிக்கும் பிற்போக்கு முற்போக்குவாதிகள், இந்த 21 ஆம் நூற்றாண்டில் முளைத்திருப்பது விந்தையாக இருக்கிறது! திருமணத்துக்கு முன்பு பெண்வீட்டார் எழுதிய ‘முதலிரவு முன் ஒப்பந்தம் ‘ [Pre-nuptial Agreement] உடன்பாட்டில் கையெழுத்திட்டு அவளை மணந்து கொள்ள எத்தனை ஆடவர் தயாராக உள்ளார்கள் ? அறிவுள்ள மாப்பிள்ளை ஒத்துக் கொண்டாலும், எத்தனை பெற்றோர் பெண்வீட்டாரின் வரதட்சணைப் பதிவுப் பத்திரத்திற்கு உடன்பட்டுப் பெண்ணெடுக்க முன் வருவார்கள் ? ஆனந்த சாகரத்தில் நிகழ வேண்டிய திருமண விழா, ஆரம்பம் முதல் வழக்கறிஞர்களின் திருவிளையாட்டு கும்ப மேளாவாகக் கூத்தாடும்!

வரதட்சணை என்று யாம் இங்கு குறிப்பிடுவது மாப்பிள்ளை வீட்டார், பெண்வீட்டார் குடலைப் பிடுங்கி [Exploitation of the Brides] வற்புறுத்தி வாங்கும் லஞ்சம்! மணப்பெண்ணின் பெற்றோர் வீட்டை அடகு வைத்தோ, நிலத்தை விற்றோ, கடன் வாங்கியோ ஏதோ ஒரு வழியில் நிதி பெற்று, மன வேதனையோடு கொடுப்பது வரதட்சணை! மனமுவந்து தகுதிக்கு ஏற்றால்போல் பெற்றோர் மணப் பெண்ணுக்குத் தரும் பொன்னோ, பொருளோ அது அவளது கட்டுப்பாடுக்கு உட்பட்ட உரிமைச் சொத்து! வற்புறுத்திப் பெறும் ஒரு வரதட்சணை கழுதையைப் போன்றது! பெண்ணுக்குத் தரும் அவளது உரிமைச் சொத்து ஒரு குதிரையைப் போன்றது! கழுதையும், குதிரையும் ஒன்றாகத் தோன்றினாலும், இரண்டும் ஒன்றா ? இரண்டும் ஒன்றுதான் என்று நிரூபித்துக் காட்ட முற்படும் ஆறறைவு மனிதரை எந்த இனத்தில் சேர்ப்பது ?

வரதட்சணை என்று யாம் கூறுவது மாப்பிள்ளை வீட்டார் மடியில் கொட்டுவது! அத்தொகையை அவர்கள் எப்படி வேண்மானாலும் செலவழிக்கலாம்! மாப்பிள்ளையின் தாய், தமக்கையாருக்குத் தங்க நகையோ, பட்டுப் புடவையோ எது வேண்டுமானாலும் அப்பணத்தில் வாங்கிக் கொள்ளலாம்! பெண்ணுக்கு அப்பணத்தில் ஓரளவு பங்கு கிடைக்கலாம்! அல்லது கிடைக்காமலே போகலாம்! பிறருக்குச் செலவுகள் அந்தப் பணத்தில் ஏன் செய்யப் பட்டன என்று கேட்க பெண்ணுக்கோ, அவளது பெற்றோருக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. இந்த வரதட்சணையைக் கழுதையைச் சட்ட பூர்வமாக மனிதர் தழுவிக் கொள்ள வேண்டுமா ?

மணப்பெண்ணுக்குப் பெற்றோர் தரும் உரிமைச் சொத்தான பொன்னும், பொருளும் அவளுடைய கட்டுப்பாடில் இருக்க வேண்டும்! அவளுடைய கட்டுப்பாடில் இல்லாத பொன்னும் பொருளும், மாப்பிள்ளை வீட்டார் வாயில் போடும் வரதட்சணை நிரலில் சேர்பவை, என்பது என் கருத்து! வரதட்சணை என்பது மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தி நிர்ணயம் செய்வது! பெண்வீட்டார் அதை ஒப்புக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். பெண் வீட்டார் மனமுவந்து தரும் பெண்ணுக்குச் சேர வேண்டிய உரிமைச் சொத்தை, வரதட்சணை என்று நான் கூற விரும்பவில்லை! மாப்பிள்ளை வீட்டார் அதை ஒப்புக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். நிராகரித்து மாப்பிள்ளை வீட்டார் மேற்கொண்டு வற்புறுத்திப் பிடுங்கி, அவர்கள் விருப்பம்போல் செலவழிக்கும் போது அப்பொன்னும் பொருளும் ‘வரதட்சணை ‘ என்ற பெயரைப் பெறுகிறது.

‘பெரும்பாலும் சண்டை, சொன்னபடி வரதட்சணை கொடுக்காமல், பெண்வீட்டு ஆண்கள் ஏமாற்றும் போதுதான் வருகிறது ‘ – இது சமூக ஞானிகளின் நியாயமான சப்பைக்கட்டு! மணப்பெண்ணைப் பிடித்திருந்தால், அவளது பெற்றோர் மனமுவந்து செய்வதை, மாப்பிள்ளை வீட்டார் ஏற்றுக் கொள்வது நாகரீகச் செயல்! சில சிக்கல்கள் ஏற்பட்டுப் பெண்வீட்டார் மனமுவந்து செய்வதில் கூடச் சற்று குறைந்து போனால், அதற்காகச் சண்டைக்குப் போவது அற்பத்தனம், அநாகரீகம்! திருமணம் நடத்தி முடிப்பதில் பல பிரச்சனைகள் எதிர்பாராமல் எழுவதால், மனமுவந்து பொன்னும் பொருளும் கொடுப்பதில் கூடச் சில சமயங்களில் சிரமங்கள் ஏற்படுகின்றன. உணர்ச்சி மிக்க இக்காரியங்களை, பெண்வீட்டார் ஒருதாளில் எழுதிக் கொடுத்து இரு தரப்பினரும் உடன்பட்டுக் கையொப்பம் இடுவது, திருமணத்துக்கு முன் ‘முதலிரவு முன்னொப்பந்தம் ‘ [Pre-nuptial Agreement] செய்வ தெல்லாம் இமயத்தின் சிகரத்தை அடைய ஏறி இறங்கும் முயற்சிகளைப் போன்றவை!

‘குடும்பச் சொத்து மீது ஆண்களுக்கு இருக்கும் பாசம், ‘வரதட்சணை கேட்கிறான் ‘ என்று மாப்பிள்ளை வீட்டுக்காரனைத் திட்டும் வேஷத்தின் கீழ் இருக்கிறது. பெரும்பாலும் இப்படிப்பட்ட ஆண்களே எழுத்தாளர்களாகவும், மத்திய வர்க்கத்தின் ஒழுக்க நிலைபாடுகளை ஏற்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் ‘ – இது சமூக ஞானிகளின் ஞானக் கண்கள் கண்டு பிடித்தவை! மகாபாரத யுத்தத்தில் கீதா உபதேசம் செய்யும் கிருஷ்ண பரமாத்மாவின் வாய்மொழி போல் ஒலிக்கிறது, இவ்வாசகம்! இம்மாதிரிப் புள்ளி விபரம் தெரியாதப் போலி உபதேசம் செய்யும் சன்னியாசிகளுக்கு ஒன்று பெண் புதல்விகள் இல்லாமல் இருக்க வேண்டும்! அல்லது அக்காள், தங்கை இல்லாத ஆணாதிக்க வர்க்கத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்! பெண்களைப் பெற்றுத் திருமணம் அனுபவமற்ற ஆடவர் இனந்தான் வரதட்சணை வழக்கத்தை வழிபடும் அறிவாளிகளாக இருக்கிறார்கள்! மாப்பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சணை லஞ்சத்திற்கு வாயைப் பிளந்து கொண்டு, அதை ஒரு லாட்டரி அடிப்புப் பணமாக எதிர்ப்பார்த்து, பெண்வீட்டாரைப் பிடுங்கித் தின்னும் அரக்கர் பரம்பரைகள், இவர்கள்!

‘வரதட்சணையாகக் கொடுக்கும் பணம் சட்ட பூர்வகமாகப் பதியப் படவேண்டும்! வரதட்சணை சட்ட பூர்வகமாக இருந்தால், இரண்டு குடுப்பத்தாரும் ஒப்புக் கொண்ட தொகையிது என்று கையொப்ப மிட்டுப் பத்திரங்கள் தயார் செய்திருந்தால், நிஷாவின் திருமண நாளன்று அடாவடியாகப் மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த தொகையைக் கேட்டிருக்க முடியாது ‘ – இது சமூக ஞானிகளின் சப்பைக்கட்டு! அத்தனை நாகரீகம் உள்ள குடும்பமா, அந்த அரக்க வம்சம்! நிஷா ஷர்மா ‘வன்முறை வரதட்சணையை ‘ எதிர்த்துப் போராடுகிறார்! தந்தை அறை வாங்கி அவமானப்படும் போது வாயில்லாத, வலிமை இல்லாத அவளது சகோதரன் அருகில் சும்மா நிற்க, நெஞ்சழுத்தமுடன் போலீசுக்குப் போன் செய்தார், நிஷா ஷர்மா! பெண்டிர் வாயைப் பூட்டி, இரண்டாந்தர நிலையில் அவர்களைப் பின்தள்ளி வைக்கும் மூட ஆடவர்தான், நிஷா ஷர்மாவின் தீரச் செயலைக் கேலி செய்து அவரைப் பாராட்டுவதற்குத் தொடை நடுங்குவார்!

‘ஆணின் தேவை பெண்ணுக்கும், பெண்ணின் தேவை ஆணுக்கும் இருக்கின்றது ‘ – இது சமூக ஞானிகளின் வேதவாக்கு! பெண்ணுக்கு முதல் தேவை ஆண்! ஆனால் ஆணுக்கு முதல் தேவை பெண்ணன்று! பெண்ணின் சொத்து! பெண்ணின் செல்வத்தை முதலில் மடியில் கொட்டினால்தான், அவள் ஏற்றுக் கொள்ளப் படுவாள்! முதல் வகுப்பின மமதையும், மகா ஆற்றலும் கொண்ட ஆண்கள், இரண்டாம் வகுப்பினமாகக் கருதப்படும் பெண்களுக்குத் தேவையாக இருப்பதை ஆயுதமாகக் கொண்டு, ஆணாதிக்க வர்க்கம் திருமணச் சந்தையில் வரதட்சணைப் பந்தயப் போட்டியை எழுத்து வடிவில் இல்லாமல் நடத்தி வருகிறது! ஆணாதிக்கப் பரம்பரையா வரதட்சணைப் பதிவுத் தொகையை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போடப் போகிறது ? காதில் பூவைத்துக் கொள்ளும் பட்டிக் காட்டான் கூட இதைக் கேட்டுச் சிரிப்பான்!

இல்வாழ்க்கையில் ஆணைவிடப் பெண்ணுக்கே பொறுப்புக்கள் மிகையானவை! அத்துடன் வேலை பார்க்கும் பெண்ணுக்குப் பிள்ளைகளும் இருந்தால் வீட்டுச் சமையல், வீடு சுத்தம், பிள்ளைகள் பராமரிப்பு, கணவன் வழிபாடு உபசரிப்பு, வேலை நிர்ப்பந்தம் ஆகிய அத்தனையும் அவள் கடமையாகிறது! ஆண் பணம் சம்பாதிப்பதோடு, வெளி வினைகனைக் கவனித்துக் கொள்கிறான்.

‘அம்மா பிள்ளையான மாப்பிள்ளையின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் தற்கொலை முடிவிற்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு துளி கண்ணீர் விடலாம்! ஆனால் இந்தக் கண்ணீர் எதிர்காலத் தற்கொலைகளைத் தவிர்க்காது! வரதட்சணையைச் சட்ட பூர்வமாய் ஆக்கி யிருந்தால் இந்தத் தற்கொலையைப் பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்! ‘ – இது சமூக ஞானிகள் வாசகம்! இது முற்றிலும் மெய்யான வாசகம்! ஆம், ஐயமின்றி இம்முறை முற்றிலும் தற்கொலையைத் தவிர்க்கும்! இது எப்படிச் சாத்தியமாகும் ? வரதட்சணை சட்ட பூர்வமாகித் தொகையைப் பத்திரத்தில் எழுதிப் பதிவு செய்யப் போனால், பெண்களுக்கு திருமணமே நடக்கப் போவதில்லையே! தற்கொலையின் மூல காரணமே நிகழப் போவதில்லை! பெண்கள் கன்னியாகவே நீடித்த ஆயுளுடன் வாழப் போகிறார்கள்! மனிதாபிமானம் உள்ள சமூக ஞானி ஒரு சொட்டுக் கண்ணீர் ஒரு தற்கொலைக்கு விடுவதாகக் கூறுவது, நமது நெஞ்சைத் தொடுகிறது! அவர் கண்ணீரைச் சேர்த்து வைப்பது நல்லது; பின்னால் அடிக்கடித் தேவைப்படும்!

‘பரிசப்பண முறைகள் ‘ கி.மு. எந்த நூற்றாண்டில் இந்தியாவில் இருந்தது ? தமிழகத்தில் கொடை வள்ளல் பாரி மன்னன் ஆண்ட காலத்திலா ? அல்லது கண்ணகிக்கு அநீதி அளித்த பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலா ? நமது புதைந்து போன வரலாறுகளை இனிமேல் தோண்டி எடுத்துதான் ஆராய்ச்சியாளர்கள் அலசிக் கண்டெடுத்து டாக்டர் பட்டம் பெற வேண்டும்!

‘பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் இருக்கும் மதிப்பு, அவள் கொண்டு வரும் வரதட்சணையின் அடிப்படையில்தானே இருக்கும் ? அல்லது அவள் வேலை செய்து கொண்டுவரும் பணத்தின் அடிப்படையில்தானே இருக்கும் ? பெண்ணிடம் எந்த எதிர்பார்பையும் ஓர் ஆண் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் பெண்கள் ஓர் ஆணிடம் எல்லா எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளலாம் ‘ – இது சமூக ஞானிகளின் பொன்மொழி! இதன் உட்பொருள் என்ன வென்றால் பெண்ணின் மதிப்பு வெறும் நகை, நாணயம், ஃபிரிட்ஜ், கார், பாத்திரம், கொண்டுவரும் பணமுடிப்பு ஆகியவைதான்! வரும் போது வெறுங் கையாக வந்தால், புகுந்த வீட்டில் பெண்ணின் மதிப்புக் குன்றி அவளை ஏற்றுக் கொள்வது சிரமம்! வெளியே வேலை செய்து சம்பாதிக்கத் தகுதி இல்லாத ஏழைப் பெண்டிரை மதிக்க மாட்டார்கள்! அவர்களுக்குத் திருமணம் நடக்காது என்று சொல்லாமல் சொல்கிறார், சமூக ஞானி!

இந்த புரட்சிகரமான கருத்தை பாரத நாடு வரவேற்குமா என்பது ஐயப்பாடு உடையது! தற்போது ‘வரதட்சணைத் தவிர்ப்பு ‘ [Anti-Dowry] விதியைச் சட்ட உருவில் அரசாங்கம் கண்காணித்து வரும்போது, அதை ஒழித்து விட்டு ‘வரதட்சணை அளிப்புச் ‘ [Pro-Dowry] சட்டத்தை நிலைநாட்டுவது எப்படி என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது! வரதட்சணைத் தொகை ஒப்பந்தத்தில் மணப்பெண்ணின் வீட்டார் மகிழ்ச்சியோடு கையொப்ப மிடுவர்! ஆனால் எத்தனை மாப்பிள்ளை வீட்டார், ‘வரதட்சணை ஒப்பந்தப் பத்திரம் ‘ ‘முதலிரவு முன் ஒப்பந்தம் ‘ ஆகியவற்றில் கையொப்ப மிட்டு, மணப்பெண்ணை ஏற்றுக் கொள்வார் என்று ‘வரதட்சணை வரவேற்பாளிகள் ‘ முதலில் புள்ளி விவரம் சேர்க்க வேண்டும்! சமூக ஞானிகள் தாம் வாழும் தெருவுக்குச் சென்று, குறைந்தது நூறு, அல்லது ஆயிரம் வீடுகளின் கதவைத் தட்டிக் கேட்டு வந்து புள்ளி விவரம் தருமாறு வேண்டுகிறேன்.

புரட்சிக் கருத்துகளை நூறு, அல்லது ஆயிரம் வீடுகளில் 10% அல்லது 20% வீடுகள் கூட ஒப்புக் கொள்ளுமா என்பது சந்தேகமே! இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் புரட்சி முறையினால் பாதிக்கப்படும் 80% அல்லது 90% பெண்கள் திருமணம் ஆகாமல் வாழ்க்கை முழுவதும் கன்னியாகவே காலந் தள்ளப் போகிறார்கள்! வரதட்சணையை வரவேற்கும் திருமண முறையைத் திண்ணையில் பறைசாற்றி வெளியிட்டவர் ‘திருமண முன் ஒப்பந்தம் ‘ ஒன்றை எழுதிப் பதிவாக்கித் தனது பெண்ணுக்கு அல்லது கூடப் பிறந்த தமக்கைக்குத் திருமணம் செய்து காட்டினால், அதைத் திரைப்படமாக எடுத்துப் பாரத மெங்கும் போட்டுக் காட்டலாம்! அடுத்து அவரது தமிழ்க் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி, ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களுக்கு அனுப்பி, எப்படி வரவேற்கப் படுகிறது என்று அறிய வேண்டும்! அல்லது சென்னைப் பேச்சு மேடைகளில் பேசி, மலர் மாலைகள் விழுகின்றனவா அன்றி கல்வீச்சுகள் விழுகின்றனவா என்று சோதனைகள் செய்து பார்க்க வேண்டும்!

பிறருக்கு உபதேசம் செய்யும் சமூக ஞானிகள் முதலில் தன் வீட்டில் செய்து காட்டினால், அது மெய்யாக நிகழக் கூடியதா என்பதை அறிவதற்கு ஒரு பாதை தெரியும்! தற்போது ‘வரதட்சணைத் தவிர்ப்பு ‘ சட்ட மேடையில் கைத்தடியோடு நின்று பெண்ணுக்குக் காவல் புரிந்தாலும், வன்முறை வரதட்சணை இன்னும் தலை விரித்தாடிப் பல பெண்டிர் திருமணம் செய்ய முடியாமல், வருவாய் போதாது கன்னியாகவே வயது கடந்து காலம் தள்ளி வருகிறார்கள்! ‘வரதட்சணை அளிப்பு ‘ சட்ட பூர்வமாகி, அத்துடன் ‘வரதட்சணைப் பத்திரமும் ‘ பதிவு செய்ய முற்பட்டால் நடுத்தர, மற்றும் செல்வந்த வீட்டுப் பெண்களும், ஏழைப் பெண்களைப் போல் திருமணம் ஆக முடியாமல், வாழ்நாள் முழுவதும் ஆண்டவனை வேண்டிக் கொண்டே இருப்பார்கள்!

***

jayabar@bmts.com

Series Navigation