சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)


நிறைய மரங்கள் சூழ்ந்த, வேலியிடப்பட்ட விஸ்தாரமான நிலப்பரப்புக்குள் – அந்த தேவாலயம் இருந்தது. பழுப்பு மற்றும் வெள்ளை நிற மனிதர்கள் உள்ளே போய்க்கொண்டிருந்தனர். உள்ளே – ஐரோப்பிய தேவாலயத்துக்குள் இருக்கும் வெளிச்சத்தை விட அதிக வெளிச்சம் இருந்தாலும், அமைப்பும் ஒழுங்கும் ஐரோப்பிய தேவாலயம் போல் இருந்தன. பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அங்கே அழகு ததும்பியது. பிரார்த்தனை முடிந்ததும், வெகுச்சில பழுப்பு நிறத்தவரே வெள்ளை நிறத்தவருடன் அல்லது வெகுச்சில வெள்ளை நிறத்தவரே பழுப்பு நிறத்தவருடன் பேசினர். அப்புறம், நாங்கள் எல்லோரும் எங்களின் வெவ்வேறு வழிகளில் பிரிந்தோம்.

இன்னொரு கண்டம். அங்கே ஓர் ஆலயம். அவர்கள் சமஸ்கிருதப் பாடல்களைப் பஜனைகளாகப் பாடிக் கொண்டிருந்தனர். பூஜை – இந்து மதப் பிரார்த்தனை – நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த பக்தகோடிகள் மற்றொரு கலாச்சார வடிவத்தைச் சார்ந்தவர்கள். சமஸ்கிருத ஸ்வரங்கள் மனத்தை ஊடுருவிச் செல்வதாகவும், வலிமை மிக்கதாகவும் இருந்தன. அதற்கொரு வினோதமான ஈர்ப்பு விசையும் ஆழமும் இருந்தது.

நீங்கள் ஒரு நம்பிக்கையிலிருந்து மற்றொரு நம்பிக்கைக்கு – ஒரு மறுக்கவொண்ணாக் கோட்பாட்டிலிருந்து மற்றொன்றிற்கு – மாற்றப்படலாம்; ஆனால், உண்மைநிலையை உணர்ந்து புரிந்து கொள்ளும் நிலைக்கு நீங்கள் மாற்றப்பட இயலாது. நம்பிக்கை என்பது உண்மைநிலை அல்ல. நீங்கள் உங்கள் மனத்தை, உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளக்கூடும்; ஆனால், உண்மை – அல்லது கடவுள் – திடமான நம்பிக்கை அல்ல. அது ஓர் அனுபவம்; எந்த நம்பிக்கையையும் அல்லது மறுக்கவொண்ணாக் கோட்பாட்டையும் அல்லது முன்அனுபவங்களையும் அடிப்படையாகக் கொள்ளாத அனுபவம். உங்களுக்கு நம்பிக்கையால் பிறந்த அனுபவம் இருக்கிறதென்றால், அந்த அனுபவம் உங்கள் நம்பிக்கையால் பதப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பே ஆகும். அதேபோல், உங்கள் அனுபவம் எதிர்பாராததாக, தன்னிச்சையான இயல்புடையதாக இருந்து – முதல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வரப்போகும் அனுபவங்கள் உருப்பெறுமானால் – அப்போது அந்த அனுபவம் – நிகழ்காலத்தின் ஸ்பரிசத்திற்கு மறுமொழி சொல்கிற நினைவின் வெறும் தொடர்ச்சியே யாகும். நினைவு எப்போதும் உயிரற்றதாகும்; அது வாழ்கிற நிகழ்காலத்துடன் உரசிக் கொள்ளும்போதே உயிர் பெறுகிறது.

மாற்றம் என்பது ஒரு நம்பிக்கையிலிருந்து – அல்லது ஒரு மறுக்கவொண்ணாக் கோட்பாட்டிலிருந்து – மற்றொன்றிற்கு மாறுவது; ஒரு சடங்கிலிருந்து மேலும் சந்தோஷமும் திருப்தியுமளிக்கிற மற்றொரு சடங்கிற்கு மாறுவது. ஆனால், அது உண்மைநிலையின் கதவுகளைத் திறப்பதில்லை. மாறாக, திருப்தியடைவது என்பது உண்மைநிலைக்குத் தடையே யாகும். ஆனால், அதைத்தான் மதங்களும் அவற்றின் அமைப்புகளும், மதக் குழுக்களும் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறன. அது, உங்களை இன்னொரு – மேலும் விவேகமுள்ள அல்லது விவேகமற்ற கோட்பாட்டிற்கோ, மூட நம்பிக்கைக்கோ, எதிர்பார்ப்பிற்கோ மாற்றுவது. அவை உங்களுக்கு ஒரு மேலான கூண்டைப் பரிசளிக்கின்றன. உங்களின் மனோபாவம் மற்றும் குணாதிசயங்களைப் பொறுத்து, அக்கூண்டு வசதியுடையதாகவோ, வசதியற்றதாகவோ இருக்கலாம். ஆனால், எந்த விதத்தில் பார்த்தாலும், அது ஒரு சிறைதான்.

மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் – கலாச்சாரங்களின் பல்வேறு நிலைகளுக்கிடையே – இத்தகைய மாற்றம் எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. ஸ்தாபனங்கள் – அவற்றின் தலைவர்களின் துணையோடு – மனிதனை, அவை அளிக்கிற – மதப்பூர்வமான அல்லது பொருளாதார ரீதியான – இலட்சிய வடிவங்களுக்கிடையே அடைத்திட இடையறாது முயல்கின்றன. இந்த இயக்கத்திலே, பரஸ்பர சுரண்டல் அடங்கியுள்ளது. உண்மையானது எல்லா அமைப்புகளுக்கும், பயங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே இருக்கிறது. உண்மையெனும் பேரானந்தத்தைக் கண்டு மகிழ, நீங்கள் எல்லாச் சடங்குகளையும், கொள்கையமைப்புகளையும் உடைத்துக் கொண்டு வெளிவர வேண்டும்.

மதப்பூர்வமான அல்லது அரசியல் பூர்வமான அமைப்புகளில், மனம் தன்னை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் உணர்கிறது. இதுவே அத்தகைய ஸ்தாபனங்களுக்கு உயிர்த்திருக்கும் திறம் அளிக்கிறது. இவற்றுக்காக உயிரும் கொடுக்கச் சித்தமானவர்களும், புதிதாய் மாற்றப்பட்டு சேர்க்கப்பட்டவர்களும் எப்போதும் இருக்கிறார்கள். இையெல்லாம், ஸ்தாபனங்களை – அவற்றின் முதலீடுகள், சொத்துகள் ஆகியவற்றோடு – செயல்பட வைக்கின்றன. இத்தகு ஸ்தாபனங்களின் சக்தியும், பெருமையும் – வெற்றியைத் துதிப்பவர்களை, உலக ஞானத்தில் உய்வெய்த விரும்புபவர்களை ஈர்க்கிறது. பழைய அமைப்புகளும், வழிகளும் இனிமேல் திருப்தியும், வாழ்வும் அளிக்காது என்று மனம் அறியும்போது, அது மேலும் வசதியான, வலிமை தருகிற நம்பிக்கைக்கும், கோட்பாட்டிற்கும் தன்னை மாற்றிக் கொள்கிறது. எனவே, மனமானது சூழ்நிலையின் விளைபொருள் ஆகும்; அது கிளர்ச்சிகளிலும், அடையாளங்களிலும் தன்னை புனருரு செய்து கொள்கிறது; நிலை நிறுத்திக் கொள்கிறது. இந்தக் காரணத்தினாலேயே, மனமானது – நடத்தை குறித்த விதிமுறைகள், எண்ணங்களின் வடிவமைப்பு ஆகியவற்றுடன் தன்னை ‘பற்றி ‘க் கொள்கிறது. எவ்வளவு காலத்திற்கு, மனமானது, இறந்த காலத்தின் விளைவாக இருக்கிறதோ, அவ்வளவு காலத்திற்கு அது உண்மையைக் கண்டுபிடிக்கவோ, உண்மை உள்ளே வந்து உறையவோ அனுமதிக்காது. அமைப்புகளை விடாது பிடித்துக் கொண்டபடியால், அது உண்மைக்கான தேடலை விலக்கி வைக்கிறது.

வெளிப்படையில், சடங்குகள் அதில் கலந்து கொள்வோர்க்கு அவர்கள் தங்களைக் குறித்து நல்விதமாக உணரும்படியான ஒரு சூழ்நிலையைக் கொடுக்கின்றன. குழு ரீதியான, மற்றும் தனிப்பட்ட சடங்குகள், மனதிற்கு ஒருவகையான அமைதியைத் தருகின்றன. அவை தினசரி வாழ்வின் சுவாரஸ்யமற்றத் தன்மைக்கு ஒரு மாற்று தருகின்றன. சடங்குகளிலே ஓரளவிற்கு அழகும், ஒருங்கமைப்பும் இருக்கின்றன. ஆனால், அடிப்படையில் அவை வெறும் ஊக்க மருந்துகளே. எனவே, எல்லா ஊக்க மருந்துகளைப் போலவே அவை விரைவில், மனத்தையும் இதயத்தையும் சோர்வடையச் செய்கின்றன. சடங்குகள் பழக்கமாகிப் போகின்றன; அவை நிர்ப்பந்தமாகி விடுகின்றன – ஒருவர் அவையின்றி இருக்க இயலாது என்றாகி விடுகிறது. இந்த நிர்ப்பந்தம் – ஆன்மீக மறுமலர்ச்சி, வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான வரம் பெறுதல், வாரந்தோறும் அல்லது தினசரி தியானம் என்றெல்லாம் கருதப்படுகிறது. ஆனால், ஒருவர் இதனைக் கூர்ந்து அவதானிப்பாரேயானால், சடங்குகள் எல்லாம் வீணான ஒப்பித்தல் – செக்குமாட்டுத் தன்மை – என்பதை அவர் உணரலாம். அவை, சுய அறிவிலிருந்து தப்பிக்க ஒரு கெளரவமான, மெச்சத்தக்க வழியைச் சொல்வதையும் அவர் காண்பார். சுய-அறிவின்றி, செயலுக்கு ஏதும் முக்கியத்துவம் இல்லை.

அந்த நேரத்திற்கு உற்சாகமளிக்கிற ஊக்கமருந்தாக இருப்பினும் – பஜனைகளை, வார்த்தகளை, பாடல்களைத் திருப்பிச் சொல்லுதல் – ஒப்பித்தல் – மனத்தைத் துயில் கொள்ளச் செய்கிறது. துயில் கொண்ட நிலையிலே, அனுபவங்கள் நிகழ்கின்றன, ஆனால், அவை தன்வயமானவை. எவ்வளவு சந்தோஷம் தந்த போதிலும், அவ்வனுபவங்கள், மாயைகளே. உண்மைநிலையை அனுபவிக்கிற இன்பமானது, எந்த ஒப்பித்தலாலும், எந்தப் பயிற்சியாலும் வருவதில்லை. உண்மை ஒரு முடிவல்ல, ஒரு பலன் அல்ல; ஒரு குறிக்கோள் அல்ல. அதை யாரும் வாவென்றழைக்க இயலாது, ஏனெனில், அது மனம் தொடர்புடைய விஷயம் அல்ல.

(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் – வரிசை: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living – Series: 1 – J. Krishnamurthi])

pksivakumar@worldnet.att.net

Series Navigation