கோ.கண்ணன் கவிதைகள்:

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

கோ.கண்ணன்


1) மழைச் சுவை.

ஊசியிடை நூலென
பின்னி இழையும்
சுதி லயம் நிறை
மழை இசையில்
நனைந்து குழைகிறேன்
மழலையர்தம் வாயூறலில்
கரைந்து மறையும்
சிறிய மிட்டாய்த் துண்டென.
*

2) கவிதை அல்ல வாழ்க்கை.

முகங்கள் தொலைத்த மனிதருக்கு
முகங்கள் தொலைந்ததை மறைத்திட
புனைந்த நிழல் முகங்களையே நிஜமென்று நிரூபித்திட
வேண்டி இருக்கின்றன முகமூடிகள்.

*

3) நவீன வேதாளங்கள்.

செல்லப் பிராணிகளாகிய நாய்கள் பூனைகள் போலவோ
பயன்படு விலங்குகளாகிய ஆடு மாடுகள் போலவோ
நேசப் பறவைகளாகிய கிளிகள் புறாக்கள் போலவோ
காதலுடன் போற்றிவளர்க்கப்படுகின்றன
நவீன வேதாளங்கள்.
இப்போதெல்லாம் அவசியம் தேவைப்படுகின்றன
வேதாளங்கள் நமக்கு;
பெரியோருக்கு துணைக்கோடலுக்கு-
குழந்தைகளுக்கு கூடி ஆடிக் களித்திட-
இளைஞருக்கு யவ்வனத்தை நீட்டித்திட-
எல்லோருக்குமாய் வேண்டி இருக்கின்றன
நவீன வேதாளங்கள்.
விக்ரமாதித்தியன் போல நாமும்
தலை வலித்தாலும் சுமை கனத்தாலும்
வேதாளங்கள் விதவிதமாய் சேட்டைகள் செய்தாலும்
விடாமல் சுமந்து திரிகிறோம் வேதாளங்களை
நவீன வேதாளங்களின் சிறப்பென
மற்றுமொன்றும் உண்டு
அவைகளுக்கு
எம் மரமும் சம்மதம்…எம் மனிதரும் சம்மதமே.

Series Navigation