கொழுத்தாடு பிடிப்பேன்

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

அ.முத்துலிங்கம்


ஓம் கணபதி துணை

The Immigration Officer 94/11/ 22

200, St Catherene Street

Ottawa, Ont

K2P2K9

( Please translet Sri Lankan Tamil Language )

[ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]

கனம் ஐயா அவர்களுக்கு,

சண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை ரொறொன்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கினேன். எனக்கு சொல்லித் தந்தபடி அங்கே இருந்த உத்தியோகத்தரிடம் நான் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்தேன். என்னுடைய மனைவியின் தங்கச்சி விஜயலட்சுமியும், அவளுடைய புருசன் பாலச்சந்திரனும் என்னை ஏர்போர்ட்டில் வந்து சந்தித்தார்கள். விஜயாவை இதுவே முதல் முறை நான் நேருக்கு நேர் சந்திப்பது. அவவுடைய முகவெட்டு கிட்டத்தட்ட என்னுடைய மனைவினுடையதைப்போலவே இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு ஒருவித குழப்பமும் இல்லை.

என்னை அழைத்துக் கொண்டுபோய் தங்களுடன் இருக்க வைத்தனர். அந்த சிறிய வீட்டில் எனக்காக ஒரு முழு அறையை ஒதுக்கி தந்தார்கள். நான் என் வாழ்க்கையில் இதற்குமுன் இப்படி ஒரு தனி அறையை அனுபவித்தவன் அல்ல. ஆகவே எனக்கு என் சகலனில் மரியாதை அதிகமாகியது.

என் சகலனாகட்டும், விஜயாவாகட்டும் என்னை வடிவாகவே பார்த்தார்கள். இங்கே எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. தபால்காரன் தபால்களை வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்தான். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பைப்பில் இடது பக்கம் சுடு நீரும், வலது பக்கம் குளிர் நீரும் வந்தது. பஸ்ஸிலே எப்படி றான்ஸ்பர் எடுப்பது, டெலிபோன் கார்ட்கள் எப்படி பாவிப்பது எல்லாம் எனக்கு சொல்லித் தந்தார்கள். நான் வந்த நாலாவது கிழமையே ஒரு ரெஸ்ரோறன்டில் எனக்கு கைக்காசுக்கு டிஸ் வாசிங் வேலையும் கிடைத்தது.

வாழ்க்கை இப்படியே இருக்கும் என்று ஆரம்பத்தில் மகிழ்ந்துபோனேன். விடியோ படங்கள் புதுசு புதுசாக வாடைக்கு எடுக்கலாம். ஊரிலே சாப்பிட முடியாத உணவு வகைகள் எல்லாம் இங்கே கிடைத்தன. என் சம்பளத்தில் மாசா மாசம் சீட்டுப் போடச் சொன்னார்கள். அவர்களுக்கு று–ம் வாடகை கட்டி, மாசச்சீட்டு 250 டொலர் போக மிச்சக் காசில் ஊருக்கும் அனுப்பினேன்.

என்னுடைய சகலனுக்கு இரண்டு வேலை. இரவு பதினொரு மணிக்குத்தான் வருவார். விஜயா கால்சட்டையும் கோட்டும் அணிந்து, கைப்பையை தூக்கிக்கொண்டு டேகேர் வேலைக்கு காலையிலேயே போய்விடுவா. அரை நாளுடன் அவவுடைய வேலை முடிந்துவிடும். என்னுடையது முதலாவது ஷிப்ட். மூன்று மணியுடன் வீட்டுக்கு வந்து கொஞ்சம் அயர்வேன். பிறகு ஏதாவது வீட்டு வேலைகள் செய்து கொடுப்பேன். அநேகமாக மார்க்கட்டுக்குபோய் சாமான் வாங்கி வருவது என் பொறுப்பில்தான் இருக்கும்.

இரவு சகலன் வந்ததும் சேர்ந்து இருந்து சாப்பிடுவோம். விஜயா அழகாகச் சமைப்பா. அவவுடைய றால் குழம்பின் ரேஸ்ட் மறக்க முடியாதது. நான் றால் சாப்பிட்டது கடைசியாக அன்றுதான். என்னைப் பொலீஸில் பிடித்த நாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் இந்த மறியலில் நான் அனுபவிக்காத சித்திரவதை இல்லை.

இங்கு தரும் சாப்பாடு வித்தியாசமானது. ஐந்து நேரங்களுக்கு இரண்டு முட்டை வீதம் பத்து முட்டை, நாலு நேரம் மீன் துண்டு, மூன்று நேரம் ஒவ்வொரு கோழிக்கால், நாலு நேரம் சாலட் என்று சொல்லும் வேகவைக்காத கீரை வகை தருவார்கள். எனக்கு ஹை பிறசரும், சலரோக வியாதியும் உண்டு. நான் இப்போ நோயாலும் மன வேதனையாலும் மிகவும் கஸ்ரப்படுகிறேன்.

நான் கனடாவுக்கு உல்லாசப் பயணியாக வரவில்லை. என்னுடைய விண்ணப்பத்திலும், விசாரணைகளிலும், திருப்பி திருப்பி சொன்னதுபோல எங்கள் நாட்டில் நடக்கும் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக சொந்த மனைவியையும், தேவதைகள் போன்ற பிள்ளைகளையும் விட்டு தப்பி ஓடி வந்தவன். என்னுடைய குடும்பத்தை ஒரு வழியாக ஒப்பேற்றிவிடலாம் என்ற ஆசையிலே மூன்று மாத காலம் பிரயாணம் செய்தேன். நேராக பிளேனில் ஏறி நேராக நான் வந்து இங்கே இறங்கவில்லை. வள்ளத்திலும், ரயிலிலும், மேலே விழவிழ தள்ளி உட்கார்ந்து இரவு முழுக்க கண்விழித்த பலாப்பழ லொறியிலும், கொன்ரெய்னரிலும், பிளேனிலுமாக எண்பத்து ஒன்பது நாட்கள் பயணம் செய்து வந்தவன். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்துசேர எடுத்தது 71 நாட்கள்தான். நான் என் கனவு மூட்டைகளை தவிர வேறு ஒரு மூட்டையும் கொண்டு வராதவன்.

என்ரை குஞ்சுகளை நான் ஊரிலே விட்டுவிட்டு வந்து இங்கே உத்தரிக்கிறேன். என்னை அவர்கள் மறந்துவிடுவார்கள். என் முகம் இன்னும் ஞாபகம் இருக்கோ தெரியாது. நான் ஊரை விடும்போது பெரியவனுக்கு 7 வயது, இரண்டாமவனுக்கு 5, பஞ்சலோகத்தில் செய்த என்ரை மகளுக்கு 4 வயது, கைக்குழந்தைக்கு 6 மாதம்தான்.

பெரியவன் வகுப்பில் வலு கெட்டிக்காரன். ஆமெணக்கெண்ணய் குடிக்க வைத்தால் நேரே ஓடலாம் என்ற அறிவுகூட இன்றி என்னையே சுத்தி சுத்தி ஓடுவான். சின்னவன் நான் கிணற்றில் தண்ணி அள்ளிக் குளிக்கும்போது எனக்கு கீழே நின்று அந்த தண்ணியிலேயே குளிப்பான். வெள்ளை லேஸ் வைத்து அலங்காரம் செய்த சட்டையை போட்டுக்கொண்டு என் சின்ன மகள் தத்தக்க புத்தக்க என்று ஓடி வருவாள். பாயிலே படுக்கும் என்னை தொட்டுக்கொண்டு படுப்பதற்கு சண்டை போடுவார்கள். இந்த தெய்வங்களை இனி எப்ப பார்க்கப் போறேனோ தெரியாது.

எங்கள் நாட்டில் தங்க நிறமான பூரண சந்திரன் வருவான். இங்கே நீல நிறத்தில் சந்திரன் தெரியும்போதே எனக்கு ஏதோ தீமை நடக்கப்போகுது என்று தெரிந்துவிட்டது. பக்கத்து அறையில் இருந்தவன் நேற்றிரவு என்ன காரணமோ திடாரென்று செத்துவிட்டான். அவனுக்கு நான் ஒரு முட்டை கடன் தர வேண்டும். அவனுடைய பெயர் தெரியாது. ஆனால் அவன் சாவதற்கு சம்மதிக்கவில்லை. திறந்த கண்களால் இன்னும் இந்த உலகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவன் ஒரு பெயர் உச்சரிக்கமுடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும், கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடது கால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால், வலது கால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான். ஒரு முட்டை கடன்தர வேணும் என்றால் ஒரு வார்த்தையும், இரண்டு முட்டை கொடுக்க வேணும் என்றால் அதற்கு இன்னொரு வார்த்தையும் அந்த நாட்டில் இருக்கலாம்.

இங்கே சில வசதிகள் உண்டு. இப்படி வசதிகளுக்கு முன்பே பழக்கபட்டிருக்காததால் நான் ஆரம்பத்தில் கஷ்ரப்பட்டுவிட்டேன். திறப்புகளைத் தொலைக்காமல் வைப்பதற்கு பழகியிருந்தேன். கனடாவில் எல்லாம் தானாகவே பூட்டிவிடும் கதவுகள். இவை ஆபத்தானவை. நிறைய ஞாபக சக்தியை அவை உபயோகித்துவிடும். இங்கே தலையில் தொப்பி அணிந்து, இடையில் குண்டாந்தடி செருகிய கார்டுமார் பெரும் சத்தம்போடும் இரும்புக் கதவுகளை எங்களுக்காக திறந்துவிடுவார்கள்; பின்பு பூட்டுவார்கள். நாங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சி நடுங்க வேண்டாம். கைகளை ஆட்டிக்கொண்டு உள்ளே போவதும் வருவதுமே எங்கள் வேலை.

என்னுடைய சகலன் வீட்டில் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தேன். அங்கே தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவு. திறப்புகளை கையிலே காவியபடியே இருக்கவேணும். திறப்புகளை தூக்கிக்கொண்டு நாங்கள் எல்லோரும் எங்கள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரங்களில் வேலைகளுக்கு போவோம் வருவோம்.

ஐயா, என் வாழ்க்கையில் இதுவே சறுக்கலான காலம். போகப்போக அவர்கள் பணம் பணம் என்று பறப்பது எனக்கு தெரிய வந்தது. குடும்பச் சூழ்நிலையும் நல்லாக இல்லை. என்னுடன் விஜயா பழகுவது கொஞ்சம் பயத்தை கொடுத்தது. எப்படியும் என்னுடைய தஞ்சக் கோரிக்கை கேஸ் முடிந்தவுடன் வேறு வீடு மாறவேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வளவு உதவி செய்த சனங்களை பகைக்காமல் கழரவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்து சமயம் பார்த்திருந்தேன். ஆனால் அது கடவுளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

எங்களுக்குள் பிரச்சினை பின்னேரங்களில் டிவி பார்ப்பதில்தான் தொடங்கியது. விஜயாவின் கதைகளும் போக்கும் ஒரு மாதிரியாக இருக்க ஆரம்பித்தன. என்னுடன் கதைக்கும்போது தேவைக்கு அதிகமான நளினம் காட்டினா. அவவுடைய விரல்களும் அதன் மிச்சப் பகுதியும் என் மனைவியை ஞாபகமூட்டின.

ஒரு நாள் நான் வேலையிலிருந்து அலுப்போடு வந்து நேரத்துக்கு படுத்துவிட்டேன். எனக்கு விஜயா சிவப்பு முட்டை பொரித்து சாப்பாடு போட்டா. புருசன் வந்தபோது அவருக்கு வெறும் மரக்கறி சாப்பாடுதான். நான் படுத்திருந்தபோது அவர்கள் சண்டை போட்டது எனக்கு கிளியராக கேட்டது.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இவர்களுக்கு ஒரே மகள். அவளுடைய பேர் பத்மலோசனி. முதலில் அவளை பத்மா என்று அழைத்து அது ஸ்ரைல் இல்லாதபடியால் லோசனி என்று மாற்றினார்கள். பிறகு அதுவும் சுருக்கப்பட்டு லோ என்றாகிவிட்டது. இது ஒரு மொத்தமான பிள்ளை. இவளை விஜயா அடிக்கடி கலைத்தபடியே இருப்பா. பெரியப்பாவை சும்மாவிடு அவர் களைப்பாக இருக்கிறார் என்றோ போய்ப்படி என்றோ கீழ் வீட்டிலே போய் புத்தகம் வாங்கி வா என்றோ விரட்டுவதுதான் வேலை.

இவள் சிறு பெண் என்றாலும் விவேகமானவள். படிப்பு கெட்டித்தனம் அல்ல, அவளுடைய மூளை கள்ளத்தனம் கொண்டது. நேராக ஒரு காரியத்தை செய்வாள் என்றில்லை. எப்பவும் விஷமமும், சூழ்ச்சியும், தந்திரமும்தான்.

அவளுடைய காதுகள் கூர்மையானவை. படிகளில் ஏறிவரும் சத்தத்தை வைத்தே வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்று ஊகித்து விடுவாள். இது அந்த அங்கிள் மேல் வீட்டுக்கு போறார். இது கீழ் வீட்டு அன்ரி வீடியோ எடுக்க வாறா என்று சரியாகச் சொல்வாள். வீட்டிலே தமிழ் வீடியோப் படங்களை பார்க்கும் நேரங்களில் ஆ, சரி இனி கட்டிப்பிடிச்சு பாடப் போகினம் என்று அவள் சொன்னால் அப்படியே நடக்கும்.

பின்னேரங்களில் ஹோலுக்குள் இருந்து ஹோம்வோர்க் செய்யுறன் எண்டு சொல்லி முழுசிமுழுசிப் பார்த்துவிட்டு பெரியவர்களுக்கான டிவி சானலை ஓன் செய்துவிடும். அதில் வரும் மோசமான காட்சிகளை மியூட் பட்டனை அமத்திவிட்டு சத்தம் கேட்காமல் பார்க்கும். இப்படி பழகிப் பழகி இந்த விஷயங்களில் இதுக்கு ஒரு நாட்டம் வந்துவிட்டது.

பெரியவர்களின் மூளையைக் காட்டிலும் இதுக்கு பத்து மடங்கு மூளை. ஒரு நாள் தாய் வீடியோக் கடைக்கு போறதாய் சொல்லிப்போட்டு இறங்கிப் போய்விட்டா. இந்தப் பிள்ளை டெலிபோனில் றீடயல் பட்டனை அமுக்கி நம்பரைப் பார்த்துவிட்டு இந்த அம்மா பொய் சொல்லி இருக்கிறா. இவ சீட்டு அன்ரியிட்டை சாறி பாக்க போனவ என்று சொல்லி பிடிச்சுக் குடுத்துப்போட்டுது. இதை வைச்சுக்கொண்டு ஒரு கள்ளமும் செய்ய ஏலாது.

தானாகவே பட்டுபட்டென்று பூட்டிக் கொள்ளும் கதவுகள் கொண்ட இந்த வீட்டில் பாத்ரூம் கதவு மட்டும் ஒழுங்காக வேலை செய்யாது. ஒருநாள் தெரியாமல் நான் கதவை திறந்தபோது விஜயா குளித்துக் கொண்டிருந்தா. நீண்டு தெரிந்த முலைகளில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. எண்டாலும் நல்ல ஷேப்பாக உரித்த வெங்காயம்போல தகதகவென்று மின்னியது. நான் பதகளித்துப் போனேன். இவ ஒன்றுமே நடக்காதமாதிரி மெல்லிசாய் சிரித்தபடி நின்றா. பக்கத்தில் கொழுவி இருந்த டவலை இழுத்து மூடலாம் என்ற எண்ணம்கூட இல்லாமல். நான் சொறி என்றுவிட்டு திரும்பிவிட்டன்.

இதை இந்தக் குண்டுப் பிள்ளை பார்த்துவிட்டது. அம்மாவை பெரியப்பா நேக்கட்டாய் பார்த்திட்டார் என்று கத்தத் தொடங்கிவிட்டது. அவளுடைய வாயை அடக்க பெரிய லஞ்சம் தேவைப்பட்டிருக்கும். எப்படியோ அன்று சகலன் வேலையில் இருந்து திரும்பியபோது இந்தப் பிள்ளை வாயை திறக்கவில்லை

இது தெரியாமல் நான் செய்த தவறு. ஆனால் தெரிந்து ஒரு நாள் தவறு செய்ய நேர்ந்தது. அதற்கு பிறகு அப்படி செய்வதில்லை என்று கடுமையான தீர்மானமும் செய்தேன். அந்த தீர்மானத்தை எவ்வளவுக்கு வெற்றியாக செய்து முடித்தேன் என்று சொல்லமுடியாது. காரணம் அது நடந்து சில நாட்களுக்குள்ளேயே நான் பொலீஸில் மாட்டிவிட்டேன்.

விஜயா பின்னேரங்களில் காலுக்கு மேல் கால்போட்டு இருந்து ஓய்வெடுப்பா. இரண்டு பெசென்ற் பால் கலந்த கடும் சாயம் கொண்ட தேநீரை சிறு சிறு மிடறுகளாக உறிஞ்சிக் குடிப்பா. என் மனைவியும் அப்படியே. இது இன்பமான நேரம். சிரிக்கக்கூடிய சமயங்களை இவ வீணாக்குவதில்லை. சின்ன ஜோக்குக்கும் கிக்கிக் என்று குலுங்கி குலுங்கி சிரிப்பா.

இப்படி என் மனம் அடங்காத ஒரு நாளில் இவ உள்ளுக்கு போய் உடுப்பு மாத்தினா. கதவு நீக்கலாக இருந்தது அவவுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஒடுக்கமான ஜீன்ஸ் கால் சட்டையை ஒரு காலுக்குள் விட்டா; பிறகு மற்றக் காலையும் விட்டா. அது வேகமாக வந்து அவவுடைய அகலமான உட்காரும் பகுதியில் தடைபட்டு நின்றது. இவ குண்டியை அற்புதமான ஒரு ஆட்டு ஆட்டி மேலே இழுத்துக்கொண்டா. அந்த தொடைகள் ஜீன்ஸை ஒரு சுருக்கமில்லாமல் நிறைத்தன. என் மனம் அன்று பட்ட பாட்டை சொல்ல முடியாது. ஒரு பெண்ணைத் தொட்டு எவ்வளவு காலமாகிவிட்டது. அப்பொழுது ஒரு பழக்கமான வாசனை அள்ளி வீசி என் தேகத்தை சுட்டது.

ஐயா, அந்த நேரம் பார்த்துத்தான் இது நடந்தது. இதைச் சொன்னால் உங்களுக்கு நம்புவது கஷ்டமாக இருக்கும். கடவுள் வந்து சொன்னால் ஒழிய யார் நம்புவார்கள். இந்த தொக்கைப் பிள்ளை என்னை ஓய்வெடுக்க விடாது. கதவைச் சாத்தி வைத்தாலும் உள்ளே திறந்துகொண்டு வந்துவிடும். வந்தால் பாஃனைப் போடும்; ரேடியோவை போடும். ஜன்னலை திறக்கும் பூட்டும். இருக்கிற சாமான்களை இடம் மாத்தி வைக்கும். ஆராயாமல் போகாது.

என்னுடைய கட்டில் கனடாவில் ஒரு கடையிலும் வாங்கமுடியாதது. ஒரு தச்சனைக் கொண்டு செய்வித்த ஒடுக்கமான கட்டில். இந்தப் பிள்ளை அதில் ஏறி துள்ளி விளையாடும். என்னுடைய நித்திரையை எத்தனை வழிவகைகள் இருக்கோ அத்தனை வழிவகைகளையும் பாவித்து குழப்பிவிடும்.

அன்றைக்கும் அப்படித்தான். ஒரு துணிப்பொம்மையின் காலைப் பிடித்து இழுத்தபடி வந்து ஏதெண்டாலும் விளையாடுவம் என்று கரைச்சல் படுத்தியது. குழப்படி செய்யாதே, போ. அம்மாவிட்டை சொல்லுவன் என்று வெருட்டினேன். அம்மா இல்லை, அவ கீழ்வீட்டு அன்ரியிடம் கதைக்க போட்டா என்றது. பிறகு கொழுத்தாடு பிடிப்பேன் விளையாட்டை ஆரம்பித்தது.( இது எங்கள் ஊர் விளையாட்டு. இதை மொழிபெயர்ப்பாளர் விளக்கவேண்டும்.)

நான் கொழுத்தாடு பிடிப்பேன் என்று சொன்னால் அது கொள்ளியாலே சுடுவேன் என்று கத்தியபடியே கட்டிலை சுற்றி சுற்றி வெருண்டபடி ஓடும். இப்படி மாறி மாறி விளையாடினோம். இந்த விளையாட்டு மும்முரத்தில் சாரம் நழுவியதை நான் கவனிக்கவில்லை.

முந்தி நான் சொல்லியிருக்கிறன் இந்தப் பிள்ளைக்கு காது சரியான கூர்மை என்று. அன்று எப்படி தவறவிட்டதோ எனக்குத் தெரியாது.

திடாரென்று கதவை உடைப்பதுபோல யாரோ திறந்தார்கள். பார்த்தால் என்னுடைய சகலன் குழம்பிய தலையோடும், பொத்தான் போடாத சேர்ட்டோடும் வேகமாக வந்தார். எனக்கு தெரிந்ததெல்லாம் அவருடைய மயிர் முளைத்த கறுப்பு கைகளும், கட்டையான விரல்களும்தான்.

அவருடைய குத்து என் கழுத்திலேதான் வந்து விழுந்தது. நான் அள்ளுப்பட்டுபோய் சுவரிலே தலையை இடித்துக்கொண்டு ரத்தம் ஒழுக கிடந்தேன். இந்தப் பிள்ளை குழறி அழத்தொடங்கிவிட்டது. நான் ஒண்டும் செய்யவில்லை. எல்லாம் பெரியப்பாதான் செய்தவர் என்று திருப்பி திருப்பி சொன்னது.

அவர் 911 க்கு எப்ப அடிச்சாரோ தெரியாது. நான் நிமிர பொலீஸ் நிக்குது. கட்டிலிலே பிள்ளையின் நிக்கர் கிடந்தது. அவங்கள் அதைத்தான் முதலில் தூக்கி பார்த்தார்கள்.

என்ரை மண்டையிலே காயம் எப்படி வந்ததென்று அவர்கள் விசாரிக்கவில்லை. ரத்தம் ஒழுகி சேர்ட் எல்லாம் நெஞ்சோடு ஒட்டி காய்ந்த பிறகுதான் கட்டுப்போட்டார்கள். என்னை திரும்பிப் பார்க்க ஒரு நாய்கூட இந்த நாட்டில் வரவில்லை. என்ரை மனைவிக்கு என்ன எழுதி மனதைக் கெடுத்தார்களோ நான் அறியேன். நகை சுற்றி வரும் மெல்லிய தாள் போல ஒன்றில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அவள் எழுதும் கடிதம் பிறகு எனக்கு வரவே இல்லை.

இந்த நரகத்திலிருந்து எனக்கு விமோசனமே இல்லை. அந்தப் பிள்ளையின் விவேகத்தை கணக்கு வைக்க முடியாது. அதனுடைய உடலும் பெரியது; புத்தியும் பெரியது. அநியாயமாய் பிளான் பண்ணி என்னை மாட்டிவிட்டினம். என்னிடம் கையாடிய ஆறாயிரம் டொலர் சீட்டுக் காசை இனி நான் பார்க்க மாட்டேன். என்னை மறியலுக்கு அனுப்பி போட்டு வசதியாய் இருக்கினம். அங்கே நடந்த வண்டவாளங்களை நான் ஒருத்தருக்கும் மூச்சு விடவில்லை. விட்டால் ஒரு குடும்பமே நாசமாகிவிடும்.

என்ரை அறையில் இருக்கும் மற்றவன் ஒரு கேய் என்று சொல்லுகினம். மிகவும் துக்கமானவன். எந்த நேரம் பார்த்தாலும் எட்டாக மடித்து வைத்த ஒரு கடிதத்தை படித்தபடியே இருப்பான். அந்த கடிதம் மடிப்புகளில் கிழிந்து தொங்கியது. 27ம் செல் டானியலை வச்சிருக்கிறான் என்று பேசிக்கொண்டார்கள். இவனிடம் உள்ள ஒரே குறை நான் எப்ப எங்கடை செல்லில் மூத்திரம் பெய்ய வெளிக்கிட்டாலும் அதே நேரத்தில் இவனும் பக்கத்தில் நின்றுகொண்டு செய்வான். இவன் நித்திரை செய்து நான் பார்த்ததில்லை. வெகு நேரம் தூங்காமல் அடிக்கடி சிலுவைக்குறி இட்டபடி எனக்கு மேல் இருக்கும் அவனுடைய படுக்கையில் கால்களை தொங்கப்போட்டபடி இருப்பான். நடு இரவுகளில் நான் விழித்துப் பார்த்தால் நீண்ட ஸ்ரொக்கிங்ஸ்சை தோச்சு காயப் போட்டதுபோல அவன் கால்கள் கட்டிலின் மேல் தொங்கும்.

இரவு வந்தவுடன் நிழல்களும் வந்துவிடும். எங்களுடன் ஒரு கரப்பான் பூச்சியும் வசித்தது. அது இடது கைப்பழக்கம் கொண்டது. ஒரு நாள் இதைக் காணாவிட்டாலும் எங்கள் மனம் பதைபதைத்துவிடும். நாள் முழுக்க தேடுவோம். ஒல்லியான சுண்ணாம்புக் கலர் பேர்ச் மரம்தான் முதலில் இலைகளைக் கொட்டும். பிறகு மற்ற மரங்களும் இலைகளை உதிர்க்கும். சிறைக்கூடத்தின் முகப்புக் கோபுரத்தில் பறக்கும் கொடியின் நடுவில் உள்ள மேப்பிள் இலை மட்டும் எந்தக் காலமும் கொட்டுவதில்லை.

என்ரை தேவதைகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள். புத்த பிக்குகள் அணியும் அங்கிக் கலரில் கால்சட்டையையும் மேல் சட்டையையும் சேர்த்து தைத்த ஒரு நீளமான உடுப்பை 24 மணி நேரமும் அணிந்தபடி நான் அவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். 160 வருடங்களுக்கு முன்பு அடைத்து வைத்த முதல் ஐந்து கைதிகளின் பேர்களை இங்கே பொறித்து வைத்திருக்கிறார்கள். நான் படுக்கும் படுக்கையில் இதற்குமுன் ஆயிரம் பேர்களாவது படுத்து எழும்பியிருப்பார்கள். படுத்த சிலர் எழும்பாமல் கூட விட்டிருப்பார்கள். கொலக்ட் கோல்கள் வாய்க்காத, கடிதங்கள் கிடைக்காத, விசிட்டர்கள் ஒருவருமே அனுமதிக்கப்படாத அந்நிய நாட்டு கைதி ஒருவன் இங்கே இருந்தான். அவன் பெயர் இது என்று பின்னால் பொறித்து வைப்பார்களோ தெரியவில்லை.

ஜூலை 1, 1867 ல் சில மாகாணங்கள் ஐக்கியமாகி கனடா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தின. இது தற்பொழுது 10 மாகாணங்களையும், 2 பிரதேசங்களையும் கொண்டுள்ளது. கனடாவின் முதல் பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டோனல்ட்.

கனடாவின் ராணியாகிய மேன்மை தங்கிய இரண்டாவது எலிஸபெத்துக்கும், அவரின் வாரிசுகளுக்கும், அவரின் பின் பதவிக்கு வருபவர்களுக்கும் நான் சட்டத்திற்கு அடக்கமானவனாகவும், விசுவாசமானவனாகவும், தேசபக்தி கொண்டவனாகவும் இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.

மேன்மை தங்கிய ஐயா, எப்போதாவது எனக்கு குடியுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். என்ரை றிவியூ அப்பீலை தள்ளுபடிசெய்து என்னை திருப்பி அனுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு கள்ளமாக வந்து சேர்ந்தமாதிரியே என்னை கொன்ரெய்னரில் போட்டு அனுப்பினாலும் சம்மதமே.

என்ரை மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. என்னுடைய உதவியில்லாமல் இது நடக்க வழியில்லை. இது சுத்தப் பொய்.

இங்கிருந்து 10000 மைல் தொலைவில் இலுப்பைப்பூ கொட்டுகிற, லாம்பெண்ணையை மிச்சம் பிடிப்பதற்காக திரியைக் குறைத்து வைத்து ஏழு மணிக்கே படுக்கப்போகும் சனங்கள் கொண்ட ஒரு சிறு கிராமம் இருக்கிறது. விரித்தவுடன் சுருண்டுவிடும் ஒரு பாயை விரித்து, ஒரு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள், மறு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் என்று சரி சமமாக தன்னை பிரித்துக் கொடுத்து, ஹெலிகொப்ரர்கள் பறக்காத ஓர் இரவிலே, வெள்ளிகளுக்கு நடுவாகத் தோன்றும் ஒரு சிவப்புக் கிரகத்தை பார்த்தபடி படுத்திருக்கும் என் மனைவியைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டுக்கு நான் திரும்பி போகவேண்டும்.

அங்கே ரோட்டு போடுபவர்களுக்கு கல் சுமந்து கொடுத்து என்ரை வாழ்க்கையை ஓட்டிவிடுவேன். மீண்டும் உத்திரவாதம் தருகிறேன். இந்தக் கொழுத்த பிள்ளையின் வயது பத்து என்பது எனக்கு தெரியவே தெரியாது.

நிச்சயமாகச் சொல்கிறேன். நான் குடியுரிமை கிடைக்கும் ஆசையில் கஷ்ரப்பட்டு மனப்பாடம் செய்த எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை எப்படியும் திருப்பி அனுப்பிவிடுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் கீழ்ப்படிவான

சண்முகலிங்கம் கணேசரட்டினம்

சிறைக்கூடம் எண் 37

Kingston Penetentiary

555, King Street W

Po Box 22

Kingston, Ontario

K7L4V7

Series Navigation