கொற்றவை படைத்த ஜெயமோகன்

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

எஸ்ஸார்சி


கொற்றவை சிலப்பதிகாரக்கதை. அதனையே ஜெயமோகன் கொற்றவை என்கிற காப்பியமாக்கி த்தந்திருக்கிறார்.
அவர் குறிப்பிடுவதுபோல் ஒர் புதுக்காப்பியம். என்றே இதனைச்சொல்லலாம். மொழிநடையில் பாய்ச்சும் புதிய வீச்சு.
வியத்தகு உச்சம் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பெற்ற செல்வங்களுள் கொற்றவை பேசப்படும். ஆழச்சிந்தித்து படைப்பாக்கம் செய்பவர்கள் இந்நூலை வாசிக்காவிட்டால் அவர்களை ஏற்கமுடியாது.
அத்தனை சாகித்திய ரம்மியங்கள் தரிசனமாகும் வாசிப்பனுபவம். கிடைத்தற்கரிய பெரும்பேறு. மெய்.
காப்பியம் பயில்வோர் அகராதி கைவசம் இருப்பின் மட்டுமே தொடர இயலும் என்பதுவாய் அனுபவப்படும் நூல் வாசிப்பு.
மந்தணம், துணங்கை,வைரியர், இடிஞ்சில் கரவு, திரங்கள்,, அரியர், தெய்யம், நாலம்பல முருகன், அரதனம், புலரி, இகளி, கூவளம், சுற்றம்பலம், புல்லர ¢,புடவி, செருக்கடி, இப்படியாக எத்தனையோ அரிய வார்த்தைகளை சந்திக்க
நேரிடும். பிரமிப்பு. பிரமிப்பு. பிரமிப்பு.
அதிரவைக்கின்ற ஆழம் மிக்க எழுத்துக்கள். சொக்க வைக்கின்ற சொல் அடுக்குகள்.
மெல்லிய சுருதி ஒன்று வாசிப்பின் வழி வந்து மீள்வதையும் அனுபவிக்க நேரும்.
‘அறிய முடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்’ இப்படித்தொடங்குகிறார் ஜெயமோகன். புன்னகைக்கும் கருமையே நீலம் என்று முடிவு தருகிறார். படைப்பின் இடை இடையே இலக்கணம் சொல்லிக்கொண்டு போகிறார் ஜெயமோகன்.
காட்டு உயிர்கள் அனைத்துமே முதல் மனிதனின் உடல் விட்டுப் பிரிந்தவையே. அவர்களின்
கனிவே பசுவாகியது. வன்மை கனத்துக் காடதிரும் யானை ஆகியது. சினமே சிங்கம். எழுச்சியோ காற்றைத்தாண்டும் மான். தேடலே குரங்கு. விடுதலை பறவை. ஒலியின்மை மீன்கள். துயரம் புழுக்கள். கட்டின்மை விட்டில்கள்.
டார்வின் சொன்ன பரிணாம வளர்ச்சியை படைப்பாளி தனக்கே உரிய எழுத்தாளுமையோடு கொண்டு தருகிறார்.
அறிவு அடங்க உனர்வுகள் நிரப்பிக்கொண்ட வரிகள் இவை.
‘மெய்யே தங்களைச்சுற்றிலும் பலவகையான வடிவங்களில் வாழ்வதாககக்கண்டதும் அந்நாள்வரை அவர்களை
ஆண்டுகொண்டிருந்த அச்சம் அகன்றது.’
தத்துவ தரிசனங்கள் படைப்புமுழுவதும் விரவிக்கிடப்பது வாசகக்கொடுப்பினை. மில்டனின் இழந்த சொர்க்கம் தரும்
சுகானுபவத்தை நினைவு படுத்திக்கொண்டே வாசிப்பு நகர்கின்றது. பயில்தொறும் வசமாகிறது பரவசம்.
கடலை ஆள்பவன் பிரபஞ்சத்தை ஆளுவான் என்கிறபடி அருத்தம் தொனிக்கும் கடலைகண்டவனே வானைக்கண்டவன் என்னும் வரி வேத வாக்கியமாம் ‘ யோ அபாம் ஆயதனம் வேத:: ஆயதனவான் பவதி’ எனும்
தைத்திரிய ஆரண்யகத்தை ஞாபகப்படுத்துகிறது.
கபாடபுரத்துத் தமிழ்ச்சங்கம் குறித்துதெழுதிச்செல்கிரார் ஜெயமோகன். அகத்தியர் பற்றிய செய்திகள்
பல சொல்கிறார்
அகத்தியனின் உருவாக மேடை மேலமர்ந்த நீர் நிறைந்த செப்புக்குடம் பேராசிரியனாகியது. அதன் முன் பணிந்து
அந்த ஆயிரம் புலவர்களும் அகத்தியனுக்கு மாணாக்கர்கள் ஆயினர். ‘
பாரதிதாசனின் ‘ அகத்தியன் விட்ட புதுக்கரடி’ படித்துப்பழகியது நெருடலாக வாசகனுக்கு அனுபவமாகலாம்.
ஆரிய அரசனைக்கொன்று குவிப்பதும் பொதியமலை குறுமுனியை வாழ்த்துவதும் இளங்கோ அடிகளுக்கு
மட்டுமே சாத்தியப்படும். வரலாறு என்பது தடம் பல கொண்டதுதானே.

.

மக்கள் அலையோசையே கேட்காத ஒரிடம் சென்று கயல்விழி அன்னைக்கு ஆலயம் சமைத்தார்கள். அதுவே இன்று நாம் காணும் மதுரை. கடல் தாய் இனி எல்லை தாண்டிவர மாட்டாள். மாணிக்கமூக்குத்தி அணிந்த அத்தாய் குமரியாக நிலம் காக்கிறாள். கதையை மீண்டும் சொல்லிமுடிக்கிறார் ஜெயமோகன்.
நீர் காற்று நிலம் எரி வான் எனக்கொற்றவை நூல் ஐந்து பெரும் பிரிவுகளாகப்படைக்கப்பட்டுள்ளது. பஞ்சபூதங்களின்
அரசாங்கம் கொற்றவையை விட்டுவைக்கவில்லை. சிலம்பின் வரிகள் நம்மை ஒவ்வொரு பகுதிக்கும் வரவேற்று
அழைத்துச்செல்கின்றன. படைப்பில் கண்ணகி போற்றப்படுகிறாள் நிறைவாகவே.
காப்பியத்தில் வரும் சைவக்குரவர் நூற்றுவர் வைணவர்குலம் என்கிற பதப்பிரயோகங்கள் சற்று ஐயத்தை கொண்டு
தருகின்றன. இப்படி குலம் பிரிப்பது அல்லது அப்படியும் கூர்மைப் படுத்துவது சிலப்பதிகார காலத்தே தொடங்கிவிட்டிருந்ததுவா. இதனை படைப்பாளி தெளிவு செய்ய வாசகன் விழையலாம்.
கோவலன் மாதவியைச் சந்திக்கிறான். இருவரிடை காமம் பற்றிய ச்சொல்லாடல்கள் நம்மைக்கிறங்க வைக்கின்றன.
‘காமம் நண்டுக்கால்களில் நாற்றிசையும் விரையும் பெரும் புரவி’
‘விழைவை மறுப்பு தாழச்செய்து நாம் அதன் மீது அமரும் பொருட்டே அவை.’
‘விடை வராத கணக்குகளை விட்டு எவர் விலக இயலும்’
இப்படி த்தொடர்கின்றன விளக்கங்கள். சொக்கவைக்கின்ற சொல் அடுக்குகள். சிந்திக்க வைத்து வாசகனை கூடவே
தரம் உரசிப்பார்க்கின்றன.
காவிரிப்புதுப்புனல் காலைநேரம் பறவைகள் ஒலி எழுப்புகின்றன. ஜெயமோகன் சொல்படி கரிச்சான் புள்ளொன்று சித்-திரை,சித்-திரை எனக்குரல் எழுப்புகிறது. மருதநிலத்து எழுத்துத்தச்சன் தி.ஜானகிராமன் செம்பருத்தியில் பேசுவது நம் மனதில் நிழலாடிப்போகிறது. படைப்பாலியின் தத் ரூபமான எழுத்து நமக்கு வியப்போடு உள்ளக்கிளர்ச்சி யூட்டுகிறது.
சோழ (கோழ) வளநாட்டில் செம்முத்து எடுத்தல் தடை செய்யப்பட்டது. செம்முத்துக்கள் வைத்திருந்தோர் கண்டறியப்பட்டு முலை அறுக்கப்பட்டனர். பல நூற்றுவர் முலைகள் இழந்தனர். அவர்களே குலதெய்வங்களாகி
முத்தாரம்மன்கள் என அழைக்கப்பட்டனர். ஜெயமோகன் குறிப்பிட்டுச்சொல்லும் செய்தி இது. பொய்யாகவே
இது இருக்க ப்பிரார்த்தித்து நாம் நிம்மதி பெறலாம்.
ஒரு அரிய விஷயம். பரத கண்டமெங்கும் உரிமை மாக்களை விற்பதும் உரிமை மகளிரைப்பெறுவதும்
வழமைஆகி இருந்ததைக்குறிப்பிடுகிறார். அவை இழி தொழில். ஆகவே மாசாத்துவாணிகன் செய்வதில்லை
என்கிறார் ஜெயமோகன். அடிமை ஆகிற விஷயம் சைவக்குரவர் சுந்தரர் வாழ்க்கை வரலாற்றில் பேசப்படுகிற
செய்தியும் கூட. மாபாரதமும் சொக்கட்டான் ஆட்டத்தில் ஆட்களை வைத்து இழத்தல் பேசும். அரிச்சந்திர
புராணம் விற்பனை செய்துவிடும் எதனையும் ஆனால் பொய் பேசுதல் மாத்திறம் அனுமதிக்காது. அங்கொன்றும் இங்கொன்றும் என மனிதனை விற்றிருக்க முடியும். இது சாத்தியமே. ஜெயமோகன் அந்நிகழ்வை சொல்லும் பாங்கு
அமெரிக்க மண்ணில் கால்களில் விலங்கிட்டு நீக்ரோக்களை விற்பனை நிகழ்த்தியதை நினைவுக்கு கொண்டு
தருகிறது.
‘நாகத்தின் நஞ்சில்லாத தமிழ் உதிரம் இல்லை’ என்று சொல்லும் ஜெயமோகன் இன்னும் பொதுமைப்படுத்தி
நாகத்தின் நஞ்சில்லாத மானிட உதிரம் இல்லை என்றும் எழுதிடலாம். முன் தோன்றி மூத்த குடி என்பதால்
தமிழ் உதிரமே மானிட உதிரம் என்றும் விளங்கிக்கொள்ளலாம். அதுவும் சரியே.
ஒவ்வொரு வரும் தங்களில் உறையும் நாகத்தை அஞ்சுகிறார்கள். நாக பூசை அவ்வழி அமைகிறது என்கிறார்.

பொற்கால குப்தர் ஆட்சியிலே கணபதி பேசப்படவில்லை. அந்த ஆனை முகக்கடவுள் தமிழகம் வந்ததும் வாதாபி போருக்குப்பின்னரே என்பர். ஜெயமோகன் ஆனைமுகக்கடவுளைத்தொட்டுப்பேசுகிறார். முருகன்
குறக்குலத்து வள்ளி , தெய்வானைக் கதைகள் சொல்கிறார்.
‘ அடையாதவற்றால் ஆனதே வெளியுலகம். அடைந்தவற்றினால் சிறையுண்டவர்கள் மகளிர்.’
பெண்ணியத்தையும் அழகாக எடுத்து வைக்கிறார் ஜெயமோகன்.
தெற்ககத்துப்பரதர் மதுரை வந்தனர். கடல் கண்டு அஞ்சி ஒடோடி நிலம் சேர்ந்தனர். மீன் இலச்சினை
ஆனது. கயல் மீன் விழி அன்னை – மீன அக்ஷி- ஆனாள். பாண்டியர்கள் அரசாண்டார்கள்.
பெருகி உயர்ந்தது அரச குலம்.
விதைநெல் கவர்வதும் அறவோரைக்கொல்வதும் ஆலயம் கவர்வதும் அரசனைப்பழிப்பதும் கொலைக்குறிய
குற்றங்கள். இது அன்றைய மதுரையின் ஆன்ற மரபு. இவை வாசிக்கும்போது மேலைய நாடுகள் நோக்கி காயடிக்கப்பட்ட
விதைகட்கு த்தவம் கிடக்கும் ஆனைகட்டிப்போரடித்த சோழநாட்டு விவசாயிகள் நினைவுக்கு வந்து மனம் ரணமாகிறது.
ஐயப்பன் பற்றி அனேக விடயங்கள் படைப்பில் சொல்லப்படுகின்றன. திரை வில்லனாய் வலம் வந்த நம்பியார்,
நவாப் ராசமாணிக்கனாரின் நாடகம் எனப்பார்த்து ப்பார்த்து மட்டுமே ஐப்பன் நம்மோடு அழுத்தமாய்
தொடர்பு தொடங்கியதை அறிவோம்.
‘வேங்கையின் மீது ஏறித்தன் கூட்டத்தாரிடம் மீண்ட ஐயப்பன் புகழ் வஞ்சிநாடெங்கும் பரவியது.’
என்று பேசுகிறார் ஜெயமோகன். சிலம்புதொடா பல விஷயங்களில் இதுவும் அடக்கம்.
ஐயன் சபரணம் அடைந்த அம்மலையை சபரண மலை யென்றே பெயரிட்டோம்’ இப்படியாகச்சொல்லிக்கொண்டே
போகிறது புதுக்காவியம் கொற்றவை.

‘ மண்மீது அன்னையின் கண்பட்டதுளைகளெல்லாம் அவள் அல்குல்களாகின்றன அவள் கண் நோக்கிய
நீட்சிகளெல்லாம் அவள் தேடும் குறிகள் ஆகின்றன.மண்ணிலும் விண்ணிலும் கோடி கோடிப்புணர்வுகள்
நிகழ அன்னை தனித்திருக்கிறாள்’ கொடுங்கோளூர் அன்னை ஆலயம் பேசும் போது இப்படி குறிப்பிடும்
ஜெயமோகன் காம- அக்ஷியைத்தரிசிக்க வைக்கிறார்.

டச்சுக்காரர்களின் வருகை துப்பாக்கி பீரங்கி எழுப்பும் வெடிச்சத்தங்கள் மொழிபெயர்ப்பாளனின் இடை மறித்த
ஆக்கிரமிப்பு, ஆப்பிரிக்க கலாசாரத்துக்கும் தமிழக கலாசாரத்துக்கும் உள்ள தொடர்பு. கொடுங்கலூர் சின்னா பின்னமான செய்திகள். எத்தனை எத்தனை கன விஷயங்கள் இங்கே பேசப்படுகின்றன.

மகாத்மாகாந்தி, மகான் ஆதிசங்கரர், திருவள்ளுவர் ,விவேகானந்தர் என எல்லோரோடும் பிணைத்துக்கொண்ட
அல்லது பிணைக்கப்பட்ட குமரிமுனை இறுதியில் விவரணமாகிறது. இது தேவையென படைப்பாளி உணர்ந்திருக்கக்கூடும்.
நீலம் ஒரு புன்னகை. விடை சொல்ல முடிக்கிறார் ஜெயமோகன்.
எழுத்துலகில் இது அசுரசாதனை. ஜெயமோகன் புரிந்துகொன்டவைக:ளின் எழுத்துக்கடைசல்.. படித்துப்படைப்பாளிகள் தம் தளம் விரிவு செய்யலாம். வாசகர்கள் சிரத்தையோடு மட்டுமே படித்து நிறைவுபெறல் சாத்தியமாகும்.
கொற்றவை தமிழுக்குச்செல்வம்
படைப்பாளியின் ஆழம் ஆளுமை ஆகிருதி காணக்கிடைக்கும் புதின காவியம்.-
தமிழினி சாதித்தவைகளுள் கொற்றவை தனித்துவமானது


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி