ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

ரஜித்



ஓர் உண்மைக் கதை
குண்டான்சட்டிக்காக
கூரைப்பட்டு விற்ற கதை

மூக்குடி முனியம்மாவுக்கு
மூச்சாக முப்பது காணி
மொத்தக் காணிக்கும்
முலைப் பாலூட்டியது முத்தனேரி
பொங்கல் பானைகளில்
வெல்லம் முனியம்மா
அவள் விரல்படாமல்
விதைகள் முளைக்காதாம்
‘ஏர்முனைக்கு நேரிங்கே
எதுவுமே யில்லே’
கிராமத்தையே கிறங்கடிக்கும்
அவளின் கிராமபோன்

வாழைக்கன்றாய்
கிளம்பினர் பிள்ளைகள்
வேட்டிகள் ஜீன்ஸாயின
விவசாயத்தை விழுங்கின
விசாச் செலவுகள்
முடிந்துபோனாள் முனியம்மா

பத்தாண்டு கடந்தது
புறம்போக்கானது முத்தனேரி
காலனிகளானது காணி
கழிவுக்குட்டையானது களத்துமேடு

‘உழவு இல்லையேல்
உளுத்துப் போவாயடா மகனே
நீ நாதியற்றுப் போகுமுன்
நரம்புகளை நாற்றங்காலாக்கு’

முனியம்மாவின் இந்த வார்த்தைகள்
நுனிவாளால் கிழித்தது
துபாய் சென்ற மூத்தமகனை

துபாயைத் துப்பிவிட்டு
கப்பலேறினான்
வாங்கினான் முப்பது காணி
புல்லிலும் நெல் முளைக்கும் மண்
ஆர்ட்டீசன் ஊற்று
அய்ம்பது அடியில்

பச்சைக் கருதே
பாதி வளைந்தது
முதல் பொங்கலுக்கு
மூக்குடி திரண்டது
களத்துமேட்டில்
கிராபிக்ஸில்¢ சிரிக்கிறான் முனியம்மா
கருதடி நெல் அவளை
முத்தமிட்டுத் தொழுதது
இதயங்களை நனைத்தது இசைவட்டு
‘ஏர்முனைக்கு நேரிங்கே
எதுவுமே யில்லே’

Series Navigation