கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

களந்தை பீர்முகமது


இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து ஆழமான புரிதலும் விரிவான பார்வையும் கொண்டிருப்பவர் ஹெச்.ஜி.ரசூல். இஸ்லாமிய இலக்கியங்களைச் சமூகப் பார்வையுடன் அணுக அநேகமாக தமிழ்நாட்டில் இப்போது யாருமே இல்லை. அரபு இலக்கியங்களின் அன்றாட வளர்ச்சிப் போக்குகள் என்னவென்பதை அறிந்து வைப்பவர். மேலே நான் குறிப்பிட்டுள்ள அனைத்துக்கும் ‘ஆமின்’ சொல்லி வந்திருப்பதுதான் இத்தொகுப்பு.

தமிழ்-இஸ்லாம்-அரபு என்ற முக்கோணங்களிலும் உள்ள இஸ்லாமியப் படைப்புத் தன்மைகள் குறித்துப் பேசுகிறது இத்தொகுப்பு. இஸ்லாமியத் தொன்மங்களை எவ்வாறு அணுக வேண்டும், எந்த முறையில் அவற்றைத் தொட்டுப் பார்க்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் தன் குரலை உயர்த்திக் கொண்டிருப்பதை இத்தொகுப்பில் காணலாம். அண்மையில் குமுதம் தீராநதி இதழில் தொ. பரமசிவன் தன் நேர்காணலில் இதனை வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கும் முன்னாலேயே ரசூல் இப்பணியில் ஈடுபட்டிருப்பவர். இத்தொன்மங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கைக்கு எவ்விதச் சேதிகளைக் கொண்டுவருகின்றன என்பதை ஆழமாகக் கவனித்து எழுதியுள்ள பல பகுதிகள் இதிலுள்ளன.

அண்மையில் முஸ்லிம்களை அலைக்கழிப்புகளுக்கு உள்ளாக்கும் வஹாபியக் கருத்தாடல்களை எதிர்கொள்ளவும் வேண்டும்; அதே சமயத்தில் இத்தொன்மங்கள் யதார்த்தத் தன்மைகள் கொண்டவை அல்ல என்பதை உணர்த்திவிடவும் வேண்டும். மானுட வாழ்க்கையின் மர்மங்களும் துயரங்களும் அவற்றிலிருந்து தப்பி ஓடும் மார்க்கங்களும் மட்டுமல்ல இத்தொன்மங்கள்; ஒரு கட்டத்தில் அறவுணர்வுகளின் ஆவேசங்களாகவுமே அவை அமைந்துள்ளன. நெருக்கடிகளை மதவாதத் தன்மைகளுடன் இறுக்கிவிடாமல், பக்குவமாக நாம் வெளியேறும் வழிகள் இத்தொன்மங்களில் இருக்கலாம்! இவற்றையெல்லாம் இஸ்லாமிய மார்க்க மேதைகளும் படைப்பாளிகளும் கவனமாகக் கையாள வேண்டும். அதற்கு ரசூல் பயன்படுகிறார்.

இஸ்லாமிய இலக்கியங்களில் இரு பிரிவுகள். ஒன்று நேரடியான ஹதீஸ்களில் இருந்து உருவாக்கப்பட்டும், மற்றொன்று சமூகத்தின் மெய்யான வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து புனைவாக்கப்பட்டும் வெளிவருகின்றன. இப்போது முன்னையப் பிரிவு மழுங்கிப்போய் விட்டது, அதற்கு நம் வாழ்க்கை தொலைதூரங்களில் காணாமல் போய்க்கொண்டிருப்பதே காரணம். அதனால்தான் யதார்த்தவாதம் உயிர்ப்படைத்து அண்மைக்காலத்தில் பல நாவல்கள் எழுச்சி மயமாகத் தோன்றியுள்ளன. இஸ்லாமிய இலக்கியங்கள் இப்போதும் பொது அரங்குகளில் முறையான ஆய்வுக்கு உட்படுவதில்லை.

தன்னால் முடிந்த அளவு ரசூல் தனியரு ஆளாகச் செயல்படுகின்றார். தலித் இலக்கியங்கள் பேசப்பட்டிருக்கும் அளவுக்கு இஸ்லாமிய இலக்கியங்களும் பேசப்பட்டிருக்க வேண்டும். இத்தொகுப்பில் கவி இக்பால், காசி நஸ்ருல் இஸ்லாம், சதத்ஹஸன் மண்ட்டோ மற்றும் பாலஸ்தீனிய எழுச்சிக் கவிஞன் மஹ்மூத் தர்வேஷ் போன்ற தமிழுக்கு வெளியேயுள்ள படைப்புகள் தீவிரமாக அலசப்படுகின்றன. பல கட்டுப்பாடுகளை, ஐதீகங்களை மீறும்போது இஸ்லாமியப் படைப்புகள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன.

அந்த நான்கு இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய தன் பார்வையைப் பதிவு செய்யுமுன் படைப்பாளிகள் தோன்றிய சூழல், அவர்களின் மீதான அரசியல் தாக்கம், அவர்களைப் பாதித்த படைப்புகள், அவர்கள் எடுத்துக்கொண்ட மரபுகள் எனப் பலவகைகளிலுமான விவரங்களைச் சோம்பலின்றி அடுக்கியுள்ளார். இவற்றைத் தேடுவதற்கான பொறுமை அவசியம். சிரமங்ளோ அதிகமானவை. இந்த வகையில் ரசூலின் ஆழான வாசிப்புகட்குட்பட்ட மீரான்மைதீனும் ஜாகீர்ராஜாவும் அதிகம் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும். அவர்களின் படைப்புகளை நல்லதொரு வாகனமாய் ஏந்திச்செல்கிறார். மற்றப் படைப்பாளிகள் கவனம் பெறவில்லை. இந்தக் களேபரங்களுக்கு மத்தியிலே, தோப்பிலாரின் சாய்வு நாற்காலி நாவலை கதைகளின் கதையென பேசினாலும் அஞ்சு வண்ணம் தெரு பற்றி அவர் கண்டு கொள்ளாமல் நகர்ந்தது வருத்தமானது. சொல்லப்பபோனால் அஞ்சுவண்ணம் தெரு பற்றி ரசூல்தான் அதிகமதிகமாயய் பேசியிருக்க வேண்டும் என்பதை இந்தத் தொகுதி வலியுறுத்தவில்லையா?

கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், ஹெச்.ஜி. ரசூல் பக்: 144 ரூ.70, ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை – 24

நன்றி
புத்தகம் பேசுது
டிசம்பர் 2010

Series Navigation