குற்றவாளிகள் யார் ?

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(25 – 10 – 2002 தினமணி நாளிதழில் வந்த கட்டுரை)

பல்லாண்டுகளுக்கு முன்னர் காஞ்சி மகா முனிவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் ஓர் அமெரிக்கர் இந்து மத நூல்களைப் படித்த பின்னர், அம் மதக் கோட்பாடுகள் தம்மை வெகுவாக ஈர்த்துவிட்டதாகவும், எனவே தாம் பிறந்த மதமாகிய கிறிஸ்துவ மதத்தைத் துறந்து இந்து மதத்தைத் தழுவ விரும்புவதாகவும் கூறினார். அதற்கு மகா சுவாமிகள், “உண்மையான கிறிஸ்தவனுக்கும் உண்மையான இந்துவுக்குமிடையே எந்த வேறுபாடும் கிடையாது. எனவே நீ பிறந்த மதத்திலேயே ஓர் உண்மையான கிறிஸ்தவனாக இரு!” என்று அவரை அவர் பிறந்த மதத்திலேயே இருந்து வாழப் பணித்தார்.

அண்மைக் காலமாகச் சில அரசியல்வாதிகளின் பேச்சில் அடிபட்டுவரும் “இந்துத்துவம்” என்கிற சொல்லுக்கு இதை விடவும் சிறப்பான விளக்கத்தை வேறு எவராலும் அளிக்க முடியாது.

“கட்டாய” மத மாற்றத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்துக்கு ஓரு மதத்தினர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற கதைதான் நினைவுக்கு வருகிறது. இது ஒன்றும் ஒருவர் தானாக முன்வந்து செய்துகொள்ளும் மதழ்மாற்றத்துக்கு எதிரான சட்டம் அல்லவே! அப்படி இருக்க, இம் மதத்தினருக்கு ஏன் இவ்வளவு பதற்றம் ? இவர்களின் மதத்தலைவர் கீழ்த்திசை நாடுகளின் பெரும்பாலான மக்களை 2020 ஆம் ஆண்டுக்குள் – அல்லது 2010 ஆம் ஆண்டுக்குள்ளா ? – தம் மதத்தைத் தழுவச் செய்துவிடவேண்டும் என்கிற குறிக்கொளை வெளிப்படையாக அறிவித்தவராயிற்றே! எனவேதான் இந்தப் பதற்றம் போலும்!

இவர்களது கல்வித்தொண்டு, மனித நேயச் சேவைகள் பாராட்டத்தக்கவையே. இப் பண்புகள் இந்நாட்டுப் பிற மதத்க்தவரிடம் இல்லை என்பது வெட்கமுறச் செய்யும் நிலைதான். ஆனால், இப் பொது நலத் தொண்டுகளுக்குப் பின்னால் இவர்களது மதமாற்றத் திட்டமன்றோ வெளிப்படுகிறது ? யார் எந்த மதத்தில் இருந்தால் என்ன ? உதவிகள் செய்தோ, வேறு ஆசைகள் காட்டியோ பிற மதத்தவரைத் தங்கள் மதத்துக்கு ஒருவர் இழுக்க முயல்வதொன்றும் பெருமைக்குரிய செயல் அல்லவே! ஆனால் இப்படி ஏன் நடக்கிறது என்கிற கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு இந்துக்களுக்கே உள்ளது என்பதை இச்சட்டததை வரவேற்று அறிக்கைவிடும் “இந்துத்துவா” அரசியல்வாதிகளும் அவர்களை எதிர்ப்பதொன்றையே குறிக்கோளாய்க்கொண்டுள்ள பிற அரசியல் வாதிகளும் மதவாதிகளும் மறந்துவிடவேண்டாம்.

தீண்டாமை என்பது இந்து மத சாஸ்திரங்களின் அங்கீகாரம் பெற்ற ஒன்றுதான் என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கே ஒரு சங்கர மடாதிபதி திருவாய் மலர்ந்தருளினார். இந்து மத நூல்கள் அனைத்தையும் கற்றறிந்த ஒரு பெரியவர் – அவரது பெயர் அக்னிவேஷ் என்று ஞாபகம் – அந்த ஆச்சாரியருக்கு, “நீங்கள் கூறுவது அபத்தம். இந்து மத அடிப்படை நூல்களில் தீண்டாமைக்கு ஏற்பு வழங்கப்படவில்லை. நியாயத்துக்குப் பொருந்தாத கூற்றுகள் யாவும் இடைச்செருகல்களே இதை நான் வாதாடி மெய்ப்பிக்கத்தயார். இது நான் உங்களுக்கு விடும் சவால்!” என்று அறிவித்து அன்னாரை வாதுக்கு அழைத்தார். ஆனால், ஆச்சாரியர் அந்தச் சவாலை ஏற்றதாய்த் தெரியவில்லை.

இப்படிப்பட்ட “பெருமைக்குரிய” மதவாதிகளின் தலைமையை நம்பி ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு இந்து மதத்தில் இருக்க இயலும் ? அப்படியே, தீண்டாமையை இந்து மதம் அங்கீகரித்திருந்தது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அதை நீக்க வேண்டியதன்றோ இவர்கள் கடமை!

ஏதேனும் சாதிச் சண்டை வந்தால் “தலித்” பெண்களை “உயர் சாதி” ஆண்கள் மானபங்கம் செய்வதும், தெருக்களில் அவர்களை ஆடையற்ற நிலையில் இழுத்துப் போவதும் அடிக்கடி இந்நாட்டின் பல பகுதிகளிலும் நடந்துகொண்டிருக்கிறது. தலித்துகளுக்கு ஒதுக்கமான சாப்பாட்டு இடம், தனிப் பாண்டங்கள், தனிக் குவளைகள் என்றுதானே இன்றளவும் பல இடங்களில் இருந்து வருகின்றன! ஊருக்குப் பொதுவான நீர்நிலையாக இருப்பினும் கூட, அதில் தண்ணீர் எடுக்கவோ, குளிக்கவோ தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறது! அந்த அநாகரிகக் கொடுமைகளுக்கு எதிராய்க் குரல் கொடுக்கவோ, பிரசாரம் செய்து, கொடுமை செய்யும் ஈனர்களைத் திருத்தவோ, தலித்துகளைச் சந்தித்து அவர்களிடம் அன்பாய்ப் பேசிச் சமாதானப் படுத்தவோ இதுகாறும் எந்த ஆச்சாரியரேனும் முனைந்ததுண்டா ? மனிதாபிமானமே இல்லாத இப்படிப்பட்ட மனிதர்களைத் தலைவர்களாய்க் கொண்ட இந்து மதத்தில் தலித்துகள் எதற்காக இருக்கவேண்டும் ?

“யங் இண்டியா” இதழில், காந்தி அடிகள் – 1927 அக்டோபர் இதழில் – தாம் ஓர் இந்துவாகவே இருந்துவிடத் தீர்மானித்தது ஏன் என்பதை விளக்கியுள்ளார். இவரது இள வயதில், கிறிஸ்தவப் பாதிரியார்கள், தெருமுனைகளில் நின்றுகொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்திச் செய்த பிரசாரங்களும், இந்துக்களைப் பாவிகளே என்று அவர்கள் விளித்ததும் அவரது சிந்தனையைக் கிளர்த்தின. அவர்கள் கேலி செய்தபடி இந்துமதம் பழிக்கத்தக்கதெனில், அதைத் துறந்துவிடும் முடிவுக்கு வந்த காந்தி அடிகள் உலகத்தின் தலையாய மதங்களின் நூல்கள் அனைத்தையும் படித்தார். படித்த பின்னர், ஓர் இந்துவாகவே இருப்பது என்னும் முடிவை அவர் எடுத்தார்.

அதற்கு அவர் கூறுகிற காரணங்கள்: “எல்லா மதங்களிலும் இந்து மதமே சகிப்புத்தன்மையை அதிகம் வற்புறுத்துகிற மதம். பிற மதங்களிலிருந்து நல்லவற்றை எடுத்துக்கொள்ளுகிற மதம்.. எல்லா மதங்களுமே அகிம்சையைப் போதித்தாலும்,இந்து மதமே அந்தப் பண்பை மிகப் பெரிய அளவில் வற்புறுத்துகிறது. இம்மதம் ஒன்றுதான் தன்னைக் குறுகிய கோட்பாட்டுக்குள் அடக்கிக்கொள்ளாத மதம்.”

உண்மையான இந்துத்துவம் இதுதான் என்பதை நம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளுவார்களாக.

“அய்யோ! சிறுகச் சிறுக இப்படி இந்துக்கள் பிற மதங்களுக்குப் போனால், ஒருநாள் இந்து மதமே அழிந்துவிடுமே!” என்று கவலைப்பட்டுக் காய்கிறவர்கள், “ஏன் அப்படி ஓடுகிறார்கள் ?” என்பது பற்றியும் யோசிக்கட்டும். அதற்குப் பொறுப்பாளிகள் நம் மதாச்சாரியர்களும், நேர்மையற்ற இந்துக்களும்தானே தவிர, மற்ற மதத்தினர் அல்லர். சொந்தச் சகோதரர்கள் அடிப்படை வசதிகள் கூட அற்று, அவல வாழ்க்கை வாழ்வதைக் கண்டும் காணாமலிருப்பதோடு, அவர்களைப் புண்படவும் செய்யும் மனிதர்களைத் தன்னைப் பின்பற்றுகிறவர்களாய்க் கொண்ட மதம் அழிவை நோக்கி நகரவே செய்யும்! அது நிகழாது தடுக்க வேண்டுமாயின், “இந்துத்துவம்” என்னும் சொல்லை ஒரு மந்திரமாய் உச்சரித்துவரும் அரசியல் தலைவர்களும், மதாசாரியர்களும் திருந்தி நியாயமாய் நடக்க வேண்டும் என்பது மிகவும் தலையாயது.

ஒரு கிராமத்தில், நூற்றுக்கணக்கான தலித்துகள் இஸ்லாமியர்களாக மாறிய போது, விழுந்தடித்துக்கொண்டு அங்கு ஓடிய மதத்தலைவர்கள் அவ்வாறு நேராதிருப்பதற்கான நடவடிக்கைகளைத் தங்கள் கனவிலேனும் மேற்கொண்டதுண்டா ?

“நாங்கள் முஸ்மிம்களாக மாறிய பிறகு யாரும் எங்கள் வம்புக்கோ வழிக்கோ வருவதில்லை. எந்தத் தொல்லையும் இல்லாது கவுரவமாக வாழ்கிறோம்,” என்று ஒரு காலத்திய தலித்துகள் ஏன் சொல்லிச் சிரிக்கிறார்கள் என்பதை இவர்கள் சிந்தித்துப் பார்த்துத் தங்களைத் திருத்திக்கொள்ளட்டும், முதலில்.

அதற்குப் பிறகு, தலித்துகளுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றைத் தருவதாக ஆசை காட்டி அவர்களைத் தங்கள் மதத்துக்கு இழுப்போரை நிந்திக்கலாம். ஏழைகளுக்கும், நசுக்கபப்பட்டவர்களுக்கும் சோறு கண்ட இடம் சொர்க்கலோகம் அல்லவா!

. . . . . . . . .

jothigirija@vsnl.net

jothigirija@hotmail.com

Series Navigation