கீழ்க்கணக்கு

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

எஸ்ஸார்சி


என் வாரிய தலை முடிவாகைப்பார்த்து விட்டு எனக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஒருவரின் ஜாடை இருப்பதாகப்பேசிக்கொள்வார்கள் என் அலுவலக நண்பர்கள். அப்படியென்று சொன்னால் அது அத்தனை அழகாக இருக்கிறது என்று பொருள்படுகிறதா என்ன, அதனையெல்லாம் யாரை யார் க்கேட்பது. அவரவர்கள் ஒரு சமாச்சாரத்தை எப்படி வைத்துப்பார்க்கிறார்களோ அப்படித்தான் அவிழ்கின்றன விஷயங்கள்
ஜன்மாஷ்டமி தினத்தன்று என் அலுவலத்துக்கு விடுமுறை. இதில் ஏதும் புதிய சமாச்சாரம் இல்லை.
வழக்கம் போல் நான் வாக்கிங் சென்று திரும்பும் கடை வீதி யின் ஒரு கோடியிலுள்ள அதே லில்லி சலூனுக்குச்சென்று முடி வெட்டிக்கொள்வது என்று முடிவெடுத்தேன். லில்லி-சலூன்
சலூனுக்கு ப்பெயர்தான் அப்படி..
என்னைப்போல் எத்தனையோ பேர் குத்துமதிப்பாய் ஒரு கணக்குப்போட்டு அதே சலூனுக்கு வந்திருந்தார்கள் ஆகவே கூட்டம் கொஞ்சம் அதிகம்.
இப்போது வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி கூவி கூவி த்தெருவுக்கு வந்திருக்கிறது. வீட்டுக்கூடத்திற்கும் வந்துவிட்டது. இலவசத்துக்குள் பலதும் வசம் அதனுள்ளே கொட்டிக்கிடக்கும் அந்தச் சிரிப்பு நடிர்களின் நானாவித ஜுகல் பந்தி சமாச்சாரங்கள்.
சலூன் கடையில் முடிவெட்டக் காத்திருப்பவர்கள் படிப்பதற்கென்றே சில தினசரிகள் எப்போதும் வாங்கிப்போட்டிருப்பார்கள்.
நம்மை அந்த ச்சுழலும் நாற்காலியில் ஏறிக்குந்திக்கொள்ளச் சொல்லுவதற்கு முன்னர் என்னதான் செய்வது. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதுமிங்கே எப்படி சரிப்பட்டு வரும். பொருத்தப்பிசகாய் மட்டுமே வந்திருக்கும் மக்கள் அங்கு கிடக்கும் பெஞ்சொன்றில் அமர்ந்திருப்பார்கள்.
. எல்லோருக்கும் உள் மன ப்பிடுங்கல். நம்மைவிட்டு விட்டு நமக்குப்பின்னாலே வந்தவன் முடிவெட்டிக்கொண்டு முந்தி விட்டால் என்ன ஆவது. தொங்கும் ஆகாயம் கீழே விழுந்து விடாதுதான், மனித மனம் ஒரு குரங்காயிற்றே .அதனையெல்லாம் எப்படி ஏற்கும்.
ஒரு விஷயம் மட்டும் மெய். மனிதன் தான் முடிந்துபோய்விடுவதற்கு மட்டும் முண்டி அடித்துக்கொள்வதில்லை. அதனை தள்ளித் தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேவலாம்தான்

நான் என் காத்திருக்கும் வரிசைக்கு இசைய ச் சுழலும் ஆசனம் ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டேன், சுழலும் ஆசனத்தில் அமரும் நமக்கு எப்பக்கம் நமது கண்கள் பார்க்க வேண்டு மென்று முடிவு செய்யும் உரிமை எப்போதும் இல்லை..
ஒரு முடிதிருத்தும் தொழிலாளி வெள்ளை த்துணி கொண்டு என்னை போர்த்திக்கிடத்தி விட்டு தன் திருப்பணியை ஆரம்பித்தான். எதிரே நின்ற நீட்டு வாகு க்கண்ணாடியில்
முன்னாள் குடியர்சுத்தலைவரின் முடி ஜாடை எனக்கும் கொஞ்சம் இருப்பதாகவே தெரிந்தது.
நெளிந்து வளைந்து நின்றாலும் யாராவது நம்மை எதாவது கொஞ்சம் தூக்கி ப்பேசினால் போதும். குளிர்ந்துபோகிறது சின்ன மனசு. யார் நம்மை ஆகா ஊகு என்பார்கள் எப்போது அது நிகழும் என்பதே மனசின் கீழ்க்கணக்கு. அப்படியெல்லாம் நானாவது இருப்பதாவது என்று பச்சைப்பொய்யைச் சொல்லலாம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரக்கடவுளுக்குமே எத்தனை நாதன் தாள் வாழ்க சொல்லவேண்டியிருக்கிறது..
நம் மண்ணில் எத்தனைச்சித்தர்கள் திருவதாரம் செய்தாலும் நாமாவது ஞானம் பெறுவதாவது.. நாற்காலி அமர்வின் ஞானகாசம் பெரிது.
‘ ஆகா எப்படி இது வாயிற்கதவைத்திறந்துகொண்டு பளிச்சென்று ஒரு இள நங்கை இங்கே இந்த சலூனுக்குள் நுழைகிறாள். இது ஏது புதிய கலாச்சாரம்’.
எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.. எல்லோரையும் பார்த்துக்கொண்டேன் எல்லோருக்கும் அது அப்படித்தான் தெரிந்தது.
சலூனுக்குள் பெண்கள் வரமாட்டர்கள் ஆக அங்கு அம்மணக்கட்டையாய் அரைகுறை அம்மணி களின்படங்கள் ஒன்றிரெண்டு மாட்டிக்கிடக்கும்.
கோவணம் கட்டிக்கொண்டு தன் வாகன மயில் தொலைத்த முருகன், பசு இல்லாமல் குழலூம் ஒண்டிகட்டையாய்க் கண்னன் , அந்த வாயு மைந்தன் இவர்களின் படங்களை யாரும் குடும்பம் செய்யும் வீட்டுக்குள் மாட்டிவைப்பதில்லை எல்லாம் .ஒரு பயம்தான்.
அந்தவிதமாய் அப்படி இப்படி தொப்புள் காட்டி நிற்கும் கோடம்பாக்கத்து ப்பலானவர்களை சலூனில் மட்டும் மாட்டி வைக்கப் பார்த்திருக்கிறேன்.
நல்ல காலமாய் அந்த பெண்ணைத்தொடர்ந்து பொடிப்பயல் ஒருவன் கண்களைத்துடைத்துக்கொண்டே லில்லி சலூன் உள்ளே நுழைந்தான்.
‘ யாரு இவனுக்கு முடி வெட்டுனது’
கிச்சென்று வந்திருந்த அப்பெண் கேள்வியை ஆரம்பித்தாள்,
வந்திருந்த சின்னப்பயல் எனக்கு முடி வெட்டிக்கொண்டிருந்த அந்தத்தொழிலாளியையே காட்டிக்கொண்டு நின்றான்.
‘ இப்படிதான் முடி வெட்டுவாங்களா கேக்குறேன் பெருச்சாளி கொதறுன மாதிரில்ல இருக்கு அங்க அங்க திட்டு திட்டா சொட்டை சின்னப் பய கிளாசுக்கு ப்போவணுமா இல்லயா காசு வாங்குல’
அவள் வேக வேகமாய் கதி கூட்டி அர்ச்சனை செய்து கொண்டே இருந்தாள்.
அந்த லில்லி சலூன் முதளாளி அங்கே இன்னொரு சுழல் நாற்காலி அருகே வேலைபார்த்துக்கொண்டு நின்றிருந்தவன் அவள் அருகே வந்தான்.
‘ ஒண்ணும் பதஷ்ட்டப்படாதிங்க நான் இருக்கேனுல்ல. இப்ப பாருங்க இந்த புள்ளயை புது
மாப்பிள்ள மாதிரி சோடிச்சுடுறேன்’
அவள் சமாதானமானாள். டபக் கென்று அடிவாரம் இறங்குவதும் மலையுச்சி ஏறுவதும் அவளுக்குச் சர்வ சாதாரணமாய்த் தெரிந்திருந்தது.
எனக்கு முடி வெட்ட ஆரம்பித்தவன் முகம் வாடிப்போயிற்று..
‘ சோறுதானே திங்குற நீ ’ என் அருகில் இருந்த தொழிலாளியை இரண்டு வார்த்தைக்கேட்டுவிட்டு முதலாளி அந்தச்சிறுவனை அவன் தன்
சுழல் நாற்காலியில் ஏற்றி உட்கார வைத்துக்கொண்டான்.
இப்படியும் அப்படியும் முடியைக்கலைத்து விட்டு ஒரு பதினைந்து நிமிடத்துக்கு அந்தச்சிறுவனின் தலையை ஏகமாய்க் கவனித்தான்,
‘ அம்மா இப்ப பாருங்க உங்க பய எப்படி ராசா கணக்கா இருக்கான்’
அவள் தன் பையன் அருகே வந்து ஒரு சீப்பெடுத்து அவன் தலையை வாரி ப்பார்த்தாள்.
‘ இப்பல்ல சரி’ என்றாள்.
சிறுவனின் கண்க:ளில் புதிய ஒளி வீச்சு தெரிந்தது. சிறுவன் லேசாக என்னைப்பார்த்துச்சிரித்தான்.
அந்த சிரிப்புக்குப் பொருள் உண்டுதான். எனக்கு அச்சமாகவே இருந்தது.
தாயும் மகனும் லில்லி சலூனைவிட்டு அகன்று போனார்கள். சலூன்கடை முதலாளிக்கு முகம் ஜிவ்வென்று இருந்தது.
என் தலைக்கனம் குறைத்துக்கொண்டிருந்தவன் கண்கள் ஈரமாகி இருந்தது உண்மை.
‘ சாருக்கு பாத்து வெட்டு தெரிதா இப்படியே போனா உன்ன தருமங்குடி கிராமத்துக்கு திரும்பவும் முடிக்கு வுட்டுறவன்’
முதலாளி கட்டளை பிறப்பித்தான். நமக்கும் என்ன கதி ஆனதோ என்று மனம் புலம்ப ஆரம்பித்தது.
அலுவலகத்து நண்பர்கள் இன்று ஒருவருக்கொருவர் ஏதோ குசுகுசு பேசிக்கொள்கிறார்கள் ஆமாம்
அது என் தலைமுடி பற்றிய புதிய விமரிசனம்தான்
. நான் அந்த முன்னாள் ஒருவரின் தலை முடி ஜாடையை இப்போது சலூனில் தொலைத்துவிட்டிருக்கிறேன் என்பது மட்டும் எனக்கு உறுதி.யாகிவிட்டது.

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts