கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே…

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

என் எஸ் நடேசன்


பாடசாலை முடிந்து தனியாக வீடுநோக்கி வந்து கொண்டிருந்தேன்.

நாலாம் வகுப்பில் நான் மொனிட்டராக இருந்ததால் வருட இறுதி நாளில் என்னிடம் இருந்த சாவிகளை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டு வருவதற்கு சிறிது நேரம் பிந்திவிட்டது. ‘ ‘மொனிட்டராக வந்தபின்பு பொறுப்பு வந்திருக்கு ‘ ‘ என அம்மா பலமுறை கூறுவதுண்டு.

மாலை சூரியன் முற்றாக மறையவில்லை. ஆனாலும், பாதை ஓரத்தில் இருந்த பாரிய மரங்கள் பாதையை இருட்டாக்கின. தோளில் புத்தகங்கள் கனத்தன. இந்த பாடப்புத்தகங்களை இனித் தூக்க வேண்டியதில்லை என்ற சிறுசந்தோசம் மனத்தில் மலர்ந்தது. ஐந்தாம் வகுப்புக்கு எப்படியும் புத்தகப் பை ஒன்று வாங்கித் தருவதாக அம்மா சத்தியம் செய்திருக்கிறாள். பையுடன் கழுத்தில் தொங்கும் தண்ணீர் போத்தலுடன் பாடசாலை செல்லும் என் தோற்றம் கனவுகளில் எட்டிப் பார்த்தது.

ஐந்தாம் வகுப்பை நினைத்து கற்பனை செய்யும் போது இடுப்பில் இருந்த கால்சட்டை நழுவப் பார்த்தது! சிறிது நேரம் நின்று கால்சட்டையை சரி செய்ய முயன்றபோது பாதை ஓரத்து பாரிய அரச மரம் மனத்தை கலக்கியது. பாதையில் இருந்து சிறிது விலகி இருந்தாலும் பாரிய குடைபோல் கிளை விரிந்து இருந்தது. மரத்தின் அடிப்பகுதியை மூன்றுபேர் கைகோர்த்து நின்றால் மட்டும் பிடிக்க முடியும். மரத்தின் கீழ் வயிரவர் சூலம் உள்ளது. அரசடி வயிரவரைப் பற்றிய பல கதைகள் ஊரில் உலவின. பொய், களவு போன்ற குற்றம் செய்தவர்களை இங்குதான் வந்து சத்தியம் செய்யச் சொல்வது ஊர் வழக்கம். திருடியவர்கள் மீண்டும் அப்பொருளை வயிரவரிடம் கொடுத்துவிட்டுப் போவார்கள் என என்னுடன் படிக்கும் கண்ணன் பொழிப்புக் கூறினான்.

‘சமீபத்தில் ஏதாவது பொய் சொன்னேனோ ‘ என யோசித்துக்கொண்டு வேகமாக நடந்தேன். ‘எதற்கும் ஒரு தேவாரம் பாடினால் பயம் போய்விடும் ‘ என, ‘ ‘தோடு உடைய செவியன் ‘ ‘ என கூவியபடி நடந்தேன்.

‘ ‘நாயினாரா ? ஏன் இவ்வளவு நேரம் ? ‘ ‘ என கேட்டபடி ஆலமரத்துக்கு பின்னாலிருந்து நாகமணி திடாரென்று தோன்றினான்.

இந்தநேரத்தில் இவன் எங்கே வந்தான் ? ‘ என நினைத்தபடி தேவாரத்தை நிறுத்திவிட்டு வேகமாக நடந்தேன்.

நாகமணி அதே மண்ணிற அரைமுழ வேட்டியை நிலத்தைக் கூட்டும்படி அணிந்திருந்தான்.. சட்டை போட்டதை நான் என்றுமே கண்டதில்லை. தலையில் உச்சி மொட்டையை மூன்றுபக்கம் அணைகட்டியபடி நரை கலந்த தலைமயிர் உள்ளது. அடிக்கடி ஊதிய பலூனைப் போன்ற முகம். பலகாலம் சவரம் செய்யப்படவில்லை. அடிக்கடி தலையைத் தடவியதால்தான் இவனுக்கு மொட்டை விழுந்ததோ என நான் பலதடவை நினைத்தது உண்டு. நெஞ்சில் கத்தையாக மயிர் இருந்தது. முதுகில் பாரிய தளும்புகள் தெரியும்: அவை துலாக்காவடி எடுத்ததால் ஏற்பட்டவை என கேள்விப்பட்டேன். சேற்றுக்கடலில் தெரியும் மட்டியின் சிறுகண்கள் போன்ற கண்கள் நாகமணிக்கு. ஆனாலும், அலைந்து கொண்டிருக்கும் பார்வை.

நாகமணிக்கும் தனக்கும் ஒரேவயது என அம்மா கூறியதை வைத்துப் பார்த்தால், அவனுக்கு முப்பத்தைந்து வயதாவது இருக்க வேண்டும். நாகமணியின் பூர்வீகம் ஊரே அறிந்தது. அவனுடைய தாய் தந்தையர் மிகவும் வசதியாக சிங்கப்பூரில் வாழ்ந்தார்கள். இவன் சிறுவனாக இருக்கும் போது யப்பானியர்களின் குண்டு தாக்கி இருவரும் இறந்துவிட்டார்கள். உறவினர் உதவியுடன் கப்பலேறி இங்கு வந்து தூரத்து உறவுக்காரப் பாட்டியுடன் வாழ்ந்து வந்தான். பாட்டிக்கிழவி இறந்ததும் நாகமணி அனாதையானான்.

அம்மாவிடமிருந்து பெற்ற விசேட தகவல்களின்படி… சிறுவயதில் நாகமணி பாடசாலைக்கு வந்தாலும், படிக்கமாட்டான். மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடமாட்டான். இடையிடையே குழப்பம் விளைவிப்பான். சாப்பிடும் போது எச்சில் ஒழுகச் சாப்பிடுவதால் மற்றய பிள்ளைகளிடம் இருந்து விலக்கப்பட்டான். சத்தம் போட்டு அழுவதோ, சிரிப்பதோ அரிது. வாலிப வயதிலும் வேலைகள் செய்வதில்லை. கோவிலில் சாப்பாடு கிடைக்காத நாட்களில் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று சாப்பிடுவான். தங்குவதற்கு மட்டும் தனது கொட்டிலுக்குச் சென்றுவிடுவான்.

இவனது கொட்டில் தடிகளால் கட்டப்பட்டு, கிடுகுகளால் வேயப்பட்டு, சுற்றிவர அடைத்து இருக்கும். வாசல்கதவு இல்லாமல் கிடுகுத் தட்டியால் மறைக்கப்பட்டிருக்கும். இவனது கொட்டிலுக்கு பக்கத்தில் காவல் கோபுரம் எப்பவும் இருக்கும். இவனது கொட்டிலும் கோபுரமும் மாதம் ஒருமுறை இடம் மாறும்.

தாத்தா நடுஇரவு நேரத்தில் மீன் பிடிப்பதற்காக பட்டரி லைட்டுடன் கடல்கரைக்குச் சென்றபோது கரையில், அலைந்து கொண்டிருந்த நாகமணியிடம்,

‘ ‘ஏன் படுக்கவில்லை ‘ ‘ எனக் கேட்டார்.

‘காலடித் தடயங்களைத் தேடுகிறேன் ‘ ‘ என்றான் நாகமணி.

‘ ‘உனக்கு வேலை இல்லையா ? ‘ ‘

‘ ‘எதிரிகள் இந்த ஊருக்குப் படையெடுப்பதற்கு முன்பாக உளவு பார்க்க வந்திருக்கிறார்கள் என எனக்குத் தகவல் வந்துள்ளது ‘ ‘ எனக் கூறிவிட்டு காலடி தடயங்களை மீண்டும் தேடினான்.

‘ ‘போய் படுத்துத் தூங்கு ‘ ‘ என தாத்தா துரத்தினார். தாத்தா பாட்டியிடம் ஒருமுறை கூறியதிலிருந்து இந்த வரலாற்றை அறிந்து கொண்டேன்.

இளம் பெண்கள் நாகமணியைக் கண்டாலே வெறுப்புடன் காறி உமிழ்வார்கள். ‘ ‘கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது ‘ ‘ என பக்கத்து வீட்டுத் தேவி என்னிடம் கூறினாள்.

இந்த வெறுப்புக்கு அழுக்கான நாலுமுழவேட்டி. மொட்டையான தலை, வாத்துப் போன்ற நடை மட்டும் காரணம் என கூறமுடியாது. கயிற்றுக் கொடிகளில் உலரப் போடும் பெண்களின் உள்ளாடைகள் காணாமற் போவதற்கு நாகமணிமேல் சந்தேகம் பெண்கள் வட்டாரத்திலே நிலவி வருகின்றது.

எதிர்வீட்டு சந்திரா பட்டணத்தில் படிப்பவள். விடுமுறைக்காக வீடுவந்து நின்றபோது தனது உள்ளாடையைக் காணவில்லை எனக் கூறியபடி தடிஎடுத்துக் கொண்டு நாகமணியை அடிப்பதற்குச் சென்றாள்.

தாத்தா இடைமறித்து, ‘அவன்தான் எடுத்தான் என்பதற்கு என்ன ஆதாரம ? ‘; எனக் கேட்டுச் சந்திராவைத் தடுத்து நிறுத்தினார்.

இரவு முழுவதும் ஊரைச் சுற்றித் திரியும் நாகமணிக்கு புத்திசுவாதீனம் அற்றவன் என சிலரின் அனுதாபம் கிடைத்தாலும், பெரும்பாலானவர்கள் அசிங்கமான விலங்கையோ அல்லது குஷ்டரோகியையோ பார்ப்பது போன்றே பார்த்தார்கள். இளம் பெண்கள் நாகமணியை வெறுப்பதிலும், சிறுவர்கள் துன்புறுத்துவதிலும் முன்னின்றார்கள். நாகமணி சாப்பிட்டுவிட்டு அதே இடத்தில் பகல்நேரத்தில் கண்ணயர்வது உண்டு. என்னோடு ஒத்த சிறுவர்கள் நாகமணிமேல் வண்டைப் பிடித்து விடுவதும், காதுக்குள் ஈர்க்கிலால் நுழைப்பதும், பேப்பரைச் சிகரட்டாகச் சுருட்டி அவன் வாயில் திணிப்பதிலும் இன்புறுவார்கள்.

நான் ஒருமுறை சிவப்பு நிற கம்பளிப்பூச்சியை நாகமணிமேல் விட்டபோது பிடிபட்டேன். நாகமணி உலுப்பிய உலுப்பில் பயந்துவிட்டேன். இந்த சம்பவத்தின் பின் மரியாதை கலந்த பயம் நாகமணிமேல் உருவாகியது. கோயில் திருவிழா தொடங்கினால் ஊருக்கு மட்டுமல்ல நாகமணிக்கும் கொண்டாட்டம். கோயில் வாசலில் உள்ள வாழைமரத்தின் கீழ் இருந்து தேவாரம் தப்பும் தவறுமாகப் பாடுவதும், அங்கு கிடைக்கும் பிரசாதங்களை உண்பதுமாக நேரத்தைச் செலவிடுவான். கோயிலுக்கு வரும் பெண்களைப் பார்க்க, நாண்டு கிடக்கிறான் ‘ என்பது பெண்கள் வட்டாரத்தில் நிலவிய அபிப்பிராயம்.

சிறுவர்கள் நாகமணிமேல் கல்லெறிந்து குறும்பு செய்தாலும், பெரியவர்களுக்கு பயந்து தங்கள் குறும்புகளைக் குறைத்துக் கொள்வார்கள். திருவிழா காலம் நாகமணிக்கு விடுமுறைக் காலம் போன்றது.

அந்தவருடம் எங்கள் ஊரில் மழை பெய்யவில்லை. கிணறுகள் வற்றிவிட்டன. எங்கள் வீட்டுக் கிணற்றில் ஒரு வாளி தண்ணீர்கூடக் கிடைக்காது. குடிப்பதற்கு கடற்கரையில் மணற்பகுதியில் சிறிய குழி தோண்டி அதில் இருந்து பொசியும் நீரைத் தென்னஞ் சிரட்டையால் அள்ளி எடுத்துக் குடத்து வாயிலில் துணிகட்டி வடித்தெடுப்போம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குழி சொந்தமாக இருக்கும்.

குளிப்பதற்கு கோயிலுக்குப் பக்கமான பெரிய கிணற்று நீாில் ஆண்கள் பகலில் குளிப்பதும், மாலைப் பொழுதில் பெண்கள் குளிப்பதும் ஊர் வழக்கம்.

அன்று ஒருநாள் அம்மா, தேவி, சந்திரா ஆகியோருடன் கோயில் கிணற்றுக்குச் சென்றேன். அம்மா துணி துவைக்கும்போது சந்திரா எனக்கு முன்பு தண்ணீர் அள்ளிக் குளித்தாள். ஒன்பது வயதான என்னை ஓர் ஆணாகவே நினைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் சுற்றி இருந்த பனந்தோப்புக்குள் பந்தை எறிந்துவிட்டுத் தேடிக்கொண்டு சென்றேன். இரண்டு கட்டைப்பனை மரங்களுக்கு இடையே நாகமணியைக் கண்டேன்.

‘ ‘அம்மா நாகமணி ஒளிந்திருக்கிறான் ‘ ‘ என கூவினேன்.

‘ ‘அட நாயே பெண்கள் குளிக்கும் இடத்தில் உனக்கு என்ன வேலை ‘ ‘ என அம்மா அவனை விரட்டினாள்.

‘ ‘சந்திரா பாரிய கல்லைத் தூக்கியபடி நாகமணியை நோக்கி ஓடினாள். வாத்துப் போல் நடக்கும் நாகமணி முயலைப் போல், பாய்ந்து, பாய்ந்து ஓடினான்.

அடுத்தநாள் நாகமணி வீட்டுக்குச் சாப்பிட வந்தான். ‘ ‘இனிமேல் இந்த வீட்டுக்கு சாப்பிட வராதே ‘ ‘ என கூறி அம்மா படலையைப் பூட்டினாள்.

‘ ‘நாச்சியார் அப்படிச் சொல்லாதே, பசிக்குது ‘ ‘…

‘ ‘பொம்பிளை குளிக்கிறதைப் பார்க்கிற உனக்கு என்ன சாப்பாடு ‘ ‘ என ஆத்திரமாக அம்மா கத்தினாள்.

நாகமணியின் கண்களில் கண்ணீர் வந்தது.

‘ ‘அவனை ஏன் துரத்துகிறாய் ? ‘ ‘ என்றபடி சமையல்கட்டிலிருந்து பாட்டி வந்தாள்.

‘ ‘இவன்ர குணத்துக்கு வீட்டில் அடுக்கக் கூடாது. ‘ ‘ இது அம்மாவின் கொள்கைப் பிரகடனம்.

‘ ‘சும்மா உள்ளே போ, நான் சாப்பாடு போடுகிறேன் ‘ ‘ “தலையில் கிறுக்குப் பிடித்தாலும் அவன் ஆம்பிளைதானே” என்றாள் பாட்டி.

‘ ‘தலையில் கிறுக்குப் பிடித்தாலும் ஆம்பிளைதானே… ‘ என்று பாட்டி முணுமுணுத்தது அம்மா செவிகளிலே விழுந்திருக்குமா ?

—-

uthayam@ihug.com.au

Series Navigation