காஷ்மீர் பிரச்னை

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue

இரா மதுவந்தி, மஞ்சுளா நவநீதன்


காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட வேண்டும், அல்லது காஷ்மீரிகளை தனிநாடாக்கிவிட வேண்டும் என ஒரு கோரிக்கை ரொம்பகாலமாக வெளிநாடுகளில் ஒலித்து வருகிறது. பாகிஸ்தான் தனிநாடு கேட்டபோது முதல் வரிசையில் நின்று இனங்களின் சுயநிர்ணய உரிமை என்று அதற்கு வக்காலத்து வாங்கி, தெரியாத முஸ்லீம் லீக் தலைவர்களுக்குக்கூட சொல்லிக்கொடுத்த இடதுசாரிகள் இன்று காஷ்மீர் இனவிடுதலை, பஞ்சாப் இன விடுதலை, நாகாலாந்து இன விடுதலை என்று பேசுவது ஆச்சரியமானதல்ல.

முதலில் இனம் என்று ஒன்று இருக்கிறது என்பதையே அறிவியலறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. முந்தைய மனிதப்பிரிவுகளாக இரண்டாம் உலகப்போரின் போது பேசப்பட்ட காக்கஸிய, மங்கோலாய்ட், கறுப்பின பிரிவுகள் எல்லாமே வெளித்தோற்றமே என்பதையும், உண்மையில் மனித இனத்தில் பிரிவுகளே இல்லை என்பதையும் அறிஞர்கள் நிரூபித்துவிட்டார்கள். இனரீதியான கருத்துக்களும், அது தாங்கிப்பிடித்த இனவெறி அரசியலும் பொய் என்பது பல வருடங்களுக்கு முன்னரே நிரூபிக்கப்பட்டு விட்டது. நவீன மரபணு அறிவியல், தோலின் வர்ணத்துக்கு ஒரே ஒரு ஜீன் இக்கணூண்டு மாறுவதுதான் காரணம் என்று அறிவியற் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தோலின் நிறத்தையும், மூக்கின் அளவையும் அளந்து பார்த்து இவர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று பேசுவது அபத்தமானது. நம் மக்களிடம் அறிவியற் சிந்தனை போய் சேர்ந்துவிடாதவாறு அவர்களை சினிமாக்காதல்களிலும், நாற்காலிகளை மாறிமாறி சுத்தும் சினிமாச்சண்டைகளிலும் மூளையை மழுங்கடிக்க ஒரு பெரும் கூட்டமே இருக்கிறது. நவீன அறிவியல் சொல்லும் பாடத்தைத் தெரிந்தவர்கள் கூட, இதெல்லாம் எவனுக்குப் புரியப் போகிறது என்று பேசுவதில்லை.

ஆகவே, இன்னும் மார்க்ஸ் 18ஆம் நூற்றாண்டில் என்ன சொன்னார் என்பதை இன்னும் மேற்கோள் காட்டும் மார்க்ஸீயர்களும், அவர்களுக்கு அறிவு ஜீவிப் பட்டம் கொடுத்து அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளும் மதவாத இனவாத அரசியல் தலைவர்களும், இது போன்ற இனவாத அரசியலுக்கும் அதன்மூலம் மக்களை பயமுறுத்தி தனிநாடு கேட்டுப் போராட தூண்டுவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டே இருக்கிறது.

சரி இப்போது காஷ்மீர் பிரச்னைக்கு வருவோம்.

வெளிநாட்டில் பேசிக்கொண்டிருந்தது போக இப்போது குல்தீப் நய்யார் போன்ற இடதுசாரி இந்தியர்கள் காஷ்மீருக்கு தனிநாடு அந்தஸ்து கொடுக்க வேண்டும் எனப் பேசிவருகிறார்கள்.

ஒரு மனிதரின் கருத்தைச் சொல்வதற்கு முழு உரிமை ஒருவருக்கு இருக்கிறது. ஆனால் அந்தக் கருத்து குப்பையா இல்லையா என்பதைச் சொல்லவும் எனக்கு உரிமை இருக்கிறது.

காஷ்மீரில் சுமார் 55 சதவீதம் முஸ்லீம்களும், சுமார் 35 சதவீதம் இந்துக்களும் இருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்த இந்துக்களை எல்லாம் முஸ்லீம் போராளிகள் துரத்திவிட்டார்கள். ஆகவே இவர்கள் தங்கள் நாட்டிலேயே அகதிகளாக ஜம்முவிலும், டெல்லியிலும் அகதிக் குடிசைகளில் வாழ்ந்துவருகிறார்கள். 55 சதம் முஸ்லீம்கள் இருந்தார்கள் என்பதால் அந்த மாநிலத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட முடியுமா ? மீதம் இருக்கும் காஷ்மீர சிறுபான்மையினரை என்ன செய்யலாம் ? பெளத்தர்களும் இந்துக்களும் தவறான மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று கொன்று விடலாமா ? சரி அவர்களை காஷ்மீர் தவிர்த்த இந்தியாவுக்கு அனுப்பிவிடலாமா ? அல்லது பாகிஸ்தானில் இந்துக்களுக்கு சென்ற 50 வருடங்களில் நடந்தது போல கட்டாய மதமாற்றம் செய்துவிடு என்று பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்லலாமா ? காஷ்மீரில் கொஞ்சம் கிரிஸ்தவர்களும் சீக்கியர்களும் கூட இருக்கிறார்கள். அவர்களது ‘இனவிடுதலை ‘ என்ன ஆவது ?

சரி காஷ்மீரை தனிநாடாக அனுப்பிவிட்டு அங்கு ஆஃகானிஸ்தான் போல பசி பட்டினி பஞ்சம், பெண்கள் கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்தால் அதனை அவர்களது கலாச்சாரப் பிரச்னை என்று ஒதுக்கி விடலாமா ? ஏற்கெனவே பாகிஸ்தானிய முஸ்லீம் தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் எந்த பொழுது போக்குச் சாதனங்களையும், பெண்களுக்கான சுதந்திர உடைகளையும் அனுமதிப்பதில்லை.

இப்படி இந்தியா முஸ்லீம் என்பதற்காக காஷ்மீரை கை கழுவி விட்டது என்றால், ஒரு தமிழ்நாட்டு முஸ்லீமையும், ஆந்திர கேரள முஸ்லீமையும் இந்தியா அந்நியப்படுத்துகிறது என்றுதானே பொருள் ?

பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானை ஆதரித்து, இங்கே இருந்த முஸ்லீம்களை அந்நியப்படுத்தினார்கள் இடதுசாரிகளும் காங்கிரஸ்காரர்களும். இன்று காஷ்மீர பஞ்சாப் நாகாலாந்து இனவிடுதலை என்று பேசி இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களையும் சீக்கியர்களையும் கிரிஸ்துவர்களையும் இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்தத் துடிக்கிறார்கள் இதே இடதுசாரி ‘சிந்தனையாளர்கள் ‘.

ஒரு மதம் மூலமாகவோ, ஒரு இனம் மூலமாகவோ, ஒரு மொழி மூலமாகவோ உருவாக்கப்படும் எந்த தேசமும் அழிவையே சந்திக்கும். அவ்வாறு உருவாக்கப்படும் தேசங்கள் அனைத்தும், இயற்கையாகவே அதனுள் இருக்கும் சிறுபான்மையினரை அழிக்க முயலும், அவ்வாறு அழிப்பதை தனது இருத்தலின் நியாயமாகக் காட்டும். இந்த நோக்கு அதன் அழிவை மட்டுமல்ல, பக்கத்து நாடுகளின் அழிவுக்கும் வழி வகுக்கும். இதற்கு உதாரணமாக இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற தேசங்கள் இருக்கின்றன. இஸ்ரேலும் பாகிஸ்தானும் மட்டுமே ஒரு மதத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட தேசங்கள். இந்த தேசங்களின் உள்ளே, சிறுபான்மையினரை அழிப்பதும், அதனை பன்னெடுங்கால கொள்கையாகவும், அரச கட்டளையாகவும் முன்னிருத்துவதும் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது (இந்த இரண்டுக்கும் வெகுகாலம் அமெரிக்கா ஆதரவும் அளித்துவந்தது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். இந்த அமெரிக்க ஆதரவு, அங்கிருக்கும் பக்கத்து நாடுகளை முன்னேற விடாமல் சிக்கலில் மாட்டிவிட பயன்பட்டிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரபு நாடுகள் இஸ்ரேல் குறியில், முன்னேற்றத்தை இழந்தன. இந்தியாவும் அதன் அருகாமை நாடுகளும், பாகிஸ்தான் பண்ணும் கூத்தால், முன்னேற்றத்துக்கு செலவு செய்யக்கூடிய தொகையை ராணுவத்துக்கு செலவு செய்யவேண்டிய கட்டாயத்துக்கு முடுக்கப்பட்டன)

என்னைக்கேட்டால் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காஷ்மீரில் இல்லை.

காஷ்மீர் பிரச்னையின் தீர்வு 50 வருடங்களுக்கு முன் நடந்த இந்தியப் பிரிவினையை வாபஸ் வாங்குவதில் இருக்கிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு இடையே இருக்கும் பெர்லின் சுவரை உடைப்பதில் இருக்கிறது. பாகிஸ்தான் என்ற ஒரு தேசமே இல்லை என்று சொல்வதில் இருக்கிறது.

இதில் உள்நாட்டு அமைச்சர் அத்வானி சொன்ன ‘கான் பெடரேஷனை ‘ நான் ஆதரிக்கிறேன். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, பர்மா, நேபால் போன்ற நாடுகள் ஒரே ராணுவத்தையும், ஒரே பணத்தையும், ஒரே வெளியுறவுக்கொள்கையையும் கொண்டு, மற்ற உரிமைகள் அந்தந்த நாடுகளிடன் இருப்பதும், மக்கள் சுதந்திரமாக இந்த நாடுகளுக்கு வேலைதேடியும், சுற்றுலாவுக்கும் செல்லும் வசதி இருப்பதும் இந்த பிரச்னைகளை தீர்க்கும் என்பதே நான் சொல்வது.

இது நடப்பதற்கு இன்று தகுந்த சூழ்நிலை இல்லை. அதற்கு நாட்டுத்தலைவர்களுக்கிடையே இருக்க வேண்டிய நம்பிக்கையும் இல்லை.

ஆனால், இன்று காஷ்மீரை பாகிஸ்தானிடமோ அல்லது தனிநாடாகவோ ஆக்க முனைவது, வர வேண்டிய நம்பிக்கைகளுக்கு பெரும் தடைக்கல்லாக இருக்கும். இது இந்தியாவுக்குள் ஒரு உள்நாட்டு மதக்கலவரத்தை தூண்டிவிடுவதற்க்கான சாத்தியங்களோடும் இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டியது.

Series Navigation