கால நதிக்கரையில்……(நாவல்)-11

This entry is part [part not set] of 34 in the series 20070621_Issue

வே.சபாநாயகம்அத்தியாயம் – 11

கருடகம்பத்தை அண்ணாந்து பார்த்தார். பதினைந்தடி உயரமிருக்கலாம். சின்ன வயதில் அண்ணாந்து பார்த்தால் ஆகாசத்தை எட்டுவது போலப் பிரமிப்பாக இருக்கும். இப்போது அது கைக்கு அருகில் இருப்பதுபோலத் தெரிகிறது. பெருமாள் கோயில் எதிரில், மிகவும் தள்ளி போக்குவரத்து சாலையை ஒட்டி ஒரு கருங்கல் மேடை மீது கம்பம் நின்றது. உச்சியில் சின்னதாய் ஒரு குட்டி சதுர மண்டபம். அதனுள் கைகூப்பி நிற்கும் சின்ன கருடபகவான். குட்டி மண்டபத்தின் அடிப்பாகத்தின் நான்கு பக்கத்திலும் நான்கு வெண்கல மணிகள் பொருத்தப்பட்டு அவை காற்றில் அசையும்போதெல்லாம் ‘கிணு கிணு’ வென இனிய ஓசை எழுப்பிக்
கொண்டே இருக்கும். சிறு வயதில் இதனடியில் வரும்போதேல்லாம் நின்று அந்த ஓசையை ரசித்தது நினைவுக்கு வருகிறது. அதோடு சுண்டுவில் பழகிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் அவர் குறி பார்த்து அந்த மணிகளின் நாக்கை அடித்து ஒலி எழுப்பச் செய்திருக்கிறார்.

சின்ன வயதில் சுண்டுவில்லால் குறிபார்த்து ஒன்றை அடிப்பதில் சிதம்பரத்துக்கு மிகவும் ஆர்வம் இருந்தது. சாலை ஒரம் ரீங்கரித்துக் கொண்டு செல்லும் ஒற்றைத் தந்திக்கம்பியை அடித்து ஒலி எழுப்புவது ஒரு சிலிர்ப்பான விளையாட்டு. அப்படிப் பலதையும் குறிவைத்து அடித்துக் கொண்டிருந்தபோது, ஒரு தடவை தோட்டத்தில் ஒரு பூச்செடிமீது அமர்ந்து பூவினுள் ஊசி போன்ற தன் சின்ன அலகை நுழைத்து சிறகுகளை வேகமாய் அசைத்தபடி தேன் பருகிக் கொண்டிருந்த ஒரு வண்ணத் தேன்சிட்டை, அடிக்கும்போது பச்சாதாபம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் குறி தப்பாமல் அது தேன்சிட்டை அடித்து வீழ்த்தியதும் ஒரு திகிலான குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதுவும் கீழே விழுந்த குருவியை நெருங்கிப் பார்த்தபோது அவருக்கு நெஞ்சைப் பிசைகிற மாதிரியான ஒரு சோகம் ஏற்பட்டது. தேன் குடித்த அந்தச் சின்ன அழகிய அலகு சிதைந்து குருவியின் முகம் ரத்தம் சொட்டச் சொட்ட அலங்கோலமாய்க் கிடந்தது அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒரு கொலையைச் செய்துவிட்ட தவிப்பும், இனி தன்னால் அதை உயிர்ப்பிக்க முடியாது என்கிற பரிதவிப்பும் எழ, அந்த சுண்டுவில்லைத் தூக்கியெறிந்துவிட்டு சற்றுநேரம் அங்கேயே உட்கார்ந்து அழுதார். பிறகு ஒரு குழி தோண்டி அந்தக் குருவியைப் புதைத்தார்.

அதற்குப் பிறகு அவர் அந்த விளையாட்டில் ஈடுபட்டதில்லை. இன்று எங்காவது தேன்சிட்டு பூவில் தேன் குடிக்கும் காட்சியைக் காண நேரிட்டால் அலங்கோலமாய் மூக்கு சிதைந்து ரத்தப்பெருக்கில் கிடந்த அந்தப் பரிதாபத் தேன்சிட்டு நினைவுக்கு வந்து அவரைச் சோகத்தில் ஆழ்த்துகிறது.

கோவிலுக்குள் போய்ப் பார்க்க அவா ஏற்பட்டது. பைகளை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தார். கோவிலின் வலதுபுறம்தான் ஊர்ப் பொதுச் சாவடி. அதில்தான் அவர் படித்த ஆரம்பப் பள்ளி இருந்தது. இடதுபுறம் விசாலமாய்ப் பரந்த வெளி. பெரிய ஏரியின் அந்தத் தெருவுக்கான படிக்கட்டை நோக்கிச் செல்லும் பாதை அதில் இருந்தது. இப்போது பாதை இருந்த இடத்தில் ஒரு குடிசை இருந்தது. தொடர்ந்து அத்திமரத்தடி வரை குடிசைகள். அந்தக்காலத்து ஊர் மணியமோ உஷார்க்கமிட்டித் தலைவரோ இருந்திருந்தால் ஊரின் நுழைவாயிலில் இப்படி திருஷ்டி பரிகாரமாய் அழுக்குக் குடிசைகள் இடம் பிடிப்பதைத் தடுத்திருப்பார்கள். ஆனால் இப்போது அதுமாதிரி அதிகாரம் செய்ய ஆளில்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர்; யாரும் யாரையும் தட்டிக்கேட்க முடியாது. கேட்கக்கூடிய பஞ்சாயத்துத் தலைவர், புதிய கிராம நிர்வாக அதிகாரிகளை சுலபத்தில் சரிக்கட்டிக் கொள்ளலாம் என்பதால் பட்டா இல்லாத எந்த இடத்திலும் குடிசைகள் முளைத்து விட்டன. இங்கே கோவிலின் அழகைக் கெடுக்கிற மாதிரி, ஏரிக்குச் செல்ல வழியின்றி வழிமறித்திருக்கிற குடிசைகள் ஜனநாயகத்தின் அவலத்தைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. நகரத்தில் மட்டுமில்லாமல் கிராமங்களிலும் இந்த அத்துமீறல்கள் வேகமாய்ப் பரவி வருவது சுதந்திரத்தின் மாற்று சிந்தனையைக் காட்டுவதாயிருகிறது.

கோவிலின் நுழைவாயில் கற்றளியாலானது. கோபுரமில்லாத மொட்டை மண்டபம். படியில் பைகளை வைத்துவிட்டு மண்டபத்தின் வலது வெளிப்புறத்தில் – பழைய நினைவில் ஒன்றைத் தேடினார். அதோ! அந்தச் சின்னச் சிற்பம் – ஒரு அடிச்சதுரக் கல்லினுள் அப்படியே இருந்தது. கலை நேர்த்தி மிக்க சிற்பமில்லை. கல்தச்சர்கள் பலகைக் கற்களை ஒழுங்குபடுத்தி அடுக்குகையில் இடையே இணைத்து அடுக்கப்பட்ட, சுடுமண் சிற்பம் போன்ற ஒரு மொத்தையான சிற்பம். இரண்டு மனித உருவங்கள் கால்மாடு தலைமாடாய் மாறி தழுவி இணைந்து நிற்கிற அந்தக்காலத்து ‘போர்னோகிராபி’.

சிறுவயதில் பள்ளிப் பிள்ளைகள் – அவர் உட்பட – அங்கு வர நேர்கையில் வெட்கத்துடன் கண்களைக் கைகளால் முடிக் கொண்டது நினைவுக்கு வந்தது. ஏதோ அசிங்கத்தைப் பார்க்கிற பொய்யான அருவருப்பு ஏற்பட்டிருக்கிறது. விடலைப் பருவத்திலும் கூட யாரும் பார்க்கவில்லை என்றால் நிமிர்ந்து பார்க்க ஆசை ஏற்பட்டதும், ஆனால் ஒருநாளும் முழுமையாகப் பதற்றமின்றி பார்த்ததில்லை என்பதும் நினைவில் எழுந்தது. இப்போது நிதானமாய் எந்தவித மனத்தடையோ புறத்தடையின் அச்சமோ இல்லாமல் பார்த்தார். இப்படி எல்லா கோவில்களிலும்- சின்னப் பிள்ளையார் கோவில் கட்டினால்கூட அதன் சின்னக் கோபுரத்திலும் இப்படி ஏதாவது ஒரு ஆண்பெண் உறவைச் சித்தரிக்கும் காட்சி அமைத்திருப்பதைப் பார்த்திருக்கிறார். இதைத் திருஷ்டி பரிகாரம் என்று மக்கள் சொன்னாலும் இதன் உள்ளார்ந்த நோக்கம் இன்றுவரை அவருக்குப் பிடிபட்டதில்லை.

முன்மண்டபத்தைத் தாண்டி உள்ளே அடி எடுத்து வைத்தார். உள் மண்டபத் துத் திண்ணை மீது பெரிய நகரா இருந்தது. பூஜை நடக்கும்போது மெய்க்காவல் அதை முழக்குவார். மதியம் உச்சிவேளை பூஜையின் போது அது ‘டம டம’ வென்று பேரோசை எழுப்புவதுதான் பக்கத்திலுள்ள பள்ளியின் பிள்ளைகளுக்கு ‘மணி பனிரெண்டு பள்ளி விடப்போகிறது’ என்பதற்கான அறிவிப்பு.

அப்போது ஊரில் சிதம்பரம் வீட்டில் மட்டும்தான் ஒரு பெரிய சுவர்க் கடிகாரம் இருந்தது. அப்பா அதை 1932ல் இரண்டு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொன்னார்கள். வெகுநாட்கள்வரை அந்தக் கடிகாரத்தின் பெண்டுலம் ஆடுகிற பகுதியின் அடியில்
அப்பா காலண்டரில் வெட்டி ஒட்டிய 1932 என்ற சீட்டு இருந்தது. அரைமணிக்கு ஒரு தடவை மணி அடிக்கிற கடிகாரம் அது. ஊர்ப்பிள்ளைகள் எல்லாம் அதை வந்து அதிசயம்போல் பார்ப்பார்கள். ஊர் முழுதும் நல்லது கெட்டதுகளுக்கு நேரம் பார்த்துக் கொள்ள அது உதவியது. யார் வீட்டிலாவது குழந்தை பிறந்தால் வீட்டுப் பையனை சிதம்பரத்தின் வீட்டுக்கு, மணி பார்த்துவரத் துரத்துவார்கள். அப்பையன் மூச்சிரைக்க ஓடி வந்து மணி கேட்டுப் போவான். குழந்தை பிறந்த நேரமாக அப்போது அவன்
சொல்லும் நேரம்தான் குறித்து வைக்கப்படும். எப்படியும் அதிக பட்சம் பத்து நிமிஷ மாவது வித்தியாசமானப் பதிவாக இருக்கும். இன்று கடிகாரம் இல்லாத வீடே இல்லை. வசதியானவர் வீட்டில் அறை தோறும் இன்று டிஜிடல் கடிகாரம் தொங்கு
கிறது. ஊருக்குக்குள் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடி நேரம் பார்த்தது போக இப்போது வீட்டுக்குள்ளேயே எழுந்து போய் அறைக்கு வெளியே வந்து மணி பார்க்கவும் சோம்பலாகி விட்டது.

படியில் வைத்த பைகளை எடுத்துக் கொண்டு முன் மண்டபத்தைத் தாண்டி நடந்தார். வலதுபுறம் ஒரு கிணறு இருந்தது. அது கோவில் உபயோகத்துக்கு மட்டுமின்றி ஊர்முழுதுக்குமே குடிநீர் ஆதாரமாக இருந்தது. எப்பொழுதும் குளிர்ச்சியாய்
இருந்த வற்றாத அந்தக் கிணற்று நீர் பல ஆண்டுகள் ஊருக்குத் தாகம் தணித்து வந்தது. பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பே – சிதம்பரம் ஊரை விட்டுப் போகுமுன்பே தொடர்ந்த வானம் பொய்த்ததாலும், பாசன ஏரி வற்றிப் போனதால் அவரவர் எஞ்சின் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி பயிர் வைத்ததாலும் கோவில்கிணறு சுத்தமாய் வற்றிப்போனது. கிணற்றருகில் சென்று எட்டிப் பார்த்தார். குப்பையும் கூளமும் கொட்டி பாதிக்குமேல் தூர்ந்திருந்தது. அப்போது ஊரிலேயே கோயில்களிலும் ஊர்ப் பெரியதனக்காரர் வீடுகளிலும் மட்டுமே கிணறுகள் இருந்தன. ஊர்ப் புரோகிதர் வீட்டிலும் இருந்தது. வறட்சி அதிகமானபோது எல்லாக் கிணறுகளுமே வறண்டு போயின.

பைகளை முன்னால் தெரிந்த பலிபீடத்தின்மீது வைத்து விட்டு ஒரு முறை கோவிலை வலம் வந்தார். தெற்குப் பிரகாரத்தில், பள்ளியில் படித்தபோது ஆண்டு தோறும் தசராவின்போது கோவில்களுக்குக் கூட்டமாய்ச் சென்று கோலாட்டம் அடித்தத் ஞாபகம் வர, பின்னல் கோலாட்டத்துக்கான கம்பத்தைக் கட்டி வைக்கிற கல்சன்னலருகில் வந்து நின்றார். கோலாட்டத்துக்காக முதல் நாளே பிள்ளைகளேஅந்த இடத்தை உழவாரம் கொண்டு செதுக்கி சுத்தப் படுத்தி வைப்பார்கள். இப்போது அந்த இடம் புல் மண்டி நடையைத் தடுத்தது. பிரதட்சணம் பண்ணுபவர்கள் வந்து நாளாகி இருக்க வேண்டும் ஒருமுறை வலம் வந்த பிறகு சன்னதி எதிரில் கல்தரையில் உட்கார்ந்த்தார். அந்தக் காலத்துக் கோவில் நிர்வாகம் பற்றி எண்ணிப் பார்த்தார்.

தாத்தா, பெரியப்பா பிறகு அப்பா என்று குடும்பமும் மற்ற ஊர்ப் பெரிய தனக்காரர்களும் தருமகர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். அப்பாவின் முயற்சியால் தான் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெருமாள் கோவிலும் சிவன் கோவிலும் பக்கத்து ஊரான இராசேந்திரப்பட்டணம் என்கிற ‘திருஎருக்கத்தம்புலியூர்’ சிவன் கோவிலும் சேர்ந்து ஒரே அலுவலரின் பொறுப்பில் விடப்பட்டன. கோவிலை அரசு எடுத்துக் கொண்டால் அதன் நிர்வாகமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என்று கருதித்தான் அப்பா அதைச் செய்தார்கள். ஆனால் கோவில் பொறுப்புக்கு நியமிக் கப்பட்ட முதல் அதிகாரியே பொது நிர்வாகத்திலிருந்து அரசு நிர்வாகத்துக்கு ஒரு அமைப்பு மாறினால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு எச்சரிக்கை போல அமைந்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்