…காற்று தீரும் வரை

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

நம்பி.


அவள் ஏன் சாகவேண்டும் ?. அதுவும் அழகாய் பிறந்துவிட்டு. பின் என்னைக் காதலித்துவிட்டு. அவள் செய்த தவறுதான் என்ன ?. மல்லிகை பூவையும், பாஸந்தியையும் விரும்பியதைத் தவிர ?

எனக்கு பிடித்தமான வேளைகளில் அவள் எப்பொழுதும் வெள்ளை சல்வர் கம்மீஸ்தான் அணிவாள். அன்றுகூட அப்படித்தான். பூக்குவியலாய் ஓடி வந்தாள்.

‘டபுள் கங்கிராட்ஸ் ‘ மூச்சு வாங்கிணாள். ‘ஒன்னு இன்னைக்கு ஜெயிச்சதுக்கு. இன்னொன்னு நாளைக்கு ஜெயிக்கப் போறதுக்கு ‘. வியர்வைக் கன்னத்தில் இனிப்பாய் முத்தமிட்டாள்.

எங்கள் கல்லூரி பதினேழு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் கூடைப்பந்து இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளது. கல்லூரி முழுவதும் உற்சாகம். கொண்டாட்டம். அந்த குதுகூலம் இவளையும் தொற்றிக்கொண்டுள்ளது.

போராடினோம். வெற்றி பெற்றோம். பலத்த கைதட்டல்களுடனும் என் வலது கண்ணில் அடியுடனும்.

ஆஸ்பத்தரியில் கண் விழித்தேன்.

‘ரொம்ப வலிக்குதா ? ‘ தையல் போட்டிருந்த புருவத்தை மிருதுவாக தடவியபடி கேட்டாள்.

‘நீ இப்படி தடவி விடுறதா இருந்தா உடம்பு பூரா தையல் போட்டுக்கலாம் ‘

‘ச்சீ… நாளைக்கு அனுப்பி வைச்சுடுவாங்க. நீ வந்துதான் ஒரு நாள் பிரின்ஸ்பல் கிட்ட பேசி ஜெயிச்சதுக்கு லீவு வாங்கித் தரனும் ‘

‘நாளைக்கேவா ?. இங்க நர்ஸ் எல்லாம் எவ்வளவு அழகா இருக்காங்க. இன்னும் ஒரு வாரம் கழிச்சுதான் வருவேன் ‘

‘வழியாத. ஒழுங்கா வந்து சேரு ‘ நறுக்கென்று கையில் கிள்ளிவிட்டு போனாள்.

அன்று சீக்கிரமே எழுந்துவிட்டேன். எட்டு மணிக்கு. ஆறு மணிக்கே வரச்சொல்லியிருந்தாள். இந்த பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் அவளோடு வைத்துக் கொண்டால் என்ன ?. நானும் கட்டாயம் வரவேண்டுமாம். ஜீன்ஸும், ‘I never drink… Little either ‘ பனியனுமாய் ஓடினேன். தரிசனம் முடித்து தரிசனம் தந்து கொண்டிருந்தாள்.

‘ஒரு நாளைக்காவது சீக்கிரம் எழுந்து குளிக்கக் கூடாதா ? ‘ கோபமாய் முறைத்தாள்.

‘ஃபைனல் இயர் விடுதில தண்ணியே வர்றது இல்ல ‘

‘அழுக்கு. பொய் சொல்லாத. குளிச்சிட்டு அப்புறமா இதப் பிரிச்சிப் பார்க்கனும் ‘ பார்சலாய் ஏதோ கொடுத்தாள்.

அறைக்குள் வந்ததும் முதல் காரியமாய் பிரித்துப் பார்த்தேன். வாவ்! நான் வெற்றிக் கோப்பையை சந்தோஷமாய் தூக்கிப் பிடிக்கும் காட்சியை அப்படியே வரைந்திருந்தாள். கீழே முதல் செமஸ்டர் கணக்கு தேறியதற்கு வாழ்த்து வேறு. இதற்கு ஒரு முத்தம் கடனாக கொடுத்தே ஆகவேண்டும். ஏற்கனவே நிறைய பாக்கி இருக்கிறது.

எப்பொழுதாவது சண்டை போடுவாள். அவள் கோபிக்கும்பொழுது கண்கள் லேசாக கலங்கும். நுனி மூக்கு மட்டும் சிவக்கும். ஒரு முறை கோபித்தாள். என் வகுப்பு சாந்தி அவள் பிறந்த நாளுக்கு எனக்கு மட்டும் தனியாக ட்ரீட் கொடுத்த போது. ‘அவள்தான் கூப்ட்டான்னா உடனே போயிடுறதா. அவகிட்டேயே பேசிக்க ‘. ஒரு வாரம் பேசவில்லை.

அன்று காண்டானில் காத்திருந்தாள்.

‘செகண்ட் இயர்ல எல்லாரும் டூர் போறாங்க. பம்பாய், கோவா…… ‘ புடவைத் தலைப்பை விரலில் சுழற்றியபடி சொன்னாள்.

‘நான் இங்க யாரையும் சைட் அடிக்காம இருக்கன். நீ நிம்மதியா போய்ட்டு வா ‘

‘ரெண்டு பேரும் ஒரே வகுப்பா இருந்தா ஜாலியா போகலாம் இல்ல ‘

‘இல்ல. நீ கோவாலருந்து வரும்போது ஜின் வாங்கிட்டு வா ‘

‘போடா போக்கிரி ‘. பிடிப்பதற்குள் ஓடிவிட்டாள்.

ஒரே அடியாய் போய்விட்டாள். அரபிக்கடல் அழைத்துக் கொண்டது. அணைத்துக் கொன்றது.

***

ராமேசுவரம் கடல் அலையடித்தது.

‘என்னங்க, குளிக்கவா ? புண்ணியமா இருக்கும் ‘

‘வேண்டாம். வா போகலாம் ‘ அவசரமாய் மறுத்தேன்.

மணலில் விளையாடிய பேரக் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்தேன். காரணம் புரியாமல் தள்ளாடி தொடர்ந்தாள் என் மனைவி.

***

nambi_ca@yahoo.com

Series Navigation