காம சக்தி

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

சி. ஜெயபாரதன், கனடாபூக்கும் மலரில் பொங்கும் தேனது !
ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு !
அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி !
கவரும் சக்தி காந்தம் போல !
துருவம் இரண்டு ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீ££தி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !
வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !
ஈரினம் இணைந்து பூரணம் அடைதல்
மனித நியதி ! மானிட வளர்ச்சி !
காமம் உடற்கு கவின்தர வல்லது !
மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,
முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,
காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !
பைரன், பாரதி, ஷெல்லி, ஷேக்ஸ்பியர்
பாரதி தாசன், கண்ண தாசன்,
வள்ளுவர், வால்மிகி, வியாச முனிவர்
பாடகி மீரா, லதாமங் கேஷ்கர்,
ஆடகி மேனகை, மாதவி, ஊர்வசி,
வைஜயந்தி மாலா, கமலா, பத்மினி,
காளிதாஸ், கம்பன், கவிக்குயில் ஆண்டாள்,
காமக் கடலில் நீந்தாக் கலைஞர்
பூமியில் ஏது ? காம சுரப்பிகள்
கலைத்துவ வேர், உரம், நீருமாகும் !
காம மிகுதி கலையாக்கத் தகுதி !
காம சக்தியைக் கட்டுப் படுத்தி,
காவியம் படைப்போர் காலனை வெல்பவர் !
ஓவியம் தீட்டுவோர் உயர்தனி மனிதர் !
நாடகம், நாட்டியம், மேடையில் படைப்போர்,
சிற்பம் செதுக்கும் அற்புதச் சிற்பி,
ஆய்வுகள் புரிவோர், அறிவியல் ஞானி !
நுண்கலை வடிப்போர் மண்புகழ் பெறுவர் !
வறுமையும் நோயும் சுரப்பியின் நஞ்சு !
காமம் மீறல் தீமையின் விதைகள் !
பாமர மூடன் காமச் சுரப்பியைக்
காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !
காம சுரப்பிகள் காய்ந்து போனால்
அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !
முதுமையின் கருநிழல் முழுஉடற் பாயும் !
காவியம், கலைகள், ஓவியம் ஏது ?
நுண்கலை யாவும் கண்களை மூடும் !
நடனம் ஏது ? நல்லிசை ஏது ?
முடமாய்ப் போகும் நடமிடும் ஆத்மா !

*********************

S. Jayabarathan [(jayabarat@tnt21.com) Dec 14, 2006 (R-1)]

Series Navigation