காதிலே கேட்ட இசை

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

அ.முத்துலிங்கம்


கடந்த ஆண்டில் ஒரு நாள் அதிகாலை நான் வழக்கம்போல கணினியை திறந்தேன். ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எழுதியவர் பெயர் சுமி. யாரென்று தெரியவில்லை. அது ஒரு சிறிய கடிதம்.
‘நீங்கள் இணையத் தளங்களில் எழுதுவதைப் படித்து ரசிக்கிறேன். உங்களுக்கு என் அப்பா கைலாசபதியை தெரியுமா? என் அம்மா சொல்வார் அவர் உங்கள் நண்பர் என்று.’ என்னுடைய பதில் இன்னும் சின்னதாக இருந்தது. ‘எந்தக் கைலாசபதி?’ அதற்கு வந்த பதில் என்னை திடுக்கிட வைத்தது. ‘பேராசிரியர் கைலாசபதி.’ என்னால் நம்பவே முடியவில்லை. சுமி அமெரிக்காவில் இருந்ததால் உடனேயே அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நல்ல காலமாக கைலாசின் மனைவி சர்வமங்களமும் அவருடனேயே அப்போது தங்கியிஇருந்தார். அவருடனும் பேசினேன். 40 வருடங்களாக துண்டிக்கப்பட்ட உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதிலே புதுமை என்னவென்றால் சுமியோ, சர்வமோ ஒருவித தங்குதடையுமின்றி பழைய நட்பை பாராட்டி வெளிப்படையாகவும் உள்ளன்புடனும் தயக்கமில்லாமல் பேசியதுதான்.
கைலாஸின் பழக்கம் நான் மாணவனாய் படித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்டது. இன்றைய என்னுடைய எழுத்துக்கு அவர்தான் முழுக்காரணம். அவரே எனக்கு ஒரு புது உலகத்தை திறந்துவிட்டவர். புதுமைப்பித்தனையும், ஜேம்ஸ் ஜோய்ஸையும் அவர்தான் அறிமுகப்படுத்தினார். அவருடைய வீடு எனக்கு எப்பவும் திறந்திருக்கும். புத்தகங்களை நான் கேட்காமலே தூக்கிக் கொடுப்பார். ‘இதைக் கொண்டுபோய் படித்துப்பாரும்’ என்பார். அதைப் படித்ததும் எனக்கு இன்னொரு கதவு திறக்கும். புத்தகத்தை திருப்பி கொடுக்கும்போது ஒரு விவாதம் நடைபெறும். அவருடன் சேர்ந்து தியேட்டருக்கு படம் பார்க்கப் போயிருக்கிறேன். அவருடன் சேர்ந்து பலதடவை உணவகத்தில் உணவருந்தியிருக்கிறேன். ஒரு முறையாவது என்னை உணவுக்கு பணம்கொடுக்க அவர் அனுமதித்ததில்லை. முதன்முதல் ஆறாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதிய ·போர்ட் கார் வாங்கினார். அதன் முன் இருக்கையில் அமர்ந்து அவருடன் பிரயாணம் செய்திருக்கிறேன். அவர் மேல்படிப்பிற்காக வெளிநாடு போனார். நான் வேறுநாடு போனேன். அத்துடன் எங்கள் தொடர்பு முறிந்தது. தொலைபேசி இல்லை. கடிதம் இல்லை. பிரிந்த எங்கள் பாதைகள் மீண்டும் சந்திக்கவேயில்லை.
இந்த இடைக்காலத்தில் கைலாஸ் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் Tamil Heroic Poetry என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றிருந்தார். இலங்கை பல்கலைக் கழக யாழ்ப்பாண வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றது அவர்தான். அதைத் தொடர்ந்து மனிதப்பண்பியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றினார். இருபதுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதினார். இன்று தமிழில் ஆய்வு செய்யும் எந்த ஒரு மாணவரும், அவர் எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, கைலாசபதியை புறக்கணித்து ஆய்வை முற்றுப்பெறச் செய்யமுடியாது. மரபு இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் ஆகியஇவற்றை மார்க்சிய கண்ணோட்டம் மூலம் விளங்கிக் கொள்வதற்கு ஒரு திசைகாட்டியாக செயல்பட்டவர் கைலாஸ். அவர் எனக்கு ஒரு காலத்தில் நண்பராக இருந்தார் என்பது எவ்வளவு பெருமையானது.
சர்வம் தொலைபேசியில் நீண்டநேரம் பேசினார். பல்கலைக்கழக வாழ்க்கை, அவருடைய நண்பர்கள், இலக்கியம், இசை என்று பலதையும் தொட்டார். ‘அவருடைய கடைசி காலத்தைப் பற்றி சொல்லுங்கள்?’ என்றேன்.
‘கைலாசுக்கு சோர்வு என்பதே கிடையாது. புத்தகம் படிப்பார். நண்பர்களுடன் இலக்கிய விவாதம் செய்வார். இரவிரவாக எழுதுவார். ஒரு மணி, இரண்டு மணிக்கு முன்னர் அவர் படுத்ததில்லை. நல்ல ஒரு மாணவரைப்போல இடைவிடாது உழைத்தார். அடுத்த நாள் காலை ஒரு பரீட்சை எழுதவேண்டும் என்பதுபோலவே நடந்துகொள்வார். அவர் இரவிரவாக எழுதியதை அது ஆங்கிலமாக இருந்தால் நான் தட்டச்சு செய்து வைப்பேன். அது தமிழ் என்றால் அதை நான் நல்ல எழுத்தில் திருப்பி எழுதவேண்டும். அத்துடன் வேலை முடியாது. திருப்பி படிக்கும்போது அவருக்கு புதுப்புது எண்ணங்கள் முளைக்கும். என்னிடம் sorry sorry என்று மன்னிப்பு கேட்டபடி நட்சத்திரக் குறி போட்டு வேறு ஒற்றையில் A,B,C என்று எழுதிவைப்பார். நான் அவற்றையெல்லாம் கட்டுரையில் சேர்த்து திரும்பவும் எழுதவேண்டும். ஆரம்பத்தில் ஆறு பக்க கட்டுரையாக இருந்தது முப்பது பக்கமாக மாறிவிடும்.
1982 நவம்பர் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. திடீரென்று களைத்துப்போய் காணப்பட்டார். ஒன்பது மணிக்கு போய் படுத்துக்கொள்ள துடங்கினார். அடுத்த நாள் காலை எழும்பும் போதும் அதே களைப்புடன் இருந்தார். முந்திய உற்சாகம் மறைந்துவிட்டது. எங்களுடைய மருத்துவ நண்பர் ஸ்ரீஹரன் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துவிடலாம் என்றார். சரி என்று செய்தோம். அன்று பின்னேரம் தொலைபேசியை அவரிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நீண்ட நேரம் தொலைபேசி வரவில்லை ஆனால் அவர் நேரே வீட்டுக்கு வந்தார். அவருடன் இன்னும் சில நண்பர்களும் வந்தார்கள். ‘நீங்கள் இன்றே கொழும்புக்கு வெளிக்கிடவேண்டும். உங்கள் இருவருக்கும் டிக்கெட்டும் வாங்கிவிட்டோம்’ என்றார். ‘இன்றா, என்ன விளையாடுகிறீர்களா? அது எப்படி முடியும்?’ என்று மறுத்துவிட்டோம். ‘ஒன்றும் பயமில்லை. கொழும்பில் காட்டினால் ஒரு கிழமையிலேயே திரும்பிவிடலாம். எல்லாம் ஒரு மனத் திருப்திக்குத்தான்’ என்றார். அவசர அவசரமாக ஒரு கிழமைக்கு தேவையான உடுப்பை பெட்டியில் அடைத்துக்கொண்டு புறப்பட்டோம்.
கொழும்பு போய் இறங்கியதும் அங்கே என்னுடைய அப்பா எங்களைச் சந்தித்தார். மருத்துவ மனைக்கு போனால் சிறப்பு மருத்துவர் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தது மேலும் ஆச்சரியமாகவிஇருந்தது. எல்லா ஏற்பாடுகளையும் ஸ்ரீஹரன் யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே செய்துவிட்டார். நாங்கள் மருத்துவ மனையில் இருந்த முதல் ஐந்து ஆறு நாட்களும் கைலாஸால் மறக்க முடியாத நாட்கள். அவ்வளவு மகிழ்ச்சியாக அவர் இருந்தார். மருத்துவர்களும் தாதிகளும் அந்தப் பரிசோதனை இந்தப் பரிசோதனை என்று இழுத்தடித்தாலும் அவருடைய மகிழ்ச்சிக்கு காரணமிஇருந்தது. எழுத்தாள நண்பர்கள் அவரை எப்பவும் சூழ்ந்தபடி இருந்தார்கள். ஒரு பெரிய இலக்கியப் பட்டறை அங்கே தொடர்ந்து நடந்தது. விவாதங்கள் சூடுபிடிக்கும்போதே சில வேளைகளில் இவர் கண்கள் மெல்ல மூடிவிடும். ஆனாலும் உதட்டிலே மெல்லிய புன்னகை வீசும். அவர் கண்கள் தூக்கத்தில் மூடிக்கொண்டிருந்தாலும் உள்ளே பெரிய விவாதம் இன்னமும் ஓடிக்கொண்டுதான் இருந்தது. நண்பர்கள் ஓசைப்படாமல் மெல்ல எழுந்துபோவார்கள்.
ஐந்தாவது நாள் என்று நினைக்கிறேன். இந்துப் பத்திரிகை என்.ராம் இந்தியாவிலிஇருந்து நண்பர் மூலம் ஒரு புத்தகக் கட்டு அனுப்பியிருந்தார். அவை இவர் கேட்ட புத்தகங்களாக இருக்கலாம். புத்தகத்தை திறந்து பார்ப்பதும், தடவிக் கொடுப்பதுமாக இருந்தார். மருத்துவருடைய சோதனைகளும், தாதிமாருடைய தொந்திரவுகளும் இல்லாவிட்டால் அன்றே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியிருப்பார். அதே நாள் இரவு நான் பேராசிரியர் ராமசாமியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது ஓர் எதிர்பாராத விசயம் நடந்தது. ‘சர்வம், நீங்கள் வெளிநாட்டுக்கு போகப்போவதாக அறிந்தேன். இந்த மாதிரி லூக்கீமியாவில் நோயாளியின் வேதனைகளைக் குறைப்பதற்குத்தான்…..’ என்று ஆரம்பித்து அவர் பேசிக்கொண்டே போனபோது எனக்கு வேறு ஒன்றுமே கேட்கவில்லை. லூக்கீமியா என்ற வார்த்தையே காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்தது. நான் இடிந்துபோய் உட்கார்ந்து அழத்தொடங்கினேன். அதுவரைக்கும் மருத்துவர்கள் கான்சருக்குத்தான் வைத்தியம் பார்த்தார்கள் என்ற விசயம் எனக்குத் தெரியாது.
அன்று என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகமில்லை. எல்லா மருத்துவர்களும் என்னை சூழ்ந்துகொண்டார்கள். ‘சர்வம், நீங்கள் தைரியமானவர் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் என்ன நோய் என்று கைலாசுக்கு தெரியாமல் இருப்பது நல்லது. அவர் மனம் உடைந்து போய்விடும். முன்புபோலவே அவருடன் சந்தோசமாய்ப் பழகுங்கள். அவர் ஐமிச்சப்படக்கூடாது.’
நான் கைலாஸின் படுக்கைக்கு போனபோது அவர் தான் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி போவது, அவசரமாக எழுதி முடிக்கவேண்டிய கட்டுரைகள், புதிய வேலைத் திட்டங்கள் பற்றி எல்லாம் ஆர்வமாகப் பேசினார். தன்னுடைய நோய் குணமாகி இரண்டு கிழமைகளில் திரும்பிவிடலாம் என்றே அவர் சிறுபிள்ளைத்தனமாக நம்பினார்.
ஒவ்வொரு நாளும் அவருக்கு ரத்தம் ஏற்ற ஆரம்பித்தார்கள். வேறு யாரோவுடைய ரத்தம் உள்ளே போனதும் கொஞ்சம் உசாராக இருப்பார். ஆனால் சில மணி நேரங்களில் செலுத்திய அவ்வளவு ரத்தமும் வலுவிஇழந்துபோய்விடும். மறுபடியும் சோர்ந்துபோவார். காலைகளில் பதற்றமாக இருப்பார். என்ன என்பேன். ராட்சசி வரப்போகிறார் என்பார். அவர் சொன்னது ரத்தம் எடுக்கும் தாதியை. அவர் அப்படியான வார்த்தையை உபயோகிப்பதே இல்லை. பார்க்க பரிதாபமாகவிருந்தது. நோகிறதா என்பேன். ஒரு குழந்தைப்பிள்ளை கொட்டாவி விடுவதுபோல வாயை திறப்பார். உள்ளே முழுக்க அவிந்துபோய் ரத்தமாயிருக்கும். இன்னும் ஒன்றிரண்டு நாளைக்குத்தான், பிறகு எல்லாம் சரியாய்ப் போகும் என்பேன். அவர் அப்படியே கண்ணயர்ந்துபோவார்.
அன்று பின்னேரம் பெரும் சோர்வுடன் காணப்பட்டார். என்னுடைய அப்பா அவரைப் பார்க்க வந்தார். என் அப்பாவிடம் அவருக்கு மரியாதை அதிகம். சிறுவயதிலிஇருந்து அப்பாதான் அவரைப் படிப்பித்து வளர்த்தெடுத்தவர். அவரைப் பார்த்ததும் கிட்ட வரச் சொன்னார். அப்பா போனார். இன்னும் கிட்ட என்றார். மேலும் இரண்டடி வந்ததும் கைலாஸ் கட்டிலில் உட்கார்ந்த நிலையில் அப்பாவைக் கட்டிப்பிடித்தார். இது கைலாஸ் வாழ்நாளில் செய்யாத ஒன்று. உணர்ச்சிகளை லேசில் காட்டமாட்டார். ஒரு வேளை இவருக்கு தெரிந்துவிட்டதோ, விடை பெறுகிறாரா என்றெல்லாம் யோசித்தேன். உண்மையில் கைலாஸ் இறக்கும் வரைக்கும் தனக்கு என்ன நோய் என்பது தெரியாமலேதான் இறந்துபோனார்.
இரண்டு நாள் முன்பாக நானும் அவரும் தனிமையில் இருந்தோம். அவர் என்னுடைய கையைப் பிடித்தார். ஒலிநாடாவில் அவருக்குப் பிடித்த பாடல் ஓடிக்கொண்டிருந்தது. கடந்த சில வருடங்களாக அவருக்கு இசையில் நாட்டம் அதிகமாயிருந்தது. ஒவ்வொரு வருடமும் நண்பர்களுடன் சென்னை இசைவிழாவுக்கு பயணமாகிவிடுவார். இசை பற்றிய நுணுக்கங்களை தானாகவே கற்றார். நான் பத்து வருடமாக முறையாக வீணை கற்றிருந்தேன். ஆனால் எனக்குத் தெரியாத விசயங்கள் அவருக்கு தெரிந்திருந்தன. ஒரு ராகத்தை பாடகர் பாட ஆரம்பித்தவுடன் அது என்னவென்று சொல்லிவிடுவார். எப்படி அந்த ஆற்றலை வளர்த்துகொண்டார் என்பது அவருக்கு பக்கத்தில் எந்த நேரமும் இருந்த எனக்கே புரியவில்லை.
அவர் மனதிலே பெரிய ஆசையிஇருந்தது. பாரதியாரைப் பற்றி நிறைய குறிப்புகளும், ஆராய்ச்சி முடிவுகளும் அவரிடம் இருந்தன. பாரதியாரைப் பற்றி எழுதும் எண்ணம். முன்பு ஒருவரும் எழுதியிராத வகையில் ஒரு முழு நூலை உருவாக்கவேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தார். நாலு தொகுதிகாளாக கொண்டுவருவதற்கு நிறைய விசயம் சேர்ந்திருந்தது. அவருடைய பீடாதிபதி வேலை, நிர்வாகத்தில் அதிக நேரத்தை விழுங்கியது. மாணவர்களும், கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் அவரிடமிஇருந்த மீதி நேரத்தை பங்குபோட்டுக் கொண்டார்கள். எப்படியும் நேரம் ஒதுக்கி முழுக்கவனத்தையும் செலுத்தி தொகுப்பை முடித்துவிடவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தார்.
அத்துடன் இன்னொரு ரகஸ்ய ஆசை. ஒரு நாவல் எழுதுவது. அந்தக் காலத்தில் பல யாழ்ப்பாண மக்கள் பணம் சம்பாதிக்க மலேயா போனார்கள். அவருடைய பெற்றோர் அப்படிப் போனவர்கள்தான். இரண்டாம் உலக போர்ச்சூழலை வைத்து, மலேயாப் பின்னணியில் ஒரு நாவல் எழுதும் திட்டம். மருத்துவ மனையிலிஇருந்து திரும்பியதும் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். அடுத்த வாரம் நிச்சயம் திரும்பிவிடலாம் என்பதே அவர் நினைப்பு.
திடீரென்று ‘சர்வம், எங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?’ என்றார். எனக்கு திக்கென்றது. ‘இது என்ன கேள்வி, இந்த நேரத்தில்’ என்றேன். ‘உண்மையை சொல்லுங்கோ’ என்றார். அவர் கை என்னுடையதை இறுகப் பற்றிக்கொண்டிருந்தது. நான் சொன்னேன். ‘இதனிலும் பார்க்க மகிழ்ச்சியான வாழ்க்கை வேறு எங்கேயிருக்கு. எனக்கு ஒரு குறையுமிஇல்லை.’ ‘எனக்கும் அப்படித்தான். உங்கட வாயாலே கேட்கவேணும்போல ஆசையாய் இருந்தது.’ அவர் வாய் முணுமுணுத்தது, ‘காலம் என்பது. கறங்குபோல் சுழன்று. கீழது மேலாய். மேலது கீழாய்…’ அப்படியே அன்று தூங்கிப் போனார்.
அடுத்த நாள்தான் அவர் கடைசி முறையாக என்னோடு பேசப்போகும் நாள்.
வழக்கம்போல அன்றிரவு நான் அவருடனேயே தங்கினேன். அடுத்த நாள் காலை நான் வீட்டுக்கு போய் உடுப்பு மாற்றி குளித்துவிட்டு அவருக்கு சூப் செய்துகொண்டு வரவேண்டும். புறப்பட்டேன். ‘சர்வம், கொஞ்சம் நில்லுங்கோ. இந்தப் பாட்டை கேளுங்கோ. இது வைணவ இசைபோல இருக்கு, இல்லையா?’ என்றார். நான் திகைத்துப்போனேன். எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை. ஒலிநாடா ஓடவில்லை. அந்த இசை அவர் கற்பனையில் மட்டுமே ஓடியது. நான் ‘நல்ல இசைதான். அருமையாயிருக்கு’ என்றேன். அவருடைய வாயில் மெல்லிய புன்னகை. இசையை ஆழ்ந்து ரசிக்கும் பரவசம் முகத்தில் தெரிந்தது. நான் சற்று தயங்கி நின்றுவிட்டு புறப்பட்டேன்.
வீட்டுக்கு வந்த சில நிமிடங்களில் தொலைபேசி ஒலித்தது. மருத்துவமனையிலிஇருந்து என்னை உடனே வரும்படி அழைத்தார்கள். எனக்கு டக்கென்றது. ஏதோ நடக்கப்போகிறது என்று மனது பதைத்தது. நான் திரும்பி வந்தபோது அவர் கோமாவில் இருந்தார். அவர் கண்கள் என்னைப் பார்க்கவில்லை. அவர் வாய் என்னுடன் பேசவில்லை. ஓர் உடம்புதான் அங்கே படுத்திருந்தது. அவர் பிறகு கண் விழிக்கவேயிஇல்லை. அவரிடம் சற்று முன்னர் நான் பேசியதுதான் கடைசி. கேட்காத இசையை ‘அருமையாயிருக்கு’ என்று சொன்னது கொஞ்சம் மனசுக்கு வருத்தமாயிருந்தது. கோமாவிலிஇருந்து மீளாமல் அன்று மாலையே அவர் உயிர் நீத்தார்.

அவர் இருக்கும்போது நண்பர்கள் எப்போதும் வீட்டை நிறைத்திஇருப்பார்கள். வழக்கமாக இரண்டு மூன்று விருந்தாளிகள் வீட்டிலே சாப்பிடுவார்கள். மாதத்திலே ஒரு தடவையாவது இருபது பேருக்கு எங்கள் வீட்டில் விருந்து நடப்பது சர்வ சாதாரணம். சனி, ஞாயிறுகளில் அதிகாலையிலேயே பண்ணை சந்தைக்குக்கு போய் மீன், நண்டு என்று வாங்கிக் கொண்டுவந்து போடுவார். நான் சமைப்பேன். அவருக்கு முட்டை பொரியலில் அப்படி ஒரு விருப்பம். அது கட்டாயம் இருக்கவேண்டும். மலேயாவில் சிறுவயதில் சண்டைக்காலத்தில் அவர் வாழ்ந்தபோது நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறார். பெற்றோர்கள் இருக்கும் உணவை அவருக்கு கொடுத்துவிட்டு பட்டினி கிடப்பார்கள். அந்தக்காலத்தில் ஒரு முட்டை அகப்பட்டால் விருந்து கிடைத்ததுபோல என்பார். அதை அவர் மறக்கவேயிஇல்லை. நண்பர்களுடன் விவாதங்கள் சூடாக நடக்கும். நான் சமையலறையில் நெடுக நிற்பதும் பிடியாது. நானும் வந்து கலந்து கொள்ளவேண்டும். என்னுடைய அபிப்பிராயத்தை அடிக்கடி கேட்பார்.
அவர் இறந்த பிறகும் எழுத்தாள நண்பர்கள் தொடர்ந்து வந்து விசாரித்து போவார்கள். அதேபோல தமிழ்நாட்டில் வ.சே. குழந்தைசுவாமியும் குடும்பமும் தங்கள் அன்பினால் எங்கள் இழப்பை ஈடு செய்ய உதவினர். நீர்வை பொன்னையன் அடிக்கடி வந்து பார்ப்பார். மற்றது எழுத்தாளர் ரகுநாதன். அவர் வீட்டுக்கு போவதற்கு என் மகள்களுக்கு நிறையப் பிடிக்கும். ரகுநாதனின் மனைவி எனக்கு விருப்பம் என்று சண்டி வறை செய்துகொண்டு வந்து தருவார். ரகுநாதனை சைக்கிள் ஓட்டவேண்டாம் என்று மருத்துவர் கட்டளையிட்ட பிறகும் இரண்டு பஸ் பிடித்து வந்து எங்களைப் பார்ப்பார்.
கைலாஸ் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால்தான் நாங்கள் திருவையாற்றிலிருந்து திரும்பியிருந்தோம். அடிக்கடி விரிவுரைகளுக்காக இந்தியா போயிருந்தாலும் கடைசித் தடவை போனபோது என்னவோ அவருக்கு நடந்துவிட்டது. அடுத்த வருடமும் குடும்பத்துடன் திருவையாறு போகவேண்டும் என்றார். காவிரியும், அந்தக் காற்றும், வீதிகளில் கேட்கும் இசையும் அவருக்கு பிடித்துக்கொண்டது. அவர் விருப்பத்தை நான் நிறைவேற்றினேன். அவர் இறந்த அடுத்த வருடம் குடும்பத்தோடு திருவையாறு போய் அவருடைய சாம்பலைக் காவிரியில் கரைத்தேன். அவர் மிகவும் நேசித்த அந்தக் காற்றிலும் நீரிலும் இசையிலும் அவர் கலந்துகொண்டார் என்றுதான் நினைக்கிறேன்.
மருத்துவமனையில் படுத்திருந்தபோது அவரைச் சுற்றியிருந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அவருடைய எஞ்சிய வாழ்நாள் நிமிடம் நிமிடமாக கரைந்துவருவது தெரிந்திருந்தது. அவருக்கு அது தெரியவில்லை. தான் திரும்பி யாழ்ப்பாணம் போய் பாரதி பற்றிய புத்தகத்தை தொடங்கிவிடலாம் என்றே நினைத்திருந்தார். எழுத்தாளர்கள் வந்து பேசிவிட்டு போனபின்னரும் அவருடைய சிந்தனைகள் ஓயாது, அவர் முகம் ஒரு பரவச நிலையிலிஇருக்கும். இதை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். அன்று கடைசியாக என் காதுகள் கேட்கமுடியாத ஒரு வைணவ இசை அவருக்கு கேட்கிறது என்று சொன்னபோது அவர் முகம் அப்படியான ஒரு பரவச நிலையையே எட்டியிருந்தது. அவர் மனதில் என்னவென்ன சிந்தனைகள் அந்தச் சமயம் ஓடிக்கொண்டிருந்தனவோ. அவையும் எனக்கு கேட்கவில்லை.

END

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்