கவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளல் அழகப்பர்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

முனைவர் சி.சேதுராமன்



தமிழ் இலக்கிய உலகில் வள்ளலகள் பலர் தோன்றி காட்சியளிக்கின்றனர். அவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற கல்வி வள்ளலாகத் திகழ்ந்தவர; அழகப்பர். அவர் அருங்குணங்கள் நிறையப்பெற்றுத் தமிழ்கூறும் நல்லுலகம் தலைகொண்டு போற்றும் வள்ளல்களுள் ஒருவராக விளங்கினார். வள்ளல் அழகப்பர் செட்டிநாட்டில் காரைக்குடிக்கு அருகில் உள்ள கோட்டையூரில் 6.4.1909 – ஆம் ஆண்டு இராமநாதன் செட்டியாருக்கும், உமையாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். அழகப்பர் முதலில் உள்ளுரில் உள்ள திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்று, பின்னர் காரைக்குடியில் உள்ள எம்.எஸ் உயர்நிலைப் பள்ளியில் சேர;ந்து பயின்றார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர;ந்து பயின்று 1930-ஆம் ஆண்டில் எம்.ஏ., பட்டம் பெற்றார்.
இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் படிப்பில் சேர்ந்து பயிலும்போது, அங்கு வந்த ரைட் ஆனரபில் சீனிவாச சாஸ்திரியார் முயற்சியில் அழகப்பர் இலண்டன் சார்ட்டர்டு பாங்கில் வேலை பார்த்தார். அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்க்கையை நடத்தினார். இதற்கிடையில் அவர் விமானம் ஓட்டும் தொழிலிலும் பயிற்சி பெறத் தொடங்கி இரண்டாண்டில் சிறந்த விமானியாகவும் ஆனார். இங்கிலாந்தில் கல்வி கற்று மூன்றாண்டுகளுக்குப் பிறகு விமானி, பாங்குத் தொழிலாளி, வழங்கறிஞர் என்ற பல சிறப்புகளுடன் அழகப்பர் தாய்நாடு திரும்பினார்.
1937-ஆம் ஆண்டில் கேரளாவில் திருச்சூருக்கு அருகில் புதுக்காடு எனும் சிற்றூரில் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் எனும் நூற்பாலை உள்ளிட்ட பல்வேறு ஆலைகளையும், விமானக் கம்பெனியையும் நிறுவி, அவற்றின் மூலம் அளவிலாப் பொருளீட்டி உலகப் புகழ் பெற்றார். ஒருமுறை அழகப்பர் பங்கு வணிகம் தொடர்பாக மும்பைக்குச் சென்றார். அங்கு புகழ் பெற்ற ரிட்ஸ் ஹோட்டலுக்குள் நுழைந்து அதன் மேலாளர் முன் போய் நின்றார். அவரிடம், ‘‘தங்குவதற்கு அறை இருக்கிறதா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த மேலாளர், ‘‘இல்லை; இந்த ஹோட்டலில் எல்லாம் உம்மால் செலவு செய்து தங்க முடியாது’’ என்றார். அதற்கு அழகப்பர், இந்த ஹோட்டலில் எத்தனை அறைகள் இருக்கின்றன?’’ என்று திருப்பிக் கேட்டார். ‘‘என்ன? ஹோட்டலை விலைக்கு வாங்குகிறவர் மாதிரிக் கேட்கிறீரே’’ என்றார் மேலாளர்.
அழகப்பர் அதற்கு விடை கூறாது, அந்த ஹோட்டலின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்றார். அவரது ஹோட்டலை விலைக்கு வாங்க விரும்புவதாகவும், அதற்கு நல்ல விலை கொடுப்பதாகவும் சொன்னார். அழகப்பரின் சிறப்பினை அறிந்திருந்த அந்தப் மும்பை முதலாளி உடனே, அதை நல்ல விலைக்கு விற்றுவிட்டார். மேலும், ஹோட்டல் மேலாளரிடம் தொலைபேசியின் மூலம், ‘‘நமது ஹோட்டலை அழகப்பருக்கு விற்றுவிட்டேன். ஆகவே, நீர் உடனே இங்கே வந்து அவரைச் சந்தித்து, அவரது உடன்பாடு பெற்று வேலை பார்க்க வேண்டும்’’ என்று கூறினார்.
செய்தியறிந்த மேலாளர் ஓடி வந்து அழகப்பரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். உடனே அழகப்பர் புன்னகைபுரிந்து, ‘‘உமது அகம்பாவம் எனக்கு இத்தனை இலட்சம் செலவு வைத்துவிட்டது. இனிமேல் யாரிடமும் ஆணவமாக நடந்து கொள்ளாதீர்’’ என்று அறிவுரை கூறி அறிவுறுத்தி அவரை அனுப்பினார். பின்னர், அந்த ஹோட்டலைச் சிறிது இலாபத்துடன் சில நாட்களில் விற்றுவிட்டார்.
அழகப்பர் அண்ணல் காந்தியடிகளிடம் அளவற்ற அன்புடையவர். சுதந்திரத்திற்கு முன்பு ஒருமுறை அழகப்பர் ஒரு மாநாட்டிற்குச் சென்றார். மாநாடு முடியும் நிலையில் அண்ணல் காந்தியடிகளால் சில பொருள்கள் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டன. மாநாட்டுக்காக இரண்டாயிரம் ரூபாய்க்குத் தயாரிக்கப்பட்ட அழகான கொடிகள், திரைச்சீலைகள் முதலியன காந்தியடிகளால் ஏலம் விடப்பட்டன. காந்தியடிகள் ஏலத்தின் முதல் தொகையாக ரூ.5000 என்றார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த அழகப்பர் உடனே ஏலத் தொகையை ஒரு இலட்சம் ரூபாய் என்று கூறினார். கூட்டம் வியந்து பாராட்டிக் கைதட்டி ஆராவாரித்தது. வேறுயாரும் ஏலம் கேட்க முன்வரவில்லை. உடனே காந்தியடிகள் அழகப்பரை அழைத்து, அன்போடு அணைத்துக்கொண்டு அவரிடம் கொடிகளைக் கொடுத்தார். அழகப்பர் ஒரு இலட்சம் ரூபாய்க்குக் காசோலை வழங்கினார்.
அவரது நண்பர்கள் சிலர் அழகப்பரிடம் ஏலத் தொகை பற்றி விசாரித்தனர். கொடிக்குஒரு இலட்சம் ரூபாய் மிகுதி என்றனர். அதற்கு அழகப்பர், ‘‘காந்தியடிகளின் அன்புக்கும், அரவணைப்புக்கும் ஒரு இலட்சம் என்ன? எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் வழங்கலாம்’’ என்றார் (அரு.சோமசுந்தரன், வள்ளல் அழகப்பர் பக்.,47-48). இந்நிகழ்ச்சி அழகப்பருக்கு காந்தியடிகளின் மீதுகொண்டிருந்த அன்பினைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1947-ஆம் ஆண்டு ஜுலை மாதம் அழகப்பர் சென்னை அடையாற்றில் நடந்த அன்னிபெசண்ட் அம்மையார் நூற்றாண்டு விழா மநாட்டில் கலந்து கொண்டார். அக்கூட்டத்தற்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், அழகப்பரின் சிறந்த நண்பருமாகிய, திரு. இலட்சுமணசாமி முதலியார; தலைமை வகித்தார். அவர் தமது தலைமையுரையில், தமிழகத்தின் கல்வித்தேக்கம் பற்றிக் குறிப்பிட்டு, செல்வர்கள் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட முன்வரவேண்டும் என்றும், கல்லூரிகளை ஏற்படுத்த ஒத்துழைக்க வெண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளைக் கேட்ட அழகப்பர் உடனே மேடைக்குச் சென்று, காரைக்குடியில் தான் ஒரு கல்லூரி ஏற்படுத்த முன்வருவதாக அறிவித்தார். இதனை அங்கு வந்திருந்த அனைவரும் வரவேற்றனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்ற முறையில் திரு. இலட்சுமணசாமி முதலியார் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு மேடையிலேயே அனுமதி வழங்கினார். மறுநாள் காரைக்குடிக்கு வந்த அழகப்பர் காரைக்குடி நகர்மன்றத்திற்குச் சொந்தமான, காந்தி மாளிகையை வாடகைக்குப் பெற்று, பேராசிரியர்கள் பலரை அதிகச் சம்பளம் கொடுத்து அழைத்து வந்து 15.8.1947 இந்தியா சுதந்திரம் பெற்ற நாளன்று அழகப்பா கல்லூரியைத் தொடங்கினார். இதனையடுத்து அங்கு பல கல்வி நிலையங்கள் தோன்றின.
காரைக்குடியில் அழகப்பர் நிறுவிய ‘‘மின்-இரசாயன ஆராய்ச்சிக்கூடமே அவரின் மேலான சாதனையாகும். இவ்வாராய்ச்சிக் கூடத்தைக் காரைக்குடியில் நிறுவுவதற்காக வள்ளல் அழகப்பர் 15 இலட்சம் ரூபாயும், 300 ஏக்கர் நிலமும் கொடுத்து, 1948-ஆம் ஆண்டு அதற்குரிய அடித்தளக்கல்லினை, முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு நாட்டச் செய்தார். அதன்பின் அதனை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களைக் கொண்டு தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் உயர்நிலைப்பள்ளி, தொழில் நுணுக்கப்பள்ளி உள்ளிட்டவற்றை நிறுவியதுடன் பல்வேறு கல்வி நிலையங்களுக்கும் ஏராளமாகப் பணத்தை வாரி வழங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தார் கிண்டியில் அழகப்பச் செட்டியார் பொறியியற் கல்லூரியை நிறுவுவதற்கு 5,00,000 ரூபாயும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற் கல்லூரி தொடங்குவதற்கு 5,00,000 ரூபாயும், கொடுத்தார். காரைக்குடியில் அழகப்பா பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கும் ஆவன செய்தார். இங்ஙனம் தமிழக்த்தின் பொறியியற் கல்வி வரலாற்றில் மூன்று பொறியியற் கல்லூரிகள் முதலில் தோன்றுவதற்கு வித்தூன்றியவர் அழகப்பர் ஆவார். 1948-ஆம் ஆண்டு கணிதமேதை இராமாநுசத்தின் பெயரால் சென்னையில் பெரும் பொருட்செலவில் அழகப்பர் கணித அறிவுக்கூடத்தைத் தொடங்கினார். டெல்லியில் உள்ள தென்னிந்தியக் கல்விக் கழகத்திற்கும், மதுரை லேடிடோக் கல்லூரிக்கும் நன்கொடைகள் வழங்கினார்.
அழகப்பர், தமது மகளிர் கல்லூரிக்குத் தாம் குடியிருந்த சொந்த மாளிகையையே மனமுவந்து கொடுத்தார். இது அவருடைய கல்விக் கொடைச் செயல்களுக்கு ஒரு மணிமுடிபோல் அமைந்தது. இப்பெருங்கொடையை,
‘‘கோடி கொடுத்த கொடைஞன் குடியிருந்த
வீடும் கொடுத்த விழுச்செல்வன் – தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன்: அறிவூட்டும்
வெள்ளி விளக்கே விளக்கு’’ (கொடைவிளக்கு)
என்று பேராசிரியர் டாக்டர் வ.சுப. மாணிக்கம் அவர்கள் போற்றிப் பாடியுள்ளார். இங்ஙனம் கொடை செய்த அழகப்பருக்கு அண்ணாமலை அரசர் அவர்கள், ‘‘வள்ளல்’’ என்ற பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
அழகப்பருக்குத் தமிழ் மொழி மீது அளிவிறந்த பற்றுண்டு. 1937 – இல் கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழத்துறையை ஏற்படுத்த ஒரு லட்சம் வழங்கினார். மேலும் தமிழ்க் கலைக்களஞ்சிய வெளியீட்டுக்குப் பெருமளவில் நன்கொடை வழங்கினார். பேராசிரியர் முத்துசிவன் மறைந்தபொழுது அழகப்பர் அழுது புலம்பினார். அவர் நினைவாக அரிய மலர் ஒன்றை வெளியிட ஆவன செய்தார். காரைக்குடிக் கம்பன் கழகத்தின் தலைவராய் இருந்து இலக்கியப் பணிபுரிந்தார். அறிஞர் திரு.சா.கணேசன் அவர்களின் மொழிப் பணிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் தேவாரம், திருவாசகம் முதலியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஓதுவார்களுக்கு ஆதரவு நல்கினார்.
தமக்கு ஆண் குழந்தை இல்லாதததை அழகப்பர் குறையாகக் கருதியதே இல்லை. எனினும் அவரது உறவினர்கள் சில சமயம், ‘‘உங்களுக்கு ஆண் வாரிசு வேண்டாமா? யாராவது ஒரு பையனைத் தத்து எடுத்துக் கொள்ளுங்களேன்’’ என்று வலியுறுத்துவா. அதற்கு அழகப்பர், ‘‘இதோ. . .கல்லூரியில் கல்வி கற்றுச் செல்லும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் என் வாரிசுகள் தானே. இவர்கள் இத்தனைபேர் இருக்கும்பொழுது நான் ஏன் குறிப்பிட்ட ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்க்கவேண்டும். அது தேவையில்லை. என் சொத்து எல்லோருக்கும் பயன்படட்டும்’’ என்பார் (வள்ளல் அழகப்பர் ப.,30-31). அனைத்துக் குழந்தைகளையும் தமது குழந்தையாகக் கருதிய அழகப்பர் உள்ளம் போற்றுதற்குரியது.
இவரது பணிகளைப் பராட்டி 1943 -இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், 1944-இல் சென்னைப் பல்கலைக்கழகமும் அவருக்கு, ‘‘டாக்டர்’’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. 1946-இல் அவருக்கு அரசாங்கத்தால் ‘‘சர்’’ பட்டம் வழங்கப்பெற்றது. ஆனால் அதை அழகப்பர் பயன்படுத்தவில்லை. சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் வாழ்நாள் உறுப்பினராக, அழகப்பர் 1946-இல் தமிழக ஆளுநரால் நியமிக்கப்பெற்றார். அழகப்பரின் கலிவிப்பணி, சமுதாயப்பணி, தொழிற்பணி ஆகியவற்றைப் போற்றி இந்திய அரசு அவருக்கு 1957-ஆம் ஆண்டு ‘‘பத்மபூஷன்’’ பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தியது.
அழகப்பர; கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாகவும், கேம்பிரிட்ஜில் நடந்த காமன்வெல்த் பல்கலைக்கழக மாநாட்டில் சென்னைப் பல்கலைக்கழகப் பிரதிநிதியாகவும், ஜப்பானில் நடந்த பசிபிக் உறவு மநாட்டில் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் கலந்துகொண்டு அரிய சொற்பொழிவுகள் ஆற்றி நமது நாட்டிற்குப் பெரும்புகழ் பெற்றுத்தந்தார்.
அழகப்பர் வரவு வருமுன்னரே செலவு செய்த வள்ளலாவார். கையில் பொருள் இல்லை என்பதற்காக அவர் கொடை கொடுக்கத் தயங்க மாட்டார். சொத்தை விற்றேனும் கொடை வழங்குவார். அழகப்பர் தமது சொத்துக்களை எல்லாம் திரட்டி ஓர் அறநிதியமாக ஏற்படுத்தினார். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் முழுதும் கல்விக்கே செலவழிக்கப்பட வேண்டும் என்று உயில் எழுதி வைத்தார். சென்னையில் வேப்பேரியில் உள்ள தமது சொந்த வீட்டையும் அறநிலையத்தில் சேர்த்தார். தனக்காக ஏதும் வைத்துக் கொள்ளாது பிறருக்காக அனைத்தையும் உரித்தாக்கி வாழ்ந்து, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பாரி வள்ளலாக அழகப்பர் திகழ்ந்தார்.
தந்தைப் பெரியார், வள்ளல் அழகப்பரை, ‘‘ டாக்டர் அழகப்பச் செட்டியார் தமது வள்ளன்மையால் கட்டியுள்ள பல்வேறு கல்வி நிலையங்களே உண்மையில் அவருடைய சொத்தாகும். இது என்றைக்கும் அவரைவிட்டு அகலாது. இக்கல்லூரிகள் அவர் பெயரையும், புகழையும் என்றும் உலகிற்கு எடுத்துக்கூறும். இவ்வாறு எக்காலத்தும் தமக்குரிய சொத்தாக விளங்குமாறு தமது செல்வமனைத்தையும் நல்வழியில் பயன்படுத்திய அவரை நான் பாராட்டுகின்றேன்’’ என்று மனமுவந்து பாராட்டினார்(மேற்படி நூல் ப., 56).
கல்விக்காக அனைத்தையும் ஈந்தமையால் வள்ளல் அழகப்பரை,
‘‘கோடானு கோடித்தொகை கொடுத்துக் கல்விக்
கோவில்கள் பலஎடுத்துக் கற்றோர; நெஞ்சம்
ஏடாகத் தன்புகழை எழுதும் வீரன்’’ (புலவர் பூ .அமிர்தலிங்கன்)
‘‘வெள்ளமென வருநிதியம் வாழும் வீடு
வினைமுயற்சி அத்தனையும் கல்விக் கீந்தான்’’ (கவிஞர் முடியரசன்)
‘‘சங்கநிதி பதுமநிதிச் செல்வனானாய்
சலியாமல் ஈந்து பெரும் வள்ளலானாய்
மங்கலஞ்சேர் கல்விநெறித் தலைவனானாய்!’’(கவிஞர் அரு.சோமசுந்தரம்)
‘‘கல்வி வளர்க்கும் காவலனாம் – தமிழ்க்
கற்பகமாம் செயல் அற்புதமாம்’’ (கவிஞர் கூத்தரசன்)
‘‘கல்வி வளரக் கலைவளரக் கல்லாதார்
அல்லல் அகல அறம் வளர்த்தான்’’ (கவிஞர் சொ.மீ.சுந்தரம்)
என்று கவிஞர;கள் பலரும் போற்றிப் புகழ்ந்தனர். இங்ஙனம் கவிஞர்கள் போற்றிய கல்வி வள்ளலாக அழகப்பர் திகழ்ந்தார்.
அழகப்பர் கொடை செய்வதையே தம் வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டார். பிறருக்காக வாழ்ந்த பெருந்தகையாளரான அழகப்பர் நோய்வாய்ப்பட்டு 5.4.1957-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் சென்னையில் இறந்தாலும் அவரது உடல் காரைக்குடிக்குக் கொண்டு வரப்பட்டு கல்லூரி வட்டத்தில் எரியூட்டப்பட்டது. கல்விக்காக அனைத்தையும் அள்ளிக் கொடுத்த கல்வி வள்ளல் இறந்தாலும், இறவாது இன்னும் கல்வியாளர் நெஞ்சில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். கவிஞர் சிவனடியான் அவர்களின்,
‘‘இறந்தானோ அழகப்பன்! இதய மேசொல்!
இல்லை அவன் இருக்கின்றான் காரை மண்ணில்
. . . .. . . . .. . . . . . . .. . . . . . . . .
புறம்புகழும் கடையேழு வள்ளலோடு
பெயரிணைத்து வாழ்கின்றான் எட்டாம் வள்ளல்!’’ (மேற்கூறிய நூல், ப.58)
என்ற கவிமொழிக்கேற்ப இன்றும், என்றும் ஒவ்வொருவர் இதயத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வள்ளல் அழகப்பருக்கு நூற்றாண்டு விழாக்கொண்டாடப்படும் இந்நேரத்தில் கல்வி வள்ளல் காட்டிய வழியில் நடந்து கல்லாமையை அகற்றி நாடு வளம்பெற நற்பணிகள் ஆற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் கைமாறாகும்.


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,
E.Mail. Malar.sethu@gmail.com

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>