கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 2

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

விஸ்வாமித்ரா


ம.வெங்கடேசன் அவர்கள் தோண்டியெடுத்திருக்கும் ம.பொ.சி. அவர்களின் தமிழ்முரசு தலையங்கம் ஒன்று அன்றைய தமிழர் தலைவர்களின் நாட்டுப்பற்றுக்கு ஓர் அருமையான உதாரணம்.

திண்ணைப்பள்ளியில்கூட ஒழுங்காய்ப் படிக்காத கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்

தமிழர்தம் காவியமான சிலப்பதிகாரத்தைத் தூற்றிச் சொன்ன முத்துக்கள்:

‘சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன ? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது! ‘

‘கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம். ‘

‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா ? ‘

இப்படிப் பல மேடைகளில் முழங்கிவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குப் பதிலடியாய் ‘கண்ணகியைப் பழிக்கும் கருஞ்சட்டைத் தலைவர் ‘ என்ற தலைப்பிட்டு சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் 1951 ஏப்ரல் மாத தமிழ்முரசில் எழுதிய தலையங்கம்:

சிலப்பதிகாரத்திற்குச் சிறப்பு தேடத் தேசியவாதிகள் மாநாடு கூட்டுகிறார்கள் என்ற செய்தி கேட்டவுடனே, திராவிடர்கழக வட்டாரத்தில் கலக்கங் கண்டுவிட்டது.

காங்கிரஸ்காரர்கள் என்றாலே வடமொழிக்கும், வடவருக்கும் அடிமைப்பட்டவர்கள், தமிழுக்கும், தமிழருக்கும் துரோகம் செய்பவர்கள் என்று இத்தனை காலமும் செய்துவந்த பிரச்சாரமெல்லாம் பொய்யாய் – கனவாய் – பழங்கதையாய்ப் போய்விடுமே என்பதுதான் கலக்கத்திற்குக் காரணம். ஆகையால் சிலப்பதிகார மாநாடு நடக்கும் முன்பே சிலம்பின் பெருமையைப் பற்றி ‘விடுதலை ‘ தானே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டது.

திராவிடர் கழகத்தின் இலக்கியப் பிரசாரகரான புலவர் இலக்குவனார் ஆம்பூரில் சிலப்பதிகாரத்தின் சிறப்பினைப் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அதை 15-3-51-ல் ‘சிலப்பதிகாரத்தின் பெருமை ‘ என்ற தலைப்பு கொடுத்துப் பிரசுரித்தது விடுதலை.

மீண்டும் 29-3-51 இதழில் சாமிசிதம்பரனாரைக் கொண்டு சிலப்பதிகாரத்தைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதச் செய்து அதையும் பிரசுரித்தது விடுதலை.

இவற்றால் நாம் மருளவில்லை; மகிழ்ந்தோம். சிலம்பைப் பழித்தவர்களும் அதன் சிறப்பை உணர்ந்து பாராட்டுவதென்றால் மகிழத்தானே வேண்டும். மொழித்தொண்டு கட்சிப்பூசல்களுக்கு அப்பாற்பட்டதல்லவா ?

ஆனால் ஈ..வே.ரா. இத்தனைக்கும் எதிர்மாறான போக்கிலே 30-3-51-ல் காங்கேயத்தில் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசியிருக்கிறார்.

‘உண்மையான திராவிடன் – தமிழ்மகனாக – இருந்தால் சிலப்பதிகார மாநாடு நடத்துவானா ? பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக நடத்தப்படுவது என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும் ? ‘ – என்று சிலப்பதிகார மாநாடு நடத்தியவர்களுக்குச் ‘சிறப்புரை ‘ வழங்கியிருக்கிறார் ஈ.வே.ரா. அவர் கருத்துப்படி, சிலப்பதிகார மாநாடு நடத்துவோர், அந்தக் காவியத்தின் சிறப்புப்பற்றிப் பேசுவோர் அத்தனைபேரும் போலித்தமிழராகின்றனர். இதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பைப் புலவர் பெருமக்களிடம் விட்டு விடுகிறோம்.

‘சிலப்பதிகாரம் என்பது ஆரியத்தைப் பரப்புகிற ஒரு நூலென்பது அல்லாமல் வேறு என்ன ? ஆரம்ப முதல் இறுதிவரை ஒரே ஆரியந்தானே காட்சி அளிக்கிறது! ‘ என்கிறார் ஈ.வே.ரா.

மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதுபோல் எப்போதோ எதற்காகவோ ‘ஆரியம் ‘ என்ற வெறுப்பேற்பட்டதன் காரணமாக, காண்பதெல்லாம் ஆரியமாகக் காட்சியளிக்கிறது ஈ.வே.ராவுக்கு!

கொடுங்கோலனை எதிர்த்துப் போராடும் கண்ணகியின் புரட்சி ‘ஆரியம்! ‘

அறியாது செய்த பிழைக்கு தனது உயிரையே அர்ப்பணிக்கும் நெடுஞ்செழியனின் தியாகம் ‘ஆரியம்! ‘

அரசன் உயிர்நீத்த அக்கணமே தானும் உயிர்நீத்த கோப்பெருந்தேவியின் அன்பு நிறைந்த காதல் ‘ஆரியம்! ‘

வாய்கொழுத்துப் பேசிய வடவேந்தருடன் போரிட்டுத் தமிழரின் ஆற்றலைப் புலப்படுத்திய செங்குட்டுவனின் செயல் ‘ஆரியம்! ‘

மூன்றாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகத்தை ஒன்றாகப் பிணைத்துக் காட்டிய இளங்கோவனின் சித்திரம் ‘ஆரியம்! ‘

பரத்தையர் குல மகளுக்குப் பிறந்தும் ஒருவனையே காதலித்து வாழ்ந்து அவன் இறந்தபிறகு வாழ்விற்குரிய இன்பங்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மாதவியின் மனப்பண்பு ‘ஆரியம்! ‘

இத்தனையும் தமிழ்ப்பண்பிற்கு எதிரான ‘ஆரியப் ‘பண்புதான் என்றால் அந்த ஆரியப்பண்பு நீடூழி வாழ்வதாக!

ஈ.வே.ரா. தமிழ்ப்பண்பைப் பற்றி முதலில் யாரிடமேனும் பாடங்கற்றுக் கொள்ளட்டும். அப்புறம் அதைப்பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் அவருக்கும் நன்மையுண்டு; நாட்டிற்கும் நன்மையுண்டு.

‘கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடக்கிற கல்யாணம் பெண்ணடிமைத் திருமணம். அடுத்தபடியாக அது பணமூட்டைகளின் திருமணம் ‘ – என்கிறார் ஈ.வே.ரா.

எங்கோ யாரோ செய்து கொண்ட திருமணத்தை நினைப்பில் வைத்துக் கொண்டு, கண்ணகியின் திருமணத்தைக் கண்டித்துப் பேசியிருக்கிறார் போலும்! உடைமைக்காக அல்லாமல், கடமைக்காகவும் அல்லாமல், வெறும் உணர்ச்சிக்காக மட்டும் திருமணம் செய்து கொண்ட பெண் அல்லள் கண்ணகி; கண்ணகியின் காதலன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன்தான்.

ஆனால், அவனுடைய பணத்துக்காக தனது இளமையை அடகுவைக்கும் அறிவு கெட்ட

நிலை கண்ணகிக்கு இருந்ததில்லை. கண்ணகி பருவம் கடந்து பழுதுபட்டவளும் அல்லள்; கோவலன் எழுபது வயதுக் கிழவனும் அல்லன். இருவரும் இளமை இன்பம் துய்ப்பதற்கான இளம்பருவத்தினர். மகளென இருந்தவளை அவள் விருப்பம் அறியாமலே திருமணப்பதிவுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று மனைவியாக்கிக் கொள்ளும் கொடுமையைப் பார்த்திருக்கிறோம். அது போன்ற அடிமைத்தனத்தில் கண்ணகியை வைத்துக் கோவலன் மணம் செய்து கொள்ளவில்லை.

பார்ப்பனப் புரோகிதர், மறைவழிப்படி நடத்தி வைத்ததற்காக, அவர்களுடைய திருமணத்தைப் பழிப்பது ஆராய்ச்சி அறிவன்று; ஆபாசக் கூக்குரல்.

‘கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்கு சிறிதாவது அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் இருந்ததென்று யாராவது ஒப்புக்கொள்ள முடியுமா ? ‘ – என்று கம்பீரமாகக்

கேள்வி போடுகிறார் ஈ.வே.ரா.

முதலில் தந்தையாக உறவு கொண்டு, பிறகு அவரையே கணவராகக் காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.

இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு கண்ணகியைச் சாடுகிறார்.

கண்ணகிக்கு அறிவு இருந்ததால்தான் கணவனைப் பிரிந்த காலத்திலும் கற்புநெறி தவறாது வாழ்ந்தாள்.

மனித உணர்ச்சி இருந்ததால்தான், ஆயர்சேரியில் கோவலன் தன்னை இறுதியாகப் பிரியும்போது, அவனது போற்றா ஒழுக்கத்தை எடுத்துக்காட்டிக் கொடுங்கோல் அரசை அழித்தாள்!

அத்தகைய பெண்ணரசியையா பழிப்பது ? அதுவும் மணியம்மையின் காதலரா பழிப்பது ? என்ன துணிச்சல்! புலவர் பெருமக்களே, நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் பரம்பரைதானா நீங்கள் ? ஆம் என்றால் இளங்கோவைப் பழிப்பதைப் பார்த்தும் பொறுத்திருப்பதேன் ? ஒருவேளை தமிழே வீரத்தை விட்டு விலகி விட்டதோ ? அறிவு, பீடத்தை விட்டு அகன்று விட்டதோ ? பதில் கூறுங்கள்.

திராவிடத்தாருக்கு ஒரு நிலையான கொள்கை கிடையாது என்று நாம் கூறினால்

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது, சில பு..ர..ட்..சி…வீரர்களுக்கு! இதோ பாருங்கள், இலக்கியத்துறையில் இவர்களுக்குள்ள ஞானத்தை!

‘சிலப்பதிகாரம் பெண்ணைப் பெருமைப்படுத்தும் பேரிலக்கியம் ‘ – என்று பேசுகிறார்

திராவிடக்கழகத்தின் பிரச்சாரகரான புலவர் இலக்குவனார்! அதை ‘சிலப்பதிகாரத்தின்

சிறப்பு ‘ என்று தலைப்பு கொடுத்துப் பிரசுரிக்கிறது விடுதலை.

சிலப்பதிகாரம் சிந்தித்து ஆராய்வதற்குரிய சிறந்த தமிழ்நூல்… தமிழர் நாகரிகத்தை விளக்கும் நூல்… ராமாயணத்தைப் போல், பெரியபுராணத்தைப் போல், சீவகசிந்தாமணியைப் போல் பூசை பண்ணும் மனப்பான்மையை உண்டாக்கும் நூலல்ல.. இதுதான் இந்த நூலுக்குரிய தனிச்சிறப்பு என்று 21-3-51 ‘விடுதலை ‘யில் எழுதுகிறார் ஈ.வே.ரா.வை நிழல்போல் பின்பற்றிச் செல்லும் சாமிசிதம்பரனார். இதை, ‘சிலப்பதிகாரம் சொல்லும் செய்திகள் யாவை ? பகுத்தறிவு, ஜனநாயகம், தன்மானமே தமிழர்பண்பு ‘ – என்று கொட்டை எழுத்தில் இரண்டு காலம் தலைப்புக் கொடுத்து விடுதலையில் பிரசுரித்திருக்கிறார் அதன் ஆசிரியர். அந்தக் கட்டுரையில் சாமி சிதம்பரனார் மேலும் கூறுவதைப் படியுங்கள்.

‘கண்ணகி சிறந்த குணமுடையவள். அழகும், அரிய குணங்களும் அவளிடமிருந்தன ‘ – என்கிறார் ஈ.வே.ரா.வின் சீடர்.

குருவுக்கு, அறிவு, மனித உணர்ச்சி, தன்மானம் முதலிய நல்ல குணங்கள் அற்றவளாகக்

காட்சியளிக்கிறாள் கண்ணகி. சீடருக்கோ அத்தனை குணங்களும் உடையவளாகக் காட்சி அளிக்கிறாள். ஒரே பாத்திரம் – இரு வேறு காட்சிகள். காண்பவர் இருவரும் ஒரே கட்சியினர். அது மட்டுமல்ல – குருவும், சீடரும். இதைக்கண்டு வெட்கப்படுவது மட்டுமல்ல – இவர்களைப் பொதுவாழ்வில் நடமாட விட்டதற்காக வேதனையும் படவேண்டும்.

சிலப்பதிகாரத்தின் கருப்பொருளைப் பற்றிக் கூறும்பொழுது ‘ஆரியநெறியைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்டது ‘ என்கிறார் ஈ.வே.ரா. ‘ஆரம்பம் முதல் இறுதிவரையில் ஆரியந்தானே காட்சியளிக்கிறது ‘ என்றும் ஆத்திரத்தோடு கேட்கிறார்.

அவருக்கு நாம் பதிலளிக்கத் தேவையில்லை. அவரது சீடர் சிதம்பரனாரைக் கொண்டே பதிலளிக்கச் செய்கிறோம். விடுதலையில் தாம் எழுதிய கட்டுரையில் இறுதியில் சீரிய கணக்கோடு கூறுகிறார் சிதம்பரனார்.

‘சிலப்பதிகாரக் கதையிலே கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்களைப் புகுத்திப்

படித்தால், இந்த மூன்று உண்மைகளை மறுக்க முடியாது.

1. சடங்குகளால் பயனில்லை.

2. அறிவின்றி விசாரணையில்லாமல் நிரபராதிகளுக்குத் தண்டனை அளிக்கும் அரசாங்கம் பொதுமக்களால் அழிக்கப்படும்.

3. தமிழன் தன்னை அவமதிக்கும் எவனுக்கும் தலை வணங்கமாட்டான். தன்னை அவமதிப்போரை அடக்கித் தன்மானத்தைக் காப்பாற்றியே தீர்வான். பிரித்தாளும் சூழ்ச்சிக்குத் தமிழன் ஏமாற மாட்டான்.

இந்த உண்மைகளை விளக்கவே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது. இதை மெய்ப்பிக்க நாம் எப்போதும் தயார். எந்த இடத்திலும் வாதிக்கவும் முன்நிற்போம்.

சீடரானவர் குருவுக்கு முரணாய் இப்படி சிலப்பதிகாரம் பயனுள்ள நூல், கழிக்கத் தக்கன சில இருப்பினும் பொதுவாகப் பாராட்ட வேண்டிய நூல் என்று கூறுவது மட்டுமல்ல; அவரது கூற்றை மறுப்போரை வாதுக்கும் அழைக்கிறார்.

ஈ.வே.ரா.வுக்குத் தன்மானமிருப்பின் சாமிசிதம்பரனாரோடு சமருக்குச் செல்லட்டும். இல்லையேல் சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ‘ என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வே.ரா.வுக்குத் துதி பாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.

இப்படி முன்னுக்குப்பின் முரணாக, ஒருவருக்கு ஒருவர் எதிர்மாறாகப் பேசும் ஒரு கூட்டமும் தமிழ்நாட்டில் இருக்கிறதே!

இந்த லட்சணத்தில் சிலப்பதிகார மாநாடு கூட்டியவர்களின் தமிழ்ப்பற்றை நையாண்டி செய்கிறது ‘திராவிடநாடு. ‘ அது மட்டுமல்ல, தாங்கள் என்றென்றும் சிலப்பதிகார பக்தர்கள் போலவும், தேசிய வாதிகள் இப்போதுதான் சிலம்பின் சிறப்பைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறது.

தமிழ்மொழிக் கலைகளுக்கோ, காவியங்களுக்கோ திராவிடத்தார்கள் எந்தக் காலத்திலும் மதிப்பளித்ததில்லை. அது மட்டுமல்ல; அவற்றிற்கு மதிப்பளிக்கும் அறிஞர்களின் மனத்தைக் கெடுக்கும் வகையில் ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு ஏசிப் பேசுவதும் அவர்களின் அன்றாட வேலை.

ஆங்கிலேயன் இந்த நாட்டை விட்டுப் போக மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தவரை, திராவிடத்தார்கள் ஆங்கில மாயைக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்.

சைமன் ராமசாமி, ஸ்டாலின் ஜெகதீசன், எட்வர்டு மாணிக்கம், மேயோ குப்பம்மாள்,

மிஸஸ் மிராண்டா என்று மேல்நாட்டாரின் ஆங்கிலப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்கு முன்னே முடிசூட்டியது போன்று வைத்துக் கொள்வதில் ஆனந்தப் பட்டார்கள். ஆனால் தேசிய எழுச்சியாலும், பாரதியாரின் உழைப்பாலும் மக்களிடையே நாட்டுப்பற்றோடு மொழிப்பற்றும் வேகமாக வளர்ந்தது. அதோடு வெள்ளையாட்சி வெளியேறுவது திண்ணம் என்ற நிலையும் தோன்றியது.

ஆகவே தந்தை வாழ்த்தினாலொழிய தாம் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் திராவிடத்தார்கள். அதனால் சைமன், ஸ்டாலின், எட்வர்டு, மேயோ, மிராண்டா என்ற பெயர்களுக்கெல்லாம் தலைமுழுக்குப் போட்டுவிட்டு,

நாராயணசாமி நெடுஞ்செழியரானார்.

ராமையா அன்பழகரானார்..

நடராஜர் கூத்தரசரானார்.

ஆம், விலை போகாத பண்டங்களுக்கு வியாபாரி லேபிள் மாற்றுவது போல! புதிய பெயர்களில் பழைய பேயாட்டங்களைத் தொடர்ந்து நடத்தினர். உள்ளத்தில் உண்மைத் தமிழ்ப்பற்று இல்லாவிடினும், இவர்களது நடிப்பில் மயங்கி, இவர்களும் உண்மையான தமிழ்ப்பற்றுடையவர்கள்தாம் என்று நம்பினர், நம்புகின்றனர் பண்டிதப் பெருமக்களில் பலர்.

ஆனால் என்னதான் திறமையாக வேடம் போட்டாலும், சில சந்தர்ப்பங்களில் வேடம் கலைந்து உண்மை வெளிப்பட்டு விடுகிறது.

சிலப்பதிகாரம் சொல்வதென்ன ?

நாம் திராவிடர் அல்லர் – தமிழர்;

நமது தாயகத்தின் பெயர் திராவிடமன்று – தமிழகம்;

அதன் வடக்கெல்லை விந்தியமன்று, வேங்கடம்;

தமிழ்நாட்டு அந்தணர் ஆரியரல்லர், தமிழர்.

தமிழருடைய பண்பாடும் பழக்கவழக்கங்களும், வேங்கடத்திற்கு வெளி உள்ளவர்களின்

பன்பாட்டுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் சற்றே வேறானதாயினும் விரோதமானதல்ல என்பவற்றைத் தெளிவாக வற்புறுத்துகின்றது.

இந்த உண்மைக்கு நேர்மாறான போக்கிலே ‘காலட்சேபம் ‘ நடத்திக் கொண்டிருக்கும் ஈ.வே.ரா. சிலப்பதிகாரத்தை எதிர்ப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால், ஒருகோடி ஈ.வே.ரா.க்கள் புறப்பட்டாலும், தமிழ் மக்களிடையே சிலப்பதிகாரத்திற்குள்ள செல்வாக்கைக் குறைக்க முடியாது!

(நன்றி: தமிழ்முரசு – ஏப்ரல் 1951)

ம.பொ.சி. அவர்களின் இந்தத் தலையங்கம் பல உண்மைகளை நமக்குத் தெரிவிக்கிறது.

ஈ.வே.ராமசாமி நாயக்கர், தமிழர்தம் ஒப்பற்ற இலக்கியமான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை, தமிழ்ப்பண்பாட்டை விளக்குகின்ற சிலப்பதிகாரத்தை, தனது ‘திராவிடஸ்தான் ‘ என்ற கேடுகெட்ட அரசியல் நோக்கத்திற்கு ஒவ்வாமல் போன ஒரே காரணத்திற்காகவே இப்படிக் கேவலமாக விமர்சித்து இருக்கிறார் என்பதைத் தெளிவாய்க் காணும்போது அவரைத் ‘தமிழர் தலைவர், தமிழுக்குப் பாடுபட்டவர் ‘ என்றெல்லாம் சொல்வது ஏமாற்று வேலை அல்லவா ?

மானமுள்ள தமிழர்கள் தமிழைப் பழித்த ஈ.வே.ரா.வை ஒருபோதும் தமிழர் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படி ஏற்றுக் கொள்பவர்கள் மானமில்லாதவரே, தமிழுக்குத் துரோகம் செய்வோரே என்று பச்சைத் தமிழர்களாகிய நாம் சொன்னால் அதில் தவறென்ன இருக்க முடியும் ?

தொடரும்…

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா

கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

விஸ்வாமித்ரா


திண்ணைப்பள்ளியில் 11 வயதில் நான்காம் வகுப்பைத் தட்டுத்தடுமாறித் தேறியதும்

படிப்பை நிறுத்திவிட்டுத் தன் தந்தையாரின் மண்டியில் வேலை செய்யப் போய்விட்ட

கன்னடத்துக்கார ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னைத் திராவிடர் தலைவராக உயர்த்திக் கொண்டது அவரது சுயமுயற்சியாலா ?

நிச்சயம் அல்ல.

சுதந்திர வேட்கையில் ஒன்றுபட்ட இந்தியாவை எப்படியெல்லாம் பிளவுபடுத்தலாம் என்று வெள்ளை அரசின் குள்ளநரிகள் குயுக்தியான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குத் தோதாய் அகப்பட்டவர்தான் ஈ.வே.ரா.

இன்றைய தமிழில் சொன்னால் ரெளடித்தனமாய் பேசிக் கொண்டு ‘பேட்டைதாதா ‘வாய் விளங்கிய ஈ.வே.ரா., ‘திராவிடஸ்தான் ‘ என்ற பெயரில் தென்னிந்தியாவைத் தனியே துண்டாக்கி விடலாம் என்ற பிரிட்டிஷ் திட்டத்துக்குத் துணைபோன தேசத்துரோகியே.

கவியரசு கண்ணதாசன் (ஆதாரம்: நூல் – நான் பார்த்த அரசியல்) கூறுகிறார்:

“பெரியார் ராமசாமி அவர்கள் காங்கிரஸிலே இருந்து பிரிந்த பிற்பாடு, பிராமணர்களை எதிர்க்கிறேன் என்கிற போக்கிலே இந்தியாவையே எதிர்க்கத் தலைப்பட்டார்.

இந்திய விடுதலைக்கு விரோதமாகப் போகவும் தலைப்பட்டார். இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கக் கூடாது என்பதிலே அவர் முன்னணியிலே நின்றார்.

பாகிஸ்தான் பிரிவினைக் கோரிக்கை ஆரம்பமானபோது திராவிடஸ்தான் பிரிவினையையும் அவர் ஆரம்பித்தார். பிராமணர்கள்தான் இந்திய தேசிய காங்கிரஸ்; பிராமணர்களுடைய ஆதிக்கம்தான் இந்தியாவில் இருக்கிறது என்பது போல் ஒரு கற்பனையைச் செய்து கொண்டு தென்னாட்டில் அவர்களை ஒழிப்பதற்காகவே, வெள்ளைக்காரர்கள் இருக்கவேண்டுமென்ற ஆசையை அவர்கள் மக்கள் மனதில் வளர்க்கத் தொடங்கினார்கள்.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று தந்தி கொடுத்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருந்தார்கள்.

பெரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது ‘நான் போய் இந்த வெள்ளைக்காரனைப் பார்த்தேன். அவனிடம் சொன்னேன். என்னய்யா யோக்கியதை இது! நீ பாகிஸ்தான் கொடுத்தது போல திராவிடஸ்தான் கொடுத்து விட்டல்லவா விடுதலை கொடுத்திருக்க வேண்டும் என்றேன். ஆனால் வெள்ளைக்காரனுடைய யோக்கியதையைப் பாருங்கள். அவன் அதைக் கடைசியில் ஏற்றுக் கொள்ளவில்லை. ‘ என்று அவரே பேசியிருக்கிறார்.”

கண்ணதாசன் அவர்கள் ஏதோ மயக்கத்தில் எழுதிவிட்டதாக இனி சிலர் மடல் அனுப்புவார்கள்.

அவர்களுக்காகவே மேலும், 1940 களின் விடுதலை இதழ்களில் இந்தத் திராவிடஸ்தான் கொள்கையை பகிரங்கமாய் முன்வைப்பதைச் சுட்டுகிறார் ம.வெங்கடேசன்.

27-8-1944-ல் சேலம் நகரில் கூடிய திராவிடர் கழக மாநாட்டிலே கீழ்வரும் தீர்மானம்

நிறைவேற்றப்பட்டது:

‘திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் திராவிடநாடு என்ற பெயருடன்

நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும்

நேரே பிரிட்டிஷ் செக்கரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்டதுமான

ஒரு தனி (ஸ்டேட்) நாடாக பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை முதற்கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. ‘

இங்கே இன்னொரு சுவையான தகவலும் உண்டு. ஆரிய திராவிட இனவாதத்தை

முற்றாய் நிராகரித்த தேசியவாதியான பெருந்தலைவர் அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்தே

இந்தத் திராவிடஸ்தான் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவர் சுதந்திர இந்தியாவின் முதல் மந்திரிசபையிலும் பதவியேற்றவுடன் ஈ.வே.ரா.வுக்குப் பொறுக்கவில்லை.

‘இந்தியநாடு பிரிக்கப்படக் கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தையே இன்றைய நிலையில் அம்பேத்கர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிடநாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன். ‘

(குடியரசு 8-7-1947)

ஈ.வே.ரா. அஞ்சியபடியே திராவிடஸ்தான் கனவு நனவாகவில்லை. கன்னட பலிஜவார் என்றே தன்னை அடையாளப்படுத்தி வாழ்ந்த ஒருவர் தலைமையில் சில தெலுங்கு பேசும் நாயுடுக்களும், மலையாள நாயர்களும், பிராமணத் துவேஷத்தால் ஈவேராவின் பின்வந்த சில தமிழ் வேளாளர்களும் சேர்ந்து வெள்ளை அரசின் ஆதரவுடன் அமைக்கத் துடித்த இந்தத் திராவிடஸ்தானில் பாதுகாப்பு கிடைக்காதென்று ‘ஆரியர் ‘ என்று முத்திரை குத்தப்பட்ட, தமிழையே தாய்மொழியாகக் கொண்ட அந்தணர் மட்டும் அஞ்சவில்லை. மூளைச்சலவை செய்ய முடியாத, தமிழ்ப்பண்பாட்டை மறக்காத இதர சாதியினர் பலரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்களே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அன்றைய தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராக விளங்கிய வி.ஐ.முனுசாமி அவர்கள்

அச்சமயம் ஒரு கோரிக்கை வைத்தார்:

‘இந்தியத் தூதர்கள் பதவிகள் உட்பட எல்லா உயர்பதவிகளிலும் ஆதி திராவிடர்களையே நியமிக்க வேண்டும். தென்னிந்தியாவில் திராவிடஸ்தான் என்று அமைக்கப்பட்டால் ஹரிஜனங்களுக்கு ஆதிதிராவிடஸ்தான் என்று தனியாகக் கொடுக்கப்பட வேண்டும். ‘

அதை ஆத்திரத்துடன் விமர்சித்த ‘விடுதலை ‘ தலையங்கம் சொன்னது என்ன தெரியுமா ?

‘ஆதிதிராவிடஸ்தான் வேண்டும் என்று பிதற்றியிருக்கிறார் …. வெறும் பதவிகள்

மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ, சமுதாயத்தையோ உயர்த்திவிட

முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம்…. எனவே பழங்குடிமக்கள்

முழு உரிமையுடன் வாழ வேண்டுமானால் ஒரு சிலர் பெரிய பதவிகளைப் பெறுவதால்

மட்டுமே முடியாது. அவர்கள் திராவிடர்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும். ‘

(விடுதலை – 10-7-1947)

திராவிடஸ்தான் கேட்டால் அது கொள்கையாம். ஆதிதிராவிடஸ்தான் கேட்டால்

அது பிதற்றலாம்! ஏக இந்தியாவிற்குப் பதில் திராவிடஸ்தான் தீர்வு என்றால்,

சாதி இந்துக்களின் ஏக திராவிடஸ்தானுக்குப் பதில் ஆதிதிராவிடஸ்தான்தான்

தீர்வாக இருக்க முடியும் அல்லவா ?

எப்படியோ அம்பேத்கர் போன்ற பல தேசியவாதத் தலைவர்களின் ஆதரவில்லாததால்

நாடு துண்டாக்கப் படாமல் தப்பித்தது.

ஈ.வே.ராவின் கோபம் அவருக்கு ஆதரவாக நிற்காத தமிழ்ப் பண்டிதர்களின் மேல்

திரும்பியது. தமிழை நன்கறிந்த பண்டிதர் பலரும் ஆரம்பத்திலிருந்தே இந்தத்

திராவிட இனவாதத்தை ஏற்கவில்லை. ‘திராவிடம் ‘ என்ற சொல்லே சங்ககால முதல்

எங்குமில்லை என்றும், திராவிடம் என்ற பொய்யின் கீழ் தென்னகத்தைச் சேர்ப்பது

இயலாது என்றும் அவர்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டி வந்தனர்.

அதன் காரணமாகவே தமிழ்மொழி, பழந்தமிழ் நூல்கள், தமிழ்ப்பண்டிதர், பாவலர்

என்று ஒட்டுமொத்தமாய்த் தாக்கி வந்தார் ஈ.வே.ரா. மேலும் தமிழன் என்ற

அடையாளத்துடன் தன்னைப் பிணைத்துக் கொள்வதற்கு, கன்னடரான அவரின்

உள்ளுணர்வும் இடம் கொடுக்கவில்லை என்பதும் மற்றொரு காரணம்.

தொடரும்…

—-

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா