கலவியில் காயம் – நடேசன்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

நடேசன்



ஒருநாள் இரவு மெல்பேண் சிவா-விஷ்ணு கோயிலின் நிர்வாகிகள,அடியார்கள் என்று நான்குபேர் தொலைபேசியில் சொன்னார்கள்.

“கோயில் மயிலுக்கு சுகம் இல்லை. ஒருக்கா பார்க்கவும்.”

“என்ன வருத்தம்?”

“காலை நொண்டுவதாக ரங்கையா கூறினார”

‘முருகனை மட்டுமல்ல அவரது இரண்டு மனைவிகளையும் ஏற்றிக்கொண்டு உலகை வலம்வரும் மயிலுக்கு கால் நொண்டியாகிவிட்டது.’ என யோசித்தேன்.

எனது மகள் “ஏன் மயிலை கோயிலில் வைத்து இருக்கிறார்கள்?”

“முருகனின் வாகனம்” – இது என் மனைவி

‘பாம்பு, எருதுமாடு, நாய், எலி எல்லாம் அல்லவா வளர்க்கவேண்டும். சிவா-விஷ்ணு கோவிலை சுற்றியபகுதி விலங்குக்காட்சிசாலையாகிவிடும்’ நான் இதை சொல்லவில்லை. மனத்தில்மட்டும் நினைத்தேன். மதநம்பிக்கைகள் அந்தரங்கமான உணர்வுகள். தர்க்கம், விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்டவை.’

“மயில் அழகான பறவை அதுதான் வளர்க்கிறார்கள” என்றுமட்டும் கூறினேன்.

அடுத்தநாள் மதியம்சென்று பார்த்தேன். கம்பியால் அடைக்கப்பட்ட பகுதியில் மயில்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளே ரங்கயைவின் உதவியுடன் சென்றுபார்த்தேன்.

ரங்கையா தமிழ்நாட்டில் புதுக்கோட்டைப்பக்கம்இருந்து வந்தவர். மிகவும் சுறுசுறுப்பானவர். படைக்கும் தொழில்செய்யும் சிவனிலும் பார்க்க சுறுசுறுப்பாக படையல் தொழில்செய்பவர். எக்காலத்திலும் உணவோடு உபசரிப்பார் இந்தமனிதர்தான் மயில்களுக்கும் சாப்பாடுபோட்டு பராமரிப்பவர்.

“பத்துவருடமாக எந்த பிரச்சனையும் இல்லைசார்”

“உண்மைதான். மயிலுகளுக்கு நோய்வருவது குறைவு. முப்பது வருடகாலம்வரை ஆரோக்கியமாக சீவிப்பன.”

மயில்கூட்டுக்குள் இரங்கையாவுடன் சென்றுபார்த்தேன். அந்த ஆண்மயிலின் காலில் வெளிக்காயம் இருந்தது.

அன்ரிபயரிக்கை கொடுத்துவிட்டுவந்தேன்.

அடுத்தகிழமை சென்றுபார்த்தபோது வெளிக்காயம் ஆறிவிட்டது. ஆனால் மயில் நடக்கமுடியவில்லை. மூலையில் படுத்துவிட்டது. உள்காயம்போல இருந்தது. பல முட்டைகளும் அந்தக்கூட்டில் கிடந்தன.

“இந்த மயில்தான் வயதுகூடியது” என்றார் இரங்கையா.

முட்டைகளைப்பார்த்ததும் இனப்பெருக்க காலம் என தீர்மானித்தேன்.

மயில்களின் கலவியைப் பார்த்ததில்லை. என்மனதில் ஆண்சேவல், பெண்சேவலை திரத்தி களைப்படைய செய்தபின் கலவிசெய்யும் காட்சி மனத்திரையில் விரிந்தது.

சுற்றிவரப் பார்த்தேன்.

ஐந்து பெண்மயில்களுக்கும் ஏழு ஆண்மயில்களுக்கும் அந்த கூட்டுக்குள் நின்றன.

ஐந்து பெண்மயில்களை ஒரு ஆண்மயில் சமாளிக்கும் என படித்த ஞாபகம்.

எனக்கு மனத்தில் அபாயக்குரல் ஒலித்தது.

‘இந்த கூட்டுக்குள் ஒரு குருஷேத்திரம் நடந்திருக்கிறது. அர்ச்சுனன்போல் ஒரு மயில் மட்டுமே கலவிசெய்யமுடியும். காட்டில் வைகறையிலும் மாலைநேரத்திலும் பெண்மயிலை கவர ஆண்மயில் பலநிமிடநேரம் இறகுவிரித்து ஆடுவது எதற்காக? கோயில் மயில் என்பதால் பிரமச்சாரியாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கலாமா?’
கம்பிக்கூட்டுக்குள் ஏழுமயில்கள் இனவிருத்திக்கு முயலும்போது ஒருமயிலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அந்த கூட்டுக்குள்சென்று சிறிய கற்பனை உரையாடலை அந்த காயம்பட்ட மயிலுடன் நடத்தினேன். பதினாறு வயது கமலகாசன் பாணியில்,

‘மயிலு, என்ன நடந்தது. உண்மையை என்னிடம் சொல்லு.’

‘நான்தான் வயதில் மூத்த ஆண்மயில். இங்கே இளசுகள்சேர்ந்து கும்மாளம் அடிக்கின்றன. எனக்கு இந்தவருடத்தில் ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை. விரகதாபத்தில் ஒரு பெண்மயில்மேல் பாய்ந்து பறந்தபோது காலில் அடிபட்டுவிட்டது. இப்ப நொண்டியாகிவிட்டேன்’

‘பத்துவயதாகிவிட்டது. ஒழுங்கா இருக்கக்கூடாதா?

‘இது ஒருவயதா? காட்டில் முப்பது வருடம் வாழுவோம். தெரியுமா?’

‘கோயிலுக்கு தொண்டுசெய்யவந்தபின் அடங்கியிருக்கவேண்டியதுதானே’

‘வருடம்முழுக்க அடங்கி இருக்கறோம். வெயில்காலம் வந்ததும் புதுஇரத்தம் பாயும்போதும் எங்கள் தலையில் இருக்கும் சுரப்பிகளால் எங்களை அறியாமலே பெட்டைக்கோழியை தேடவேண்டி இருக்கு. நாங்கள் என்ன செய்வது?’

‘ஒரு கிழமைக்குப் பார்ப்போம். ரங்கையா கொடுக்கும் மருந்துவேலை செய்யாவிட்டால் கைலாசமா இல்லை. வைகுண்டமா என நீரே தெரிவுசெய்யும்காணும்.’ என்றேன் புதுமைபித்தன் பாணியில்

‘எதுக்கும் எனது எஜமான் முருகனை வேண்டிக்கொள்கிறேன்.’

கற்பனை உரையாடலை முடித்தாலும் மயிலைப் பார்க்க பாவமாக இருந்தது. அந்த மயில் குணமடைய வாய்ப்பில்லை.

மைசூருக்கு பக்கத்தில் சிரவணபலகொல் என்ற குன்று பிரதேசத்தில் அக்கால சமணமுனிவர்கள் உயிர்துறப்பது வழக்கம். அதுபோல் இந்த மயிலும் கோயிலுக்கு அருகே உயிர்துறந்தால் முக்தி அடையும் என கோயில் நிர்வாகம் நினைத்திருக்கக்கூடும்.

மேற்கத்திய விஞ்ஞானத்தில் மிருகவைத்தியம் படித்த எனக்கு அதில் உடன்பாடு இல்லை. துன்பம் அனுபவிக்காமல் கருணைக்கொலைசெய்யவேண்டும் என நிருவாகத்திடம் கூறி எழுத்தில் அதற்கான அதிகாரம்தரவேண்டினேன். எதுவித பதிலும் கிடைக்கவில்லை.

சில காலத்துக்குப்பின் கோயிலுக்குச்சென்று விசாரித்தபோது மயில் சமண முனிவர்கள்போல் உயிர்துறந்து பர்சிய சமயத்தவர்கள்போல் வீசப்பட்டதாம். நான் கிறித்துவ சமயத்தவர்கள்போல் அடக்கம் செய்வதாக கூறிஇருந்தேன்.

கோயில் கும்பாபிஷேககாலம். பலவிடயங்களில் மயில்கள் மறக்கப்பட்டிருக்கலாம். மயிலுகள் வழக்குபோடமுடியுமா? இல்லை பத்திரிகைக்கு அறிக்கைவிடுமா?

அடுத்த வருடம் இனப்பெருக்க காலத்தில் மீண்டும் சண்டை நடக்கும். பாவம் மயிலுகள் பிரமச்சாரியத்தை பேணாவிடில் விழுப்புண் ஏற்படும் என்பது அவைகளுக்கு தெரியுமா?


uthayam@optusnet.com.au

Series Navigation

author

நடேசன்

நடேசன்

Similar Posts