கறுப்பு இஸ்லாம்

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1. இஸ்லாமிய கோட்பாடு தனித்துவங்களில் ஒன்று அரேபியச் சமூகங்களில் நிலைபெற்றிருந்த அடிமை முறையினை தகர்க்க முயன்றும் ஒடுக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலையை முன்நிறுத்தியும் இயங்கியது ஆகும். நன்மை வழி தீமை வழி இவ்விரண்டிலும் மலைப்பாதையைப்போல் கரடுமுரடும் மேடும் பள்ளமும் நிரம்பிய பாதை நன்மை வழி பாதையாக இருக்கிறது.
இஸ்லாமியம் நடமுறைப்படுத்தப்பட்ட துவக்ககாலங்களில் வெவ்வேறு இனக்குழு மக்களிடையே நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற இனக்குழு போர்க் கைதிகளை அடிமைகளாகப் பிடித்து வருவதுண்டு. இதர போரில் வெற்றி பெற்ற பொருட்களை கால்நடைகளை பங்கிடுவது போல இந்த அடிமைகளை பங்கிட்டு கொள்வதும் உண்டு.
இங்கு இத்தகைய அடிமைகளை விடுதலை செய்வதற்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. யூத கிறிஸ்தவ குழுக்களிடையே இந்த அடிமைகளை விடுவிப்பதாக இருந்தாலும் சரி,
ஒன்று அந்த எஜமானுக்கு, அடிமையை விடுதலை செய்ய விரும்புவர் அதற்கு பரிகாரமாக குறிப்பிட்ட அளவு திர்கம்களை கொடுத்து அவர்களிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுக்கலாம். ஒரு எஜமான் தன் அடிமையிடம் நீ இவ்வளவு பணம் அளித்துவிட்டு விடுதலை பெற்றுக் கொள் என அனுமதியளித்துவிட்டால் விடுதலை பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை என்று பொருள்படும் முகத்தாப் என்று அந்த அடிமை அழைக்கப்படுவான். பணம் முழுவதும் வழங்கப்பட்டப் பின்னரே முழு விடுதலை சாத்தியமாகும். சில சமயங்களில் போர்களில் பிடித்துவந்த கைதிகளான அடிமைகளை விடுவிப்பதற்கு அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத இஸ்லாமியர்களுக்கு கல்வி சொல்லி கொடுக்க வேண்டும். இப்படி பலவிதமாய் இதன் நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. அடிமைப் பெண்கள் மீதான வரம்பற்ற பாலாதிக்கமும் அக்காலத்தில் நிலைபெற்றிருந்தது. ”உம்முல்வலத்” எனப்படும் சொல்லாடல் குழந்தையின் தாய் என்பதன் பொருளாகும். ஒரு எஜமானன் தனது அடிமைப்பெண் ஒருத்தியோடு பாலுறவு வைத்துக் கொண்டு அதன் விளைவாக குழந்தை பெற்று விட்டால் அத்தகைய அடிமைப்பெண்ணை எந்த விதத்திலும் விடுதலை செய்ய வழியில்லை. எஜமானின் மரணத்திற்கு பிறகுதான் அந்த அடிமைப் பெண்ணுக்கு விடுதலை கிடைக்கும்.
இத்தகையதான அடிமைச் சமூக நிலைபாடுகளிலிருந்து ஒரு சமத்துவம் நோக்கிய சமூகத்தை உருவாக்க முற்பட்டதின் விளைவாகவே அபிசீனியாவின் கறுப்பு அடிமை பிலாலை விலைக்கு வாங்கி அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தும், தொழுகைக்கான அதானை ஒலிக்க பிலால் அவர்களுக்கு உரிமை கொடுத்து கறுப்பின விடுதலையை இஸ்லாத்தின் மூலமாக சாத்தியமாக்கிய நபி முகமதுவின் நடைமுறைகளை குறிப்பிடலாம்.
இஸ்லாத்தின் கடமையாக்கப்பட்ட வழிபாட்டுச் செயல்களுக்குள் உட்பொதிந்து கிடந்த சமத்துவக் கூறுகள் நிற, இன, குல ஆதிக்கத்திற்கு எதிராக செயல்பட்டதின் விளைவாகவே ஒடுக்கு முறைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பகுதிகள் இஸ்லாத்தின்பால் நகர்ந்து வரத் துவங்கின. தொழுகை வணக்க வழிபாடு பள்ளிவாசலுக்குள் உயர்ந்தவன் / தாழ்ந்தவன், வசதியுள்ளவன் / வறியவன், என்பதான பேதங்களை கடந்து செயல்பட்டது. ஹஜ் என்னும் இறுதிக் கடமையை நிறைவேற்றும் செயல் என்பதே மக்கா நகரின் க·பதுல்லாவில் நடைபெறும் உலக முஸ்லிம்களின் மாநாடாகவே அர்த்தம் பெறுகிறது. மொழி எல்லைகள், தேசம் என்பதான புவியியல் பரப்பு எல்லைகள் கறுப்பு, வெள்ளை, என்பதான நிற எல்லைகள் கடந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாக திரளும் நடைமுறை சமத்துவத்தை பரிந்துரை செய்கிறது. ஹஜ் கிரியை நிறைவேற்ற இஹ்ராம் என்னும் இருதுண்டு வெள்ளாடைகளே அனைவரும் அணிவதற்கான ஆடை. இத்தகையதான பின்புலமும் பண்பாட்டு மதிப்பீடுகளையும் இஸ்லாம் தாராளமாக தன்னகத்தே கொண்டிருப்பதன் விளைவுதான் ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை இனம் மேலானது கறுப்பினம் கீழானது என வகுப்பட்ட ஆதிக்க மதிப்பீடுகளை சிதைத்தலை நோக்கியே இஸ்லாத்தின் பயணம் தொடர்கிறது.
நபி முகமதுவிற்கு பிறகான கலீபாக்களின் ஆட்சி ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் நடைபெற்றன. இமாம்கள் அபூபக்கர்,. உமர், உதுமான், அலி ஆகிய நான்கு கலிபாக்கள் என்னும் பேரரசர்களின் ஆட்சிக்குப் பிறகு உமய்யாக்கள் அபாசித்துகளின் ஒடுக்குமுறையும், ஆதிக்க மேலாண்மை மனோபாவமும் உலகியல் வெறியும் கொண்ட அதிகார ஆட்சி உருவாகின. இச்சூழலில் இஸ்லாமியத்தின் மறுஉருவாக்கம் மத்ஹபுகள் எனப்படும் மார்க்க சட்டப்பள்ளிகள் வழியாக முன்னிறுத்தப்பட்டன. இமாம்கள் அபூஹனீபா, ஷாபிஈ, மாலிகி, ஹன்பலி என மார்க்க அறிஞர்களின் கருத்தியல் சிந்தனைகள், மார்க்க நடைமுறை தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
இமாம் அபுஹனீபாவின் காலம் கி.பி. 669 முதல் 769 வரையிலானதாகும். உமையாக்களின் ஆட்சிக் காலத்தில் தோன்றி அந்த கொடூர ஆட்சிக்கு எதிராக இயங்கியவர். ஈரானை பிறப்பிடமாகக் கொண்டாலும் அபாசித்துகளின் ஆட்சியில் பாக்தாத்தில் பிரதம நீதிபதியாக பணியாற்ற அழைக்கப்பட்ட போது மறுத்து விட்டார். இவரது ஆட்சி எதிர்ப்பு நிலைபாடு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு அங்கே மரணமடைந்தார். பிக்ஹ¤ சட்டங்கள் குறித்தும் திருக்குர்ஆன், ஹதீதுகளில் விடை கிடைக்காத பிரச்சனைகளுக்கு மார்க்க அறிஞர்களின் ஒருமித்த கருத்துரு அடிப்படையில் செயல்பட வழிகாட்டும் கியாஸ், இஜ்மா, இஜ்திகாத் குறித்தும் புது அணுகுமுறையை ஜனநாயகவடிவில் உருவாக்கினார். இஸ்லாத்தில் இவர் தம் வழிகாட்டுதல்களை பின்பற்றும் மக்கள் ஹனபிகள் என்றும் அடையாளம் காட்டப்பட்டனர். மத்ஹபுகளை தோற்றுவித்த மார்க்க அறிஞர் தோன்றி வாழ்ந்து பிரச்சாரம் செய்த இடச்சார்பினை இந்த மத்ஹபுகளின் புவியியல் மற்றும் பிரதேச தன்மைகள் குறித்த தோற்றப்பாடுகளாகக் கருதலாம். உலகிலேயே மிக அதிகமான இஸ்லாமியர்கள் ஏறத்தாழ 34 கோடி பேர் ஹனபி மத்ஹபினையே பின்பற்றுபவர்களாக உள்ளனர். பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆப்கன், மத்திய ஆசியா மற்றும் துருக்கி, சோவியத், சீனா உள்ளிட்ட நாடுகளில் இவர்கள் வாழ்கிறார்கள்.
இமாம் மாலிகி (கி.பி.711-791) மதிநாவைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் இவர் தம் மார்க்கச் சட்டப்பள்ளியைப் பின்பற்றுபவர்கள் அதிகமும் ஆப்ரிக்க நாடுகளை சார்ந்த கறுப்பின மக்களே ஆவார். நபிகள் நாயகத்தின் சொல்லும் செயலும் சார்ந்த வாய்மொழி மரபுகளான 2000க்கும் மேற்பட்ட ஹதீஸ¤களை தொகுத்து அல்முவத்தா என்றொரு பெருநூல் தொகுப்பை வழங்கியுள்ளார். ஐந்து கோடிக்கு மேற்பட்ட மக்கள் இமாம்மாலிகியை பின்பற்றியவர்களாக இஸ்லாமிய நடைமுறைகளை முழுமைப்படுத்துகிறார்கள். துனீஷியா, சூடான், மொரோக்கோ, வடஆப்பிரிக்கா, அல்ஜீரியா, குவைத், பஹரின், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இவர்கள் இமாம் மாலிகியின் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள்.
இமாம் ஷாபி, (கி.பி. 761-820) அரபு நாட்டில் தோன்றிய மார்க்க சிந்தனையாளர், இமாம் மாலிகியின் மாணவர். ஏமன் நாட்டை மையப்படுத்தி வாழ்ந்தாலும் தனது ஆயுளின் இறுதிப்பகுதியில் எகிப்தில் வாழ்ந்து முடித்தார். தனக்கு முந்தைய இமாம்களின் வழிமுறைகளை சிந்தனை தொகுப்புகளை உள்வாங்கிக் கொண்டு ஷாபிஇ மார்க்கப் பள்ளி சிந்தனைமுறைகளை தொகுத்தளித்தார். எகிப்து, சிரியா, ஜோர்டான், பலஸ்தீனம், ஈராக், லெபனான், ஏமன், ஈரான், இந்தியா, இந்தோனேஷியா, மலாயா, புருணை, சிங்கப்பூர், தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த பத்துகோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஷாபிஇ மார்க்கப் பள்ளியின் வழிகாட்டுதல்களை மேற்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இமாம் ஹன்பலி (கி.பி. 780-850) தனது மார்க்கப் பள்ளியை நிறுவியபோது நபிகள் நாயகம் சொல்லும் செயலுமான ஹதீஸ் என்னும் 50,000 வாய்மொழி மரபுகளை தொகுத்தளித்தார். இது முஸ்னதுல் இமாம் ஹன்பல் என்று அழைக்கப்படுகிறது. இமாம் ஷாபிஇயின் மாணவராக இருந்த இமாம்ஹன்பலியின் மரபுகளை சவுதி அரேபியா, சிரியா, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் முப்பது லட்சம் மக்கள் பின்பற்றுகிறார்கள்.
இஸ்லாமிய ஆன்மீக மரபின் தத்துவமையமான இறை ஒன்று என்கிற சித்தாந்தம் அடிப்படைத் தன்மையில் எந்தவித மாற்றமுமில்லாமல் இந்த மார்க்கப் பள்ளிகளின் ஏகத்துவ கொள்கையாக உருப்பெற்றிருந்தன. திருக்குர்ஆன் இந்த மார்க்கப் பள்ளிகளின் வழிகாட்டும் மறையாக இடம் பெற்றிருக்கிறது. ஆனால் நடைமுறையில் மார்க்கம் உள்ளிட்ட விஷயங்களில் வெவ்வேறு மரபுகளை பின்பற்றினர். இதனை தக்லீது என குறிப்பிடலாம். இது நபி முகமது பின்பற்றியதான நடைமுறைகளென அவரவர் களஆய்வின் மூலமாக பெறப்பட்ட ஹதீஸ்களின் அனுபவங்களிலிருந்து தருவித்துக் கொண்டனர். இதுபோன்றே திருக்குர்ஆனின் வசனங்களை பொருள் கொள்வதில் தங்களது தனித்த அணுகுமுறை சார்ந்தும் விளக்கவுரை வழங்கினார்.
இந்த வகையில் நான்கு இமாம்களின் மார்க்கப் பணியும், சிந்தனைத் தேடலும், பிரதேசம் சார்ந்த தனித்தன்மைகளை உள்ளடக்கிய சிக்கலான பிரச்சனைகள் குறித்த மார்க்கத் தீர்ப்பும் இஸ்லாத்தின் ஒற்றையாதிக்க கலாச்சார மையத்தை உடைத்து பன்மை அடையாளத் தேடல்களை உருவாக்கியுள்ளன என அனுமானிக்கலாம்.
இஸ்லாமியத்தின் மற்றொரு வகையான எழுச்சி தரீகாக்கள் மூலமாக 11ம் நூற்றாண்டிலிருந்து துவக்கம் கொள்கின்றன. ஈரானில் தோன்றி இஸ்லாத்தின் புத்தெழுச்சிக்கு பங்காற்றிய அப்துல்காதிர் ஜீலானியை பின்தொடரும் மார்க்க வழிமுறைப் பிரிவு காதிரிய்யா தரீகா என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் இம்முறையை முன்னெடுத்துச் சென்றவர்களாக நாகூரில் அடங்கப் பெற்றிருகூகிற ஷாகுல்ஹமீது ஆண்டகை, தக்கலை ஷெய்கு பீர்முகம்மது ஒலியுல்லா உள்ளிட்ட மார்க்க அறிஞர்களை, சூபி கவிஞர்களை குறிப்பிடலாம்.
கி.பி. 1197 களை ஒட்டி ஆபிரிக்க நாடுகளில் உருவான ஒன்று ஷாதிலிய்யா தரீகாவாகும். அப்துல் அல்ஹசன் முன்வைத்த மார்க்க சட்ட வழிப்பிரிவு, வட ஆப்பிரிக்கா, மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, சூடான், துனீஷியா, துருக்கி ரோமானியா உள்ளிட்ட நாடுகளை மையப்படுத்தி இயங்கியது. இதுபோன்றே 1973களில் ஈரான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் உருவான மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் மெளலவிதரீகா, 1388களில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவிய காஜா பஹாத்தின் முகம்மது அவர்களின் வழிப்பாட்டையாக விளங்கிய நக்ஸ்பந்தியாதரீகா உள்ளிட்டவை இஸ்லாமியத்தின் அகமியப் பண்புகளின் செயல்முறையாக்கத்திற்கு விரிவான அளவில் அடிப்படையாக அமைந்தன.
இந்த நிலையில் துவக்க காலம் தொட்டு கறுப்பின மக்களின் வாழ்வின் ஆதாரமாய் மாறிய இஸ்லாத்தின் பரிமாணம், மத்ஹபுகள் என்னும் மார்க்கப் பள்ளிகள் மூலமாகவும், தரீகாக்கள் எனும் ஞானவழிபாட்டைகள் மூலமாகவும், தொடர்ந்த செயல்பாட்டை, விடுதலைக்கான பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதில் இமாம் மாலிகியின் மார்க்கப் பள்ளி முழுவதும் கறுப்பின மக்களின் உணர்வு நிலைகளில் உள்ளாகவே அடையாளம் காட்டியுள்ளன. இதுபோன்றே ஷாதிலிய்யா தரீகாவின் சிந்தனை எல்லைகளும் ஆபிரிக்கநாடுகளின் பரப்பினை மையங்கொண்டே இயங்கியுள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
ஆசிய, ஆபிரிக்க கண்டங்களில் இஸ்லாம் தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதுபோல் விரிவான அளவில் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் தன்னை முழுமைப்படுத்திட இயலவில்லை. ஆசிய, ஆபிரிக்க அரபு சமுதாயங்களின் சமய மரபுகள் பழங்குடி மக்கள் சார் சமய மரபுகளாகவும், செமிட்டிக் அல்லாத மதங்களின் பண்பாட்டு அசைவுகளையும் கொண்டிருந்த நிலையல் இஸ்லாத்தின் செல்வாக்கு விரிவடைந்தது. ஆனால் ஐரோப்பிய நிலப்பரப்பில் யூத, கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கின் காரணமாக சில எதிர்கொள்ளல்களையும் சவால்களையும் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது.
உலகின் ஏறத்தாழ 55 நாடுகளில் எல்லா மார்க்கப் பள்ளிகளையும், தரீகாக்களையும் உள்ளடக்கிய முஸ்லிம்கள் 100 கோடிக்கு மேல் வாழ்கிறார்கள். ஸ்பெயினில் கடந்த 800 ஆண்டு காலமாக முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றிருந்தாலும் கூட ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த மட்டில் பிரான்சிஸ் 60 லட்சம் பேர் அதிகபட்சமாக வாழ்கிறார்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினர் முஸ்லிம்களாக உள்ளனர்.
அமெரிக்காவில் இஸ்லாம் பரவிய முறைமையை பரிசீலித்துப் பார்த்தால் வெள்ளை நிறவெறிக்கும், அதற்கு சமய ரீதியாக ஏற்று கொள்கிற கிறிஸ்தவர்களின் நிலைபாட்டிற்கும் மாற்றுக் குரலாக ஒடுக்கப்பட்டு அடிமைப்பட்டு கிடக்கிற கறுப்பின மக்களின் மதமாக இஸ்லாம் உருவாகி வந்துள்ளது. கறுப்பின மக்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் இயக்கமாய் கிறிஸ்தவம் கூட தன்னை அடையாளம் காண முயற்சித்தது. ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் நிறவெறி ஒடுக்குமுறைக்கும் காலனித்துவ ஆட்சிக்கும் எதிராக கறுப்பின மக்கள் சார்ந்த இன்னொரு வகை கிறிஸ்தவம் முன்வைக்கப்பட்டது. கறுப்பின கலை இலக்கியப் படைப்பாளிகளின் சமகால குரலாக லாங்ஸ்டன் ஹியூக்ஸ் 1920களை ஒட்டி எழுதிய கவிதைகளில் இது எதிரொலித்தது.
இயேசுவானவர் ஒரு கருப்பராக திரும்பி வருவாரானால் அது நல்லதல்ல.
அவர் சென்று பிரார்த்தனை செய்ய முடியாத தேவாலயங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.
எவ்வளவு புனிதப்படுத்தப்பட்டாலும் நீக்ரோக்களுக்கு அங்கே வாயில்கள் மறுக்கப்படும்.
ஆனால் இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
இயேசுவே நீர் உயிர்ப்பித்து வந்தால் நிச்சயமாக மீண்டும் சிலுவையில் அறையப்படுவீர்.
அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆபிரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டு இங்கு குடியேற்றப்பட்ட அடிமைகள். ஆபிரிக்கா அமெரிக்கர்களான இவர்களை ஐரோப்பிய வெள்ளை நிறவெறி சமூகம் நீக்ரோக்கள் என்று அழைக்கிறது. கறுப்பு இழிவானது வெள்ளை உயர்ந்தது என கட்டமைக்கப்பட்ட கருத்தியலின் விளைவுதான் வாழ்வின் எதிர்மறையான விரும்பதாகாக நிகழ்வுகளுக்கு கறுப்பு (Black) என்ற சொல்லாடலை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். ஒருவரை மிரட்டி ஏமாற்றுவதற்கு பிளேக் மெயில் தந்திர கலைகளுக்கு பிளேக் மேஜிக் என்பதாக இவை சொல்லப்பட்டு வந்துள்ளன.
காஸியஸ்கிளே என்பது போலத்தான் கறுப்பின மக்கள் பெயரிட்டுக் கொள்ளவேண்டும். கிளே அழுக்கு மண்ணை குறிக்கும் சொல்லாடலாகும். இதனை தமிழ் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்கள் மண்ணாங்கட்டி என பெயரிடுவதற்கு ஒப்பாக இருப்பதைக் காணலாம். வெள்ளை நிறவெறி ஆதிக்க கலாச்சார இருப்பின் அறிகுறியாக இப்பெயரிடுதலைக்கூட கருதலாம். இதுபோன்றே ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயரிடுதல் கூட அமெரிக்க அரசாங்கமும் அதிபரும், கறுப்பர்களுக்காக இல்லை. வெள்ளையர்களுக்காக மட்டுமே என்பதான அர்த்தமாகவே வெளிப்படுகிறது. எனவேதான் உணவகங்கள் உள்ளிட்ட பொதுவிடங்களில் தொங்கும் அறிவிப்பு பலகைகளில் கறுப்பவர்களுக்கும், நாய்களுக்கும் அனுமதி இல்லை என்கிற வாசகம் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். 1781களில் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து பெயர்த்து கொண்டு வரப்பட்ட ஆண், பெண் அடிமைகளை வைத்தே அடிமைகளை உற்பத்தி செய்யும் பண்ணைகள் உருவாக்கப்பட்டதான வரலாறு அமெரிக்காவிற்கு சொந்தமானது. இத்தகையதான அடிமைமுறையை எதிர்த்துதான் மார்ட்டின் லூதர்கிங் போராடிய போதும் நவீன வாழ்வியல் காலத்திலும் இத்தகையதான நிறவெறிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளியிட முடியவில்லை.
1. அவன் உன்னை வலதுபுறத்தில் சவுக்கால் அடித்தால் இடதுபுறத்தையும் காட்டிக் கொடு. இவற்றை இங்கே தாங்கிக் கொள். உன் தேவன் உன்னைப் பரலோகத்தில் வைத்து பரிசளிப்பான் என்றெல்லாம் போதித்து நம்மை மயக்கத்தில் ஆழ்த்தியது.
2. அமெரிக்காவின் ஒரு சிறையில் நீ, அமெரிக்க நாடு என்ற அகண்ட சிறையில் ஆபிரிக்காவின் ஆயிரமாயிரம் கறுப்புக் கைதிகள் இதுதான் நீ சார்ந்த இனத்தின் நிலை.
1930களை ஒட்டி வெள்ளை நிறவெறிக்கும், அதற்குத் தத்துவ அங்கீகாரம் வழங்கியதை கிறிஸ்தவத்தை விட்டும் வெறியேறி இஸ்லாமியனாக மாறிய எலிஜாபூல் என்ற எலிஜா முகமதுவின் மேற்குறிப்பிட்ட வாசகங்கள் மிகமுக்கியமானவை. இவர் கறுப்பர்களின் விடுதலைக்காக தோற்றுவித்த இயக்கம் தான் இஸ்லாத்தின் தாயகம் (Nation of Islam) இவ்வியக்கத்தின் செயல்பாட்டாலும் செல்வாக்கினாலும் இஸ்லாத்தின்பால் கறுப்பின மக்களின் சிந்தனையாளர்களின் கவனம் ஈர்க்கப்பட்டது. எலிஜா முகமதுவின் காலம் 1897-1975க்கு இடைப்பட்டதாகும்.
ஆபிரிக்க இனமக்களின் விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய எலிஜாமுகமது, வியட்நாம் மீதான அமெரிக்காவின் ஆக்ரமிப்பு யுத்தத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால் சிறையிலும் அடைக்கப்பட்டார். இவர் தனது வழிகாட்டியாக ஷியாபிரிவைச் சேர்ந்த பர்துமுஹம்மதுவை ஏற்றுக்கொண்டார்.
இதுபோன்றே 1935ல் நியூயார்க்கில் பிறந்த டிவைட்யார்க் என்னும் கறுப்பினப் போராளி 1965களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஈசா அப்துல்லா என மாற்றிக் கொண்டார். அன்சாரு அல்லாஹ் கம்யூனிட்டி என்ற இஸ்லாமிய பிரிவை உருவாக்கினார். தனது பெயரை இமாம் ஈசா அப்துல்லா முஹம்மது அல்மஹதி என முழுமைப்படுத்திக் கொண்ட பிறகு இஸ்லாமிய கடமை மற்றும் நடைமுறைச் சார்ந்த பின்பற்றுதல்களில் ஒரு நெகிழ்ச்சித் தன்மையை உருவாக்கினார்.
கறுப்பின மக்கள் பகுதியில் இயக்கம் நடத்திய எலிஜா முகமதுவின் சிந்தனை, பேச்சு, பத்திரிகை செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டார். மால்கம் லிட்டில் என்ற மால்கம். அலெக்ஸ்ஹேலி படைப்பாளி மால்கம்எக்ஸின் வாழ்வை நவீன பிரதியாய் ரூட்ஸ் (‘Roots’) என்ற நூலாக எழுதியுள்ளார். அமெரிக்க கறுப்பர்களின் புராதான மார்க்கமாக இஸ்லாம் உருப்பெற்றுள்ளதை அந்த நூல் வெளிப்படுத்தியது. இதுவே பின் தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. ஆபிரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட பூர்வீகம் பற்றி அறியாத கறுப்பர்கள் என்பதை குறிக்கவே இந்த எக்ஸ் என்ற அடையாளம் பயன்படுத்தப்பட்டது. கறுப்பின மக்களின் கலாச்சார சூழல் போதைப்பொருள் உற்பத்தி, குடிப்பழக்கம், வரம்பற்ற பாலியல் உறவு என்பதான நிலைகளிலிருந்து விடுபட இஸ்லாம் ஒரு மாற்று கலாச்சார உருவாக்கத்திற்காக பிரச்சாரம் செய்யப்பட்டது. முகம்மது பேசுகின்றார் (Muhammed Speaks) பத்திரிகையின் தொடர்பால் மால்கம் எக்ஸ் கறுப்பின மக்களின் முக்கிய தலைவராக உருவாகத் துவங்கினார்.
இனவெறி நிறவெறியின் பிடியிலிருந்து விடுதலை பெற ஒரே வாசல் இஸ்லாம் தான் எனப் பிரச்சாரம் செய்த மால்கம் எக்ஸ், 1962களில் உலககுத்துச் சண்டை வீரர் காசியஸ் மார்சிலஸ்கிளேயுடன் தொடர்பு ஏற்படுகிறது. உலகக் கோப்பையை குத்துச் சண்டைப் போட்டியில் வென்ற போதிலும் கூட உணவு விடுதிகளிலும் தங்கும் விடுதிகளிலும் கறுப்பன் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. குத்துச்சண்டை களத்தைவிட்டு வெளியே வந்துவிட்டால் நீ இன்னொரு கறுப்பன்தான் என அவமதிக்கப்பட்டார். இதன் விளைவாகவே கசியஸ்கிளே அஹமத் அலியாக இஸ்லாத்திற்குள் நுழைகிறார். மால்கம் எக்ஸின் சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்.
இங்கும் வெள்ளையர்கள் உண்டு. ஆனால் இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து வந்த கறுப்பர்களிடமும் சூடானிலிருந்து வந்த கறுப்பர்களிடமும், ஹானாவிலிருந்த கறுப்பர்களிடமும் ஒரே விதமாக நடந்து கொண்டார்கள். நிறம் இங்கே எந்தவிதத்திலும் தலையிடுவதில்லை”.
மக்காவில் க·பாவிற்கு சென்று ஹஜ் இறுதிக் கடமையை நிறைவேற்றி வந்தபோது மால்கம் எக்ஸ் – மாலிக் அல்ஷாபாஸ் என்ற பெயர் தாங்கி மேற்கண்ட கருத்துக்களை முன்வைக்கிறார். வெள்ளையர்கள் அனைவரும் எதிரிகள் என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு, நிறவெறிகொண்டு அலையும் வெள்ளையர்களையே தனது எதிரிகளாக பிரகடனம் செய்தார். அமெரிக்க வெள்ளையர் குறித்த அனுபவத்திலிருந்து, அரபிய சூழலில் கூடும் ஹஜ் கிரியைகளில் நிறபேதமற்று வெள்ளை நிற முஸ்லிம்களிடமிருந்து பெற்ற அனுபவ வேறுபாட்டால் தனது வெள்ளையர் குறித்த பார்வையில் கூட மறுசிந்தனையை உருவாக்கி கொள்கிறார். இப்படியாகத்தான் வரலாற்றின் தடங்களில் இஸ்லாம் கறுப்பின விடுதலையோடு ஒரு நிறவெறி ஆதிக்க எதிர்ப்பு மார்க்கமாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது.
எலிஜா முகம்மது ஈசாஅப்துல்லா உள்ளிட்ட கறுப்பின இஸ்லாமிய தலைவர்கள், இறுதிக்காலத்தில் தங்களை நபியாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். இஸ்லாமிய ஆன்மீகத் தளத்தில் நபி முகம்மது அவர்களே இறுதி நபி என்பதாக முடிவு செய்யப்பட்ட கருத்து நிலைபெற்றுவிட்டதால் பிற இஸ்லாமியர்கள் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் உலக வரலாற்றில் தொடர்ந்து தங்களை நபியாக அறிவிக்கும் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.
கி.பி. 1839ல் காதியானில் பிறந்த மிர்சாகுலம் அகமது 1880களில் தன்னை நபியாக அறிவித்தார். திருக்குர்ஆன் முன்வைக்கும் காத்தமுன் நபி என்ற சொல்லாடல் அண்ணல் முகம்மது நபியை இறுதிநபியென்று சொல்லவில்லை. முத்திரை நபி என்றே கூறுகிறது என விளக்கமளித்தார். தன்னை மஹதி என்று சொல்லி ஈசாநபி, முஹம்மது நபி, கிருஷ்ணபரமாத்மா ஆகியோர்களின் ஒட்டுமொத்த அவதாரமென அறிவித்தார். இந்நிலையில் மிர்சாகுலாம் அகமதுவின் அடிநாதமான சிந்தனை கிறிஸ்தவர் (ஈசாநபி) இஸ்லாமியர் (முஹம்மது நபி) இந்துக்கள் (கிருஷ்ணபரமாத்மா) ஒன்றிணைந்த சித்தாந்தமாக இநதியச் சூழலில் வெளிப்பட்டுள்ளதோ எனவும் ஆராயலாம். இன்றைய காதியானி இயக்கம் மிர்சாகுலம் அகமதுவை நபி என்றே நம்புகிறது. இதன் லாகூர் பிரிவினர் மிர்சாகுலம் அகமதுவை ஒரு இஸ்லாமிய சீர்திருத்தவாதி என்று மதிப்பீடு செய்கிறது.
டாக்டர் ரஷாத்கலீபா எகிப்திய முஸ்லிம். அமெரிக்காவின் அரிஜோனாவில் ஒரு பேராசிரியர். திருக்குர்ஆனை ஆய்வு செய்து அதன் மொழிக் கட்ட¨ப்பில் 19 என்னும் கணிதவியல் சமன்பாடு உட்புதைந்து கிடப்பதாக ஒரு கருத்தாக்கத்தைமுன்வைத்தார். இது திருக்குர்ஆனை சமூகவியல் சார்ந்து தப்சீர் என்னும் விளக்கவுரை எழுதும் முறைமையிலிருந்து மாறுபட்டு இன்னொரு விதமாக அணுகியது. மொழி அமைப்பாக்கம் கணிதவியல் சார்ந்து விவாதிக்கும் முறையியலாக இது உருவானது. இத்தோடு ஹதீஸ்கள் குறித்த ஒரு மறுவாசிப்பை நிகழ்த்தினார். நபிகள் நாயகத்தின் மரணத்திற்கு பிறகு ஏறத்தாழ 200 வருடங்களுக்கு பிறகு தொகுக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் சொல்லும் செயலும் அனுமதித்ததும், தடுத்ததும் என்பதான வாய்மொழி மரபுகளை தொகுக்கும்போது அக்காலச் சூழலில் உருவாகிவிட்ட அரசியல் ஆட்சியதிகார போட்டிகள், போர்விஸ்தரிப்பு இராணுவ நடவடிக்கைகள், குழுக்களுக்கிடையிலான குழப்பங்கள், ஆணாதிக்கம் சார்ந்த கருத்தியல்கள் ஹதீதுகளில் புகுந்து விட்டதாகவும் அறிவித்தார். ஸஹிஹ்ஸித்தா என்னும் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, நஸஈ, ஆகிய ஹதீது தொகுப்புகளுக்கு மாற்றமாக இமாம் அலியை முன்னிலைப்படுத்தும் ஷியாக்களின் அல்குலைனி, இப்னு பாபுவைஹ், ஜாபர் முஹமது அஸ்தூஸி, அல்முர்த்தனா ஹதீது தொகுப்புகள் ஹிஜ்ரி 328-436 காலகட்டத்தினதாகும் என்பதை வெளிப்படுத்தினார்.
எனவே இவைகளை மார்க்க ஆதாரங்களாக எடுக்கமுடியாது என்றும் விவாதித்தார். நமது வாழ்வியலுக்கும் வழிகாட்டலுக்கும் குர்ஆன் மட்டுமே என்பதான முடிவுக்கு வந்து குர்ஆனிய சட்டங்களுக்கு மாற்றமாக பிற்காலத்தில் இஸ்லாமிய உலமாக்களும் ஆட்சியாளர்களும் தங்களுக்கு சாதகமாக ஷரீஅத் சட்டங்களை உருவாக்கிக் கொண்டார்களென்றும், பெண் உரிமைகள், திருமணங்கள், குற்றவியல் சட்டங்கள், இணை வைத்தல் தொழுகை, ஹஜ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளிலும் ஒரு மாற்றினை முன்வைத்தார். குறிப்பாக பெண் சார்ந்த பிரச்சினைகளை முன்வைக்கும்போது திருக்குர்ஆனை ஆதாரமாக காட்டினார்.
”மாதவிடாயின்போது பெண்களுடன் தாம்பத்ய உறவிலிருந்து விலகி இருங்கள். அவர்கள் அதை விட்டு நீங்கும் வரை அணுகாதீர்கள். பின்னர் உறவு வைத்துக் கொள்ளலாம்”. (2:222)
மாதவிடாய் நேரத்தில் தொழக்கூடாது குர்ஆனைத் தொடக்கூடாது என்று கூறுவதெல்லாம் குர்ஆனிய சட்டமல்ல என விவாதித்தார்.
பெண்களுக்கு ஆடைவிதிகள் (Dress code) பற்றி பேசும்போது கண்ணியமான முறையில் உடையணிதலையே இஸ்லாம் வற்புறுத்துகிறது. ”மானம் காக்கும்படி கண்ணியமான முறையில் ஆடை அணிய வேண்டும். மார்பகங்களை மறைத்தும் வெளியேத் தெரிய அவசியமான உடலில் பகுதிகள் தவிர உடலின் இதர பகுதிகள் மூடியவண்ணமிருக்க” (24:30,31)
இதைவிட்டுவிட்டு குருட்டுத் தனமாக அரபிகளுடைய ஹிஜாப் அல்லது புர்கா உடுத்துவதை அவசியமல்ல என்றும் விஞ்ஞான தொழில் சமுதாய வளர்ச்சிக்கேற்றப்படி இந்த கண்ணியமான உடை அணிதல் இருக்க வேண்டுமென வற்புறுத்துகிறார். பாங்கில், தொழுகையில் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு இணையாக நபி முகமதுவை இணை வைப்பதாகவும் ஆன்மீக தளத்தில் விமர்சித்தார்.
1988ல் இவர் தன்னை ரசூலாக (தூதர்) அறிவித்துக் கொண்டார். நபிக்கும் ரசூலுக்கும் இடையேயான வித்தியாசத்தை பேசினார். நபி என்பது இறைவனால் வேதம் கொடுத்து அனுப்பப்பட்டவர்களை மட்டுமே குறிப்பதாகவும் ரசூல் (தூதர்) என்பவர் இறைவனால் தூது கொடுத்து அனுப்பப்பட்ட அனைவரையும் குறிப்பதாகவும் புழக்கத்திலிருக்கும் திருக்குர்ஆன் எனும் வேததை மெய்ப்பிக்க அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட மெய்ப்பிக்கும் தூதர் என விளக்கமளித்தார். இவரது திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்புகளை வாங்கி சவூதி அரசு எரித்து அழித்தது என்கிற சேதியும் உண்டு. இறுதியாக ரஷாத் கலீபா 1990 ஜனவரி 31ல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருக்குர்ஆனிய கருத்தாக்கங்களில் நின்று புது உண்மைகளை காலச் சூழலுக்கு ஏற்ப அர்த்தப்படுத்தும் முயற்சி ஒருபுறம் வரலாறெங்கும் நிகழ்ந்துள்ளது. இதுவே புதிதாக கல்வி கற்ற இஸ்லாமிய படிப்பாளி மக்கள் பகுதியை இக்கொள்¨யாக்கங்களின் பால் ஈர்ப்பதற்கு பயன்பட்டது. எனினும் இஸ்லாமியத்தின்பால் இன்றுள்ள மிக முக்கியப் பிரச்சனை இதனை தமிழகச் சூழலில் கூட நிறுவன சமயம் சார் ஒரு சடங்கியல் மார்க்கமாக மட்டுமே அணுகுவதாகும், தொழுகையை கடைபிடித்தல், புனித ஹஜ் பயணம் பூர்த்தி செய்தல் என்கிற வகையிலான நடைமுறைகளை மேலெழுந்தவாரியாக முதன்மைப்படுத்தி அதன் வரலாற்று துவக்கங்களுக்குச் சென்று கபருசியாரத் முதல் மல ஜலம் கழிப்பது வரை ஆதாரங்களை தேடியலைந்து எந்த முறையில் இக்கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதான பிரச்சனைகளை பத்திரிகைகளிலும் டி.வி.மீடியாக்களிலும் அறிவின் அராஜக எல்லைக்குப்போய் மண்டைபிளக்க சிலர் விவாதிப்பதை பார்க்கிறோம். இது திரும்பத் திரும்ப மத அடிப்படைவாதத்தை கட்டமைக்கும் தூய்மைவாதம் பெயரிலான பாசிச செயல்பாடாகும். இந்த சடங்கியல்களையும் தாண்டி இக்கடமைகள் ஒரு குறியீட்டு மொழியாக அதன் அடித்தளம் (Deep Structure) உணர்த்துகிற ஒற்றுமை, சகோதரத்துவம், விடுதலை உள்ளிட் சமூக அறவியல் (Social Ethics) மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்