கரைந்த இடைவெளிகள்

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

ராபின்


விரிந்து பரந்து, அகன்றதாய் இருந்தது
பார்வைகளின் எல்லைகளை மீறியதாய்
அதன் தொடக்கமும், முடிவும்

சாலையை நான் கடக்க வேண்டும்
சமிக்ஞை விளக்குகள் எதுவும் உதவிக்கில்லை

முன்னும் பின்னுமாய் இடைவெளிவிட்டு
அதை இட்டுநிரப்ப விரையும் வாகனங்கள்

எனது தேவையும் அந்த இடைவெளிதான்
அதனைக் காலம் எனலாம்
அல்லது தூரம் எனக் கொள்ளலாம்

எனது தேவை இடைவெளி மட்டுமே
அதன் பெயர்களல்ல
நான் சாலையைக் கடந்தாக வேண்டும்

புலன்களால் உள்வாங்கி
மனதால் கணக்கிட்டுக் காத்திருந்தேன்
நான் கடக்க வேண்டிய இடைவெளிக்காக

ஒத்துவராத இடைவெளிகள் சில வந்துபோயின
எனக்குத் தெரியும் அவை என்னை
மறுகரை சேர்க்காமல் அடித்துச்சென்று விடுமென்று

மவுனமாய்க் காத்திருந்தேன்
காலத்தின் சிலதுளிகள் கரைந்தபின்
கணக்குகள் மனதில் கூடிவந்தன

முன்னமே அதனைக் கண்டுகொண்டேன்
அருகில் வந்து மெல்லக் கரம்பற்றி
எனை பத்திரமாய்க் கரை மீட்டது

நன்றியாய் நான் பார்ததேன்
வெற்றிடத்தின் வெறுமையாய்
முற்றாய் என்னில் கரைந்து போனது
அந்த இடைவெளி

***
amvrobin@yahoo.com

Series Navigation