கருப்புக் குதிரை கூட்டுரோட்டில் காலைச் சாப்பாட்டு நேரம்

This entry is part [part not set] of 39 in the series 20041028_Issue

அருண் கொலட்கர் (தமிழில் : இரா முருகன்)


இப்போ டோக்கியோவிலே
ராத்திரியாக இருக்கும்.

தெரு எதிர்வரிசையிலே
வெள்ளைக்காரன் பெயர் வச்ச
கடியாரக் கடையில்
பார்வையா மாட்டியிருக்குதே
பாட்டனுக்குப் பூட்டன் கடியாரம்,
அதுக்குத் தெரியும்
நான் சொல்றது சரியா இல்லியான்னு.

இப்போ டோக்கியோவிலே
ராத்திரியாக இருக்கும்.

அங்கே பச்சை மீனை
மொச்சைக் கூழோட கலந்து
உருண்டை பிடிச்சுட்டு இருப்பாங்க.

சாப்பிடற குச்சியாலே
மீனைக் குத்திக்கிட்டு
உட்கார்ந்திருப்பார்
அந்த ஜப்பான் தேசத்து ராஜா.

சியோல், அதாங்க கொரியா தலைநகர்
அங்கே சாப்பாட்டுக் கடையிலே
ஒரு நாய்க்குட்டியை
மெல்லக் கழுத்தை நெரிச்சுக்
கொன்னுக்கிட்டு இருப்பாங்க.
அப்புறமா அதைச் சமைப்பாங்க.

அமெரிக்காவிலே இன்னும்
நேத்து ராத்திரிதான்.
டெக்சாஸ் சிறைச்சாலையிலே
கழுத்தெலும்புக் கறியும்
வெண்ணெயாப்பமும்
வறுவலும் பாலுமாக
தண்டனைக் கைதி ஒருத்தன்
இப்பச் சாப்பிட்டுக் கிட்டிருப்பான்.

பெரு நாட்டு தெற்குப் பிரதேசத்துலே
ஜூலியானா அம்மா
சாண வரட்டி எரிச்சு
உருளைக் கிழங்கு வேகவைச்சுட்டு இருக்கும்.

துருவப் பிரதேசத்துலே
யாரோ ஒருத்தர் இப்போ
பனியிலே வேட்டையாடிக் கொண்டாந்த மானை
உரிச்சு உப்புக் கண்டம் போட்டுட்டு இருப்பார்.

ரஷ்யா அனுப்பின சல்யூட் ராக்கெட்டுலே
விண்வெளி வீரர்கள் இப்பத்தான்
பன்னிக் கறியும், வெண்ணெயும்,
கேக்கும் பழமும் காப்பியுமாகப்
பசியாறி இருப்பாங்க.

நம்ம நாட்டுலே
ஆந்திராவிலேயோ வேறே எங்கேயோ
இந்நேரம்
பதிமூணு ஜாதி இந்துக்கள்
நாலு தலித்துகளை
மனிதக் கழிவு உண்ண,
அதாம்ப்பா, பீ தின்ன வச்சுட்டிருப்பாங்க.

ஏன்யான்னா, அவங்க சோள வயல்லே
இவங்க மாடு மேஞ்சுதாம். இல்லாக்காட்டி
வேறு ஏதோ உப்புப் பெறாத காரணம்.

இங்கே நம்ம மும்பை பட்டணம்
பைகுல்லா ஜெயில்லே
குடிகாரன், கேப்மாரி, மொள்ளமாரி
சந்தேகக் கேசுலே மாட்டினவனுங்கன்னு
எல்லாக் கைதியும்
கஞ்சி குடிச்சு முடிச்ச காலை நேரம் இது.

அவனுகளை எல்லாம் வலுக்கட்டாயமா
உட்கார வைச்சுக் கல்வி புகட்டறாங்கப்பா.
இந்தக் கூட்டத்திலே ஒத்தனைப் பிடிச்சு
கையிலே புத்தகத்தைத் திணிச்சு
உரக்கப் படிடான்னு எல்லோருக்கும் முன்னாலே
நிக்க வைச்சுருக்காங்க.

இப்படிக்கு இழுத்து வச்சுப் படிக்க
உட்கார்த்தினவனுக்கு எல்லாம்
குதிரைப் பந்தயம், கைகலப்பு,
ஜெயிலுக்குள்ளே சிகரெட், கஞ்சா
வியாபாரத்துலே நாட்டம்.

புத்தககமும் கையுமா நிக்கறவன்
திக்கித் திணற்றான் –
ஜ ஜ ஜவ ஜவர் ஜவகர் ஜவகர்லால் நேரு.

‘ங்கோத்தா ‘
அவனவன் வண்டை வண்டையாத் திட்டறான்.
இந்த சத்தத்துல்லே
நேரு பாடமாவது ஒண்ணாவது.
ஆஜர் எடுத்ததும்
பாடம் முடியாமலேயே வகுப்பு கலைகிறது.

இது கருப்புக் குதிரை கூட்டு ரோட்டுலே
காலைச் சாப்பாட்டு நேரமுங்க.

தோ பாருங்க.
இட்லிக்காரம்மா வந்தாச்சு.
கம்பிளிக் கயறு கயறாத் தலைமுடி,
மொச்சக் கொட்டை கண்ணு
அந்தம்மாவுக்கு.
பிள்ளைங்களைப் பார்த்து
பெத்த அம்மா சந்தோசப்படறது போல
இட்லிக்காரம்மா முகத்துலே பூவா ஒரு சிரிப்பு.

தலையிலே வச்ச கூடையிலே
பெத்தம் பெரிசா ஒரு அலுமினியத் தூக்குப் பாத்திரம்
ஆடி ஆடி வருது.
அது முழுக்க இட்லி.
பூவரச இலைக்கு மேலே
ஆலிலைக் கிருஷ்ணன் போல
குண்டு குண்டா குந்திக்கிட்டு இருக்கு எல்லாம்.
இட்லிக்காரம்மா கையிலே
தளும்பத் தளும்ப
காரசாரமான சாம்பார் ஊத்திவச்ச வாளி.

எங்கப்பா எல்லோரும் ?

ஏம்ப்பா கவலைப்படறே.
கூட்டு ரோட்டுலே
சாப்பாட்டு நேரமில்லே.
எல்லாரும் கட்டாயம் வந்துடுவாங்க.

நம்ம இட்லிக்கார அம்மா
கூடையை இறக்கி வைக்கட்டும்.
சும்மா பாத்துக்கிட்டு நிக்கிறியே
ஒரு கை கொடுக்கத் தாவலை ?

கைத் தண்டையிலே அணைச்சுப் பிடிச்ச
பூனைக்குட்டி. காலோரம் தெருநாய் ஒண்ணு.
நடைபாதையிலே கயத்துக் கட்டில் போட்டு
குருட்டுத் தாத்தா
லவுட்ஸ்பீக்கர் கடைக்கு
முதுகு காட்டி உக்கார்ந்து
பாட்டி கிட்டே பேசிட்டு இருக்கார்.
பாட்டியம்மா பேத்திக்குப்
சிக்கெடுத்துச் சடை பின்னிட்டு இருக்கா.

‘இட்லி வந்தாச்சு. இட்லி வந்தாச்சு ‘.
கொழந்தப் புள்ளை பிச்சுக்கிட்டு ஓடுது.
பாதி தலைவாரின சீப்பை
அதும் பின்னாலே விட்டெறிஞ்சு
பாட்டியம்மாவும் உரக்கச் சொல்றா
‘இட்லி வந்தாச்சு ‘.
குருட்டுத் தாத்தாவுக்குக் கேட்கணும்னு போல.

முறுக்கி விட்ட மிலிட்டரிக்கார மீசை தாத்தாவுக்கு.
ஒண்ணை ஒண்ணு பாத்து சதா பொறாமைப் படற
ரெண்டு பக்கத்து மீசையையும்
பிரிச்சு வச்சு ஆளும் சூழ்ச்சியோட
தாத்தா விரல்கள் நீவிவிடுது.
இட்லி துண்ணும்போது குறுக்காலே விழுந்து
தொந்தரவு செய்யக்கூடாது, என்ன புரிஞ்சுதா ?
மீசை முடிகிட்டே கண்டிப்பாச் சொல்லியபடிக்கு
கட்டில் மேலே வச்ச
தோளுசரம் வர கைக்கோலைத் தேடறார்.
அதைத் தரையிலே தட்டிக்கிட்டே
இட்லி சாப்பிட அவர் கிளம்பறபோது
தோளிலேருந்து குதிச்ச பூனைக்குட்டி
கட்டில் கயத்து இடைவெளியிலே
உதிர்ந்து தரையிலே விழுது.
நாய் அவர் முன்னாலே ஓடுது.
நானும் வாரேன்னு பூனைக்குட்டி பின்னாடி.

அண்டா சைஸ் அலுமினியப் பாத்திரத்தை
இட்லிக்காரம்மா திறக்கறாங்க.
நூறு இட்லி அங்கே
ஒரே நேரத்துலே
பெருமூச்சு விடற சத்தம்.
நிலா நிலாவா எல்லாம்
தலைகுப்புறக் கவிழ்ந்து
முட்டி மோதிக் கூடைக்குள்ளே விழுது.

அம்மணமா நூறு இட்லி
ஒண்ணு மேலே ஒண்ணு சரிஞ்சு
வழுக்கி, சறுக்கி
ஒண்ணை ஒண்ணு மூச்சு முட்ட வச்சு
ஒரு மலைமாதிரி
துடிதுடிச்சுட்டுக் கிடக்கு.

தலை பின்னிக்காத பாப்பா, பாட்டி, குருட்டுத் தாத்தா,
எலிப் பாஷாணம் விக்கிறவரு,
காத்தாடி சுத்தற பையன்,
பிளாட்பாரத்துலே கஞ்சா விக்கற பொண்ணு,
ஆட்டக்காரி, சிரிப்புக் குப்பன்,
சொட்டாங்கல் சாம்பியன்
அவங்க சிநேகிதன், சிநேகிதி, நாய், பூனை, உறவுக்காரங்க.
சுத்துவட்டம் ஒரு மைல் தூரத்துலே இருக்கப்பட்ட
வயிறு பசிச்ச வீடுவாசல் இல்லாத
நடைபாதை சீவன்கள் எல்லாரும்
கூட்டு ரோடு சந்திப்புக்கு
வந்துக்கிட்டே இருக்காங்க.

இட்லியைப் பிரசாதமா வாங்கி
சாம்பாரைத் தீர்த்தமா ஊத்தித் தெளிச்சு
பசி என்கிற ராட்சசனை
தினம் தினம் கொல்லறதைக்
கொண்டாட
நடந்தும், ஓடியும், ஆடியும்,
நொண்டிக்கிட்டும், உருண்டுக்கிட்டும்
எல்லாரும் வந்துக்கிட்டே இருக்காங்க.

ஷு பாலீஷ் பையன் வந்தாச்சு.
முட்டிக்கால் வரை மடிச்சு விட்ட
கிழிசல் பேண்டு.
பாலீஷ் போட வாகாக்
காலை வைக்கற பலகையும்,
பிரஷ்ஷும் பாலீஷுமா
கடையையே தூக்கிட்டு வர்றான்.
சும்மா இருக்கற நேரத்துலே
வாசிச்சுப் பழகிக்கற
கருப்பும் மஞ்சளுமா
வர்ணம் பூசின மேளத்தையும் தான்.
வந்ததுமே பொண்ணுங்களை
சீண்ட ஆரம்பிச்சுட்டான் பாருங்க.

ரெண்டு காலும் இல்லாத இவருதான்
மும்பையிலேயே படு வேகமான ஆளு.
அடியிலே சக்கரம் பொருத்தி
தச்சு ஆசாரி செஞ்சு கொடுத்த
சறுக்குப் பலகையிலே உட்கார்ந்தபடிக்கு
போக்குவரத்து நெரிசலுக்குள்ளே
புகுந்து புறப்பட்டு
சந்து பொந்தெல்லாம் சுளுவா நுழஞ்சு
டிராபிக் சிக்னல் செவப்பு விளக்கை
லட்சியமே செய்யாமே,
வேகத் தடையை எகிறித் தாண்டித்
தெருவையே வெறும் கையாலே
பின்னாலே தள்ளிக்கிட்டு
முகத்திலே பெரிசா ஒரு சிரிப்போடு வரதைப் பாத்தீங்களா ?

கிண்ணம், குவளை, தட்டு, பூவரச இலை
நீளுது ஒவ்வொண்ணா.
ரெண்டு ரெண்டா இட்லி
மூச்சுத் திணறிக்கிட்டு
அதிலே சரிஞ்சு விழுது.
சினைவைக்கிற காலத்துலே ஆமைகள் போல்
ரெண்டும் ஒண்ணை ஒண்ணு வயித்தைத் தொட்டு
அணைச்சுட்டுக் கிடக்குது.
பெருவெள்ளமா சாம்பார் வந்து
மூழ்கடிக்கட்டும் எல்லாத்தையும்.

முழுகின கப்பல் மாதிரி
அங்கங்கே மிளகாய் தட்டுப்படற
சாம்பார் சமுத்திரத்திலே
முங்கிப்போன கத்திரிக்காய், தக்காளி நடுவிலே
மல்லாக்க மிதக்குது இட்லி.

குண்டு குண்டா, மல்லிப்பூவா இட்லி.
பூதக்கண்ணாடி போல
நம்ம பசியைப் பெரிசாக்குது.
பங்கு வச்ச நம்பிக்கை மூலம்
நட்சத்திரங்களை வானத்திலிருந்து ‘
பறிக்க வைக்குது அது.

யாரது அந்தாலே ஒரு வெளிநாட்டுக்காரன்
அழுக்கா, செம்பட்டை முடியோடு,
பிளாட்பாரத்திலே தலைவச்சுத் தூங்கிக்கிட்டு ?
துரை எங்கேயிருந்து வர்றாப்பலே ?
டாலர் இருக்கா ? பவுண்ட் ?
இல்லையா ? போவுது விடு.
பசிக்குதா ? இப்படிக் குந்து நைனா.
என் தட்டுலே இருந்து இட்லி எடுத்துக்க.
சும்மா சாப்பிடு.
நல்லா இருக்குதா ? பிடிச்சுருக்குதா ?

காக்காக் கூட்டம் ஒண்ணு
கருப்புக் கொடி காட்டிக்கிட்டே
பறந்து வந்து
நட்டநடுத் தெருவிலே
சட்டமா உக்காருது.
வேகமா வர்ற காரு போக
ஒதுங்கி வழிவிட்டு
திரும்பக் கூடுற
காக்கா அலகெல்லாம்
காந்த ஊசி போல
ஒரே திசையிலேதான் நீண்டிருக்கு.

ஒருமைல் வட்டாரத்துலே
தனித்தனியா அங்கங்கே எழுந்த பசியெல்லாம்
கூட்டு ரோடுலே சங்கமமானபோது
வாழ்க்கையின் மகிழ்ச்சியைக்
கொண்டாடும் பிரகாசத்தோடு
காலத்தில் ஒரு குமிழி பிறந்தது.

தலையில் காலிக் கூடையும்,
மடியில் முடிஞ்சு வச்ச காசும்,
கையில் காலியான சாம்பார் வாளியுமாக
இட்லிக்காரம்மா போனதுக்கு அப்புறமும்
நம்பிக்கையின் நிறங்களைப்
பிரதிபலிச்சுக்கிட்டு
அது அங்கேயே இருக்கும்.

(அருண் கொலட்கரின் ‘ ‘Breakfast Time at Kala Ghoda ‘ நீண்ட கவிதையிலிருந்து சில பகுதிகள் இங்கே என் மொழியாக்கமாக – transcreation – தரப்பட்டன).

‘Kala Ghoda Poems ‘ by Late Arun Kolatkar

Published – July 2004

Publisher – Pras Prakashan,
Vrindavan 2B/5, Raheja Township, Malad East, Mumbai 400 097, India.

Price Rs 360 (USD 60; GBP 30)

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்