கருணையும் கருணையின்மையும் – வசந்தபாலனின் அங்காடித்தெரு

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

பாவண்ணன்


ஓர் அங்காடித்தெருவில் நாம் என்னென்ன பார்க்கிறோம்? திரும்பும் பக்கங்களிலெல்லாம் கடைகள். குளிரூட்டப்பட்ட அரங்குகளும் அறைகளும் கொண்ட மாபெரும் கடைகள், மூன்றுமாடி நான்குமாடி என அடுக்குகள் கொண்ட கடைகள், எட்டுக்குப் பத்து அளவுகொண்ட சின்னச்சின்ன கடைகள், மாடிப்படிக்கட்டுக்குக் கீழே புறாக்கூண்டுபோல துணித்திரையால் தடுக்கப்பட்ட கடைகள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டிக்கடைகள், மிதிவண்டிக்கடைகள், பாதையோரக்கடைகள், கூடைகளிலும் பலகைகளிலும் பரப்பிவைத்து விற்பனைசெய்யும் கடைகள். நடமாடும் கடைகளாக, தம் தோள்மீதும் தலைமீதும் பொருள்களைச் சுமந்துகொண்டு கூவிக்கூவி விற்கிற மனிதர்களையும் பார்க்கிறோம். இங்கே விற்கப்படும் பொருள்களைப் பார்க்கவும் வாங்கவும் செல்கிற மனிதர்களையும் பார்க்கிறோம். அங்காடித்தெருவுக்குப் போய்வந்த பிறகு, பொதுவாக அங்கே விற்கப்படும் பொருள்களின் தரம், விலை பற்றிமட்டுமே நம் உரையாடல்கள் அமைகின்றன. சில சமயங்களில் கடைகளின் அமைப்பைப்பற்றியும் அங்குள்ள வசதிகள்பற்றியும்கூட நம் உரையாடல்கள் திசைமாறியிருக்கக்கூடும். கடைகளில் பணிபுரிகிற பணியாளர்களைப்பற்றியும் அவர்களுடைய வாழ்க்கையைப்பற்றியும் உரையாடியிருப்போமோ என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், நம் காலத்தில் வாழ்கிற ஒரு திரைக்கலைஞர் அவர்களுடைய வாழ்க்கையை உற்றுக் கவனித்திருக்கிறார். அவர் இளம்இயக்குநர் வசந்தபாலன். நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதபடி எண்ணற்ற சங்கடங்களுக்கிடையேயும் வேதனைகளுக்கிடையேயும் அவர்கள் தினந்தினமும் செத்துச்செத்து வாழ்கிற அவலங்களை மனம்நோகப் பார்த்துப் பதிவுசெய்திருக்கிறார் அவர். இந்த மண்ணில் உயிர்பிழைத்திருக்கவேண்டும் என்பதற்காகவும் தன்னைச் சார்ந்திருக்கிற உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காகவும் மிகச்சிறிய வயதிலேயே அவமானங்களையும் துக்கங்களையும் தாங்கிக்கொண்டு நடமாடும் பக்குவத்தை அடையும் கோலங்களை நேருக்குநேர் கண்டு தொகுத்திருக்கிறார். வாழ்வது எவ்வளவு பெரிய வலி என்பதை எதார்த்த வாழ்க்கையின் அடிப்படையில் அழுத்தம்திருத்தமாக நிறுவிக் காட்டியிருக்கிறார். வலிக்கும் வேதனைகளுக்கும் நடுவில் அவர்களும் சிற்சில கணங்களில் சிரிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்கிறார்கள். அவற்றையும் பதிவுசெய்திருக்கிறார் வசந்தபாலன்.

வெங்காயமூட்டைகளையும் காய்கறிமூட்டைகளையும் கிராமம்கிராமமாக அலைந்து சில்லறைக்கு வாங்கி வண்டிநிறைய அடுக்கியெடுத்துவந்து, சந்தையில் பெரிய கடைகளில் இறக்கிவிட்டு பணம்வாங்கிக்கொண்டு செல்கிற தரகர்களைப்போல, தெற்கத்திக் கிராமங்களில் பிழைப்பதற்கு வழியில்லாத குடும்பங்களைச் சேர்ந்த பதின்பருவச் சிறுவர்களை ஆசை வார்த்தை சொல்லி அழைத்துவந்து சென்னை அங்காடித்தெருவில் இறக்கும் காட்சியைப் பார்த்ததும் இனம்புரியாமல் உருவாகும் ஒருவித பரபரப்பும் தவிப்பும் இறுதிக்காட்சிவரையில் குறையவே இல்லை. ஒவ்வொரு காட்சியும் அந்த அளவுக்கு குறையே சொல்ல இயலாதபடி நேர்த்தியாகப் பின்னப்பட்டிருக்கிறது.

முதல்காட்சியே அழகு. நகரத்து இரவுநேர மழை. அந்தச் சாரலையும் குளிரையும் அனுபவித்தபடி, தோள்சுமையோடு நடந்துவந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறார்கள் அவனும் அவளும். யாரோ ஒரு முதலாளியின் ஆதாயத்துக்காக நாள்முழுதும் நின்றும் மாறிமாறி மாடிப்படியேறியும் களைத்துப்போகும் அவர்களுடைய கால்கள் முதல்முதலாக அவர்களுக்காக அங்காடித்தெருவில் நடமாடுகின்றன. கால்கள் அவர்களுக்கு அப்போதும் மூலதனம். இப்போதும் மூலதனம். ஆனால் அப்போது இல்லாத ஆனந்தத்தையும் குறும்பையும் அவர்கள் கால்கள் இப்போது உணர்கின்றன. அதனாலேயே அத்தருணத்தை அவர்கள் கால்கள் கொண்டாடுகின்றன. சாதாரண தோல்செருப்பணிந்த அவர்கள் கால்கள் தரையில் தேங்கியிருக்கும் தண்ணீர் சப்பென்று நாலுதிசைகளிலும் தெறிக்கும்படி குதிக்கின்றன. ஓங்கி உதைத்து உடைமீது படும்படி வைக்கின்றன. நிறுத்தத்தில் பிறர் கவனிப்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒருவர் பாதத்தை ஒருவர் மிதித்து விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். பாதையோரம் நடைமேடையில் படுத்துறங்கும்போது காவலர்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சிமெண்ட் பொடியைப் பூசிக்கொள்கிறார்கள். கால்களால் மலரும் அவர்களுடைய வாழ்க்கை, கால்களால் அவர்கள் அடைகிற மகிழ்ச்சி அனைத்தையும் ஒருசில நிமிடங்களுக்குள்ளாகவே நம்பகமான அளவில் இயக்குநரால் சொல்லமுடிந்திருப்பதைப் பாராட்டவேண்டும். துரதிருஷ்டவசமாக, அன்று இரவு நிகழும் கோரமான சாலை விபத்து அவளுடைய கால்களைப் பலிவாங்கிவிடுகிறது. அவனை ரத்தக்காயமடைய வைக்கிறது. அண்ணாச்சி கடையின் துன்பங்களைச் சகித்துக்கொண்ட வழியிலேயே, அவர்கள் அந்தத் துன்பத்தையும் சகித்துக்கொள்கிறார்கள். நம்பிக்கையையே மூலதனமாகக் கொண்டு, மீண்டுவரும் அவர்களை அங்காடித்தெரு ஒரு தாயாக அணைத்துக்கொள்கிறது.

அங்காடித்தெரு ஆள்அடையாளம் பார்ப்பதில்லை. தன்னை நம்பி வரும் யாரையும் அது கைவிடுவதில்லை. அதன் கருணை அளப்பரியது. ஆனால் அங்காடித்தெருவின் அடுக்குமாடிக்கடை முதலாளிகள் ஆள் அடையாளம் பார்க்கிறார்கள். சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பல்லைக் கடித்துக்கொண்டு முனகாமல் வேலை செய்யவேண்டும் என்பதற்காகவே, அப்பா இல்லாதவன், அக்கா தங்கைகளோடு பிறந்தவன் எனப் பார்த்துப்பார்த்துத் தேடி அழைத்துவருகிறார்கள். அவர்கள்மீது முதலாளிகளுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. துளியளவுகூட கருணையில்லாதவர்களாக நடந்துகொள்கிறார்கள். முகமறிந்த மனிதர்கள் காட்டாத கருணையையும் ஆதரவையும் முகமில்லாத அங்காடித்தெரு காட்டுகிறது. அந்த உண்மையை நாம் மெல்லமெல்ல நெருங்கிவரும் வகையில் காட்சிகளை அழகுறத் தொகுத்திருக்கிறார் வசந்தபாலன்.

சரக்குக்கிடங்கில் மூட்டைகளை அடுக்கிவைத்திருப்பதுபோல கடைத்தொழிலாளர்கள் உறங்கவும் ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்திருக்கும் கூடம், போர்க்கைதிகளைத் தங்கவைத்த கூடங்களை நினைவுபடுத்துகிறது. ஆண்களுக்கு ஒரு கூடம். பெண்களுக்கு ஒரு கூடம். கடுமையான கண்காணிப்புகளுக்கிடையே அவர்கள் அங்கே வாழ்கிறார்கள். கூடங்களிலும் கடைகளிலும் அவர்கள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகள், அவற்றின் விளைவுகளாக அவர்களிடையே உருவாகும் பிணக்குகளையும் உறவுகளையும் நம்பிக்கைகளையும் துரோகங்களையும் பல காட்சிகள்வழியாக முன்வைத்தபடி நகர்கிறது திரைப்படம். ஒரு காட்சியில் கண்காணிப்பாளனால் மோசமாக அடிபடுகிறான் ஒருவன். எதிர்ப்பைக் காட்ட வழியில்லாதவன்மீது வீரத்தைக் காட்டுகிறான் கண்காணிப்பாளன். உதைபடுகிறவனுக்காக இரங்க ஒருவருமே அங்கு இல்லை. மனிதர்களின் கண்கள் ஈரமற்று வறண்டுபோன சூழலில், மழையில் நனைந்த மரக்கட்டையில் சொட்டுச்சொட்டாக இறங்கும் மழைத்துளிகள், இயற்கையின் கண்ணீர்த்துளிகளாக மாறி உறைகின்றன.

மையக்கதையோடு ஒட்டிவரும் சின்னச்சின்னப் பாத்திரங்கள்fகூட அழுத்தமான ஒரு சின்னக்கதையோடு இடம்பெறுகிறார்கள். பசித்த முகத்தோடு ஒவ்வொரு கடையின் வாசலிலும் வேலை கேட்டு நின்று ஏமாற்றத்தோடு நடப்பவன், தற்செயலாக பராமரிப்பில்லாமல் கிடக்கிற ஒரு கழிப்பறையை, தண்ணீர் வாரியிறைத்து, தானே சுத்தம்செய்து, கட்டணக்கழிப்பிடமாக மாற்றி, சில்லறை சம்பாதிக்கத் தொடங்குகிறான். பார்வையே இல்லாத ஒரு பெரியவர் முப்பது ஆண்டுகளாக பாதையோரமாக சில்லறைப் பொருள்களை விற்று, மகிழ்ச்சியோடு வாழ்கிறார். குள்ளமான கணவன், தனக்குப் பிறந்த பிள்ளை சரியான உருவஅமைப்போடு இல்லையே என்று சோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது, அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறாள் அவன் மனைவி. அவனோடுமட்டுமே தன் இல்லற வாழ்க்கை அமைந்தது என்பதற்கு அக்குழந்தையே முக்கியமான சாட்சியாக இருப்பதாகச் சொல்லி மகிழும் அவளுடைய சொற்களின் கோணம் ஆழமானது. காலமெல்லாம் நின்றுநின்று வேலைசெய்ததால் விசேஷமான வியாதியால் பாதிக்கப்பட்டு முடமாகி, கடைவாசலிலேயே உயிர்துறக்கிற மனிதருக்கும் ஏமாந்துபோன ஒரு நீண்ட வாழ்க்கை இருக்கிறது. தினந்தோறும் வாசலில் வண்ணக்கோலம் போடுகிற இளம்பெண், காதல் கடிதம் கொடுக்கவந்தவனே தான் அவளைக் காதலிக்கவில்லை என்று சத்தியம் செய்து தப்பிக்கநினைக்கிற கோழைத்தனத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் தன்மானத்தைக் காத்துக்கொள்ள அடுக்குமாடி ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு அதே கோலத்திடையே பிணமாக வந்து விழுகிறாள். அக்கணமே கடையிலிருந்து துரத்தப்படும் அந்த இளைஞன், ஊருக்கும் செல்லமுடியாமல் அவளையும் மறக்கவும் முடியாமல் நடைப்பிணமாக இரவும் பகலும் அந்தத் தெருவில் பிச்சைக்காரக் கோலத்தில் அலைகிறான்.

கடையில் வேலை செய்யவந்த அவனும் அவளும் காதல்வசப்படுவது மௌனமாக உணர்த்தப்படும் காட்சியில் காணப்படும் நளினம் குறிப்பிடத்தக்கது. பொம்மைகளை அடுக்கிவைக்கும் தருணத்தில்தான் அவர்களிடையே காதல்விதை விழுந்து வேர்பிடிக்கிறது. ஒருபுறத்தில் ஜோடிசேரும் பொம்மைகள். மறுபுறத்தில் உள்முகமாக இணைய விரும்பும் இவர்கள். இருவருக்குமிடையே உருவாகும் மோதல்களும் பிரியமும் நம்பகத்தன்மையோடு உள்ளன. ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பதும், பிறகு ஒருவர் அடிவாங்குவதைக் கண்டு இன்னொருவர் மனம்துயருறுவதும் இயற்கையாக உள்ளது. தான் அடிபட்டதுபோலத்தான் அவளும் அடிபட்டிருப்பாள் என்று அவன் முதலில் நினைக்கிறான். தாமதமாகத்தான் அவள் அடிபட்ட, அவமானப்பட்ட விதம் முற்றிலும் மாறானது என்பதையறிந்து அவன் மாபெரும் தப்பைச் செய்துவிட்டதுபோலத் துடித்து மன்னிப்பை யாசிக்கிறான். “மாரப் புடிச்சி கசக்கினான் போதுமா?” என்று சொல்லும்போது எழும் குமுறலையும், கேட்கும்போது உணரும் குமுறலையும் இருவருமே தம நடிப்பாற்றலால் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்கள். அவளை அடித்த கண்காணிப்பாளன் மீது எடைகூடிய ஒரு துணிமூட்டையை மாடிப்படியிலிருந்து நழுவவிட்டு, கீழே விழுந்து அடிபடும்படி வைப்பதுதான் அவனுக்குள்ள ஒரே வழி. உனக்காகத்தான் என்று சத்தமில்லாமல் அவன் முனகியதைக் கேட்டு, அவன் வழங்க நினைத்த ஆறுதலை அவளும் அடைகிறாள். பின்னணியில் சுடர்விடும் மின்விளக்குகளிடையே அந்தக் காட்சி சில கணங்கள் நின்று உறைந்துவிட்டு மாறுகிறது. வழக்கமான விளக்குவரிசை, அக்கணத்தில் வேறொரு புதிய பொருளை உணர்த்திவிட்டு மறைகிறது. பின்பகுதியில் தன் மனத்திலிருந்து அவளை அகற்றிவிட்டதாக அவன் உரைக்கும் இடத்துக்குப் பொருத்தமான பின்னணியாக தற்செயலாக வெற்றுத்தாங்கிகள் நிற்பதும் கலைநயத்தோடு உள்ளது.

ஓம்சக்தி கோயிலில் அம்மனுக்கு நடைபெறும் பல்வேறு அபிஷேகங்களையும், அறிமுகமே இல்லாத பெண்கள் சூழ்ந்து நின்று பின்கட்டில் வயதுக்குவந்த சிறுமிக்குப் பூப்புனித நீராட்டு நடத்துவதையும் இயக்குநர் அழகாக இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. துணையாக நிற்கவேண்டிய பெரிய குடும்பத்துக்காரர்கள் தன்னை அண்டிவந்த சிறுமிக்கு, நாயை அடைத்துவைத்திருக்கிற பின்கட்டு அறைக்குப் பக்கத்தில் பழைய பொருள்களைக் குவித்துவைத்திருக்கிற ஒரு சின்ன அறையைத் தங்குமிடமாக ஒதுக்கிக்கொடுக்கிற சூழலில், திக்கற்றவருக்குத் தெய்வமே துணையாக நிற்கிறது.

கடைக்குள் வருகிற அனைவரையும் கைகுவித்து வணங்குகிறது வாசலிலேயே வைக்கப்பட்டிருக்கிற ஒரு பொம்மை. அது வெறும் பொம்மைமட்டுமல்ல. காதல் மடல்களைப் பரிமாறும் பொம்மை. அவன் வைக்கும் மடலை அவள் எடுத்துக்கொள்கிறாள். அவள் வைக்கும் மடலை அவன் எடுத்துக்கொள்கிறான். அவர்களிடையே உள்ள காதலை அந்தப் பொம்மைமட்டுமல்ல, அந்தத் தளத்தில் வேலை செய்கிற எல்லாருமே அறிவார்கள். ஆனால், கண்காணிப்பாளன் முன்னிலையில் அவர்கள் காதல் அம்பலப்பட்டதும், அவள்மட்டுமே காதலித்ததைத் துணிவாகச் சொல்கிறாள். சொல்லும் துணிவில்லாமல் அவன் அவளைக் காதலிக்கவே இல்லை என்று மறுக்கிறான். எல்லாம் தெரிந்திருந்தும் மற்றவர்கள் பொம்மைபோல நிற்கிறார்கள். உயிரில்லாத பொம்மையும் வாய்பேச முடியாதபடி அவர்கள் நடுவே நிற்கிறது. மறக்கமுடியாத காட்சி அது.

திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பவை காட்சியமைப்பும் அதற்குப் பொருத்தமாக எழுதப்பட்டுள்ள உரையாடல்களும். ஜெயமோகனுடைய உழைப்பு மதிப்புக்குரியது. காலற்ற பெண்ணை மருத்துவமனையிலேயே கைவிட்டுச் செல்லும் தந்தையின் உரையாடல் மனத்தைக் கனக்கவைக்கிறது. கடவுள் வாழ்த்துப் பாடலை காதல்கவிதையாக எழுதிக் கொடுக்கிற காட்சி வயிறுவலிக்கச் சிரிக்கவைக்கிறது. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் மொழி கட்டுப்பட்டு செல்கிறது. வசந்தபாலனும் ஜெயமோகனும் தமிழ்ச்சமூகத்தின் பாராட்டுக்குரியவர்கள்.

ஒரு காலத்தில் அரங்கேற்றம், முருங்கைக்காய் போன்ற சொற்கள் வழியாக வேறுவேறு விதமான பொருள் தொனிக்கும்படி வைத்து, அவற்றை இயல்பாகப் பயன்படுத்தவே தயக்கமுண்டாகும்படி ஆக்கிவைத்திருந்தது தமிழ்த்திரையுலகம். இன்று அதே உலகத்திலிருந்து ஒரு தமிழ்ச்சொல்லின் பொருளை, சமூகமனத்தில் அழுத்தமாகப் பதியும்வகையில் பயன்படுத்தியிருக்கிற இயக்குநர் வசந்தபாலன் வெளிப்பட்டிருக்கிறார். அங்காடி என்பது மிகப்பழைய சொல். பகலிலும் இரவிலும் இயங்குகிற கடைகளை நாளங்காடி, அல்லங்காடி என்று பெயர்சூட்டி வகைப்படுத்தியிருந்தது சிலப்பதிகாரம். காலப்போக்கில் எல்லாமே “பஜார்” ஆனபிறகு, அங்காடி என்னும் சொல் ஏறக்குறைய வழக்கொழிந்துபோகும் நிலையில் இருந்தது. பெயர்ப்பலகைகளில் தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பமுடைய சிலர்மட்டுமே, எவ்விதமான தயக்கத்துக்கும் இடமில்லாமல் பல்பொருள் அங்காடி என்றும் ஆயத்த ஆடை அங்காடி என்றும் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு திரைப்படத்துக்குத் தலைப்பாக இச்சொல்லைப் பயன்படுத்தியபிறகு, அங்காடித்தெரு என்னும் சொல் எல்லாருடைய முழுக்கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

Series Navigation