கனல்மணக்கும் பூக்கள்.

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

கவியோகி வேதம்


கனல்தான் எப்படிக் கனிந்து மணக்கும் ?

அனலுக்கு அப்படி அசத்தும் திறனுண்டா ?

பூக்களில் அக்கனல் புகுந்து மணக்குமா ?

யார்க்கும் தோன்றும் iஇச்சிறு சந்தேகம்;

கனலையும் பூவையும் கலந்து பரிமாற

கனவுக் கவியால்தான் சமைக்க முடியும்;

வார்த்தைப் பின்னல்கள் பரவச வார்ப்புகள்

கோர்வை யான கோணத்தில் முக்குளிப்புச்

சிந்தனைகள்,நாட்டியச் சிறகசைப்பு எல்லாமும்

கந்தன்வேல் போல்அவன் கவிவானில் ஏறின;

நமது கவிப்பூ நன்றாக மலரும்;

சமைத்த அவற்றில் தேனும் பிலிற்றும்;

ஆனால் அவன்பூவில் தேனுடன் பராசக்தி

தானாகக் கொலுவேற்று தளிர்க்கருணை புரிந்தாள்.

பூவிலே கனலும் புன்னகை புரிந்தது;

தாவிய கருத்துமான் தேசத்தைக் கவர்ந்தது;

கண்ணனைக் காதலியாய்க் கவிக்கனல் பார்த்தது;

வண்ணக் குயிலில் மானுடமே ஒளிர்ந்தது;

பாஞ்சாலி வீரத்தில் பாரதம் சிலிர்த்தது;

வாஞ்சையுடன் காவிரியைக் கங்கை வளைத்தது;

வாராத தொலைபேசி மாகவியிடம் பேசியது;

நேராகக் கொடியிலே விடுதலை நெகிழ்ந்தது;

ஆம்!அக்னிக் குஞ்சே அவனிடம்தான் இருந்தது!

பீமன்போல் பெரும்பலம் அவன்சொல்லில் பொங்கிற்று!

அவனைப்போல் பூவில்தீ யான்தர இயலாது;

சிவனுக்கே லிங்க-உரு! ‘தெளியாதோர்க் ‘கல்ல!

ராமனுக்கே வில்ஒடியும்! ராட்ச்சசர்க் கல்ல!

காமனை ‘ரதி ‘கண்டாள்! ‘கனல் ‘கவியைக் கண்டேன்-யான்!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^(கவியோகி வேதம்)
sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்