க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

சுகுமாரன்


@

‘காலச்சுவடு ‘ பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் அறிமுக அரங்கில் பங்கேற்றுப் பேசக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. என் மனதில் உருவாகும் சில நினைவோட்டங்களும் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம்.

திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது.க.நா.சு.தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை ‘சாமி ‘ கொள்முதலுக்காக வெளியூர் போயிருந்தார்.அந்த தினத்தில் சந்திக்க முடியாமல் அடுத்தமுறைதான் அவரைச் சந்திக்க வாய்த்தது. சுந்தர ராமசாமிக்கு க.நா.சுவிடம் பயமும் சங்கோஜமுமிருந்தது போலவே அந்த அந்த இளைஞனுக்கும் இருந்தது. அவன் சந்திக்க விரும்பி சந்தித்த எழுத்தாளர் அந்த தயக்கத்தையும் சங்கோஜத்தையும் போக்கினார். அதன் பின்னர் அந்தச் சந்திப்புகள் சில ஆண்டுகள் வலுவாகத் தொடர்ந்தன. அந்த இளைஞன் நானும் அந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியும்தாம் என்று குறிப்பிடும் இந்த நிமிடம் நெகிழ்ச்சியாக அனுபவப்படுகிறது.

க.நா.சு. பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைக் குறிப்புகள் முதன்மையாக எனக்குத் தரும் உணர்வு இந்த நெகிழ்ச்சிதான். இந்த சந்தர்ப்பத்தில் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உரிமை பாராட்டவோ ஒப்பிடவோ அல்ல.எழுத்துலகில் பிரவேசிப்பவனின் மோகங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்ற பொது வியப்பைப் பகிர்ந்துகொள்ளவே.

க.நா.சுப்ரமண்யம் என்ற இலக்கிய ஆளுமையுடனான மரியாதையும் தோழமையும் கலந்த உறவின் ஐம்பதாண்டுக் கால அனுபவங்களை சுந்தர ராமசாமி தனது குரலில் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.இந்தப் பதிவில் க.நா.சு. மீதான நேசமும் அவரது வாழ்க்கையனுபவங்கள்பால் பரிவும் அவரது கருத்துக்களை ஏற்பதும் நிராகரிப்பதுமான கறாரும் புலப்படுகின்றன.

இலக்கிய வாசகன் என்ற நோக்கில் இது எனக்கு எதற்காக ? இந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து செல்லவே விரும்புகிறேன்.

எழுத்தாளனை அவனது எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதுதான் பிரதானம் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிச்சரடாக அவனுடைய வாழ்க்கையை அறிந்திருப்பதும் அவசியம் என்ற இன்னொரு தரப்பும் எழுகிறது. வாழ்வின் மீதான விசாரணையுணர்வே எழுத்து என்ற எளிய அடிப்படையை வரையறுத்துக் கொள்ளும்போது இந்த இரண்டு அம்சங்களும் சமமான மதிப்புக்கொள்கின்றன. எழுத்தை அறிவது அதன் நுட்பங்கைளைப் புரிந்துகொள்வது அதை வாழ்வனுபமாக ஏற்றுக்கொள்வது ஒரு செயல். அதை மேலும் விரிவானதாக, ஆழமானதாக மாற்றிக்கொள்ள எழுத்தாளனின் வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துவைத்திருப்பது உதவியாக இருக்கலாம். பிரதி போதும். ஆசிரியன் வேண்டாம் என்று கறாராகத் தீர்மானிக்கிற போக்கில் பிரதியைப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் ஏதோ ஓர் அம்சம் குறைவுபடுவதாகக் கருதுகிறேன்.

அண்மையில் வாசிக்க நேர்ந்த காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் சுயசரிதையான ‘கதை சொல்ல வாழ்தல் ‘ (Living To Tell the Tale) இந்த நோக்கில் எனக்குத் துணைசெய்ததாக நினைக்கிறேன். ‘ ‘வீட்டை விற்கப் போக என்னையும் கூட வரச் சொன்னாள் அம்மா ‘ ‘ என்று தன்னுடைய கதையைச் சொல்லத் தொடங்குகிறார் மார்க்கேஸ்.அந்த வீடுதான் அவர் குடும்பத்தின் ஆதாரம்.விலை மதிப்புள்ள சொத்து. வாழ்வதற்கான இயல்பான வழிகள் மூடப்பட்டபோது வீட்டை விற்க நேர்கிறது. இந்த துயரக் கதையை யாரிடமாவது சொல்ல எத்தனித்ததில்தான் ஒரு கதை சொல்லியாக மாற நேர்ந்ததென்று மார்க்கேஸ் நினைவு கூர்கிறார். மார்க்கேசின் இந்த அனுபவத்தை தெரிந்துகொண்டபோது அவர் எழுதிய ‘செவ்வாய்க் கிழமை பகலுறக்கம் ‘ என்ற கதை கூடுதல் அர்த்தங்களோடு புரிந்தது.

இதே அர்த்தத்தில் தாஸ்தயேவ்ஸ்கியின் கொந்தளிப்பான வாழ்க்கையையும் மனச் சிக்கல்களையும் தெரிந்துகொள்ள முடியாது போனால் அவரது படிப்புலகின் தீவிரத்தையும் பாத்திரங்களின் மன இயக்கங்களையும் உணர்ந்துகொள்வதில் முழுமையில்லாமற் போகக்கூடும். இந்தக் கருத்தை எல்லாப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் சார்ந்து விரிவுபடுத்திக்கொண்டே போகலாம் என்று கருதுகிறேன்.

க.நா.சு.பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை இந்த இரு எழுத்தாளர்களின் படைப்பு குறித்தும் வாழ்க்கை குறித்தும் மேலதிக விவரங்களை நுட்பமாகத் தெரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது என்பதே இந்த நூலின் முக்கியத்துவம். ஓர் எழுத்தாளனின் வாழ்க்கை அவனது தனி வாழ்க்கை மட்டுமல்ல; அவன் வாழும் காலத்தின் சமூக எதார்த்தமும் கலாச்சார வினையாற்றலும் கூட.

சுந்தர ராமசாமி க.நா.சு. தொடர்பான நினைவுகளை முன்வைக்கும்போது, க.நா.சுவை சந்தித்த தனிப்பட்ட இரு அனுபவங்கள் மனதில் நிழலாக நகர்கின்றன. எண்பத்தைந்து நவம்பர் மாதம் என்று நினைவு. தருமபுரியில் அவரை முதன் முதலாகச் சந்தித்தேன். மாவட்டக் கள விளம்பரத்துறை அதிகாரியான சந்தானம் என்ற இலக்கிய ஆர்வலர் க.நா.சுவை தருமபுரிக்கு அழைத்து வந்திருந்தார். அந்த ஊரில் தீவிர இலக்கியம் பேசவும் விவாதிக்கவும் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தே வந்திருந்தார். மாலையில்தான் அவருடைய நிகழ்ச்சி. மத்திய அரசுத் துறை சார்பில் அழைக்கப்பட்டிருந்ததால் ‘நேருவின் ஜனநாயக நம்பிக்கைகள் ‘ என்ற பொருளில் பேசுவதாக ஒப்புக்கொண்டிருந்தார். சந்தானத்தின் இல்லத்தில் ஒரு சிறிய அறையில் சிறகு ஒடுங்கிய கருடன்போல உட்கார்ந்திருந்தார். எனது இந்த மனச் சித்திரமும் கிருஷ்ணன் நம்பி நாகர்கோவில் லாட்ஜில் ஏற்பாடு செய்திருந்த குறுகலான அறையில் க.நா.சு. ஒடுங்கி உட்கார்ந்திருந்த சித்திரமும் ஒத்துப்போவதை உணர்கிறேன்.

அன்று மாலை அவர் பேசிய பேச்சின் சாரம் இப்போது நினைவில் இல்லை.ஆனால், அவர் பேசியபோது கவனத்தில் பதிந்த இரண்டு விஷயங்கள் இன்னும் ஞாபகத்திலிருக்கின்றன.ஜவஹர்லால் நேருவை ஒரு ரொமான்டிக் என்றும் காந்தியை ஒரு ரியலிஸ்ட் என்றும் அவர் வர்ணித்தார். ‘கடையனுக்கும் கடைத்தேற்றமுள்ள ‘ கிராம ராஜ்ஜியத்தை கனவுகண்ட காந்தியைக் கற்பனாவாதியாகவும் ‘அணைக்கட்டுகளும் ஆலைகளும்தாம் நவ இந்தியாவின் ஆலயங்கள் ‘ என்று சிறப்பித்த நேருவை எதார்த்தவாதியாகவும் நினைத்திருந்த என்னுடைய பாடப்புத்தக அபிப்பிராயத்துக்கு எதிரானதாக இருந்தது அன்று க.நா.சு செய்த தலைகீழ் வர்ணனை.சமூகப் பார்வையில்லாதவர், அரசியல் ஞானம் இல்லாதவர் என்றெல்லாம் முற்போக்காளர்களால் விமர்சிக்கப்பட்டிருந்ததைப் படித்து வைத்திருந்த எனக்கு க.நா.சுவின் அரசியல் பார்வை பற்றியும் சுதந்திரமான கண்ணோட்டம் பற்றியும் தெரிவிப்பதாகவிருந்தது அந்தப் பேச்சு. அந்தப் பேச்சில் என்னைக் கவர்ந்த இரண்டாவது அம்சம் நேருவை எளிமையும் முழுமையும் சார்ந்த ஓர் எழுத்தாளராகக் குறிப்பிட்டது.

க.நா.சு.வைச் சந்தித்த இரண்டாவது சந்தர்ப்பம் சென்னையில். அப்போது அவர் மயிலாப்பூர் டி.எஸ்.வி.கோவில் தெருவில் குடியிருந்தார்.ஒரு பிற்பகல் வேளையில் அவரைத் தேடிப் போனது நினைவிருக்கிறது.அந்த நேரத்து வெயிலும் அவ்வப்போது குளிர்ந்து வீசிய கடற்காற்றும் நினைவிருக்கிறது. கதவு எண்ணைக் கண்டுபிடிப்பதில் சின்னத் தடுமாற்றத்துடன் அலைந்து நடந்தபோது ஒரு வீட்டுக்குள்ளிருந்து டைப்ரைட்டரில் தட்டும் ஓசை வெளியே கேட்டது. விசாரித்துப்போனால் அது க.நா.சு.வீடுதான். ஒரு பழைய மேசைமேல் வைத்திருந்த பழைய போர்ட்டபிள் டைப்ரைட்டரில் ஒற்றை விரலால் எழுத்துக்களைத் தட்டி ஆங்கிலக் கட்டுரையொன்றை உருவாக்கிக்கொண்டிருந்தார். சிறிது நேர உரையாடலுக்குப் பின் ‘ராயர் கபே திறந்திருப்பான்.வாங்க. ‘ என்று அழைத்துப் போனார்.

சுந்தர ராமசாமி க.நா.சு.வை நினைவுகூரும்போது க.நா.சுவை அறிந்தவர்களுக்கு அவரைப் பற்றிய நினைவுகள் மீண்டெழுவது இயல்பானது என்று சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.

தனது நினைவு கூரலில் மரியாதையும் நெகிழ்வும் கலந்தே க.நா.சு.வின் படிமத்தை சுந்தர ராமசாமி உருவாக்குகிறார்.அபிமானமும் மரியாதையும் இழையோடுகிற ஆரம்ப கால அணுகுமுறையிலிருந்து விலகாமலேயே தனது மதிப்பீடுகளை அழுத்தமாக்குகிற சுந்தர ராமசாமி; ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ மாறான கருத்துக்களுக்குச் செவி- சாய்க்கிற க.நா.சு. ஆகிய இரு ஆளுமைச் சித்திரங்களை நூலில் காணமுடிகிறது.

க.நா.சுவின் இலக்கிய ஆளுமை, இலக்கியப் பங்களிப்பு ஆகியவை பற்றி நூலின் எழுபத்தியாறு முதலான பக்கங்களில் சுந்தர ராமசாமி கவனத்துக்குரிய கருத்துக்களை முன்வைக்கிறார். நினைவோடையில் சுழலும் ஆழமுள்ள பகுதி இதுவே என்று எண்ணுகிறேன்.கவிதை, சிறுகதை,நாவல்,விமர்சனம்,மொழிபெயர்ப்பு என்று க.நா.சு ஈடுபட்ட இலக்கியப் பிரிவுகள் சார்ந்த மதிப்பீடுகள் இதில் இடம் பெறுகின்றன.

புதுக் கவிதையின் சார்பாளராகவும் நடைமுறையாளராகவும் இருந்துங்கூட க.நா.சு விரிவான விமர்சனத்துக்கு எடுத்துக்கொண்டது புனைகதையைத்தான்.அது ரசனை சார்ந்த விமர்சனம். அதையும் ஓர் அறிமுகப்படுத்தல் என்ற நிலையில் மட்டுமே மேற்கொண்டிருந்திருக்கிறார். ‘ரொம்ப ஊன்றிச் சொன்னால் படைப்பை வாசித்துப் பார்க்கிற ஆர்வம் போய்விடும் ‘ என்பது அவரது வாதம்.

தனது இலக்கியப் பார்வைக்குப் பெரும்பாரம்பரியமுண்டு என்று கருதியவர் க.நா.சு. ஓர் இலக்கிய ஆசிரியன் என்ற நிலையில் தால்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர், புதுமைப்பித்தன் ஆகியவர்களின் வாரிசு என்று நம்பியவர். அவரது விமர்சன இலட்சியம் சிகரங்களை நெருங்குவது. இந்த இலக்கிய நோக்கே அவரை முக்கியமானவராக்குவது இன்றைய விமர்சனச் செயல்பாடுகளுக்கு அவரது அளவுகோல்களும் மதிப்பீடுகளும் பொருந்தாதவை. ஆனால், அவரது அடிப்படை அணுகுமுறை தவிர்க்கவியலாதது. தொடர்ந்து பாதிப்பைத் தோற்றுவிப்பது.

சுந்தர ராமசாமியின் பார்வையில் இரண்டாம் நிலை முக்கியத்துவம் க.நா.சு.என்ற நாவலாசிரியருக்கு. ‘அவர் மனதில் நாவல் பற்றி இருந்த கற்பனையை அவரால் செயல்படுத்த முடியவில்லை ‘ என்பது சுந்தர ராமசாமியின் கணிப்பு. தாமஸ்மான், தால்ஸ்தோய், தாஸ்தயேவ்ஸ்கி, செல்மா லாகர்லாவ் போன்ற சிகரங்களை நோக்கியதாக க.நா.சு.வின் மனதில் அந்தக் கற்பனை இருந்திருக்கக்கூடும். ‘உலகத்துச் சிறந்த நாவல்கள் ‘ நூலின் முன்னுரையில் அப்படி ஒரு கனவைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், க.நா.சு. நாவல் வடிவில் எழுதியவையும் மனதில் திட்டமிட்டிருந்தவையும் பெரும் இடைவெளி கொண்டவை. ‘பொய்த்தேவு ‘, ‘ஒருநாள் கழிந்தது ‘ இரண்டும் அவரது சிறந்த நாவல்களாகச் சொல்லப்படுகின்றன. அந்தக் கணிப்பின் செலாவணித்தன்மை பற்றி இன்றைய வாசகனுக்கு மாற்று அபிப்பிராயமே இருக்கும்.

‘பொய்த்தேவு ‘ நேர்த்தியாகச் சொல்லப்பட்ட ஒரு கதை. மேட்டுத்தெரு சோமு, சோமு முதலியாராக வளர்ந்து, சோமுப் பண்டாரமாக உயிர் நீக்கும் வரையிலான கதை. இதை அதன் சாதாரண தளத்திலிருந்து மேலெழச் செய்ய க.நா.சு.வின் ஆன்மீக அக்கறைகள் உதவியிருக்கின்றன. இந்த மாற்றம் அவரது சமகால எழுத்தாளர்களைப் பாதித்திருக்கலாம். தனது ஆரம்ப கால இலக்கியப் பரிந்துரைகளில் க.நா.சு.இடம் கொடுத்திருந்த ந.சிதம்பர சுப்பிரமணியனின் ‘இதய நாதம் ‘ என்ற நாவல் இந்தப் பாதிப்பால் உருவானது என்று தோன்றுவதுண்டு. சோமு- சோமு முதலியார் – சோமுப் பண்டாரம் என்று பரிணமித்து காலவெளியில் கரைவதுபோல கிருஷ்ணன் என்ற அடங்காப்பிடாரிச் சிறுவன் கிருஷ்ண பாகவதராக உயர்ந்து மெளனத்தில் லயிப்பது கதை. பொய்த்தேவின் இயங்குதளம் ஆன்மீகமென்றால் இதயநாதத்தின் இயங்குதளம் சங்கீதம்.

அதிகம் யாராலும் பேசப்படாத க.நா.சுவின் சிறு நாவலான ‘வாழ்ந்தவர் கெட்டால்… ‘ அவரது முக்கியமான நாவலாகத் தோன்றுகிறது. முதன்மைப் பாத்திரத்தின் பெயர் சதாசிவ மம்மேலியார். கடன்பட்டு, பட்ட கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் கடன்கொடுத்தவரால் அவமதிக்கப்படுகிறார். ‘இப்படி பவிஷாகத் திரிவதற்குப் பதில் செத்துத் தொலைப்பதுதானே ‘ என்று கடன்கொடுத்தவர் இடித்துப் பேசிய அதே நொடியில் ரயில் முன்னால் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்கிறார்.மனித மனத்தின் அபாய நடுக்கத்தைச் சித்தரித்த இந்த நாவல் தகுதியான வகையில் கவனிக்கப்படவில்லை.

நாவல் இலக்கணம் பற்றி தனது விமர்சனத்தில் ஆழமான மதிப்பீடுகள் எதையும் க.நா.சு செய்திருப்பதாகத் தென்படவில்லை.ஒரு கதை மையத்தை எதார்த்தமாகவும் மிகை படாமலும் செறிவாகவும் ‘உண்மையுணர்வு தோன்றும்படி ‘யும் சித்தரிப்பதைப் பற்றிப் பேசுகிறாரே தவிர நாவலின் சமூகப்பரப்பையோ அனுபவத்தைக் கலையாக்குவதில் நேரும் சவால்கைளையோ அவர் விமர்சனப் பொருளாகக் கொண்டதில்லை. ஆனால், படைப்பின் இலக்கியக் குணம் பற்றிச் சொல்ல முற்படும்போதெல்லாம் க.நா.சு.திரும்பத்திரும்பக் கையாளும் ஒரு சொற்றொடரை கவனத்தில் குறித்துக்கொண்டிருக்கிறேன். உலகத்துச் சிறந்த நாவல்கள், படித்திருக்கிறீர்களா ? ஆகிய நூல்களில் ‘கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல் ‘ என்ற தொடரைப் பயன்படுத்துகிறார். சார்லஸ் டிக்கன்ஸின் நாவல் பற்றிய சான்றாகச் சொல்லப்படும் பிரயோகம் பின்னர் வேறு சில நாவல்களுக்கும் இயல்புத் தகுதியாகிறது. பாரதியின் கவிதையொன்றில் இடம்பெறும் இந்த வரி, படைப்பு இலக்கியத்திலிருந்து அவர் என்ன எதிர்பார்த்தார் என்பதைக் குறிப்பிடுவதாகக் கருதலாம். இந்த வரி வேறு ஒரு தரவை முன்வைப்பதாகவும் படுகிறது. பாரதி பற்றி க.நா.சு விமர்சனரீதியாக மெளனம்கொண்டிருந்தார் என்று சுந்தர ராமசாமிநினைவோடையில் சுட்டிக்காட்டுகிறார். அந்த நோக்கில் க.நா.சு.வை பாரதி பாதித்ததன்மைக்கு எடுத்துக்காட்டாக முன்சொன்ன மேற்கோளைக் காணலாம். (இந்தவரி பாரதியின் ‘பாஞ்சாலிசபதம் ‘ இரண்டாம் சருக்கத்தில் காப்புச் செய்யுளில் இடம்பெறுகிறது. ‘தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே/ களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்/ கண்ணீர்த் துளிவர உள்ளுருக்குதல்…).ஒரே மொழியில் வெவ்வேறு காலப்பகுதியில் செயல்படுபவர்களையும் ஒரேசரடில் கோர்க்கும் உள்ளுணர்வு இதுவென்று எடுத்துக் கொள்ளலாம்.

க.நா.சு.வின் சிறுகதையாக்கங்கள் மீது சுந்தர ராமசாமிக்கு உயர்வான கருத்து இல்லை. அவருடைய நிலைப்பாட்டுடன் முழு அளவில் உடன்பட முடியவில்லை. ‘ஆடரங்கு ‘ தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் சில செறிவும் நுட்பமும் தீவிரமானவையுமாக அனுபவப்பட்டதுண்டு.

மொழிபெயர்ப்பாளராக க.நா.சுவின் சாதனை போற்றுதற்குரியது; மகத்தானது என்ற சுந்தர ராமசாமியின் கருத்தோடு என் மனப்பாங்கும் ஒத்துப் போகிறது. மொழிபெயர்ப்பில் ஆச்சரியமளிப்பவை க.நா.சுவின் தேர்வுகள். கல்லூரியில் ஆங்கிலம் பயின்றவர் அவர். அந்த கல்விப்புலப் பின்னணியில் அவருக்கு அறிமுகமாகியிருந்திருக்கக் கூடிய ஆங்கில நாவல்களை அவர் மொழிபெயர்ப்புக்காகப் பொருட்படுத்தவில்லை. அவரது ஈடுபாடும் தேடலும் வேறு. ஸ்வீடன்,நார்வே,போலந்து நாடுகளின் நாவல்களையும் சிறுகதைகளையும் தாம் அவர் கண்டுபிடித்து மொழிபெயர்த்து தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தினார். பிற மொழியிலிருந்து பெயர்த்து நமது மொழியில் அறிமுகம் செய்துவைக்கப்படும் படைப்பு நமது மொழிக்கு ஆக்கமளிப்பதாக இருக்கவேண்டும் என்று அவர் நம்பியதாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு மொழியாக்க மரபையே அவர் உருவாக்கியதாக நினைக்கிறேன். ‘நிலவளம் ‘, ‘மதகுரு ‘, ‘தேவமலர் ‘ என்று அவர் மொழியாக்கம் செய்தவையும்,க.நா.சுவின் தூண்டுதலின்பேரில் தி.ஜானகிராமன் மொழிபெயர்த்த ‘அன்னை ‘, ‘குள்ளன் ‘, போன்ற ஐரோப்பியப் புனைகதைகளும், சமகால வெகுசன இலக்கியவாதிகள் சரத்சந்திரர், காண்டேகர் ஆகியோரைக் கொண்டாடியபோது, அந்தப் பொது வழியிலிருந்து விலகி ஆர்.ஷண்முகசுந்தரம் மேற்கொண்ட தாரா சங்கர் பந்தோபாத்தியாயா, பிபூதிபூஷண் பந்தோபாத்தியாயா நாவல்களின் மொழியாக்கங்களும் க.நா.சு. உருவக்கிய மரபின் தொடர்ச்சியே.

மொழிபெயர்ப்பு சரளமானதும் படிக்கப்படும் மொழியில் புரிந்துகொள்ளத் தடையில்லாததாகவும் இருக்கவேண்டும் என்று க.நா.சு.முயன்றிருப்பதை சுந்தர ராமசாமி சுட்டிக் காட்டுகிறார். நமது வாசகனுக்குப் புரியவேண்டும் என்பதிலும் நமது கலாச்சாரத்துக்கு அந்நியமானதாக ஒரு படைப்பு இருந்துவிடக்கூடாது என்பதிலும் க.நா.சு ஜாக்கிரதை காட்டியிருக்கிறார். காதரின் ஆன் போர்ட்டரின் ‘குருதிப் பூக்கள் ‘ சிறுகதைத் தொகுதியின் மொழிபெயர்ப்பில் இந்த எச்சரிக்கையுணர்வைக் காணலாம்.

ஆனால் இந்த அதிஜாக்கிரதை ஓரிரு மொழிபெயர்ப்புகளில் க.நா.சுவைக் குப்புறத் தள்ளி யிருக்கிறது.குறிப்பாக ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 நாவல் மொழிபெயர்ப்பு. மரபான கதைப்போக்குக்கு எதிரானதும் இறுக்கமான நடையமைப்புக் கொண்டதுமான அந்த நாவல் தமிழ் வாசகனுக்குப் புரியாமல் போய்விடலாம் என்ற அங்கலாய்ப்புடன் மொழியாக்கத்தில் அவர் மேற்கொண்ட மாற்றம் இன்று நையாண்டிக்குரியதாகத் தோன்றுகிறது. அந்த நாவலுக்கு அவர் கொடுத்திருந்த துணைத்தலைப்பு ‘முத்தண்ணா ‘. Big Brother என்ற அரசியல் தொனியுள்ள சொற்றொடருக்கு மாற்றாக அவர் வழங்கிய பெயர் மொழிபெயர்ப்பின் நோக்கத்தையே சிதைத்ததாகக் கருதுகிறேன். பிராமணக் குடும்பங்களில் வீட்டின் மூத்த பிள்ளையைக் குறிப்பிடும் சொல்லின் மரூஉவான முத்தண்ணாவை எடுத்தாண்டது பொருத்தமானதா என்ற கேள்வியை இங்கே முன்வைக்கிறேன்.

க.நா.சுப்ரமண்யத்தின் கவிதைச் செயல்பாடுகள் சமகால வாசிப்பு நோக்கில் பாதிப்புகளை ஏற்படுத்த வலுவற்றவை. எனினும். தாம் ஒரு கவிஞராக முன் நிற்க தூண்டுதலாக இருந்தவர் க.நா.சு. என்று சுந்தர ராமசாமி பதிவுசெய்திருக்கிறார். சிறுகதை,நாவல் ஆகிய படைப்புத் துறைகளைவிட கட்டற்ற சுதந்திரத்தை க.நா.சு. உணர்ந்ததும் பயன்படுத்தியதும் கவிதையில் தான் என்று எண்ணுகிறேன்.அவர் எழுதிய காலப்பகுதியில் அவர் அளவுக்கு கவிதைச் சோதனையில் ஈடுபடும் துணிவுகொண்டவர்கள் யாருமில்லை. எனினும்,இன்றைய தலை- முறைக்கு க.நா.சு.கவிதைகள் தூண்டுதலாகவோ வகைமாதிரியாகவோ அமையாது. ஆனால் கவிதையாக்கத்தில் தடையற்ற சுதந்திரத்தை ஒரு தேவையாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவரது கவிதைகள் வலியுறுத்துகின்றன.

நினைவோடையில் துலங்கும் க.நா.சு. தொடர்பான சித்திரங்களில் அவரை வாசித்தும் அவரது இலக்கியச் செயல்பாடுகளைக் குறித்து அறிந்தும் வைத்திருக்கும் ஆர்வலர்கள் மனதில் வேறு கோணத்திலுள்ள க.நா.சுவின் சித்திரங்களும் இணையக்கூடும். இலக்கியப் பரிந்துரையாளர் அல்லது தூதுவர் என்ற எனது சித்திரமும் அதில் அடங்கும்.

பிற இந்திய மொழி இலக்கியவாதிகளுடன் கலந்துரையாடும்போதும் விவாதங்களில் ஈடுபடும் போதும் க.நா.சு.இல்லாத குறையை தமிழ் எழுத்தாளன் உணரக்கூடும். பிறமொழிகளின் டாம்பீக முழக்கங்களிடையே தமிழ்மொழியில் நடைபெற்றுவந்த புதிய முயற்சிகள் பற்றி மிக அதிகம் பேசியவர் அவர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மீறி அவர் இயங்கிய மொழி சார்ந்த படைப்புகளுக்கு அவற்றுக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர அவர் தொடர்ந்து முயன்று வந்திருக்கிறார்.இன்று அப்படி ஒருவர் இல்லை என்பது உண்மை.

க.நா.சுவிடமிருந்து நான் ஏற்றுக்கொண்டதும் சுந்தர ராமசாமியின் நினைவுப் பதிவுகளில் உறுதியாவதுமான ஒரு கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘ஓர் எழுத்தாளன் என்ற முறையில் நான் ஓர் உயர்ந்த மரபுக்குச் சொந்தக்காரன். தால்ஸ்தோய்,தாஸ்தயேவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர், கம்பன்,பாரதி, புதுமைப்பித்தன் ஆகியவர்களைப் பின் தொடர்பவன் நான் ‘ என்ற பொருளில் ‘இலக்கிய விசாரம் ‘ நூலில் குறிப்பிட்டுள்ளார். இது ஒரே தருணத்தில் எழுத்தாளனின் உயர்வு மனப்பான்மையையும் எழுத்தின் சமூக விரிவையும் கொண்டிருப்பதாக நம்புகிறேன்.

எழுத்தை ஜீவனமார்க்கமாகக் கொண்டவர்.ஆனால் அதை முன்னிருத்தி சலுகைகள் கோர முற்படாதவர்.நாடோடி அலைச்சலில் வாழ்ந்தவர். எழுத்தின் சந்தை மதிப்பீடுகளுக்கு எதிராக நின்றவர்.புதிய சவால்களுக்கு சிந்தனையைத் திறந்துவைத்தவர் என்று ஒன்றின் பின் ஒன்றாக வரும் தோற்றங்களில் க.நா.சு.வை இந்த நூலில் சுந்தர ராமசாமி மீட்டு அறிமுகப்படுத்துகிறார். அவையல்லவே க.நா.சுப்ரமண்யத்தின் நிஜமான தோற்றம் என்று எவராலும் மறுக்க முடியாமலிருப்பதே இந்த நினைவோடையின் நம்பகத்தன்மைக்குச் சான்றாகவுள்ளது என்ற குறிப்புடன் நிறைவு செய்கிறேன்.

@

8:37 PM 5/10/2005

sukumaran@sunnetwork.in

Series Navigation

சுகுமாரன்

சுகுமாரன்