கதை 01 – அலீ தந்த ஒளி

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

தமிழில் : நாகூர் ரூமி


அலீ இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன். நபிகள் நாயகத்தின் மகளார் ஃபாத்திமா(ரலி)யின் கணவராவார். இஸ்லாமியக் குடியரசின் நான்காவது கலீஃபா (ஆட்சித்தலைவர்) ஆவார். முதன்முதலில் முஸ்லிமான சிறுவர் என்ற புகழும் இவருக்கு உண்டு. அலீக்கு இரண்டு சிறப்புகளுண்டு. ஒன்று வீரம். அலீ என்றால் வீரம். வீரம் என்றால் அலீ என்று சொல்கின்ற அளவுக்கு அவருடைய வீரம் இருந்தது. உலக ஹெவிவெய்ட் சாம்பியன் காஸியஸ் கிளேகூட முஸ்லிமான பிறகு தனது பெயரை முஹம்மது அலீ என்று வைத்துக்கொண்டதை நாமறிவோம். வெற்றி வேண்டும் என்று விரும்புகின்ற வீரர்கள் ‘யா அலீ ‘ என்று களமிறங்குவது வழக்கம்.

அலீயின் இன்னொரு சிறப்பு ஆன்மீகம். ‘நான் ஞானத்தின் கோட்டையென்றால் அலீ அதன் தலைவாசல் ‘ என்பது நபிமொழி. இன்று உலகிலுள்ள ஆன்மீகப்பாதைகள் அனைத்தும் அலீயிடமிருந்து துவங்குகிறது என்பதுதான் அனேக வரலாற்று அறிஞர்களின் கருத்து. இது உண்மையா இல்லையா அல்லது எந்த அளவுக்கு உண்மை என்பது இப்போது முக்கியமல்ல. ஞானக்கோட்டையின் தலைவாசலாக இருந்த அலீயிடம் இருந்த ஆன்மீகப்பரிமாணம் பரிபூரணமானது என்பதை அவருடைய வாழ்விலிருந்து நாம் சந்தேகத்துக்கு இடமின்றி அறிந்துகொள்ள முடியும்.

அவருடைய பொன்மொழிகளை சிந்திப்பவர்களுக்கு இந்த உண்மை பளிச்செனப் புரியும். சாதாரணமான வார்த்தைகளில்கூட ஒரு ஆழமிருக்கும். ‘உனக்குத் தெரியாத எதையும் பேசாதே. தெரிந்ததையெல்லாமும் பேசிவிடாதே ‘ என்பது அவற்றில் ஒன்று!

இஸ்லாத்துக்கு எதிராக நடத்தப்பட்ட பல போர்களின் அவர் பங்கெடுத்துக்கொண்டார். அதில் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுதான் ரூமி சொல்லும் பின்வரும் கதை :

ஒரு முறை வீரர் அலீ ஒரு போரில் நெருப்பை வணங்கும் ஒருவனை நோக்கித் தன் வாளை ஓங்கினார்கள். அப்போதுதான் அவன் யாருமே எதிர்பாராத அதிர்ச்சிதரக்கூடிய அந்தக்காரியத்தைச் செய்தான்.

அலீயின் முகத்தில் காரி உமிழ்ந்தான் !

எந்த முகத்துக்கு நிலவு தன் தலைதாழ்த்தி மரியாதை செலுத்தியதோ அந்த முகத்தில். எந்த முகம் எல்லா தீர்க்கதரிசிகள் மற்றும் இறைநேசர்களின் பெருமையாக விளங்கியதோ அந்த முகத்தில்.

உடனே அலீ அவனைக் கொல்லும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, ஓங்கிய வாளைத்தாழ்த்தி, தன்னைத் தளர்த்திக் கொண்டார்கள்.

இந்த செயல் எதிரிக்கு வியப்பளித்தது. இப்படிப்பட்ட நேரத்தில் கருணையும் மன்னிப்புமா ? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘ஏன் இப்படிச் செய்தீர்கள் ? என்னோடு சண்டை போடுவதைவிட சிறந்ததாக எதைக்கண்டார்கள் ? உங்கள் கோபம் மாயமாய் மறைந்துவிட்டதே! என்னதான் அப்படிக்கண்டார்கள் ? நீங்கள் கண்டதன் பிரதிபலிப்பு என் இதயத்திலும் ஆன்மாவிலும் ஓர் ஜுவாலையைத் தூண்டிவிட்டதே!

‘இருப்பையும் வெளியையும் உயிரையும்விட மேலாக எதைக்கண்டார்கள் ? எனக்கு உயிர் கொடுத்துவிட்டார்களே! வீரத்தில் நீங்கள் ஆண்டவனின் அரிமா! தாராளத்தில் ? யாரறிவார் ! ‘

பாலவனத்தில் தோன்றிய மூஸாவின்(மோஸஸ்) மேகத்தைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். அது அவரின் மக்களுக்கு தன் கருணையின் சிறகுகளை விரித்தது. சமைத்த உணவை நாற்பது ஆண்டுகளுக்கு மழையைப்போல பெய்தது. தங்கள் சிறுமையின் பொருட்டு அம்மக்கள் பலவகையான உணவுவகைகளைக் கேட்காதவரை.

ஆனால் முஹம்மதின் மக்களாகிய உங்களுக்கு தீர்ப்புநாள்வரை உணவு வந்துகொண்டிருக்கும். ‘என்னுடைய நாயனோடு நான் என் இரவைக் கழிக்கிறேன். உண்ணவும் குடிக்கவும் எனக்கு அவனே தருகிறான் ‘ என்று முஹம்மது நபி மொழிந்தது விளக்கங்கள் தேவைப்படும் அர்த்தத்தில் அல்ல.

விளக்கம் என்பது அன்பளிப்பை மறுப்பது. உங்கள் புரிந்துகொள்ளலில் உள்ள பலஹீனத்தில் உண்டாவதுதான் உங்கள் விளக்கமெல்லாம். நம்முடைய அறிவென்பது மேல்தோல். உள்ளிருப்பதுதான் இறைவனுடையது. உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஹதீதுகளை(நபிமொழியை) மாற்றாதீர்கள். உங்கள் மகத்தான மூளையைக் குறை கூறிக்கொள்ளுங்கள். ரோஜாத்தோட்டத்தை (புரிந்துகொள்ளாத உண்மைகளை) அல்ல.

‘அலீயே நீங்கள் கண்டது என்ன என்று கொஞ்சமாவது கூறுங்கள். உங்கள் பொறுமையின் வாள் என் ஆத்மாவைக் கிழித்துவிட்டது. உங்கள் ஞானத்தின் நீரோ எனது நிலத்தைத் தூய்மைப்படுத்திவிட்டது.

‘சொல்லிவிடுங்கள். எனக்குத் தெரியும். இது இறைவனின் மர்மங்களில் ஒன்றுதான். ஏனெனில் வாளின்றிக் கொல்ல அவனால்தான் முடியும். கருவிகளும் கைகளும் இல்லாமல் காரியங்கள் முடிப்பவன் அவன்தான். அருகில் நிற்பவர் விழிகளெல்லாம் முத்திரையிடப் பட்டிருக்கும்போது உங்கள் கண்கள் மட்டும் மற்றவர் கண்ணுக்குத் தெரியாததை புரிந்துகொண்டு விட்டன.

‘ஒரு மனிதன் நிலவை தெளிவாகக் காண்கிறான். இன்னொருவனுக்கோ இந்த பிரபஞ்சமே இருள் மயமாக உள்ளது. இன்னொருவனோ மூன்று நிலவுகளை காண்கிறான். தனது போதையில்.

‘ஆனால் இந்த மூவருமே ஒரே இடத்தில் அமர்ந்துதான் இந்த மூன்று விதமான அனுபவங்களை பெறுகிறார்கள்.

‘இதென்ன கண்கட்டுவித்தையா ? மறைமுகமான அருளா ? உங்கள்மீது ஒநாயின் தோற்றமும் என் மீது யூசுஃபின் அழகும் மிளிர்கின்றதே ?

‘ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அலீயே! ரகசியம் என்னவென சொல்லுங்கள். உங்கள் ஞானத்தில் நீங்கள்கண்டதைச் சொல்கிறீர்களா ? அல்லது என்னிடமிருந்து வெளிப்படுவதை நான் காட்டட்டுமா ?

‘உங்களிடமிருந்து ஒளிர்ந்து என்மீது பட்டதுதான் அது. அதை நீங்கள் எப்படி மறைக்க முடியும் ? வார்த்தைகள் ஏதுமின்றி ஒளிக்கதிர்களை என்னை நோக்கி நீங்கள் பாய்ச்சிக்கொண்டிருக்கிறீர்கள். நிலவைப்போல. கருணை சூரியனே! ஞானக்கோட்டையின் தலைவாசலே! திறவுங்கள் உங்கள் கதவுகளை, இந்த தட்டுபவனுக்காக.

‘அஜாக்கிரதையான ஒரு மனிதன் திடாரென ஒரு நாள் இடிபாடுகளுக்குக் கீழே பொக்கிஷம் ஒன்றைக் கண்டான். அன்றிலிருந்து அவன் இடிபாடு ஒவ்வொன்றையும் ஆராய ஆரம்பித்தான்.

‘நம்பிக்கையாளர்களின் தலைவரே! பேசுங்கள். கருவறையினுள் உள்ள உயிரைப்போல என் உடம்புக்குள் என் ஆத்மா அசையட்டும். நட்சத்திரங்களின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கையில் அது எப்படி அசையும் ? சூரியனை (இறைவனை) நோக்கியே அது திரும்புகிறது. சூரியனின் பொருட்டே அதற்குள் உயிர் ஊதப்படுகிறது.

‘கருவறையினுள் உள்ள உயிருக்கும் சூரியனுக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டது ? நமது புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட மர்மமான முறையில் விண்ணில் உள்ள சூரியனுக்கு வழிகள் ஆயிரம் உண்டு.

‘கரி எப்படி வைரமாகிறது ? பவழம் எப்படி சிவப்பாகிறது ? குதிரை லாடத்திற்கு மின்னல் ஒளி எப்படி வருகிறது ? பழம் எப்படிப் பழுக்கிறது ? பயந்தவனுக்கு தைரியம் எப்படிப் பிறக்கிறது ? அப்படித்தான். கூறுங்கள் அலீயே ‘ என்று வேண்டினான் காரி உமிழ்ந்த அவநம்பிக்கையாளன்.

அலீ சொன்னார்கள் :

‘நான் இறைவனுக்காகத்தான் எனது வாளை உயர்த்துகிறேன். நான் இறைவனின் வேலைக்காரன். என் உடம்பின் கட்டளைகளுக்கு நான் அடிபணிவதில்லை.

‘நான் இறைவனின் சிங்கம். உணர்ச்சிகளின் சிங்கமல்ல. நான் செய்கின்ற காரியங்கள் யாவும் என் மார்க்கத்திற்கு சாட்சி பகர்வனவாக உள்ளன.

‘நீ எறியும்போது உண்மையில் நீ எறியவில்லை என்ற இறைவசனத்தின் விளக்கமாகத்தான் எனது போர்கள் அமைகின்றன. நான் ஒரு வாள் மட்டுமே. என்னை வீசுவது இறைவனே.

‘நான் எனும் சுமை மூட்டையை இறக்கிவைத்துவிட்டேன் நான். அல்லாஹ் அல்லாததையெல்லாம் இல்லாததாக நான் அறிகிறேன்.

‘நான் ஒரு நிழல். இறைவனே எனது நிஜம். அவனை மறைக்கும் திரையல்ல நான். இணைப்பாகிய முத்துக்குள் கோர்க்கப்பட்ட போர்வாள்போல் நான் உள்ளேன். போரில் நான் மனிதர்களைக் கொல்லுவதில்லை. மாறாக, வாழ வைக்கிறேன். எனது வாளின் உறைமீது ரத்தக்கறை படிவதில்லை.

‘எனது மேகங்களைக் காற்று எப்படிக் கலைக்கமுடியும் ? நான் வைக்கோலல்ல. பொறுமையிலும் நீதியிலும் நான் மலை. காற்றால் மலையைப் பெயர்க்க முடியுமா ? முடியுமெனில் அது குப்பைதான்.

‘காற்றிலும் பலவகை உண்டு. கோபக்காற்று. காமக்காற்று. பேராசைக்காற்று என. நான் வைக்கோல் எனில் அடிக்கும் காற்று இறைவனாக இருக்கும். அவன்மீது நான் கொண்டுள்ள அன்புதான் என்னைச் செலுத்தும் மாலுமி.

‘சினம் எனக்கு அடிமை. நான் அதற்குக் கடிவாளம் போட்டுவிட்டேன். எனது சுய கட்டுப்பாட்டின் வாள் எனது கோபத்தின் கழுத்தைத் துண்டித்துவிட்டது.

‘இறைவனின் கோபம் என்மீது கருணையைப்போல இறங்கிவிட்டது. எனது கூரை வீழ்ந்துவிட்டாலும் நான் ஒளியில் மூழ்குகிறேன்.

‘இறைவன் அல்லாத ஒன்றைப்பற்றிய சிந்தனை எனக்குள் புகுந்ததனால் நான் வாளை உறைக்குள் போடவேண்டியதாகிவிட்டது.

‘இறைவனுக்காகவே விரும்புகிறார் என்பது என் பெயராகட்டும். இறைவனுக்காகவே வெறுக்கிறார் என்பது என் ஆசையாகட்டும். இறைவனுக்காகவே கொடுக்கிறார் என்பது என் வள்ளல்தன்மையாகட்டும். இறைவனுக்காகவே கொடுப்பதில்லை என்பது என் இருப்பாகட்டும்.

‘என் கஞ்சத்தனமும் ஹாதிம்தாய்த்தனமும் இறைவனுக்காகவே. நான் முற்றிலும் அவனுடையவனாகவே உள்ளேன். என் எல்லாச் செயல்களும் அவனுக்காகவும் (அவன் தரும் உதிப்பாகிய) இல்ஹாமுக்காகவும்தான். முயற்சியிலிருந்தும் தேடுவதிலிருந்தும் நான் விடுதலை பெற்றுவிட்டேன். எனது சட்டையை அல்லாஹ்வுடையதோடு சேர்த்து நான் கட்டிவிட்டேன்.

‘எதை நோக்கிப் பறக்கிறேன், எதைச் சுற்றிச் சுழல்கிறேன், என் சுமையை எங்கே இழுத்துக்கொண்டு போகிறேன் என்றும் எனக்குத் தெரியும். நான் நிலவு. எனக்கு எதிரில் வழிகாட்டச் சூரியன் உண்டு.

‘இதற்குமேல் மக்களுக்குப் புரியும்படி என்னால் சொல்ல இயலாது. ஆற்றுக்குள்ளே கடலைப் புகுத்த முடியாது. கேட்பவரின் தகுதிக்கேற்ப நான் கீழிறங்கிப் போகிறேன். இதில் தவறில்லை. இது பெருமானாரின் வழிமுறையுமாகும்.

‘இறைவனின் கருணையானது அவனது கோபத்தை மிகைப்பதாகும். ‘யாஹூ ‘ என்ற தோட்டத்தில் ரோஜாவாக மலர வா நண்பனே! நான்தான் நீ. நீதான் நான். அலீயே எப்படி அலீயைக் கொல்லமுடியும் ?

‘நீ செய்த ஒரு பாவகாரியம் பல புண்ணிய காரியங்களைவிட சிறப்பானதாகிவிட்டது. முள்ளிலிலிருந்து ரோஜா மலர்வதில்லையா ? உமர் செய்யத்துணிந்த பாவம்தானே அவரை நம்பிக்கையின் பக்கம் இழுத்து வந்தது !

‘வா, என் முகத்தில் நீ காறித்துப்பினாய். நான் என் கதவுகளை உனக்காகத் திறக்கிறேன். உனக்கொரு பரிசு தருகிறேன். நான் தரும் பொக்கிஷங்களும் ராஜ்ஜியங்களும் நிரந்தரமானவை. கெட்டதை நல்லதாக்கும் வல்லமை இறைவனுடையதே. என்னைக்கொல்ல நினைத்தவன்மீதுகூட எனது அன்பின் தேன் விஷமாகவில்லை. என்னிடம் வேலைபார்த்த அவனே ஒரு நாள் என்னைக்கொல்வான் என அவன் காதில் பெருமானார் சொன்னார்கள்.

‘என் முடிவு அவன் கையால் இருக்கும் என்ற இறைச்செய்தியைத்தான் அவர்கள் அறிவித்தார்கள். என்னை கொன்றுவிடுங்கள். அலீயைக் கொன்ற பாவம் என்மீது விழவேண்டாம் என்று அவன் கெஞ்சினான்.

‘என் மரணம் உன்மூலம் வரவேண்டும் என்ற இறைவிதியை நான் எப்படி மீறுவது ? இறைவனின் பேனா உலர்ந்துவிட்டது. நான் உன்னை வெறுக்கவில்லை. இது நீ செய்யப்போகும் காரியம் என்று நான் நினைக்கவில்லை. நீ ஒரு கருவிதான். இறைவனுடைய கைதான் என்னைக் கொல்லும் என்றேன் நான்.

‘ஆனால் பதிலுக்கு பதில் கொடுக்கலாம் என்று இறைவனே தந்த சட்டம் உள்ளதே என்றான் அவன்.

‘அதுவும் இறைவனின் மர்மங்களில் ஒன்றுதான். அவனுடைய கருவியை அவனே உடைப்பான். அவனே பழுதுபார்ப்பான். சட்டம் தருவான். அதைத் தூக்கியும் எறிவான். வைக்கோல் தருவான். பிறகு அதைப்பிடுங்கிக் கொண்டான் எனில், அதற்குப் பதில் ரோஜாக்களைத் தருவான்.

‘பகலை இல்லாமலாக்குகிறது இரவு. மறுபடியும் பகலின் ஒளி இரவை விரட்டுகிறது. பெருமானார் புரிந்த போர்களெல்லாம் அமைதியை விதைக்கவில்லையா ? அனுபவசாலி, தனது தோட்டத்தின் நன்மைக்காக அவ்வப்போது களையெடுத்துக்கொண்டே இருப்பான்.

‘மருத்துவன் பல் பிடுங்கும்போது வலிக்கத்தான் செய்யும். ஆனால் அந்த வலிதான் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி. குறைகளில் எத்தனையோ நிறைகள் உண்டு. தியாகிகளுக்கு மரணம் நித்திய வாழ்வு தருகிறது.

‘அனுமதிக்கப்பட்ட மிருகத்தின் கழுத்தை சட்டப்படி அறுத்து உணவாக்கும்போது அது உண்பவனின் கழுத்துக்கு நன்மை செய்கிறது. அப்படியெனில், ஒரு தியாகியின் கழுத்து அறுபடும்போது என்ன நடக்கும் ? இன்னொரு கழுத்து உண்டாகும். அதை இறைவனின் ஷர்பத்தும் ஒளியும் கவனித்துக்கொள்ளும்.

‘நண்பரே ! உடைக்கவும், உடைத்ததை ஒட்டவும், கிழிக்கவும், கிழித்ததைத் தைக்கவும் அவனுக்குத் தெரியும். ஒரு தலையைக் கொய்தால் பதிலாக ஆயிரம் தலைகளை அவன் தருவான். கொல்பவரெல்லாம் இறைவிதிப்படியே கொல்கிறார். யாருடைய கண்களை இறைவன் திறந்துவிட்டானோ அவர்களுக்கு இது புரியும்.

‘இறப்பென்பது இறவாமைக்குள் நுழைவது. மேலே சாவாகவும் அடியில் வாழ்வாகவும் உள்ளது அது. எனது சாவே எனது வாழ்வு. இறைவா, எவ்வளவு காலம்தான் எனது வீட்டைப் பிரிந்திருப்பது ? இறைவனை விட்டு நாம் பிரிந்திருக்கிறோம் என்பது பொய் எனில், நிச்சயமாக நாம் அவனளவில் திரும்பிச் செல்பவராக இருக்கிறோம் என்ற இறைவசனம் ஏன் ?

‘நீ என் முகத்தில் துப்பியபோது என் உணர்ச்சிகள் தூண்டப்பட்டன. என் மனம் கெட்டது. நான் வாளை ஓங்கியபோது அது பாதி இறைவனுக்காகவும் பாதி எனக்காகவும் அமைந்து போனது. இறைவனுடைய அலுவல்களில் பங்காளிகள் பாகத்தாளிகள் ஏது ?

‘எனவே காதலி வீட்டு ஜன்னலில் கல்லெறிவதானாலும் அது அவள் கொடுத்த கல்லாக இருக்கட்டும். ‘

அலீயின் இந்த பதிலைக்கேட்டதும் எச்சில் உமிழ்ந்தவனின் இதயத்தில் ஏகத்துவத்தின் ஒளி பிறந்தது. தனது பழைய மார்க்கச் சடங்கான இடுப்புநூலை அறுத்து எறிந்தான். தீயை வணங்கியவன் தீனுக்கு வந்தான்.

மனம் வருந்தி, திருந்தி, அப்போதே முஸ்லிமானான். அவனோடு சேர்ந்து ஐம்பது பேருக்குமேல் அவன் உறவினர்களும் ஏகத்துவத்தில் இணைந்தனர்.

அலீயின் கருணையின் வாள் இரும்பு வாளைவிடக் கூர்மையானதாக இருந்தது. நாம் விரும்புவதைக் கொண்டுவருவது பொறுமைதான். அவசரமல்ல. பொறுமையாக இருங்கள். எது சரி என்பதை இறைவன் அறிவான்.

விளக்கக் குறிப்புகள்

—-

பெருமானார் — நபிகள் நாயகம்

மூஸா — மோஸஸ்

தீன் — மார்க்கம், இஸ்லாம்

யூசுஃப் — தீர்க்கதரிசிகளிலேயே மிக அழகானவர்

யாஹூ — அரபியில் ‘ஓ அவனே ‘ என்று பொருள். இறைவனைக் குறிக்கும்

உமர் — நபிகள் நாயகத்தின் உற்ற தோழரும், மாமனாரும், இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாம் கலீஃபாவுமான உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தார்கள். நபிகள் நாயகத்தை வெட்டுவதற்காக வாளேந்திச் சென்ற அவர்கள் திருக்குர்ஆனை தனது சகோதரி ஓதிக்கொண்டிருப்பதைக் கேட்டுவிட்டு அதன்பின்பு இஸ்லாத்தில் இணைந்த வரலாறு சுவையானது.

இல்ஹாம் — இறையுதிப்பு

***

ruminagore@yahoo.com

Series Navigation