கதைஞர்களும் கவிஞர்களும்

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

சோதிப் பிரகாசம்


ஒரு சிலரைக் காணுகின்ற பொழுது நமக்கு வியப்பு ஏற்படுவது உண்டு. ஏதேனும் ஒரு துறையில்

நாம் வியக்கின்ற வகையில் சாதனைகளைப் புரிந்து அவர்கள் ஏற்றம் பெற்று இருப்பார்கள்.

தங்களைப் பற்றி இவர்கள் பேசிட நேர்கின்ற பொழுது, தங்கள் உழைப்பினைப் பற்றி இவர்கள் பேசு வார்கள்; ஒவ்வொரு கட்டத்திலும் தங்களுக்கு உதவி செய்தவர்களைப் பற்றி நன்றியுடன் குறிப்பிடுவார்கள். தங்களைத் தாங்களே இவர்கள் வியந்து கொள்வது இல்லை; வியப்பாகத் தங்கள் வெற்றிகளைப் பற்றி இவர்கள் பேசுவதும் இல்லை. ஏனென்றால், தங்களின் வெற்றிகளுக்குப் பின்னால் மறைந்து கிடக்கின்ற உழைப்பும் உதவிகளும் இவர்களுக்குத் தெரியும்.

வெற்றி பெற்றவர்களில் இன்னொரு வகையினரும் உண்டு. ஊழல் காரர்களாகவும் ஏமாற்றுக் காரர் களாகவும் தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டு வெற்றி பெற்று இருப்பவர்கள் இவர்கள்; தம்மைத் தாமே வியந்தும் கொள்பவர்கள்! எந்தத் துறையில் இவர்கள் இருந்தாலும் அந்தத் துறையைச்

ச்ீரழிக்காமல் இவர்கள் விட மாட்டார்கள். அரசியல் துறையில் இவர்கள் புரிந்து கொண்டு வருகின்ற கயமைகளுக்கோ ஒரு கணக்கு இல்லை!

தங்கள் உழைப்பினால் வெற்றி வாகை சூடி இருப்பவர்களுக்குக் கூட சில சமயங்களில் தங்கள்

திறமையின் மேல் ஐயம் ஏற்பட்டு விடுவது உண்டு. தாழ்வுப் பான்மையில் தள்ளாடிக் கொண்டு இருக்கின்ற

இவர்கள் திடிரென்று கடவுள் என்றும் ஆன்மிகம் என்றும் உளறிக் கொட்டத் தொடங்கி விடுவார்கள்; இறுதியில், தாங்கள் பிறந்த நேரம் நல்ல நேரம் என்று ஒரு முடிவுக்கு வந்து, அந்த நல்ல நேரத்தில் தங்களைப் படைத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டு வந்திடவும் இவர்கள் முற்பட்டு விடுவார்கள்!

‘ஒரு முறை நான் சொன்னால் நூறு முறைக்கு அது சமம் ‘ என்று ‘நான் ‘ என்னும் தங்கள் அகந் தையை முதலில் தூக்கிப் பிடித்து, பின்னர் ‘அவன் சொல்கிறான்; இவன் செய்கிறான் ‘ என்று கடவுளின்

கால்களுக்குள் தஞ்சம் புகுந்து, இவர்கள் அடிக்கின்ற கொட்டங்களுக்கு ஓர் அளவு இருப்பது இல்லை. எப்படியும், ஆன்மிகத்தையும் கடவுளையும் தங்கள் ஊழியர்களாகப் புரிந்து கொண்டு இருக்கின்ற இவர்களின் புத்தி சாலித் தனத்தினை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

வெற்றியாளர்களான இம் மாதிரிப் பாமரர்கள்தாம் ‘பாவம்! ‘ என்றால், உச்சம் உச்சம் என்று உச்சிகளைத் தேடிக் கொண்டு இருக்கின்ற பெரும்பாலான எழுத்தாளர்களும் பெரும் ‘பாவங்களாக ‘த்தாம் நமக் குக் காட்சி தந்து கொண்டு இருக்கிறார்கள். உச்சியின் உயரத்தைத் தெரிந்து கொண்டு இருப்பவர்கள் இவர்களுள் எத்தனை பேர் என்பதுதான் சிக்கலான கேள்வி!

தொல்காப்பியர் முதல் கார்ல் மார்க்ஸ் வரையிலான எத்தனையோ எழுத்தாளர்களை நாம் படிக்கின்ற பொழுது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. கூடவே, தத்தம் துறைகளில் அவர்கள் கொண்டு இருந்து இருக்கக் கூடிய ஈடுபாடும் உழைப்பும் நமது நினைவுக்கு வருகின்றன.

தொல் காப்பியம் போன்றது ஒரு இலக்கணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி இருக் கின்ற தொல்காப்பியர் அதற்கு என எவ்வளவு உழைத்து இருப்பார்; கருமமே கண்ணாக இருந்து எவ்வளவு தேடி இருப்பார்! ஒருமையான அந்தத் தேடலை எண்ணி எண்ணி நாம் வியந்து போகிறோம் என்றால், தொல்காப்பியரிடமோ எந்த ஒரு வியப்பும் இல்லை; பெருமையும் இல்லை! மாறாக, ‘என்மனார் புலவர் ‘ என்று தமது முன்னோடிகளை அவ் அப் போது அவர் குறிப்பிட்டுக் கொண்டு செல்கின்ற பாங்கினைத்தான் நாம் காண்கிறோம்.

தமது வாழ்க்கை முழுவதையும் தமது தேடலுக்கு என்று பணித்து, கார்ல் மார்க்ஸ் எழுதி இருக்கின்ற நூல்களில் அவரது அறிவின் ஆழத்தை மட்டும் நாம் காண வில்லை. அவரது தேடலின் ஒருமைப்பாட்டினை யும் உழைப்பையும் நாம் காண்கிறோம்; வியந்தும் போகிறோம். ஆனால், தம்மைத் தாமே எப் பொழுதாவது

கார்ல் மார்க்ஸ் வியந்து கொண்டதாக நமக்குத் தெரிய வர வில்லை. மாறாக, மெய் மறந்த நிலையில் தமை வியந்து நின்று இருக்க கூடிய எழுத்தாளர்களை அவர் கிண்டல் அடித்து இருப்பதை அடிக்கடி நாம் காண்கிறோம்.

அறிவியல் துறைகளில் எவ்வளவோ கண்டுபிடிப்புகளை எத்தனையோ ஆய்வாளர்கள் நிகழ்த்திக்

காட்டி இருக்கிறார்களே, இவகளுள் யாரேனும் தற்பெருமை அடித்துக் கொண்டு வந்து இருந்ததாக நாம் கேள்விப் பட்டு இருக்கிறோமா ? ஆனால், நமது கதை-கவிதை எழுத்தாளர்கள் அடித்துக் கொண்டு

வருகின்ற தற்பெருமைகளுக்கோ இன்று ஓர் அளவு இல்லாமல் போய் விட்டு இருக்கிறது. போட்டி-பொறாமைகளுக்கு மட்டும் இன்றி வசை மொழிகளுக்கும் கூட இவர்கள் இடையே இன்று பஞ்சம் இல்லை.

ஆனால், என்னத்தை எழுதி இவர்கள் கிழித்து விட்டார்கள் ? இவர்கள் எழுதி என்னத்தை நாம்

தெரிந்து கொண்டு விட்டோம் ? அல்லது, இவர்கள் எழுதுவனவற்றை இவர்களாவது தெரிந்து வைத்து இருக்கிறார்களா ? எதுவும் இல்லை! சரி, இவர்களது கதை-கவிதைகளைப் படித்துத் தங்கள் அறிவினை வளர்த்துக் கொண்டவர்கள் என்று உலகத்தில் யாராவது இன்று வரை இருந்து இருக்கிறார்களா ? என்றால் அதுவும் இல்லை.

‘மதத்தைப் போன்ற போதைப் பொருள்கள்தாம் கதைகளும் கவிதைகளும் ‘ என்று நான் கூறினால்

காலச் சுவடு அய்யனாருக்குச் சிரிப்பு வருகிறது. ‘கவிதை என்பது சாராயம்; புரட்சிக் கவிதை என்பது கள்ளச் சாராயம் ‘ என்று நான் கூறியதைச் சுட்டிக் காட்டி என்னைக் கிண்டல் செய்வதற்கும் அவர் தவற வில்லை—என் வாயில் இருந்து சிதறி விழுந்து இருக்கின்ற முத்துகள் என்று!

நன்றாகத்தான் இருக்கிறது கிண்டல்! ஆனால், கிண்டலை நிலைநிறுத்திக் காட்டுவதற்கு வாதங்கள் வேண்டாமா ? கதை-கவிதை என்பன வெல்லாம் போதைப் பொருள்கள் அல்ல வென்றால், என்னதாம் அவை என்றாவது விளக்கி அவர் நமக்குக் காட்டிட வேண்டாமா ? அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அவர் வாசித்துக் கொண்டு வந்து இருக்கின்ற கதை-கவிதைகளில் இருந்து அவர் வளர்த்துக் கொண்டு இருக்கின்ற அறிவின் ஆழம்தான் எவ்வளவு என்பதை நமக்கு அவர் வெளிப் படுத்திட வேண்டாமா ?

‘வாழ்க்கையின் கேள்விகள் ‘: இரண்டாம் பதிப்பிற்கு அணிந்துரை எழுதுமாறு ஜெயமோகனைக் கேட் டுக் கொண்ட பொழுது நான் நினைத்தேன்—போதைப் பொருள்களாகக் கதை-கவிதைகளை நான் சித்த

ரித்து இருக்கின்ற 15-ஆவது அதிகாரத்தை அவர் ஒரு பிடி-பிடித்து விடுவார் என்று! ஆனால், ஜெயமோகனோ மவுன மொழிகளைக் கொண்டு கதை சொல்வதில் வ்ல்லவர்; எனவே, மவுனம் சாதித்து விட்டார் அதைப் பற்றி! போதைப் பொருள்கள்தாம் கதை-கவிதைகள் என்பது அவருக்குத் தெரியாமல் இருந்து இருக்குமா, என்ன!

கதை-கவிதைகளை ‘இலக்கியம் ‘ என்றும் ‘படைப்பு ‘ என்றும் அவற்றை எழுதுபவர்களைப் ‘படைப்பு ஆளிகள் ‘ என்றும் ‘இலக்கிய வாதிகள் ‘(!) எழுதிக் கொண்டு வருவதுதான் நிகப் பெரிய வேடிக்கை!

இலக்கிய வாதம் என்று ஒரு வாதம் இருந்திட முடியாது என்றும் இலக்கிய வாதி என்பது

பொருந்தாத ஒரு பதம் என்றும் நான் கூறினால், அதனை எதிர் கொள்வதற்கு முயலாமல் ‘அரசியல்

வாதி ‘ என்பதைப் போன்றது ஒரு பதம்தான் ‘இலக்கிய வாதி ‘ என்று ஒரு போலியைக் காட்டுகிறார் திரு. ஜெயகாந்தன்! அரசியலுக்கு என்று பல் வேறு வாதங்கள் இருக்கலாம்—புதுமை வாதம், பழைமை வாதம், பொதுமை வாதம், முதலாண்மை வாதம், என்பன போன்று! ஆனால், அரசியல் என்பதே ஒரு வாதம் ஆகிட முடியுமா ?

மெய்மை வாதம், கற்பனை வாதம், மிகை வாதம், மாய வாதம், என்று எல்லாம் இலக்கியத்திற்கு என்று பல் வேறு வாதங்கள் இருக்கலாம்; ஆனால், இலக்கியம் என்பதே எப்படி ஒரு வாதம் ஆகிட முடியும் ?

அப்படி ஒரு வாதம் இருந்திட முடியும் என்றால், எதற்கான, எதைப் பற்றிய, எதற்கு ஆதரவான அல்லது எதற்கு எதிரான வாதம் அது ? ‘கலை-இலக்கியம்தான் எல்லாம் ‘ என்று கவிஞர் இன்குலாப் கூறுகின்ற

பொழுது அவர் வலியுறுத்திட முன் வருவது உண்மையில் ‘போதைதான் இனி எல்லாம் ‘ என்பதைத்தான் ஆகும்.

‘இலக்கு ‘ என்பதற்கு நோக்கம் என்று பொருள்; எனவே, ‘இலக்கியம் ‘ என்பதற்கு ஒரு நோக்கத்தை முன்னிறுத்தி எழுதப் படுவது என்று பொருள்; என்று நம் தமிழ்ப் புலவர்கள் கூறுகின்ற பொழுது ஒன்று மட் டும் நமக்கு நன்றாகப் புரிந்து விடுகிறது—எழுதப் படுவதுதான் இலக்கியம் என்று! அதே நேரத்தில், இலக்கியம் என்பதன் சொற் பிறப்புப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று! எனவே, தமிழ்ப் புலவர்களுடன் நமது கணக்கினை முதலில் நாம் முடித்துக் கொள்வோம்.

பனை ஓலையின் துண்டுகளை ‘இலக்கு ‘ என்று குறிப்பிடுவது தென் பாண்டி வழக்கு! இன்றும் கூடத் தான்! இந்த இலக்கில் கீறப் படுகின்ற எழுத்துகள்தாம் அன்று ‘இலக்கியம் ‘ என்று அழைக்கப் பட்டு வந்து இருந்தன. ‘லிச்சரேச்சர் ‘ என்னும் ஆங்கிலச் சொல்லின் மூலமான ‘லிற்றரா ‘, அல்லது ‘லித்தரா ‘ என்னும் (எ)லத்தின் சொல்லின் மூலம் கூட ‘எழுத்து ‘ என்னும் தமிழ்ச் சொல்தான் ஆகும். ஏன், இலக்கில் எழுதுவதற்குப் பயன் படுத்தப் பட்டு வந்த ‘இலக்காணி ‘தானே வடக்கில் சென்று ‘லக்காணி ‘ ஆனது ?

ஆக, எழுதப் படுவதுதான் இலக்கியம் என்பது தெளிவு. ஆனால், கதைகளும் கவிதைகளும்தாம் எழு தப் படுகின்றனவா ? வேறு எந்தத் துறையிலும் நூல்கள் எழுதப் படுவது இல்லையா ? எனவேதான், இலக்கியம் என்று கதை-கவிதைகளைக் குறிப்பிடுவது பொருத்தம் இல்லாமல் போய் விடுகிறது. நன்றாக இதனைப்

புரிந்து கொண்டு இருக்கின்ற காரணத்தினால்தான் கதை-கவிதைகளைக் கலை-இலக்கியம் என்று ஸ்தாலினிஸ்டுகள் சுட்டிக் கொண்டு வருகிறார்கள் போலும்! அதே நேரத்தில், ‘படைப்பாளிகள் ‘ என்று கதை-கவிதைக் காரர்களை குறிப்பிட்டு வந்திடத் தொடங்கி இருந்தவர்களும் இவர்கள்தாம் என்று தெரிகிறது.

போதை ஊடுபவர்கள் இல்லாமல் புரட்சி ஏது ? இவர்கள் முடிவு செய்து விட்டார்கள் போலும்!

சொந்த வீடுகளின் இருட்டிற்கு உள்ளும் அண்டை-அயல் வீடுகளின் கதவுகளுக்குப் பின்னும் அத்து மீறி உற்றுப் பார்த்து, அப்படியே அவற்றை ஈயடித்தான்-நகல் அடித்துக் கொள்கின்ற இந்த நகலாளர்கள், படைப்பாளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வதும் அவர்களின் சுவனர்கள்(ரசிகர்கள்) அதனை ஏற்றுக் கொள்வதும், போதைப் பொருளை வடிப்பவர்களுக்கும் அதைக் குடிப்பவர்களுக்கும் இடையே உள்ள ஒற் றுமை உறவு அன்றி வேறு என்ன ?

சுவனம் என்பதே போதை என்றால், அதில் அழகு எது ? அழகு அற்றது எது ? என்று ஒரு கேள்வி! அது மட்டுமா ? கூடவே, ‘மார்க்சியத்தின் அழகியல் ‘ என்ன வென்று ஸ்தாலினிஸ்டுகளை நோக்கி ஏவு கணை வீச்சுகள் வேறு! மார்க்சியத்திற்குப் புகழ் மாலைகளைச் சூட்டுவதையே பெரும் பேறாகக் கருதிக் கொண்டு வந்து இருக்கின்ற கோவை ஞானியால் பொறுத்துக் கொள்ள முடியுமா, இதனை ? மார்க்சியத்தின் அழகியல் என்று கதைகளை அளப்பதற்கு அவர் முற்பட்டு விட்டார். பாவம் கோவை ஞானி! ‘அழகு ‘ என்

றால் என்ன என்று ஒரு கேள்வியை மட்டும் அவர் கேட்டு இருந்தார் என்றால் வாய் அடைத்துப் போய் இருந்து இருப்பர் கதை-கவிஞர்கள்! பின்-புதின வாதிகளும் கூடத்தான்! ஆனால், அழகின் சுவனர்

ஆயிற்றே அவர்! இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதற்கு அவரால் எப்படி முடியும் ?

மார்க்சியம் என்பது ஓர் அறிவியல் என்றால், முதலில் தன்னை அது பொய்ப்பித்துக் காட்டிட வேண்டு

மாம்! அப்பொழுது மட்டும்தான் தன்னை மெய்ப்பித்துக் காட்டி விட்ட ஓர் அறிவியலாகத் தலை நிமிர்ந்து அது நின்றிட முடியுமாம்—எழுதுகிறார் நீலகண்டன் அரவிந்தன்! பாவம், கார்ல் பாப்பர்! ‘பொய்ப்பிக்கும் இயன்மை ‘ என்று அவர் கூறி இருந்ததை(அவரை நான் படித்தது இல்லை; கேள்விப் பட்டதுதான்!)ப்

‘பொய்ப்பித்தல் ‘ என்று எடுத்துக் கொண்டு, என்னமாய் நமது காதில் பூச் சுற்றி விடுகிறார் அவர்!

இந்தக் கதை-கவிதை எழுத்தாளர்கள் இருக்கிறார்களே, இலசுப் பட்டவர் அல்லர் அவர்கள்! கதை-

கவிதைகளை உயர்த்திக் காட்டுவதற்காக வாதங்களையும் புரிந்து கொண்டு அவர்கள் வருகிறார்கள். இந்த வாதங்களோ பின்-புதின வாதங்களாக வெளிப் பட்டு வந்து கொண்டு இருக்கின்றன! பொறுத்திட முடியுமா, இதனை நமது குதிரை வீரரால், அதாவது, அஸ்வ கோஷ் அவர்களால்! தாமும் ஒரு கதை-கவிதை எழுத்தாளர்தாம் என்பதை மறந்து விட்டுப் பொங்கி அவர் எழுகிறார்—மார்க்சியத்தைப் பாது காத்திட வேண்டும் என் கின்ற நல் எண்ணத்தில்!

மார்க்சியத்திற்கு எதிரான எந்த ஒரு வாதத்தையும் இன்று வரை பின்-புதின வாதிகள் நிகழ்த்தியது இல்லை. அதே நேரத்தில், மார்க்சியத்திற்கு எதிரான வாதங்கள் என்று தங்கள் வாதங்களை அறிமுகப் படுத்தி வைத்திடவும் அவர்கள் தவறிட வில்லை. ஆனால், நமது அஸ்வ கோஷ் அவர்களோ மார்க்சியத்திற்கு எதிரான வாதங்களாகப் பின்-புதின வாதங்களைப் புரிந்து கொண்டு இருப்பவர்! எனவே, பின்-புதின வாதிகளின் பித்தம் தெளிந்திட வேண்டும் என்கின்ற நல் எண்ணத்தில் வாதங்களை நிகழ்த்திடத் தொடங்கினார் அவர்! ஆனால், பாவம்! மார்க்சியத்திற்கு எதிரான ஸ்தாலினிச வாதங்களாக அவை வெளிப் பட்டுக்

கொண்டு வந்து இருப்பதைக் கவனித்திடக் கூடிய வாய்ப்பு அவருக்குக் கிட்டாமல் போயிற்று!

ஸ்தாலினிசத்திற்கு எதிராக எழுந்து வந்து இருந்த ஓர் ஆவேசக் குரல்தான் பின்-புதின வாதம்!

மார்க்சியத்தால் அன்றி ஸ்தாலினிசத்தால் எப்படி அதனை வீழ்த்திட முடியும் ? வெறும் முரண் இயக்கப் பருமை வாதமாக மார்க்சியத்தைப் புரிந்து கொண்டு இருக்கின்ற அஸ்வ கோஷ் அவர்களால் எப்படி அது முடியும் ? கருத்து வாதத்தின் உண்மையும் பருமை வாதத்தின் உண்மையும் ஒன்று படுகின்ற ‘மனித வாதம் ‘ ஆயிற்றே மார்க்சியம்! ஆனால், அஸ்வ கோஷ் அவர்களுக்கோ சொற்கள் முக்கியம் இல்லையாம்! சொற்கள் இல்லாமல் சிந்திக்கின்ற கலையினைப் பின்-புதின வாதிகளிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டு இருக்கி றாரோ என்னவோ!

உணச்சிகளையும் உணர்மங்களையும் படம் பிடித்துக் காட்டுகின்ற கதை-கவிதைகளின் மூலமாகத்

தான் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள முடியும் என்று கொண்டாடுகின்ற பின்-புதின வாதிகளுடன்தான்

எவ்வளவு உற்றார்ந்த நிலையில் நமது குதிரை வீரர் ஒட்டி உறவாடுகிறார்! கார்ல் மார்க்சைப் படித்து மார்க் சியத்தைப் புரிந்து கொள்வதற்கு அவருக்கு நேரம் இல்லை போலும்! மலிவான சோவியத்-ஸ்தாலினிசப் புத்தகங்கள்தாம் அவருக்குக் கை கொடுத்துக் கொண்டு வருகின்றன போலும்!

ஆனால், இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ஓர் இரண்டும்-கெட்டானாக இவர் இருந்து கொண்டு வருவதால் யாருக்கு என்ன பயன்—நோம் சாம்ஸ்கி அவர்களைப் போல ?

மக்களின் சம்மதங்களை மக்களுக்குத் தெரியாமலே உற்பத்தி செய்து விடுகின்றனவாம் பத்தரிகைகள்! நோம் சாம்ஸ்கி கூறுகிறார். கை தட்டி ஆதரிக்கிறார் என். ராம்! இவரது பத்தரிகைகளைக் கொண்டு என் னென்ன சம்மதங்களை மக்களிடம் இருந்து இவர் பெற்றுக் கொள்ளப் போகிறாரோ தெரிய வில்லை.

மார்க்சியத்தை விட ஸ்தாலினிசத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிகின்ற நோம் சாம்ஸ்கியை இந்திய ஸ்தாலினிஸ்டுகளுக்குப் பிடித்துப் போய் இருப்பதில் பெரிய வியப்பு எதுவும் இல்லை.

ஸ்தாலினிஸ்டுகளுக்கு மட்டுமா ? சிவகாமிக்குக் கூடத்தான் நோம் சாம்ஸ்கியிசம் மிகவும் பிடித்துப் போய் இருக்கிறது. பொய் சொல்லியும் ஏமாற்றியும் பெறப் படுவதுதான் அவர் கூறுகின்ற ‘சம்மதம் இல்லாத சம்மதம் ‘ என்று புதிய விளக்கம் ஒன்றினை அதற்குக் கொடுப்பதற்கு அவர் முன் வருகிறார். தெரியாததைத் தெரிந்தது மாதிரிக் காட்டிக் கொள்வதில் யாருக்குதான் விருப்பம் இல்லை—கதைஞர் சிவகாமி உட்பட!

பொய், ஏமாற்று, கட்டாயம், ஆகியவற்றினுள்தாம் அனைத்தும் கட்டுண்டு கிடக்கின்றன என்றுதான்

சிவகாமி கருதுகிறார் போலும்! ஆனால், அகவயமான ஒரு தேவையாக இல்லாத புறவயமான எந்த ஒரு கட்டாயத்தையும் மனிதர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை என்பதுதான் உண்மை. அடிபணிவது என்பது வேறு; அடிமைப் படுவது என்பது வேறு!

எழுதப் படாத தாள்கள் என்று சீனத்து உழவர்களை வரையறுத்தார் தோழர் மாவோ! அந்த மண்டைகளில் மாவோ எழுதிய புரட்சிகரச் சிந்தனையின் விளைவுதான் சீனப் புரட்சி என்பது நக்குத் தரப் படுகின்ற ஒரு படிப்பினை! ஆனால், உழவர் மண்டைகளில் இருந்ததைத்தான் மாவோ பேசிக் கொண்டு வந்து இருந்தார் என்பதுதான் வரலாறு காட்டுகின்ற நிகழ்வினை!

தங்களுக்கு என்று சங்கம் வைத்துக் கொண்டு இருக்கின்ற தலித் எழுத்தாளர்களுக்கு, தங்கள் கதை-கவிதைகளுக்கு என்று ஒரு சந்தையைத் தேடிக் கொள்வது மட்டும்தான் நோக்கமா ? அல்லது சாதிக்

கொடுமைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவது நோக்கமா ? என்று நமக்குத் தெரிய வில்லை. ஏனென் றால், திண்ணியத்தில் தலித் ஒருவரின் வாயில் மலம் திணிக்கப் பட்ட வன்கொடுமைக்கு எதிராக ஓர் ஆர்ப் பாட்டமோ, ஊர் வலமோ, ஏன், ஒரு பட்டினிப் போராட்டமோ கூட நடத்திடத் தலித் எழுத்தாளர்கள் முன் வந்திட வில்லை. எனினும், அழகிய பெரியவனின் எழுத்துகளில் காணப் படுகின்ற ஆவேசம் நம்மைக் கவர்கிறது.

அதே நேரத்தில், சூத்திரர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் துடிக்கின்ற அவரது நோக்கம்தான் நமக்குப் புரிய வில்லை. உழவர்களுக்கும் வேளாண்மை உழைப்பாளர்களுக்கும் இடையே கூட்டணி வேண் டும் என்று வலியுறுத்திக் கொண்டு வந்து இருக்கின்ற ஸ்தாலினிஸ்டுகளுக்கும் இவருக்கும் இடையே என்ன தான் வேறுபாடு! எனினும், நம்பிக்கை ஊட்டுபவராக நமக்கு அவர் தெரிகிறார்.

கதை-கவிதை எழுத்தாளர்களில் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்குத் துடித்துக் கொண்டு இருக்கின்ற சில பெண் எழுத்தாளர்களோ, துணிச்சல் வாதிகளாகத் தங்களைக் கருதிக் கொண்டு, ஆணா திக்க வலைக்குள் வசமாக மாட்டிக் கொண்டு வருகிறார்கள்; அதாவது, எந்தக் கிளு-கிளுப்பிற்காகப் பெண் களை ஆண்கள் இழிவு படுத்திக் கொண்டு வருகிறார்களோ, அதே கிளு-கிளுப்பினைக் கதைகளாகவும் கவிதைகளாகவும் வழங்கிக் கொண்டு வருகிறார்கள். வெறும் ‘யோனி ‘களாகவும் ‘முலை ‘களாகவும் பெண்க ளைக் கருவதுதானே ஆணாதிக்கம்! ‘சரியான போட்டி ‘ என்று ஆணாதிக்கக் காரர்கள் கொட்டம் அடித்துக் கொண்டு இருப்பது இவர்களுக்கு ஏனோ புரிவது இல்லை.

இவர்களுக்குத் தெரியாததை எல்லாம் புரிந்திட வைப்பதற்காகக் காமம் பற்றி எழுதிட முன் வந்து இருக்கின்ற சிவகாமியோ, உள்ளம் இல்லாத உடல்களின் மொழியை பேசிக் குட்டையைக் குழப்பிக் கொண்டு வருகிறார். உறவுகளைப் பலப் படுத்திக் கொள்கின்ற ஓர் உத்தியாகவும் உடல் உறவில் பெண்கள் ஈடு பட்டுக் கொண்டு வருகிறார்களாம்! அப்படி என்றால், எந்த உறவுக்காக இந்த உறவு ?

முந்திக் கொள்ள முற்பட்டு விடுகின்ற பொழுது ஏற்பட்டு விடுகின்ற ஒரு முட்டுக் கட்டை போலும் இது! ஆனால், உறவுகளை நிலைப் படுத்திக் கொள்வதற்காக என்றுதானே சல்மா கூட கவிதை யாத்து இருந்தார்!

தமது உடன் பிறப்புகளுக்காக வாதிட வேண்டிய பொறுப்பினை இறுதியில் கனிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டியது ஏற்பட்டது. உத்திக்கான இந்த உறவுகளுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கின்ற அவலத் தையும் வேதனையையும் சுட்டிக் காட்டி விவாதங்களுக்கு அவர் ஒரு முடிவு கட்டினார். எதற்கோ ஆன ஓர் உத்திதான் உடல் உறவு என்றால், அதில் ஏது அவலமும் வேதனையும் ?

இப்படி, கதை-கவிஞர்கள் அடித்துக் கொண்டு வருகின்ற கொட்டங்களுக்கு இன்று ஓர் அளவு இல் லாமல் போய்க் கொண்டு இருக்கிறது; அனுபவ அறிவிற்கு அப்பால் தங்கள் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கு முடியாத இவர்கள், படைப்பாளிகள் என்று தங்களுக்குப் பட்டம் சூட்டிக் கொண்டு இருப்பது தான் அவலம்!

அடிக்கு ஒரு கோயில் என்று அமைந்து இருக்கின்ற இந்த நாடு உருப்படாது என்று ருஷ்யாவைப் பற்றி நெப்போலியன் கூறினானாம்—தால்ஸ்தாய் கூறுகிறார். கதை-கவிதைகளைப் பற்றி அதிகம் பேசுகின்ற ஒரு நாட்டில் அறிவு வளர்ச்சி ஏற்படுகின்ற வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று எனக்குத் தோன்றுகிறது.

————————–

திண்ணைப் பக்கங்களில் சோதிப் பிரகாசம்

  • அ மார்க்ஸின் சொல்லாடலும்..

  • ஜெயமோகனின் நூல் அணிந்துரை

    Series Navigation

  • சோதிப் பிரகாசம்

    சோதிப் பிரகாசம்