கண்ணதாசன் ரசித்த கம்பன் – 2

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு


எண்ணத்தில் எப்போதும் இனிக்கின்ற
வண்ணம் பலப்பல வண்ணக் கவிதைகளை
வாரி வழங்கிய வள்ளல் கம்பன்.

கைவண்ணம் கால்வண்ணம் என்று அவன் சொன்ன
வண்ணம் கண்டு கேட்டு ரசித்த
கண்ணதாசனும் அவ்வண்ணமே பல வண்ணங்களைப் போட்டுப்
பாடலாக்கி நாம் மகிழும்
வண்ணம் தந்த திறமையை என்னவென்பது!

அந்தப் பாடலைப் பார்க்கும் முன் கம்பன்
முந்தித் தந்த பாடலைப் பார்ப்போமா?

விசுவாமித்திரன் வேள்வியைக் குலைக்க
விசுவரூபம் எடுத்து வருகிறாள் தாடகை என்னும் சழக்கி
இறைக்கடை துடித்த புருவமும் எயிறு என்னும்
பிறைக்கடை பிறக்கிட மடித்த பில வாயுமாக வருகிறாள் அவ்வரக்கி!
இராமனுக்கும் அவளுக்கும் கடும் போர்!

இறுதியில், இராமன் தன்
சொல் ஒக்கும் கடிய வேகச் சுடு சரம் விடுகிறான்.
அறந்திறம்பிய அரக்கியின் மார்பைத் துளைத்துப்
புறம் போகிறது அந்த இராம பாணம் –
கல்லாப் புல்லர்க்கு நல்லார் சொன்ன பொருள் போல!
கரிய செம்மலாம் காகுத்தன் கன்னிப் போரில்
காட்டிய வீரம் கண்டு மகிழ்ச்சி கொண்டு
பெரிய முனிவனும் அரிய படைக்கலன்களை வழங்கினான்.
பின்னர், முனிவன் முன் செல்ல
அண்ணலும் அவன் தம்பியும்
பின் சென்றனர் – மிதிலை நோக்கி!
வழியில் –
மேடெனக் கருங்கல்; ஒன்று கிடந்தது
இராமனின் பாதம் அதனைக் கடந்தது
கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ
அற்புதம் ஒன்று நிகழ்ந்தது.
பெண்ணமுதாய் அது மாறி நின்றது!
அன்னையே அனையாட்கு நிகழ்ந்தது
என்னை என இராமன் கேட்கிறான்.
கவுதம முனிவனின் கைப்பிடித்தவளை
அகலிகை எனும் பெயர் படைத்தவளை
விழியால் காதல் கதை பேசி நவ்வி போல்
விழியாளை வீழ்த்திய இந்திரன் கதையை
முனிவன் கூறக்கேட்டான்.
“நெஞ்சினால் பிழைப்பு இலாள்’ என
நீதித் தீர்ப்பு வழங்கிப்போட்டான.;;
தாடகை வதத்தில் இராமன்
தடக்கையின் உரங்கண்டு
மேடைக் கல் மாதவளாய் மாறியதில்
அவன் காலின் திறங்கண்டு;
விசுவாமித்திரன் பாடுகின்றான்
வியப்பின் எல்லையில் நின்று
“மைவண்ணத் தரக்கி போரில்
மழைவண்ணத் தண்ணலே
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால் வண்ணம் இங்குக் கண்டேன்” என்று!
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய
அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன்
பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க
வண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார்
தென்னங் கள்ளாக இன்பத்தை நிறைத்துவிடுகிறார்!

பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில்
கொடிகட்டிப் பறந்த பாடல் அது.
படம் : பாசம்
இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல்
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ?
இல்லை, இல்லை கவிதை வண்ணம்?
இதைப் போல, வேறு வண்ணங்களிலும்
பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர்.
ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல.

அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை.
காட்டாக,
கல்லைத்தான் மண்ணைத்தான்
காய்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தனா என்று
பாடிய இராமச்சந்திரக் கவிராயர் பாடலைப்
போல அமைந்ததுதான், பாவ
மன்னிப்புப் படத்தில் இடம் பெற்று நம்
நெஞ்சில் நிலைத்து நின்று விட்ட
பாடல் :
“அத்தான், என்னத்தான் அவன்
என்னைத்தான் எப்படி சொல்வேனடி..”.
‘பலே பாண்டியா” என்ற படத்தில் வரும்,
‘அத்திக்காய் அத்திக்காய்
ஆலங்காய் வெண்ணலவே..’ பாடல்
எழுதக் கவிஞருக் ‘கை’ கொடுத்தது தனிப்பாடல்
திரட்டில் வரும் “உள்ளமிளகாயோ
ஒரு பேச்சுரைக்காயோ வெள்ளரிக்காயோ…” என்ற
வெண்பா. இவை போன்றவற்றை இக்கட்டுரையில்
வேண்டுமென்றே கொண்டுவரவில்லை.
வாய்ப்பு கிடைத்தால் பின்னொருகால் எழுதக்கூடும்.

இதுவரை பார்த்தவற்றில், அடியேன் குறிப்பிட்ட
கம்பனின் பாடல்களைப் பலரும்
அறிந்திருக்கக் கூடும். அல்லது கேள்வியாவது
பட்டிருக்கலாம். இனி, கவிஞர்
எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும்
குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு
அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்!

வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.
‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’
என்ற பாடலதான் அது. அதில்
இடம் பெறும்
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.
என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது!
எங்கே? எந்த இடத்தில்? யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?…
கண்ணதாசன் ரசித்த கம்பன்
(பகுதி 5)

சென்ற முறை, வியட்நாம் வீடு என்ற படத்தில் வரும் ‘பாலக்காட்டு பக்கத்திலே
ஒரு அப்பாவி ராஜா…’ என்ற பாடலைக் குறிப்பிட்டிருந்தேன். அதில் வரும் 4
வரிகளையும் சொல்லி அவை கம்பன் பாடலின் அடியொற்றி எழுதப்பட்டவை, கம்பனின்
அவ்வரிகளை யாரேனும் சுட்டிக்காட்ட முன் வாருங்கள் என அழைப்பும்
விடுத்திருந்தேன். இது வரை எவரும் அதற்கு விடை தரவில்லை. அதனால் பாதகம்
இல்லை, தவறும் இல்லை! ஏனெனில், கம்பனை ஆழமாகப் படித்தவர்களும் அறியாத,
அறிந்தும் பொருட்படுத்தாத பாடல் இது!. இனி நம் தொடரைத் தொடர்வோம்.
“சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்”

எனப் பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் ஈறாகத்
தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படித்திருக்கவேண்டும். தம் திரைப்படப்
பாடல்களில் இவர் இவற்றை இழைத்திருக்கும் பாங்குகளைப் பலரும் இணையதளத்தில்
பதிவு செய்திருக்கின்றனர்.

(காண்க : நிலாச்சாரலில் கண்ணதாசன் பற்றிய சக்திதாசன் கட்டுரைகள்,
திண்ணையில் அப்துல் கையூம் கட்டுரை, – நிலா முற்றத்தில். சத்தியாவின்
கட்டுரை…).

எனவே, திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே.
எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது! அதிலும் கம்பன் மேல் தனிக்காதல்
கண்ணதாசனுக்கு உண்டு.
கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு இல்லை அவர். கம்பனில்
கருத்தூன்றிப் படித்திருக்கவேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில்
படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா? பார்த்து ரசித்திருப்பாரா?
இல்லை அதனைத் தன் பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான்
செய்திருப்பாரா? அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன் வரிகளை
வைக்கிறேன் உங்கள் பார்வைக்கு :

பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.
கம்பனின் காவிய வரிகள் இதோ :
“பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!”

சூர்ப்பணகை – மூக்கறுபட்டவள்
ஆர்ப்பரித்து அழுத வண்ணம்
அண்ணன் இராவணனிடம் ஓடோடி வருகிறாள். தன்
அவல நிலைக்குக் காரணத்தைத் தருகிறாள்.
அதே சமயம், சீதையின் அழகை எல்லாம்
சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள்
அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள்.
அப்போதே அவன் சீதையை அடைந்துவிட்டதாகக் கற்பனை ஊட்டுகிறாள்.

அவரவரை அவரவர் இடத்தில் வைக்க வேண்டும்
என்றொரு சொலவடை தமிழில் உண்டு.
அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான்.
‘பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான்.
தாமரை மலரில் இருந்த திருமகளைத்
தன் மார்பிலே வைத்திருக்கிறான்
பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்.
தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன்
தன் நாவிலேயே வைத்திருக்கிறான்.
மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை
இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயே
வைத்து வாழ்கிறார்கள்.
மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க்
கீர்த்தி பெற்ற அண்ணனே
மின்னலை விட நுண்ணிய இடை கொண்ட
செம்பொன் சிலையாம் சீதையை
அடையும் போது அவளை
எங்கே வைத்து வாழ்வாய் நீ!’
எனச் சூர்;ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.
ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை
சூழு;ச்சிப் படலத்தில் இடம்பெறுகிறது.

கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு
‘எங்கனம் வைத்து வாழ்தி!’ என்ற வரியில்
கீழறைப்பொருளை (னசயஅயவiஉ சைழலெ) வைக்கிறான் :
மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம்
உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் !
இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை
எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்?
வாழமாட்டான்! இறுதியில் வீழ்வான் என்ற
பொருள் இவ்வரியில் பொதிந்துள்ளது.

கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள்
கண்களில் மட்டுமல்ல
கம்பனில் ஆய்ந்து தோய்ந்தவர்கள்
பார்வையிலும் படாத பாடல் இது!
ரசிகமணி டி.கே.சியோ,
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளோ
பேராசிரியர் அ. ச. ஞானசபந்தமோ கூட
எங்கேயும் எடுத்துக் காட்டாத கவிதை இது!
எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ!
எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ!
அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார்
கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக்
காட்சிக்கு ஏற்பச் சொற்களை அமைத்து
‘ ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.” என்று
முத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!

கம்பனின் வைரமணி வரிகள் பல
கவிஞர் கண்ணதாசனின் நெஞ்சைக் கவர்ந்திருக்கின்றன.
இவற்றைப் பற்றிக் கவிஞரே ‘நான் ரசித்த வர்ணனைகள்” என்ற
தம் நூலில் குறிப்பிடுகிறார். அவர் ரசித்த அந்தப் பாடல் –
பலரும் ரசித்த பாடல்!
கம்பனின் தலைசிறந்த பாடல் வரிசையில் இடம் பெற்ற பாடல்.
எந்த அளவுக்கு இந்தப் பாடல் கவிஞரின் நெஞ்சைக் கவர்ந்தது என்றால்,
அப்பாடல் வரி ஒன்றை
அப்படியே தன் பாடலில் பதிந்து வைத்துவிட்டார் கவிஞர்.
அந்த வரியைப் பாhக்குமுன் கம்பனின் கவிதை வரிகளைக் கண்டு
படித்து ரசித்து வருவோம் , கண்ணதாசன் ரசித்ததைப் போல.

என்னையே நோக்கி யான் இந்நெடும்பகை கொண்டது எனத்
தன்னையே தருக்கி நின்ற இராவணன்,
‘வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங் கையொடு மீண்டு’
‘சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்பிய’ இராவணன்
மண்ணின் மீது மாண்டு கிடக்கிறான் – மனைவி
மண்டோதரி ஓடோடி வந்து அவனைக்
கண்டு புலம்பி அழுகிறாள்.

பெற்ற மகன் இந்திரசித்துவின் தலை
அற்ற உடலைக் கண்டழுது ஒப்பாரி வைக்கும் போது
கொற்றவன் இராவணனுக்கும் நாளை இந்தக் கதிதானே என
ஒப்பிலாத் தன் கணவனை நினைத்து அப்போதே
ஒப்பாரி வைத்து அழுதவள் அவள்.
அதனைக் கம்பன்
“அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை என்ற அமுதால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ!” என
அவள் அரற்றுவதாகப் பாடுவான்.

மகன் மரணத்திலேயே மணாளனின் மரணத்தைக்
கண்டு உருகிப் பாடிய மண்டோதரி
கணவனின் உடலைப் பார்க்கிறாள்
கண்ணீரும் கம்பலையுமாகத் தன் உள்ளத்து
உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறாள்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்தத் திருமேனி
எள்ளிருக்க இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
; உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!
இராம பாணம் இராவணன் உடலைச்
சல்லடைக் கண்களாய் துளைத்திருக்கிறதாம்!
(இக்காலத்து AK 47 துப்பாக்கி போல).
ஏன்? ஏன்? ஏன்?
காரணத்தைத் தேடும் மண்டோதரியன் மனம்
பெண்மைக்கே உரிய (feminine logic)
தோரணையோடு பேசுகிறது :
அமுதால் செய்த நஞ்சாம் சீதை மேல் வைத்த
முறையற்ற அறமற்ற காதல் எங்கே இருக்கிறது
எனத் தேடிக் கண்டுபிடித்து அதனை வேரோடு
கல்லி எறியவே இராவணன் உடலைப் பாணம்
சல்லியாகத் துளைத்துவிட்டிருக்கிறது.
துளைக்கப் பட்ட உடல் எப்படிப் பட்ட உடல்?
இளைத்துப் போன உடலா அது?
இறைவன் இருக்கும் இமயத்தையே
பெயர்த்தெடுக்க முயன்ற உடல் அல்லவா!
அதனாலேயே சாதாரண அவன் மேனி
திருமேனி ஆன உடல் அல்லவா?
(திருமேனி என உடலை அழைப்பது வைணவ மரபு, இராவணன் சிவபக்தன், ஆகவே அவன்
உடலைத் திருமேனி என வைணவ மரபுப்படி அழைப்பது தவறாகும். ஆனால் கம்பன்
அப்படித்தான் அழைக்கிறான் மண்டோதரி வாயிலாக! கைலாய மலையை அவன் தீண்டிய
காரணத்தால் அவன் மேனி திருமேனி ஆனது என்ற கருத்துப்படத்தான் கம்பன்
அப்படிக் கூறி இருக்கிறான்).
சிவனைக் குறிப்பிட எத்தனையோ வர்ணனைகள் குறியீடுகள் உண்டு.
அவற்றை எல்லாம் விட்டுவிட்டு ‘ வெள்ளெருக்கஞ் சடைமுடியான்” எனக் கம்பன்
குறிப்பிடுகிறானே, ஏன்? யாருமே விரும்பாதவற்றைத் தான் விரும்பி ஏற்பவன்
சிவன் – அமுதைப் பிறர்க்கு அளித்துவிட்டு நஞ்சைத் தானருந்திய
திருநீலகண்டன் அல்லவா அவன். பட்டையும் பீதாமபரத்தையும் பிறர்க்குத்
தந்துவிட்டுத் தான் மட்டும் மான் தோலையும் யானைத் தோலையும்
புலித்தோலையும் உடுத்துகின்றவன் தானே அவன். அது போலவே, வண்ண மலர்களை,
வாசப் பூக்களை மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு யாரும் சூட விரும்பா
எருக்கம் பூவைத் தான் சூடிக்கொண்டவன். இப் பூவில் கண்ணைக் கவரும் வண்ணமோ
கருத்தைக் கவரும் கள்ளோ (தேன்) இல்லை! பிறரைக் கவரும் ஆற்றலும் இந்தப்
பூச்சூடிய சடைக்கும் இல்லை! அதனால்தான் போலும் இராவணன் அங்கே தன் வீரத்தை
வலிமையைக் காட்டி மேரு மலையைத் தோளில் எடுக்க முனைந்தான். இப்போது
இவற்றுக்கு நேர் மாறான முரண்தொடையை அமைக்கிறான் கம்பன். கள்ளோடு கூடிய
அழகிய வண்ண மலர்களைச் சீதையின் கூந்தலுக்குச் சூட்டுகிறான்,
“கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்’ என்று. மயக்கம் தருவது கள். அந்தக் கள்
உள்ள மலர்களைச் சூடிய சீதை மீது மாளாத மயக்கம் கொண்டான் இராவணன். அழகு
தருவது கூந்தல். அதனால் அழகெனும் அழகுமோர் அழகு பெற்ற சீதை மேல், கள்ளொடு
கூடிய பூச்சூடிய கூந்தலை உடைய சானகி மீது அடங்காக் காதல் கொண்டான்
இராவணன். இவ்வளவு கருத்தழகுகளைப் பொதிந்துள்ள இந்தக் கவிதை கண்ணதாசன்
மனத்தைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பிலலை. அதிலும் ‘ கள்ளிருக்கும்
மலர்க் கூந்தல் சானகி’ என்ற வரி கண்ணதாசனைப் பெரிதும் ஈர்த்துவிட்டது.
பல திரைப் பாடல்களில்;, கம்பன் கருத்தை உள்வாங்கித் தன் வயமாக்கி தன்
சொற்களில் வழங்கிய கண்ணதாசன் இந்த வரியை மட்டும் அப்படியே தன் பாடலில்
பொதிந்து வைத்துவிடுகிறார், தங்கஅணிகலனில் வைரமணியைப் பதிப்பது போல :
“கானகத்தைத் தேடி இஇன்று போகின்றாள்
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகி”.

எந்தப் படத்தில், என்ன இடத்தில் இந்தப் பாடல் வருகிறது, முழுப்பாடல்
என்ன… பாடியவர் யார்… போன்ற விவரங்களை அறிந்தோர் கூறினால் பெரிதும்
மகிழ்வேன்.

Series Navigation

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு